ஜனாதிபதிக்கு பாகிஸ்தானில் செங்கம்பள வரவேற்பு
எதிர்பார்க்கப்பட்டவை நடைபெறவில்லை: ஆஸி.யிடம் சி.வி. முறையீடு!
'2000 பேரின் கதை கேட்க ஒன்றரை வருடங்கள் எனில் 18000 பேரின் கதை கேட்கப் 10 வருடங்களா?"
'200 பேர் இறந்ததாய் சொல்லிய நீங்கள், கொன்றவர் யார் என ஏன் சொல்லவில்லை?" 2ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்
தமிழகத்திலிருந்து திரும்பியவர்கள் காணிகளை கோரி ஆர்ப்பாட்டம்
ஜே.வி.பி.யின் யாழ். மாவட்ட மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு
பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 570 ஏக்கர் காணியை 2ஆவது கட்டமாக விடுவிக்க நடவடிக்கை
ஜனாதிபதிக்கு பாகிஸ்தானில் செங்கம்பள வரவேற்பு
06/04/2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை பாகிஸ்தானை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி தலைமையிலான குழுவினரை சிந்து மாகாணத்தின் ஆளுநர் இஷ்ரத் உல் இபாத் கான் மற்றும் பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் எயார் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி ஆகியோர் வரவேற்றனர்.
அங்கிருந்து விசேட விமானம் மூலம் இஸ்லாமாபாத் நூர் கான் விமான தளத்தை வந்தடைந்த ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் அடங்கிய தூதுக் குழுவினரை பாகிஸ்தானின் சிரேஷ்ட அமைச்சர்கள் வரவேற்றனர். இதன் போது 21 வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு ஜனாதிபதிக்கு அரச மரியாதை செலுத்தப்பட்டது.
அங்கிருந்து தூதுக் குழுவினர் தங்கியிருக்கும் ஹோட்டல் சரேனாவை வந்தடைந்த ஜனாதிபதியை பாகிஸ்தானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். அத்துடன் இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவினருக்கு இராப்போசன விருந்துபசாரமும் அளிக்கப்பட்டது.
ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோரும் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளனர்.
அத்துடன் இராணுவ தளபதி லெப்டின்ன்ட் ஜெனரல் ஏ.டபிள்யூ.ஜே. கிரிஷாந்த டி சில்வா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி சித்ராங்கனி வாகிஸ்வரா, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஸுஹைர் உட்பட 40 பேர் அடங்கிய இலங்கை தூதுக் குழுவினர் பாகிஸ்தானுக்கு விஜயம் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை வரவேற்கும் வகையிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தானின் உறவை பிரதிபலிக்கும் வகையிலும் இஸ்லாமாபாத் நகர் முழுவதும் பாரிய கட் அவுட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
எதிர்பார்க்கப்பட்டவை நடைபெறவில்லை: ஆஸி.யிடம் சி.வி. முறையீடு!
06/04/2015 ஆட்சிமாற்றத்தின் பின்னர் நடைபெறும் என்று எதிர்பார்த்து நடைபெறாமல் போன விடயங்கள் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் றொபின் மூடியிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துரையாடியுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் வடக்கு முதல்வரை அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வடக்கு முதல்வர்,
வழமையான பயணமானதாகவே இன்றைய சந்திப்பும் நடைபெற்றது. விசேடமான விடயம் எது தொடர்பிலும் ஆராயப்படவில்லை. ஆட்சிமாற்றத்தின் பின்னான நிலைமை தொடர்பிலும் ஆட்சிமாற்றத்தின் பின்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு நடைபெறாத சில விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டது. தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நல்லதொரு புரிந்துணர்வையும் நல்லதொரு எதிர்காலத்தையும் கொண்டுவதற்கு தம்மால் முடிந்தளவிற்கு தம்முடைய நாடு பாடும் படும் என்று ஆஸி.உயர்ஸ்தானிகர் தம்மிடம் உறுதியளித்ததாகவும் வடக்கு முதல்வர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
'2000 பேரின் கதை கேட்க ஒன்றரை வருடங்கள் எனில் 18000 பேரின் கதை கேட்கப் 10 வருடங்களா?"
06/04/2015 '2000 பேரின் கதை கேட்க ஒன்றரை வருடங்கள் எனில் 18000 பேரின் கதை கேட்கப் 10 வருடங்களா?, சர்வதேசத்தை ஏமாற்ற காணாமற் போனோர் விசாரணை எங்களை ஏமாற்றுமா?, கண்டு பிடிக்கும் ஆணைக்குழுவா கண்துடைப்பு ஆணைக்குழுவா?, இன்று உணவைத் தவிர்த்து போராடுகின்றோம். எங்கள் உறவைத் தேடித்தா, நல்லிணக்கம் சொல்லும் அரசே ஐ.நா.வின் றுபுநுனு குழுவை அழை என பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளுடன் காணாமல் போன உறவினர்களால் கறுப்புப் பட்டி அணிந்து கல்முனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
காணாமல்போனோர் உறவுகளைத் தேடும் தமிழ் சிவில் அமைப்புகள் ஏற்பாடுசெய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கல்முனையில் நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகளைப் பகிஸ்கரிக்க கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவர் மெக்ஸ்வெல்லிடம் கையளித்தனர். நன்றி வீரகேசரி
'200 பேர் இறந்ததாய் சொல்லிய நீங்கள், கொன்றவர் யார் என ஏன் சொல்லவில்லை?" 2ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்
07/04/2015 '200 பேர் இறந்ததாய் சொல்லி நீங்கள், கொன்றவர் யார்? என ஏன் சொல்லவில்லை?, சர்வதேசத்தின் தராதரம் வேண்டாம் சர்வதேச விசாரணையே வேண்டும் என பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளுடன் காணாமல் போன உறவினர்களால் இரண்டாவது நாளாக இன்று கல்முனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கடத்தப்பட்டோர், காணமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு கல்முனையில் இரண்டாவது நாளாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் இதனை பகிஸ்கரக்கும் நோக்குடன் பாதிக்கப்பட்ட மக்கள் வாயில் கறுப்புத்துணியினை கட்டிக்கொண்டு இரண்டாவது நாளாகவும் விசாரணைக்கு செல்லாமல் வீதியில் அறவழி போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். நன்றி வீரகேசரி
தமிழகத்திலிருந்து திரும்பியவர்கள் காணிகளை கோரி ஆர்ப்பாட்டம்
08/04/2015 தமிழகத்திற்கு அகதிகளாக இடம்பெயர்ந்து சென்று தாயகம் திரும்பி வந்து வவுனியா சிதம்பரபுரம் அகதி முகாமில் வசித்து வருகின்ற இடம்பெயர்ந்த மக்கள் தமக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் எனக்கோரி இன்று காலை வவுனியா கச்சேரிக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி;யிருக்கின்றனர்.
இருபது வருடங்களுக்கு மேலாக சிதம்பரபுரம் அகதி முகாமில் வசித்து வருகின்ற சுமார் 200 குடும்பங்கள் தாங்கள் மீள்குடியேறச் செல்வதற்குச் சொந்தக் காணிகள் இல்லையென்றும், சிதம்பரபுரம் அகதி முகாம் அமைந்துள்ள காணியைப் பகிர்ந்து தங்களுக்கு வழங்கி, அங்கேயே குடியேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் பிரதிநிதகள் ஐந்துபேரை தனது அலுவலகத்தினுள்ளே அழைத்துப் பேசிய வவுனியா அரசாங்க அதிபர் சிதம்பரபுரம்,
மக்களுக்குக் காணிகள் வழங்குமாறு அரசாங்கம் தனக்கு உத்தரவிடவில்லை என்றும், அத்தகைய உத்தரவு எதுவுமின்றி தன்னால் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துள்ளதாகவும் அவரைச் சந்தித்துப் பேசிய பிரதிநிதிகள் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
ஜே.வி.பி.யின் யாழ். மாவட்ட மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு
09/04/2015 மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) யாழ்.மாவட்டத்திற்கான மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடை பெற்ற நிகழ்வில் கொழும்புத்துறை பாண்டியன்தாழ்விலுள்ள அலுவலகத்தை முன்னனியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் ரட்ணாயக்கா திறந்து வைத்தார்.
மங்கள விளக்கினை இராமலிங்கம் சந்திரசேகரன், ஜே.வி.பி. தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் ரட்ணாயக்கா மற்றும் யாழ்ப்பாணம் தொகுதி அமைப்பாளர் அ.கணபதிப்பிள்ளை ஆகியோர் ஏற்றிவைத்தனர். நன்றி வீரகேசரி
பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 570 ஏக்கர் காணியை 2ஆவது கட்டமாக விடுவிக்க நடவடிக்கை
10/04/2015 பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் மேலும் 570 ஏக்கர் காணியை மீள் குடியேற்றத்துக்காக இரண்டாவது கட்டமாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு விடுவிக்கப்படவுள்ள 570 ஏக்கர் காணிகளை பார்வையிட மீள்குடியேற்ற செயலணி மற்றும் அரச அதிபர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் செல்லவுள்ளனர்.
பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1000 ஏக்கர் காணியை மீள்குடியேற்றத்துக்காக விடுவிப்பது என்ற அரசின் திட்டத்துக்கமைய இரண்டாவது கட்டமாக 570 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று முந்தினம் யாழ். அரச அதிபர் என். வேதநாயகம் தலைமையில் அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மீள்குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதனினால் உருவாக்கப்பட்ட மீள் குடியேற்ற செயலணியின் தலைவர் ஹரீம் பீரிஸ் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலர் ரஞ்சனி நடராஜபிள்ளை, பிரதம செயலாளர் பத்திநாதன், இராணுவ உயர் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இன்று வெள்ளிக்கிழமை இப்பகுதிக்குச் சென்று ஆராய்ந்து பார்ப்பதுடன் எந்தெந்த கிராம சேவகர் பிரிவுகளில் மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்கலாம் என்பது பற்றியும் குறித்த குழுவினர் தீர்மானிக்கவுள்ளனர்.
வலளாய், வீமன்காமம், குரும்பசிட்டி, வசாவிளான் உட்பட தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மிதிவெடிகள், கண்ணிவெடிகளின் அபாயம் இல்லை என இராணுவ அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாரிகள் குழுவினர் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று திரும்பியவுடன் சொந்த இடங்களை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment