கடவுச்சொல் -- அ.முத்துலிங்கம்

.                        
அன்று காலை விடிந்தபோது அது அவர் வாழ்க்கையில் மிகவும் ஆச்சரியமான நாளாக மாறும் என்பது சிவபாக்கியத்துக்கு தெரியாது. செப்டம்பர் மாதத்தில் இலைகள் நிறம் மாறுவது பார்க்க அவருக்கு பிடிக்கும். அவர் வசித்த நாலாவது மாடி மரங்களின் உயரத்தில் இருந்தது இன்னொரு வசதி. யன்னலைத் திறந்தவுடன் குளிர் காற்று வீசியது. முன்னே நிற்பது வெள்ளையடித்ததுபோல பேர்ச் மரம். சற்றி தள்ளி சேடர் மரம். ஆக உயரமானது. ஆஷ் மரப்பட்டைகள் சாய்சதுரமாகவும் இலைகள் எதிரெதிராகவும் இருக்கும். ஐந்துகோண மேப்பிள் இலை அவசரமாக நிறம் மாறும். கடைசியாக மாறுவது ஓக்.
தகவல் பெட்டியில் மாலை நாலு மணிக்கு தண்ணீர் அப்பியாசம் என நினைவூட்டல் குறிப்பு கிடந்தது.  நியூ யோர்க்கில் இருந்து 80 மைல் தூரத்தில் இருக்கும் முதியோர் காப்பகத்துக்கு அவரைக் கொண்டுவந்து மகள் விட்ட நாளிலிருந்து அவர் தினம் மறக்காமல் செய்தது தண்ணீர் உடற்பயிற்சி. அது அவரை ஆரோக்கியமாக வைத்திருந்தது. குளித்து உடுப்பை மாற்றி அரை மணிநேரம் பிரார்த்தனை செய்தார். ஒரு துண்டு ரொட்டியில் அப்ரிகோட் ஜாம் பூசி சாப்பிட்டுவிட்டு தேநீர் பருகினார். அங்கே வந்து ஐந்து வருடமாகிவிட்டது. மகள் அவருக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. ஐந்து நட்சத்திர ஹொட்டலில் இருப்பதுபோல வசதிகள். கடன் அட்டையில் கீழே இருக்கும் சுப்பர்மார்க்கட்டில் என்னவும் வாங்கி சமைக்கலாம். அல்லது வேண்டிய உணவுக்கு ஓடர் கொடுக்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். ரேடியோ கேட்கலாம். தினம் மருத்துவர் வந்து சோதிப்பார். வேண்டுமானால் முழுநாளும் படுத்துக் கிடக்கலாம். ஒருவர் கேள்வி கேட்கமாட்டார்கள்.

கீழே போய் தோட்டத்தில் சிறிது நேரம் உலாத்தலாம் என்று நினைத்தபோது கதவு தட்டப்பட்டது. முன்கூட்டியே அறிவிக்காமல் ஒருவரும் வருவதில்லை. வெளியே இருந்து வருபவர்கள் முதலில் பஸ்ஸரை அழுத்தி இவர் கீழே மின்கதவைத் திறந்த பிறகுதான் மேலே வரலாம். மறுபடியும் யாரோ தட்டினார்கள். கதவைத் திறந்தபோது அதிர்ச்சியில் ஓர் அடி பின்னே நகர்ந்தார். நம்பமுடியவில்லை. ஆப்பிரஹாம் நீலக் கண்களுடன் உயரமாக 14 வயதை நிரப்பிக்கொண்டு நின்றான். ‘அம்மம்மா’ என உரக்க அழைத்தான். அதன் பின்னர்தான் முன்னே பாய்ந்து அவனைக் கட்டிக்கொண்டார். வார்த்தைகள் குழறின. ’நீ என்னை மறக்கவில்லையா? மறக்கவில்லையா?’ என்று அரற்றினார். ‘அம்மம்மா, அம்மம்மா’ என்று அழைத்தபடியே அவன் கூச்சமாக நின்றான். அவனுக்கு ஒன்பது வயது நடந்தபோது பிரிந்தது. இப்பொழுதுதான் முதல் தடவையாக சந்திக்கிறார்கள். 
சிவபாக்கியம் பேரனைத் தடவித் தடவிப் பார்த்தர். ஈட்டி எறிபவன் போல உடம்பு. பொன் கம்பிகளாக தனித்தனியாக குத்திட்டு நிற்கும் முடி. அணைத்தார், மீண்டும் தடவினார். ’அம்மா நல்லாய் இருக்கிறாரா? அப்பா நல்லாய் இருக்கிறாரா. படிக்கிறாயா?’ என்றார். ’அம்மம்மா இன்றுமுழுக்க நான் உங்களுடன்தான். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கு. முதலில் மோலுக்கு போவோம் அங்கே உங்களுக்கு விருப்பமான பிரவுணி ஐஸ்கிரீம் சாப்பிடுவோம்’ என்றான். ’உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கா?’ என்றார் சிவபாக்கியம் ஆச்சரியத்துடன்.  அவனுக்கு ஐந்து வயதிருக்கும். பிரவுணி ஐஸ்கிரீம் என்றால் இருவருக்குமே பிடிக்கும். அன்று சாப்பிடும்போது அது கைதவறி கீழே விழுந்துவிட்டது. சிவபாக்கியம் அதை குனிந்து துடைத்து துப்புரவாக்கினார். மகள் ’எதற்காக கூட்டிச் சுத்தம் செய்கிறீர்கள்? அதற்குத்தான் வேலைக்காரர்கள் இருக்கிறார்களே’ என்றாள். சாதாரண குரல்தான். உடல் முழுவதும் சேகரமான கோபம் அவள் வாய்வழியாக வேகமாக வெளியே வந்தது. சிவபாக்கியம் திடுக்கிட்டுவிட்டார். அப்படித்தான் சச்சரவு ஆரம்பித்தது. 
ஆப்பிரஹாமுக்கு ஆறு வயதானபோது ஒருநாள் தாதி அவனை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வந்தாள். அவன் வரவை எதிர்பார்த்தபடியே வாசலில் சிவபாக்கியம் காத்துக் கிடந்தார். முழங்கால்கள் ஒன்றுடன் ஒன்று இடிபட ஓடிவந்து சப்பாத்துகளைக்கூட கழற்றாமல் அவர் மடியில் தாவி ஏறி உட்கார்ந்து அன்று பள்ளிக்கூடத்தில் நடந்ததை ஒவ்வொன்றாகச் சொன்னான் அபே. இவர் தமிழில் கேட்பார் அவன் ஆங்கிலத்தில் பதில் சொல்வான். எலும்புகள் இல்லாதவன்போல வளைந்து விளையாட்டுக் காட்டினான். நாற்காலியில் ஏறிப் பாய்ந்தபோது முழங்காலில் காயம் பட்டு அவன் உடலின் உள்ளே ஓடிய ரத்தம் அதே வேகத்தில் அதே திசையில் வெளியே ஒடியது. சிவபாக்கியம் ஒன்றுமே புரியாமல் ஓவென்று கத்தினார். தாதி ஓடிவந்து கட்டுப்போட்டாள். அன்று மகள் அவர்மேல் பாம்புபோல சீறியதை மறக்க முடியாது. ’தாதி ஒருத்தி இருக்கிறாளே. அவளுடைய வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்?’
பழைய செய்தித்தாளில் சுற்றிவரும் இனிப்புக்காக வீட்டு வாசலில் இரண்டு மணிநேரம் காத்திருந்த அந்தச் சிறுமியா இன்று அவர்மேல் அப்படி பாய்ந்தாள். அவரால் நம்பமுடியவில்லை. அவருடைய ஒரே மகிழ்ச்சி ஆப்பிரஹாம்தான். அவர் கொழும்பிலிருந்து அமெரிக்கா வந்ததே அவனைப் பார்க்கத்தான். புலமைப் பரிசிலில் படிக்க வந்த மகள் பெஞ்சமினைக் காதலித்து மணந்து கொண்டாள். அவன் பரம்பரை  செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவன். மிக நல்லவன்; ஆடம்பரமே கிடையாது. பிள்ளை பிறந்து நாலு வயதானபோது மகள் அவரை வருவித்தாள். அந்த ஆரம்ப நாட்களில் மகளிடம் கேட்டார். ‘ஏன் நீ யூத மதத்துக்கு மாறினாய். திரௌபதி என்ற பெயரைக்கூட ரிபெக்கா என்று மாற்றிவிட்டயே.’ ’அம்மா, நீதானே சொன்னாய் எல்லா மதமும் ஒன்று என.’ ’அதைத்தான் இப்பவும் சொல்கிறேன். எல்லா மதமும் ஒன்று என்றால் ஏன் நீ மாறவேண்டும்?’ ’அம்மா,  நீங்கள் முழங்காலில் உட்கார்ந்து இன்னொருவர் வீட்டு தரையை துடைப்பதுதான் என் சிறுவயது ஞாபகம். அந்த நிலை எனக்கு வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.’ 
வரவர சின்ன விசயங்களுக்கெல்லாம் மகள் எரிந்து விழுந்தாள். புண்படுத்தும் வார்த்தைகள் சொன்னாள். மூடிவைத்த புத்தகம் போல முகம் இருந்தது. அன்பாகக் கதைப்பதென்பது அரிதாகிவிட்டது. ஆப்பிரஹாமுடன் கழிக்கும் அந்த ஒன்றிரண்டு நிமிடங்களுக்காக மட்டுமே சிவபாக்கியம் உயிர் வாழ்ந்தார். வெள்ளிக்கிழமை இரவுகளில் அநேகமாக வீட்டிலே பெரிய விருந்து நடைபெறும். ’அம்மா இன்றைக்கு இரவு விருந்து நடக்கிறது’ என்று மகள் சொல்வாள்.  ’நீங்கள் கீழே வந்து விருந்தினர் கண்ணில் படவேண்டாம்’ என்பதுதான் பொருள். தாயாரை அறிமுகம் செய்யும் அவமானத்திலிருந்து அவள் தப்பிவிடலாம். அன்றிரவு வெகுநேரம் ஹோரா நடனம் ஆடிக் களித்துவிட்டு விருந்தினர்கள் கலைந்தார்கள். அடுத்தநாள் காலை தேநீர் தயாரிப்பதற்காக சிவபாக்கியம் கீழே இறங்கிவந்து வாயு அடுப்பை பற்ற வைத்தார். அன்று சனிக்கிழமை என்பதை முற்றிலும் மறந்துபோனார். திரும்பிப் பார்த்தபோது பின்னால் மகள், மருமகன், ஆப்பிரஹாம், தாதி, வேலைக்காரி எல்லோரும் நின்று அவளை உற்றுப் பார்த்தனர். யூத வீடுகளில் வெள்ளி இரவு தொடங்கி சனி இரவு வரைக்கும் அடுப்பு பற்ற வைக்க முடியாது. அது மகா பாபம். மகள் ‘அம்மா, உனக்கு அறிவு கெட்டுப் போச்சா? எங்கள் வீட்டை நாசமாக்க வந்தாயா?’ என்று எல்லோர் முன்னிலையிலும் கத்தினாள். ஏழு வயது ஆப்பிரஹாம் ஓடி வந்து ’அம்மம்மா’ என்று அவரைக் கட்டிக்கொண்டான். சிவபாக்கியம் மேலே போய் அறையில் தனிமையில் அழுது தீர்த்தார். கூட்டுவதையும், துடைப்பதையும் மினுக்குவதையும் மட்டுமே அறிந்த அவர் மூளைக்குள் இந்த விசயம் ஏறவில்லை.  ‘நரகத்துக்குள் நுழைந்தவர் தங்கக்கூடாது; நடந்துகொண்டே இருக்கவேண்டும்.’
எல்லா வசதியும் இருந்தது. வெளியே போகலாம் வரலாம். வேண்டியதை வாங்கி சமைக்கலாம். ஆனால் மகள் அவரை வெறுத்தாள். ஒரு பழைய வாழ்க்கையை அவளுக்கு ஞாபகமூட்டிய காரணமாக இருக்கலாம். கடைசி சம்பவம் ஆப்பிரஹாமின் 9வது வயதில் நடந்தது. அவன் கிளாசில் தண்ணீர் குடிக்கும்போது கடைவாயில் இரண்டு பக்கமும் வழியும். சிவபாக்கியம் அதைத் துடைத்தபடியே அவனுக்கு இடியப்பத்தையும் றால் பொரியலையும் பிசைந்து ஊட்டினார். வெட்டிய தக்காளிபோன்ற சின்ன வாயை அவன் திறப்பான். பாதியில் போதும் என்று மூடுவான். இவர் ’இன்னும் கொஞ்சம்’ என்பார். அவன் திறப்பான். கால்களை உயரத் தூக்கிப் பாய்ந்து எங்கேயோவிருந்து மகள் வந்தாள். றால் பொரியலை பார்த்துவிட்டு ’அம்மா’ என்று கத்தினாள். வீடு முழுக்க அதிர்ந்தது. ஆப்பிரஹாம் மடியிலிருந்து குதித்து இறங்கி மூலையில் போய் நடுங்கிக்கொண்டு நின்றான். ’எங்கள் குடும்பத்தை பிரிப்பதற்குத்தான் நீ வந்திருக்கிறாய். உன்னைப்போல என்னையும் வெகு சீக்கிரத்தில் வீடு கூட்ட வைத்துவிடுவாய்.’
இத்தனை கொடூரமான வார்த்தைகளை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அன்றே சிவபாக்கியம் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். ஓர் ஒற்றையை திருப்புவதுபோல அத்தனை எளிதாக அது நடந்துவிட்டது. அங்கே வந்த பின்னர்தான் சில விசயங்களை கற்றுக் கொண்டார். யூதர்கள் குளம்பு பிளந்த, இரை மீட்கும் மிருகத்தின் இறைச்சியை மட்டுமே உண்பார்கள். ஆடு, மாடு, மான், மரை. பன்றிக்கு பிளவுபட்ட குளம்பு ஆனால் இரை மீட்காது. ஆகவே அது தள்ளி வைக்கப்பட்ட உணவு. ஒட்டகம் இரை மீட்கும் ஆனால் குளம்பு பிளவு படவில்லை. அதுவும் தள்ளிவைக்கப்பட்ட உணவு. நீரில் வாழும் பிராணிக்கு செதிளும் செட்டையும் இருக்கவேண்டும். ஆகவே மீன் ஏற்கப்பட்ட உணவு. நண்டு, கணவாய், றால் தள்ளிவைக்கப்பட்டவை. சிவபாக்கியத்துக்கு இவை எல்லாம் தெரியவில்லை. 
ஐந்து வருடங்களாக மகள் அவரை அங்கே வந்து பார்த்தது கிடையாது. பேசியதும் இல்லை. ஆனால் ஐந்து நட்சத்திர ஹொட்டல்போல எல்லா வசதிகளும் செய்து தந்திருந்தாள். கடன் அட்டையில் அவர் என்னவும் வாங்கலாம். எவ்வளவும் செலவழிக்கலாம். ஆனாலும் அவரால் சந்தோசமாக இருக்க முடியவில்லை. ஏதோ குறைந்தது. பயணி மறந்து விட்டுப்போன பயணப்பெட்டிபோல ஒருவருக்கும் பிரயோசனம் இல்லாமல் கிடந்தார். தியான வகுப்பில் மனதை மூடச் சொல்வார்கள். அப்படிச் சொன்ன உடனேயே அங்கே ஆப்பிரஹாம் தோன்றிவிடுவான்.  
’அம்மம்மா, நீங்கள் மெலிந்துபோய் விட்டீர்கள். என் கையை பிடியுங்கோ, மோல் வந்துவிட்டது. பிறகு சுத்திப் பார்ப்போம். இப்ப ஐஸ்கிரீம் சாப்பிடுவோம். இன்றைக்கு மதியச் சாப்பாடும் என்னோடுதான், யப்பானிய உணவகத்தில்.’ இருவரும் பிரவுணி ஐஸ்கிரீம் சாப்பிட்டார்கள். ’அம்மம்மா, நீங்கள் போனவருடம் என்னுடைய பார்மிற்ஸாவை மறந்துவிட்டீர்கள். 200 விருந்தினர்கள் வந்திருந்தார்கள் ஆனால் நீங்கள் வரவேயில்லை.’ ’அப்படியா? என்னை ஒருவருமே அழைக்கவில்லை, அபே. அது என்ன பார்மிற்ஸா?’ ’ஓ, அதுவா? 13வது பிறந்தநாளுடன் கொண்டாடுவது. நான் முழு ஆண் ஆகிவிட்டேன் என்ற பிரகடனம். என்னுடைய பாவங்களுக்கு நானே முழுப் பொறுப்பு.’ ’எனக்கு தெரியாதே. என் ஆசி உனக்கு எப்பொழுதும் உண்டு.’
’அம்மம்மா உங்களுக்கு என்ன வயது?’ 70 என்றார் சிவபாக்கியம். ’அப்ப ஒன்று செய்யலாம். எங்கள் சமய முறைப்படி 83 வயதை அடைந்த ஒருவருக்கு நாங்கள் இரண்டாவது பார்மிற்ஸா கொண்டாடுவோம். உங்களுக்கு 83 வயதாகும்போது எனக்கு 27 வயது நடக்கும். நான் உங்களுக்கு மிகப்பெரியா பார்மிற்ஸா ஏற்பாடுசெய்வேன். சம்மதமா?’ ’எனக்கு சம்மதம். ஹோரா வட்ட நடனம் என்னை ஆடச்சொல்லக்கூடாது.’ இருவரும் வாய்விட்டு சிரித்தார்கள்.  
அன்று நெடுநேரம் சுற்றிக் களித்துவிட்டு மாலையானதும் களைத்துப்போய் வீடு திரும்பினார்கள். ’அம்மம்மா, இரவு என்ன சாப்பாடு?’ ’நல்ல இடியப்பமும், சொதியும் இருக்கு. கொஞ்சம் சாப்பிடு, அபே.’ ’றால் இருக்கா அம்மம்மா?’ றால் ஆழ்குளிரில் கிடப்பது ஞாபகத்துக்கு வந்தது. ’ஏன் கேட்கிறாய் அபே?’ ’றால் பொரியுங்கோ, அம்மம்மா.’ ’அதே பிழையை இன்னொருமுறை விடமாட்டேன், அபே. நல்ல பாடம் படித்துவிட்டேன், போதும்.’ ‘என்ரை அம்மம்மா!. இனி நான் எப்ப வருவேனோ தெரியாது? எனக்கு வேணும். பிளீஸ்.’ அவனுடைய பிரகாசமான முகம் கறுத்து அழத் தயாரானபோது அவரால் தாங்க முடியவில்லை. ‘சரி சரி அழவேண்டாம், என்ரை ராசா.’
றால் பொரிந்து பொன்னிறமாக மாறியபோது மணம் அறை முழுக்க பரவியது. இரண்டு இடியப்பம், சொதி, றால் பொரியல் ஆகியவற்றை ஒரு பிளேட்டில் பரிமாறி அபேயிடம் கொடுத்தார். அவன் உள்ளங்கையால் பிசையத் தொடங்கினான். ‘அம்மம்மா வாயை திறவுங்கோ.’ ‘எனக்கு வேண்டாம். நீ முதலில் சாப்பிடு.’ ’நான் சாப்பிடக்கூடாது. இது தடுக்கப்பட்ட உணவு, கோசர் அல்ல, உங்களுக்குத் தெரியும். அம்மம்மா, வாயை திறவுங்கோ.’ அவர் வாயை திறக்க அவன் ஊட்டிவிட்டான். ’போதும், போதும்’ என்றார் அவர். ‘இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ என்றான் அவன். சாப்பாட்டின் சுவையோடு கண்ணீரும் அவர் வாய்க்குள் நுழைந்தது. அதுவரை சிவபாக்கியம் நினைத்திருந்தார் ஒரு பெண்ணுக்கு கிடைக்கக்கூடிய ஆகப் பெரிய சந்தோசம் ’இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ என்று சொல்லி ஏமாற்றி பேரனுக்கு உணவூட்டுவதுதான் என்று. இப்பொழுது தெரிந்தது அதிலும் கூடிய மகிழ்ச்சி ஒன்று இருந்தது. அது பேரன் கையால் ’இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ என்று சொல்லி உணவூட்டப்படுவதுதான். 
மணி ஒன்பதை நெருங்கியது. ’அம்மம்மா நான் புறப்படவேண்டும், கார் வந்துவிட்டது.’ என்றான். ’அம்மாவும் அப்பாவும் நல்லாயிருக்கிறார்களா?’ ’ஒரு குறையும் இல்லை. இன்று முழுக்க அவர்கள் யூதக் கோயிலில் கழித்திருப்பார்கள்.’ ’அப்படியா? என்ன விசேஷம்?’  ’இன்றுதான் யொம்கிப்பூர். பாவ மன்னிப்பு நாள். விரதம் இருந்து பாவங்களை கழுவும் நாள்.  அப்பாவிடம் முன்னரே பேசி உங்களிடம் வர அனுமதி பெற்றிருந்தேன்’ என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டு நின்றான். அவன் நீலக் கண்களில் வீசிய ஒளி அறையை நீல நிறமாக மாற்றியது.
‘நீ பாவத்தை கழுவவா இங்கே வந்தாய்? நீ என்ன பாவம் செய்தாய்?’ அவன் ஒன்றுமே பேசாமல் நிலத்தை பார்த்தான். ’அம்மாவுக்கு நீ இங்கே வந்தது தெரியுமா?’ ’நான் சொல்லவில்லை? அவர் சம்மதிப்பாரோ என்னவோ. ஆனால் வீட்டுக்கு போனதும் அவரிடம்  சொல்லப் போகிறேன்.’ முதுகுப்பையை மாட்டிக்கொண்டு புறப்பட ஆயத்தமானான். ’இனி எப்போது வருவாய், அபே?’ ’புதிய பாவங்களை சேர்த்த பிறகு.’ மீண்டும் சிரித்தான்.   திடீரென்று I love you என்று சொல்லி மறுபடியும் கட்டிப்பிடித்தான். ’ரோஷஹஷானாவுக்கு வீட்டுக்கு வருவீர்களா, அம்மம்மா?’ ’அது என்ன?’ ‘எங்கள் புதுவருடம். ஆதாமும் ஏவாளும் சிருட்டிக்கப்பட்ட தினம்.’ ‘யார் என்னை அழைப்பார்கள்? நீ என்னை மறந்துபோக மாட்டாயே?’ என்றாள் கிழவி தழுதழுத்த குரலில். 
பனிக் குளத்தில் குதிக்க தயாராவதுபோல சிறிது தயங்கி நின்றான். ’இல்லை, அம்மம்மா. எப்படி மறப்பேன்? என்னுடைய itune, amazon, netflix, facebook, icloud, youmanage எல்லா கணக்குகளுக்கும் உங்களுடைய பெயரைத்தானே கடவுச்சொல்லாக வைத்திருக்கிறேன். ஒருநாளைக்கு 10 தரமாவது உங்களை நினைக்கிறேன் அம்மம்மா.’ அவருடைய கன்னத்தை தடவினான். அது ஈரமாக இருந்தது. itune, amazon, netflix, facebook, icloud, youmanage என்ன என்று அவர் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால் அவன் தன்னை மறக்கவில்லை என்று சொன்னது புரிந்தது.
அவர் கண்கள் அவன் முதுகையே பார்த்துக்கொண்டிருந்தன. பேர்ச் மரத்தை தாண்டி, ஓக் மரத்துக்கும் மேப்பிள் மரத்துக்கும் இடையில் ஒரு துள்ளுத் துள்ளி புகுந்து காரை நோக்கி ஓடினான். திடீரென்று அடித்த காற்றுக்கு திரைச்சீலை விழுந்ததுபோல இலைகள் பல வண்ணங்களில் உதிர்ந்தன. அவன் மறைந்துவிட்டான். யூதக் காலண்டரில் அடுத்த யொம்கிப்பூர் எப்பொழுது வரும் என்ற ஆலோசனையில் அதே இடத்தில் நெடுநேரம் நின்றார் சிவபாக்கியம். 
nantri :http://amuttu.net/

No comments: