இலங்கைச் செய்திகள்


வட மாகாண முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ். பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

யாழில் வெடி பொருட்கள் மீட்பு

வெருகல் பிரதேசத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை: ருவான் வணிகசூரிய

===============================================================


வட மாகாண முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி

05/05/2014   வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறிய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளவேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெ ளியாகியுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று நண்பகல் திடீர் சுகவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவர் உடனடியாகவே யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நீரிழிவு நோயினால் உடலில் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சிறிய சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நோய்வாய்ப்பட்டுள்ள வடக்கின் முதலமைச்சர் தொடர்ந்தும் யாழ்.போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 


யாழ். பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

06/05/2014   யாழ்.பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். மூடப்படுவதற்கான உண்மையான காரணம் தெரிவிக்கப்படாதபோதும் மாணவர்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கற்றல் செயற்பாடுகள் குறிப்பிடப்படும் திகதிவரை நிறுத்தப்படுகின்றன என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்ததாக மாணவர் ஒன்றியத் தலைவர் ஒருவர் தெரிவித்தார். 
விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி விடுதியைவிட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கென அவர்களைப் பலாலி படைத்தளத்துக்கு வருமாறு யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஜெனரல் உதயபெரேரா அழைப்புவிடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 
வன்னியில் இறுதிப்போர் நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் மே 17,18 ஆம் திகதிகளில் போரில் இறந்தவர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்திவிடுவார்கள் என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழகத்தை மூட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மாணவர்கள் சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த வருடம் நவம்பர் மாதமும் இவ்வாறு காரணம் இன்றி பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரியாழில் வெடி பொருட்கள் மீட்பு

06/05/2014   யாழ். தாவடி தெற்கு பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றிலிருந்து  பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 
குறித்த காணியின் உரிமையாளர் இன்று காணிக்கு சென்று பார்த்த சந்தர்பத்திலேயே  வெடிப்பொருட்களை கண்டுள்ளதுடன்  உடனடியாக விடையத்தை கிராம சேவகருக்கு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கிராம சேவகர் இராணுவத்தினருக்கு தகவலை தெரிவித்துள்ளதுடன்,இராணுவத்தினர் வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.
குறித்த காணி 1993, 1995 காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகள் தம்வசம் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
நன்றி வீரகேசரி
வெருகல் பிரதேசத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை: ருவான் வணிகசூரிய

06/05/2014     திருகோணமலை இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையோரத்தில் கடற்படை வீரர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள்உரப்பையுடன் அப்பிரதேசத்தில் நிற்பதை கண்டு கடற்படை வீரர் அவர்களை நோக்கி சென்ற போது அவர்கள் உரப்பையை விட்டு விட்டு  தப்பியோடியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பையை சோதனையிட்ட  கடற்படை வீரர் அந்த பையிலிருந்து  ரி.56 ரக துப்பாக்கியும்,தோட்டாக்கள் சிலவற்றையும் மீட்டுள்ளார்.
இதன் காரணமாக இன்று காலை வெருகல் பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸாரும் ,இராணுவத்தினரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்த தேடுதல் நடவடிக்கைக்கு பல மோப்ப நாய்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.    நன்றி வீரகேசரி

No comments: