பேராசிரியர் சி.மௌனகுருவின் நொண்டி நாடகம் - இருவர் பார்வைகள்....

.

மட்டக்களப்பில் அண்மைக்காலங்களில்  ஆற்றுகைப் படைப்புக்கள் பல அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பேராசிரியர் மௌனகுருவின் நெறியாள்கையில் உருவான நொண்டி நாடகம் குறிப்பிடத்தக்கது. அவரது படைப்புக்களில் சக்தி பிறக்குது, சங்காரம், இராவணேசன் முதலியவை கலாரசிகர்களினதும், விமர்சகர்களினதும் வரவேற்பைப் பெற்ற பிரசித்தமான படைப்புக்களாகும்.

 நொண்டி நாடகம் முதன் முதலாக 1962ஆம் ஆண்டு ஆற்றுகை செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது. அதில் பாத்திரமேற்று நடித்த நடிகர்களில் பேராசிரியரும் ஒருவர் என்பது கவனத்திற்குரியது. 
52 வருடங்களின் பின்னர் மீண்டும் புத்தாக்கம் பெற்ற  நொண்டி நாடகம் பேராசிரியரின் படைப்புக்களில் ஒரு புதுவிதமானது என்று கூடச்சொல்லமுடியும். ஏனெனில், நாடகத்தினை அடிக்கட்டுமானமாகக் கொண்டு மரபு வழி இசையாலும், செந்நெறி சார் இசையாலும் இசைக் கலைஞர்களாலும் பிரமிக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளமையாகும் 

பேராசிரியரதும் அவருடன் ஒருமித்தோரினதும் கூட்டிணைவான நொண்டி நாடகம் என்னும் ஆற்றுகை அண்மையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் மகுடம் சஞ்சிகையின் அமைப்பாளர்களால் ஒழுங்கு படுத்தப்பட்டு,  பிரதேச செயலாளர் திரு. தவராஜா அவர்களின் தலைமையில் அரங்கேறியது. அவற்றில் பேரசிரியர் அவர்களால் நொண்டி நாடகம் பற்றி ஒரு அறிமுகக் குறிப்பு சுவைஞர்களுக்காக முன் வைக்கப்பட்டது. அதில், அவர் இவ்வாற்றுகை மரபு வழியான ஒரு கூத்து அன்று, இது புதுவிதமான ஒரு படைப்பு, தமிழர்களின் ஒப்பேராவுக்கான பிள்ளையார் சுழி என்று கூறி, இந்நிகழ்வினை ஒரு சட்டகத்தை தயாரித்து வைத்து அதனுள் நின்று பார்க்க வேண்டாம் என் வேண்டு கோள் விடுக்கப்பட்டது.  அதில் பல அர்த்தப்பாடுகளும் உள்ளன.


 மட்டக்களப்பு கூத்துக்களின் மரபை மௌனகுரு மீறுகின்றார் என ஒரு சிலர் வாதிப்பதும் உண்டு. பேராசிரியர் மௌனகுரு மரபை ஒரு போதும் மீறியது கிடையாது.

 அவர் நவயுகத்தில் வாழும் அரங்கியல் நிபுணர்.

 அவரது படைப்புக்கள் புது விதமானவை. புதிது புதிதாகப் படைக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடு. புதுமையானதைப் படைக்கும் ஆற்றல் பெற்றவர்களே படைப்பாளிகள்.  தமது படைப்புக்களை தயாரிக்கும் போது மரபு வழியான சில இசை வடிவங்களை உபயோகிப்பார். இது அவரது படைப்பின் தனித்துவம். 

நொண்டி நாடகம் மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடத்தினரும், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தினரும் இணைந்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது. பதினெட்டு நடிகர்களையும் நான்கு இசையாசிரியர்களையும், குறிப்பிடத்தக்க மாணவர்களையும் கொண்டு இவ்வாற்றுகை தயாரிக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் ஒரு இசை நாடகம். வசனம் பேசி நடிக்கும் முறைமை இந்நாடகத்தில் இல்லை. இவ்விசை நாடகத்தில் நொண்டி, செட்டியார், அவரது மனைவி, சொக்கப் பையன், மன்னன், மந்திரி, மக்கள் சபை, கட்டியக்காரர்கள் என பல பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

நொண்டி நாடகத்தில் தென்மோடி மரபு வழிக் கூத்தின் இசைவடிவங்கள் கையாளப்பட்டுள்ளமை நாடகத்தின் செழுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. அதனுடன் செந்நெறி சார் இசை நுணுக்கங்களும், வாத்தியங்களும் நாடகத்தினை மெருகேற்றியவைகளாகும். இவ்விட்த்தில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறை விரிவுரையாளர் செல்வி சரஸ்வதி அவர்களின் பங்களிப்பை. பேராசிரியரது இராவணேசன் நாடகம் தொடக்கம் அவரது அரங்க ஆற்றுகைகள் பலவற்றுக்கு  வளம் சேர்த்தது செல்வி சரஸ்வதி அவர்களின் வயலின் இசையாகும். கூத்தினது மரபு வழியான தாளக்கட்டுக்களை வயலினுள் புகுத்தியவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வி சரஸ்வதியவர்கள். பேராசிரியர் சரஸ்வதியவர்களை என்றைக்கும் மறப்பதில்லை. அவரது இசைப்பணிக்கு மட்டக்களப்பு மண் சார்பாக சிரம் தாழ்த்துகின்றோம்.


நொண்டடி நாடகத்தின் பங்கேற்று நடித்தவர்களின் பாத்திரப் பொருத்தம் சிறப்பானது. அவர்களின் கம்பீரமான தோற்றம், கனீரென்ற குரல் வளம் இவையெல்லாம் நாடகத்தின் முழுமையில் செல்வாக்குச் செலுத்தியுள்ளமை குறிப்பிடற்குரியதாகும். அதிலும் செட்டியாருக்கும் அவரது மனைவிக்கும், நொண்டிக்கும் பாத்திரமேற்று நடித்தவர்களின் பாத்திரப் பொருத்தம் சிறப்பானது. பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒப்பனையால் தனித்துக்காட்டப்பட்டுள்ளன.
நொண்டி நாடகம் ஒரு மணி நேர ஆற்றுகை. அவை நேரம் கழிந்து போவது தெரியாமல் நிறைவு பெற்றமை மனங்கொள்ளத்தக்கது. கூத்துக்களைப் பார்க்கும் வேளையில் அதனை நாம் விளங்கி எடுக்க குறிப்பிடத்தக்க நேரம் எடுக்கும். ஆனால் நொண்டி நாடகத்தை மிக இலகுவாக புரிந்து கொள்ள முடிந்தது.

நடிகர்கள் எல்லோரையும் அரங்கில் அமர வைத்து, தமக்குரிய  நேரங்களில் வந்து ஆற்றுகை செய்து விட்டு போய் தமது இருக்கைகளில் அமர்ந்து கொள்கின்றார்கள்.
காட்சி மாற்றத்திற்கு நெறியாளர் கையாண்ட உத்தி புதுமையானது.
கட்டியக் காரர்களும், காட்சி மாற்றமும், வாய்ப்பாட்டுக் காரர்களும் அதே ஆட்களாக இருந்தமை அனைவது கருத்தையும் கவர்ந்த விடயங்களில் குறிப்பிடத்தக்கது.

பேராசிரியருடன் இது பற்றிக் கலந்துரையாடிய வேளையில் பழைய நொண்டி நாடகத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ன எனக் கூறினார். செட்டியின் மனைவியை நொண்டி தமக்குரியவாளக்கிக் கொள்ள எடுத்த முயற்சியினால், செட்டியின் முறைப்பாடு  வழக்காக அரச சபைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. நொண்டி மந்திரி கையூட்டு மூலம் பொய் கூறி வழக்கை வெல்லுகின்றான். செட்டியை துரத்தி விடுமாறு மன்னன் கட்டளையிடுகின்றான். இது பழைய நொண்டி நாடகத்தில் வரும் கதை. புதியதில் செட்டி மன்னனால் துரத்தப்பட்டதும் சொக்கப்பையன் மக்கள் சபையிடம் மன்னனை ஆற்றுப்படுத்துவதும், மக்கள் சபைப் பிரதிநிதிகள் நொண்டியின் பொய்மையை உணர்வதும், நொண்டிக்குத் தண்டணை வழங்க கட்டளையிடுவதும், செட்டியாரின் மனைவி நொண்டியை மன்னித்து மக்கள் சபைப் பிரதிநிதிகளிடம் விடுவித்ததும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் பேராசிரியரின் நொண்டி நாடகத்தில் குறைகாண முடியாத அளவிற்கு அவரால் நெறியாளப்பட்டுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
அவரது அரங்க அனுபவம், படைப்பாற்றல், அதிலுள்ள சிறப்புத் தகைமை முதலியவை இதற்குரிய காரணங்களாகும். இத்தகைய தரம் மிகுந்த படைப்புக்கள் மக்கள் மத்தியில் சென்றடைவது குறைவு. இலங்கையில் நாடகப்பாரம்பரியம் மிகுந்த பிராந்தியங்களில் மட்டக்களப்புக்கு தனித்துவம் உண்டு. ஆனால் இன்று இங்கு தரமான நாடகங்கள் தயாரிக்கப்படுவது குறைவு.

 போதனா பீடங்களில் நாடகம் - அரங்கியல்  ஒரு பயில் நெறியாக வரும் முன்னர் இந்நிலை சிறப்பாக இருந்தது.   தரமான ஆற்றுகை வடிவங்கள் மக்கள் சென்றால் அதையொத்த மேலும் பல ஆற்றுகைகள் உருவாக்கம் பெறும் என்பது மறுக்கமுடியாத உண்மை. பேராசிரியரின் கலைப்பயணம் தொடர அவருக்கு எமது வாழ்த்துக்கள்.              




நொண்டி நாடகம்--தென்மோடி இசை நாடகம்

மன்னார் கிராமத்தில் கேள்விப்பட்டதை மட்டு நகரில் அனுபவித்தேன் தமிழ்தாசன் - கற்கிடந்தகுளம், முருங்கன், மன்னார்

_____________________________________________________________________
கூத்தின் பாரம்பரியப் பண்புகளையும் உள்வாங்கி, தற்கால பார்வையாளரின் ரசனைக்கு ஏற்றவிதமான  புதிய பரிமாணத்திலான கலைப்படைப்புக்களை உட்புகுத்தி மேடையேற்றப்பட்ட விடயம் ஒரு இன்பரச அனுபவமாகும்.  ‘தொலைக்காட்சியில் பார்க்கும் நாடகத்தைப்போல தொடங்கியதும் முடிந்ததும் தெரியாதளவிற்;கு விறுவிறுப்பாக இருந்தது _____________________________________________________________________
பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களை நேரடியாகச் சந்தித்து எனது நான்காவது புத்தக வெளியீடான ‘பூநகரிப் பிரதேசக் கூத்துக்கலைக் காவலர்கள்’ எனும் நூலிற்கு அணிந்துரை பெற்றுக்கொள்வதுடன் அவருடன் அருகிருந்து பேசி, கலந்துரையாட வேண்டும் என்கின்ற ஆர்வமும் நிறையப்பெற்று 10.10.2014 அன்று அதிகாலை என் மனம் கவர்ந்த மட்டுநகரை வந்தடைந்தேன்.

‘என் மனம் கவர்ந்த  மட்டுநகர்’ என்று இங்கு குறிப்பிடக்காரணம் 1998ம் ஆண்டு நான் முதன்முதலாக கத்தோலிக்க குருமட மாணவனாக மட்டக்களப்பிற்கு வந்து 3 மாதங்கள் தங்கியிருந்தபோது மட்டுநகர் மக்களின் வாழ்வியல், விருந்தோம்பல், நட்பு, தமிழ் உணர்வு என்னை விரமிக்கச் செய்தது, என்; எண்ணங்களை ஆக்கிரமித்தது, சிந்தனைகளுக்கு சவால்விடுத்தது. அதனைச் சமாளித்துக்கொள்ளவும், விடைகொடுக்கவும் ‘என் மனம் கவர்ந்த மட்டுநகர்’ எனும் தலைப்பிலான கட்டுரையை வரைந்து   என் மனதிற்கு அமைதியைத் தேடிக்கொண்டேன்.

நான் தலைவணங்கும் தமிழ் அன்னையின்; பிள்ளைகளில் ஒன்றான மட்டுநகருக்கு என் இதயத்தில் எப்போதும் உயர் இடம் உள்ளது.

‘இன்று மட்டக்களப்பு நகர மண்டபத்தில் எனது நாடக நிகழ்வு மாலை 4 மணிக்கு உள்ளது. அங்குதான் காலையிலிருந்து நிற்பேன். அங்கு வந்தால் என்னைச் சந்திக்கலாம் என்றார்’ பேராசிரியர்.

காலை 10.00 மணியளவில் நகர மண்டபத்தை நோக்கி முச்சக்கரவண்டியில் புறப்பட்டேன்

1998ம் ஆண்டு நினைவுகளைச் சுமந்தவனாக. மண்டபத்தை அடைந்ததும் மேடையில் ஒத்திகை நடப்பது புரிந்தது. கதிரைகள் அடுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்து கொண்டேன்.

கூத்து நிகழ்வில் கடைசி ஒத்திகை என்பது  மேடையேற்றத்திற்கு சமன் என்று எனக்குத் தெரிந்தமையால் பேரரிசிரியரை சந்திக்காமல் ஒத்திகையில் நானும் லயித்துப்போனேன்.

எனது நான்காவது புத்தகத்தின் நான்காம் அத்தியாயத்தில்; கூத்துக்கலை வளர்ச்சி பற்றிய பகுதியில் கூத்துக்கள் மக்களைக் கவரவேண்டுமானால் பாத்திரத்திற்கு ஏற்ற தோற்றத் தெரிவு, பாத்திரத்தின் குரல்வளம், பாத்திரங்களின் முகபாவனை, அங்கப்பேச்சு, பின்னிசை, தொய்வற்ற சுறுசுறுப்பான பாத்திர மாற்றங்கள் அத்தனையும் ஒருங்கமைந்திருந்தமை கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.


ஓத்திகையின் ஈடுபாட்டிலும் என்னைக் கண்ட பேராசிரியர் என் அருகில் வந்து அமர்ந்து கொண்டமை என்னை மெய்சிலிர்க்கச் செய்தது.

 ‘நொண்டி நாடகத்தை இசைநாடகமாக தென்மோடியில் எழுதி திருமதி. பிரியதர்சினி ஜதீஸ்வரன் அவர்களுடைய உதவியுடன் கிழக்குப் பல்கலைக்கழக இசைத்துறை 4ம் வருட மாணவ மாணவிகளைக் கொண்டு பழக்கி பௌர்ணமி நிகழ்வாக இன்று மாலை மேடையேற்ற இருப்பதாகக்கூறினார்.

இசைத்துறை இறுதியாண்டு மாணவர்கள் என்பதால் பாத்திரங்களின் குரல்வளம் சிறப்பாக இருப்பதுடன், பாத்திரத்தெரிவும் அற்புதம் என்று ஒரு மடுவாக மலையைப் பாராட்டுவதற்கு வாய்ப்புக்கிடைத்தமை கடவுள் ஆசீர்வாதம் என உணர்ந்தேன்.

எனது கிராமத்தில் என் முன்னோர் நடித்த நொண்டிநாடகம் பற்றியும் அதன் ஒரு பாடல் வரியான
‘குளக்கட்டு தறிக்கல்லோ போனேன்_ அப்போ
 குளக்காறன் கண்டென்னை துரத்தியே வந்தான்.
வழுக்கலால் விழுந்தோடிப்போனேன்_ அப்போ
வழுக்கிவிழுந்திந்தக்கால் சுளுக்கினதப்போ’

என்பதை எனது மூன்றாவது புத்தக வெளியீடான சற்பிரசாத வாசாப்பு - ஒர் வரலாற்றுப்பார்வை, 2009, பக்கம் 54 குறிப்பிடப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டினேன்.



மன்னார் கற்கிடந்தகுளம் கிராமத்தில் நான் பிறப்பதற்கு முன்பே மேடையேற்றப்பட்ட நொண்டி நாடகம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன்.

இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்று கூறினேன். கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை எண்ணி உள்ளம் பூரித்தது. இரவு ஆகினாலும் பார்த்துவிட்டுதான் போவது என்று மனம் உறுதி எடுத்துக்கொண்டது.


ஒத்திகையில் அரசனுக்குரிய பாத்திரங்கள் வாள் வைத்திருக்கும் முறை, நாடகம் தொடங்கி முடியும்வரை நடிப்பவர்களின் பாத்திரம் தாங்கிய நிலை என்பன பற்றி பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

ஒத்திகை முடிந்ததும் கலைஞர்களை ஒன்றுதிரட்டி என்னை அழைத்து அறிமுகம் செய்தமை என்னையே நான் மறக்கச் செய்தது. அதிலும் நான் குறிப்பிட்ட சில விடயங்களை நடிப்பவர்களுக்கு தெரிவிக்குமாறு சொன்னதும் பேராசிரியரின் நெறியாள்கையில், இசைத்துறை விரிவுரையாளர் உதவியில் பல்கலைக்கழக இறுதியாண்டு இசைத்துறை மாணவ மாணவிகள் நடிக்கும் இந்தப் பிரமாண்டமான நிகழ்விற்கு எனது குறிப்புக்களையும் மதித்தமை அவர்களுடைய பெருந்தன்மையும், கலை வளர்ச்சியில் இவர்களின் திறந்த பெருமனம் என்பதை உணரப்பண்ணியது.

முதலில் அனைவரையும் பாராட்டினேன்.
அருமையான பாத்திரத்தெரிவு,
 பிரமிப்பான குரல்வளம்,
 வியப்பூட்டும் நடிப்புத்திறன்.

இதனை ஒரு கிராமத்துக் கலைஞர்களுக்கு பழக்கி மேடையேற்றுவதானால் எத்தனை கஸ்ரங்கள் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.  பேராசிரியருடன் பேசவும், கலந்துரையாடவும், அருகிருந்து நிழற்படம் எடுக்கவும்
 கிளிநொச்சியில் இருந்து நான் வந்திருக்கிறேன்.

உங்களுக்கு அவர் அருகில் நித்தமும் நின்று இந்த நிகழ்வினைப் பழக்குவதற்கு நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். தமிழரின் கலைச் சொத்தான கூத்து கிராமங்களின் அழிந்துவருவது வேதனையான விடயம். கிளிநெர்ச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரிப் பிரதேசத்தில் புகழ்நிறைந்த அண்ணாவியர்கள் ஏராளமான கூத்துக்களை எழுதி, நெறியாள்கை செய்து மேடையேற்றி உள்ளார்கள். ஆனால் இன்று அதன் எச்சங்களைக்கூடக் காணவில்லை.

இதுதொடர்பான நூலுக்கு பேராசிரியரிடம் இருந்து அணிந்துரை பெற்றுக்கொள்வதற்குத்தான் நான் வந்துள்ளேன். தமிழ் இனத்தின் அடையாளமான கூத்துக் கலை அழிந்திடாமல் காக்;கப்பட்டு எம் தலைமுறை தலைமுறைக்கும் மங்காப் புகழுடன் கையளிக்க வேண்டியது நம் கடமை. இந்தப் பணியினை நீங்கள் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சிதருகிறது. உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள் என்றதும் அனைவரும் உற்சாகத்தினால் கரகோசம் செய்தார்கள்.

என் கருத்து அறிஞர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டமை நாளைய தமிழ் இனத்தின்  கூத்துக்கலை அடையாளத்திற்கு கிடைத்த உத்தரவாதம் என்றது மனம்.

காலை 10 மணி தொடக்கம் நகர மண்டபத்தில் அமர்ந்து நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருந்தேன்;. மன்னார், கண்டி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் ஓளிபிறந்தது நாட்டுக்கூத்து, ஆசை நவீன நாடகம், ஆயுதமும் மனிதனும் (யசஅள யனெ வாந அயn) நாடகம், கோலியாத் நாட்டுக்கூத்து, ஆயர் றொமறோ வாழ்க்கைச் சரித்திர நாடகம், பூநகரி ராணி போன்ற நாடகங்களில் நான் நடித்த, நெறியாள்கை செய்த அனுபவங்கள் அவ்வப்போது என் மனத்திரையில் மேடையேறிச்சென்றன. மதிய உணவு முடிந்ததும் கலைஞர்கள் தங்கள் பாத்திரங்களை தனித்தனியாகவும், குழுக்களாகவும் நடித்தும், பாடியும் பழகினார்கள்.

3 மணியளவில் ஒப்பனைப் படலம் ஆரம்பமாகியது. பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்த விடயம் கலைஞர்கள் ஆண் பெண் வேறுபாடு இன்றி ஒருவருக்கொருவர் ஒப்பனை செய்தார்கள்.  நகைச்சுவை செய்துகொண்டார்கள். ஆடைகள், அணிகலன்கள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.


இந்த இசைநாடகத்திற்கென்றே அத்தனை ஆடை, அணிகலன்களும் பிரத்தியேகமாக செலவு செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டதாக பேராசிரியர் கூறியபோது அதன் செலவுகள், வடிவமைப்பு ஆற்றல்கள் என்பனவற்றை உணர முடிந்தது.

 மாலை 4.30 மணியளவில் ஆரம்பமாகியது நிகழ்வு.

 தமிழர் பாரம்பரியத்திற்கு அமைவாக ஒளியேற்றும் நிகழ்வு ஆரம்பமானது. இந்தப் பௌர்ணமி விழா நிகழ்விற்கு மட்டக்களப்பின் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் வந்திருந்தனர் .

மண்டபம் நிறைந்த சனம்

மட்டக்களப்பு நாடகத்தின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் உயிர்கொடுத்து வாழவைப்பவர்களில் பாடசாலைகள், பல்கலைக்கழகம்; என்பன முதன்மை பெறுகின்றன. பெண்களின் பாத்திரங்களை ஆண்கள் ஏற்று ஆடும் மரபு மாறி பெண்களே பெண் பாத்திரம் ஏற்று நடிப்பதும், கிராமத்து வட்டகளரியில் ஆடப்பட்ட கலைகள் நகரத்தின் கலைகளாக மாறி சட்டமேடைக்கு கொண்டுவரப்பட்டு தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் தழிழரின் கூத்துக்களை ஆய்வு செய்யப்படவும், வியப்புடன் நோக்கப்படவும் பாடுபட்டவர்களில் பேராசிரியர் அவர்களும் முதன்மையானவர் என்பதை நிரூபிக்கும் அடுத்த மைல்கல்லாக அமைந்திருப்பதுதான் இந்த பாரம்பரிய.நாட்டுக்கூத்தான நொண்டிநாடகத்தை நவீன இசைநாடகமாக ஆக்கம்; செய்து அளிக்கை பண்ணியிருக்கும் பேராசிரியர் மௌனகுரு அவர்களின் முயற்சி.

 பல நாடகங்கள் எமது கிராமங்களிலும், பொது மேடைகளிலும் அரங்கேற்றம் செய்யப்படும். முடிவில் பார்வையாளர்கள் அனைவரும் கரகோசம் செய்வதுடன் மிகப்பிரமாதமான நடிப்பும், நெறியாழ்கையும் என்று புகழாரம் சூட்டுவார்கள். ஆனால் அவர்கள் பார்த்து ரசித்த நாடகத்தின் கதைச் சுருக்கத்தைக் கேட்டால் விடையான முடியாது திண்டாடுவார்கள்.

 பேராசிரியர் மௌனகுரு அவர்கள் தமது தலைமையுரையின் பிற்பாடு இசைநாடகத்தின் கதைச்சுருக்கத்தையும் கூறிச் சென்றமை அவருடைய கலைப்புலமையை அனுபவத்தை வெளிக்காட்டியது


இசை நாடகத்தின் கதைச் சுருக்கம்


ஆற்றைக்கடக்க முடியாத நொண்டிக்கு செட்டியும் அவர் மனைவியும் உதவி செய்கிறார்கள். மனைவியின் கையைப் பிடித்து ஆற்றைக்கடந்த நொண்டி அவளை தனது மனைவி என்கிறான். மந்திரிக்கு லஞ்சம் கொடுத்து அரசனுடை செல்வாக்கினைப் பெறுகின்றான். செட்டியாரின் மனைவியை நொண்டியின் மனைவி என்று அரசன் தீர்ப்பு வழங்குகின்றான். மனைவியை இழந்த செட்டி கவலையுடன் கிராமத்திற்குப் போகின்றார். செட்டியின்; வேலையாள் சொக்கன் விவேகமானவன். செட்டியின் பொருட்களை விற்பனை செய்து செல்வம் சேர்த்துக்கொடுப்பவன். செட்டியார் நடந்தவற்றைக் கூறியது கேட்டு வருத்தப்படும் சொக்கன் செட்டியாரிடம் வாருங்கள் நாம் இப்போதே மக்கள் தலைவர்களிடம் போவோம். ஏனெனில் அவர்கள் தீர விசாரித்து நல்ல முடிவு தருவார்கள் என்று செட்டியை அழைத்துச் செல்கின்றான்.

நாட்டு அரசர்கள் செட்டியின் கதைகேட்டு நொண்டியையும், செட்டியையும் அழைத்து விசாரிக்கின்றார்கள். நொண்டி தன் மனைவி என்கிறார். செட்டி தன் மனைவி என்கிறார். தீர்க்கமுடியாத பிரச்சனை என்பதால் அரசர் தன் சகோதரர்களுடன் கூடி ஆலோசிக்கின்றார். சகோதரர்களின் ஆலோசனைக்கு அமைவாக இரு பெட்டிகளை எடுத்து உள்ளே ஒவ்வொரு சகோதரர்களையும் வைத்து பொதி செய்துவிட்டு நொண்டியை அழைத்து ஒரு பெட்டியைச் சுமந்துகொண்டு வடக்கு திசையாகவும், செட்டியை அழைத்து மற்றைய பெட்டியைச் சுமந்து கொண்டு தெற்கு திசையாகவும் சென்று சுற்றி வரும்படி கட்டளையிடுகின்றான். அப்படியே பெருத்த கஸ்ரத்தின்; மத்தியில்; இருவரும் சுமந்து செல்கிறார்கள். பாரச்சுமை தாங்க முடியாத நொண்டி ‘செட்டியின் மனைவிக்கு ஆசைப்பட்டதனால் இத்தனை சுமையைச் சுமக்கவேண்டியதாயிற்றே’ என்று பேசுகிறான். செட்டி பாரம் தாங்க முடியாது ‘கட்டிய மனைவியையும் இழந்து இப்படிக் கஸ்ரப்படவேண்டியதாய் ஆகிற்றே’ என்று கூறி வருந்துகிறார். இருவரும் பெட்டிகளைக் கொணர்ந்து இறக்கியதும்;; அரசர் மந்திரிகளை அழைத்து பெட்டிகளைத் திறக்கச் சொல்கிறார். உள்ளிருந்து தம்பிமார் வெளியே வருகின்றார்கள். இதனை அறியாத நொண்;டியும், செட்டியும் வியந்து நோக்குகின்றார்கள். இருவரும் பேசியவற்றை தம்பிமார் வாசிக்கின்றார்கள். அரசர்கள் கோபம் கொண்டு நொண்டியின் மற்றக்காலையும் வெட்டும்படி கட்டளையிடுகிறார். உடனே செட்டியின் மனைவி முன்வந்து அப்படிச் செய்யாதீர்கள். சமூகத்தில் நொண்டி என்று அவரை ஒதுக்குவதால்தான் அப்படிச் செய்தார். மன்னித்துவிடுங்கள் என்கிறார். அரசர்களும் நொண்டியை மன்னித்து மனைவியை செட்டியுடன் சேர்த்துவிடுகின்றார்கள். நொண்டி செட்டிக்கும், மனைவிக்;கும் நன்றி கூற அனைவரும் மகிழ்ச்சியுடன் செல்கின்றார்கள்.




தென்மோடி நாடகமாக இருந்த நொண்டி நாடகத்தை இசைநாடகமாக புதிய கலையம்சங்களை உட்புகுத்தியிருந்தமை பார்வையாளர்களின் கவனத்தைக் கட்டிப்போடும் மந்திரமாக இருந்தது.

பொதுவாக நாட்டுக்கூத்து மேடையேற்றங்களில் பாத்திரங்கள் தோன்றும் முன்பு அந்தப் பாத்திரத்தின் வரவுதனை கட்டிகாறன் அறிவிப்பார். பாத்திரங்கள் மாறும்போது திரைகளும் மாற்றப்படும். நடிப்பவர்கள் தமது பாத்திரங்கள் நிறைவடைந்ததும் மாறிக்கொண்டிருப்பார்கள் இதனால் தாமதங்கள் ஏற்படும்.

ஆனால் பேராசிரியரின்; இந்த புதிய பரிமாணத்தில் அமைந்த இசைநாடகத்தில் பாத்திரங்களே தம்மை அறிமுகம் செய்துகொள்ளும். பாத்திரங்கள் மாறும்போது கதை நகர்த்துனர்கள் (narrtors) திரைபோன்று வரிசையில் நின்று ஒரு தாளத்திற்கு அபிநயித்து ஆடுவார்கள்.  அவர்களுக்கு நடுவாக பாத்திரங்கள் தோன்றும் வண்ணமான கலைச் சிந்தனை அழகாக அமைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் பாத்திரங்கள் தமது நடிப்பு முடிந்ததும் மேடையின் பிற்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட விதமாக கதிரைகளில் தங்கள் பாத்திரங்களுக்கு உரிய கம்பீரத்துடன் அமர்ந்து பிற்பாட்டு இசையிலும் பங்கெடுக்கும் விதமான கற்பனை முயற்சி பின்னிசைக்கு பலம் சேர்ப்பதாய் இருந்ததைக் காண முடிந்தது.

இசைக்கல்லூரி மாணவிகளின் அற்புதமான குரல்வளத்திற்கு மேலும் வலுவும், சுருதியும் சேர்த்தவை பக்க வாத்தியங்களான வயலின், ஆர்மோனியம், மிருதங்கம், தபேலா, கைத்தாளம் என்பன.

 பொதுவாக கூத்துக்களில் பாத்திரங்களின் வரவு கட்டியகாரனினால் அறிவிக்கப்படும் என்பதை முன்கூட்டியே நான் கூறியிருக்கின்றேன். ஆனால் இங்கு பாத்திரங்களே தங்களை அறிமுகம் செய்யும் மரபு கண்டமை புதிய அனுபவமாகும். அத்துடன் ஒரு பாத்திரம் தனது துணைப்பாத்திரத்தினையும் அறிமுகம் செய்யும் புதிய முறை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையாகவும், சுவாரசியமாகவும் இருந்தது. உதாரணமாக: செட்டியும் அவருடைய துணைவியாரும் அரங்கத்தில் நுழையும்போது தங்களைத் தாங்களே அறிமுகம் செய்த பிற்பாடு ஒருவர் மற்றவரைப்பற்றியும் அறிமுகம் செய்வார். .

 அதிகமாக கிராமத்து மக்களினால் பண்டைய நெறிமுறைகளுக்கு அமைவாக மேடையேற்றப்பட்டு வந்த கூத்துக்களை தற்காலத்து கல்வியாளர்கள் காலத்தின் நகர்விற்கு ஏற்றவிதமான மாற்றங்களை உட்புகுத்தி பாரம்பரியத் தன்மைகள், தாளங்கள், அரங்கேற்ற முறைமைகள் மறக்கப்படாதவாறு கூத்துக்களைப் பழக்கி மேடையேற்றினாலும் கிராமத்து மக்கள் மட்டுமல்ல சில படித்தவர்களும் இப்படியான புதிய சிந்தனைகளை பாரம்பரியத்திற்கான அச்சுறுத்தலாக எண்ணுவது எனக்கு ஆச்சரியமான ஒன்றல்ல. இந்தவிதமான சூழமைவிலும் தென்மோடி நொண்டிநாடகத்தை இசைநாடகமாக மாற்றி அமைத்து புதிய பார்வையும், கலை ரசனையும் படைத்த பேராசிரியர் அவர்களின் இந்த அரங்கேற்றத்தில் நடிகர்கள் அனைவரும் மேடையில் சூழ்ந்து நின்று கணபதியைத் துதித்து, அவர் அடி பணிந்து நாடகம் ஆரம்பிக்கப்படுகின்றது. நாடக முடிவில் தொட்டுக்கும்பிடு தொட்டுக்கும்பிடு என்று அனைத்து நடிகர்களும் பாடிக்கொண்டு மேடையைத் தொட்டுக்கும்பிடும் காட்சி கிராமத்து வாசனையை வீசச்செய்தது.

அத்தோடு கூத்துக்கலையின் உயிர் நாடியாக நம் முன்னோரினால்  கைக்கொள்ளப்பட்டு வந்த வாத்தியங்களான ஆர்மோனியம், கைத்தாளம், மிருதங்கம் என்பவற்றிற்கு பிரதானமான பங்குகள் கொடுக்கப்பட்டிருந்தமை இசையினை முன்நகர்த்திச் சென்றவிதத்தில் காணமுடிந்தது.

மொத்தத்தில் நொண்டி இசைநாடகம் கூத்தின் பாரம்பரியப் பண்புகளையும் உள்வாங்கி, தற்கால பார்வையாளரின் ரசனைக்கு ஏற்றவிதமான புதிய பரிமாணத்திலான கலைப்படைப்புக்களை உட்புகுத்தி மேடையேற்றப்பட்ட விடயம் ஒரு இன்பரச அனுபவமாகும். ‘தொலைக்காட்சியில் பார்க்கும் நாடகத்தைப்போல தொடங்கியதும் முடிந்ததும் தெரியாதளவிற்;கு விறுவிறுப்பாக இருந்தது.

 ஏன் முடிந்தது என்றதுபோல் இருந்தது’ என்ற பார்வையாளர்களில் ஒருவரின் கூற்று எனது உள்ளத்து உணர்வுகளையும் சார்ந்ததாய் மெய்சிலிர்க்கச் செய்தது உண்மைதான்.

 ஈற்றில் பார்வையாளர்கள் கலைப்பரவசத்தில் இறுதி இசைப்பாடலுக்கு ஏற்றவிதமாக ஒரே கட்டுக்கோப்புடன், தாளத்திற்கு ஏற்றாற்போல் கரகோசம் செய்தபோது என்னை நானும் மறந்துபோய் எனது கரங்களும் ஒத்துழைப்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டேன்.

தமிழரின் உயிர் மூச்சாய், இனத்தின் அடையாளச் சொத்தாய் பாரம்பரியமாகக் கைக்கொள்ளப்பட்டுவரும் கூத்துக்கள் அதன் பாரம்பரியத்தன்மைகளையும் இழந்திடாது, புதிய மாற்றங்களையும் தடுத்திடாது காலத்திற்கும், மக்கள் இரசனைக்கும் ஏற்றாற்போல் வளர்ந்து தேசிய மட்டத்தில், சர்வதேச மட்டத்தில் அங்கிகாரமும், அடையாளமும் எட்டப்படும்விதமான முயற்சிகளில் பேராசிரியரைப்போன்ற விற்பனர்கள் களம் இறங்க வேண்டும். இவர்களின்; இவ்வாறான சவால்நிறைந்த தமிழ்ப்பணிக்கு தமிழர்கள் நாம் தோள்கொடுக்கவேண்டும். நாகரீகத்தில் மூழ்கி பாரம்பரியத்தைக் கலைக்கும் முயற்சியாக புதியவற்றை விமர்சிப்பதை விடுத்து ஆக்கபூர்வமான கருத்துக்களையும், ஆலோசனைகளும் வழங்கி கலைப்பணியில் அனைவரும் ஒன்றிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 

  ஏதிலிகளாகிப்போன தமிழ் இனம் வரலாற்றில் இருந்து நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டு யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களில் காணப்படும் பாரம்பரியக் கலையம்சங்களை, கலைச்சிறப்புக்களை ஒன்றுபட்டு நிலைநிறுத்த வேண்டும்.

பல்வேறுபட்ட காரணிகளால் வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, முடக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வரும் எம் கூத்துக்கலை உயிர் பெறவேண்டுமானால் கிராமங்களின் பூர்வீகமும், பழமையும், பண்பாடும் நிறைந்த கூத்துக்கள் அறிவாளிகளையும், படித்தவர்களையும் உள்வாங்கி ஒரு கட்டுக்கோப்புக்குள் அடிப்படை ஒழுக்கங்களைக் கொண்டு உருவாக்கம் பெறும்போது கிராமம், நகரம், நாடு என்று சர்வதேசம் வரை எமது கலைக்கான அடையாளம் உயர்வானதாய் அமையும் என்பது அடியேனின் கருத்தாகும்.

-    தமிழ்தாசன் - கற்கிடந்தகுளம், முருங்கன், மன்னார்

 நன்றி globaltamilnews




No comments: