வானம் நீலமாகத்தானிருந்தது - கருணாகரன்

.

காலடியில் இருக்கும் நிழலை
அள்ளிச் சென்றது நீயா தீயா சருகா தெரியவில்லை
அந்த இரவு
கடற்கரையில் இனந்தெரியாத பிணத்தின் அருகில்
உறங்கினேன்.
அதிகாலையில் நான் வரும் வழியில்
ஒரு இதயம் கிடந்து துடித்துக் கொண்டிருந்தது.
நான் எதிர்பார்க்கவில்லை
நீங்களும் எதிர்பார்க்கவில்லை
நம்பிக்கையானவர்கள் நம்மை விட்டுச் சென்றார்கள்.
ஒரு பாழடைந்த வீட்டில்
நாங்கள் தனித்துவிடப்பட்டோம்.
ஆனாலும் அன்றும்
வானம் நீலமாகத்தானிருந்து.


நடனம்

மிளாசி எரிந்தது பனங்கூடல்
காற்றில் எரிந்தன பறந்த பறவைகளும்
அவற்றின் கூடுகளும்.
எங்கே போய் முடிந்தது அத் தீ?
மூள்வதற்கும் தணிவதற்குமிடையில்
ஆடிய நடனத்தை நினைத்து வியந்தேன்.
அன்றுதான் நீ எங்களை விட்டுச் சென்றாய்.
விட்டுச் செல்லும்போது தோன்றுவதென்ன?
புதிய பயணத்தின் ருசியா
பழைய வாழ்க்கையின் சலிப்பா?
புதைக்க முடியாமல்
வழிநெடுகப் பரவிக்கொண்டிருக்கும் நினைவுகளை
எங்கே விட்டுச் செல்வதென்று நீயும்
முளைத்துக்கொண்டேயிருக்கும் ஞாபங்களை எவ்விதம்
சேகரித்துப் பத்திரப்படுத்துவேன் என்று நானும்
தடுமாறிக்கொண்டிருப்பதைக் கண்டு
வயலில் நின்ற காவற் பொம்மையும் திகைத்தது.
வேதனையின் கோடுகள் வலையாக நீண்டு
நம் நாட்களைச் சுற்றிப் பாம்புகளாகின.
அதிலிருந்து மீள முடியவில்லை
உள்ளிருக்கவும் முடியவில்லை.
மீண்டு திரும்புவதற்கோ போய்ச் சேர்வதற்கோ
எந்த மார்க்கமும் இல்லை என்றுணர்ந்த போது கூட
நீயும் திரும்பவில்லை
நானும் அழைக்கவில்லை
அன்று நிகழ்ந்தது என்ன
பயணமா, பிரிவா, வாழ்வின் நடனமா?
இன்னும் நடந்து கொண்டிருப்பதென்ன
மாயமா? அழிவிதியா?
00

No comments: