பெருஞ்சோறு அல்லது பெருவிருந்து

உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்


இந்நாட்டு மக்கள் தனக்கு பெறுவெற்றியை ஈட்டித்தருவர் என்று கருதும் மன்னன் அவர்களுக்கு சோறு அளித்தல் பெருஞ்சோறு அல்லது பெருவிருந்து என வழங்கப்படும். போருக்குச் செல்லும் முன்  வீரர்களுக்கு பெருஞ்சோறு அளித்தலும் நறவம் என்னும் கள் வழங்குதலும் பண்டைக்கால தமிழர் மரபாகும்.

சங்க கால சேர மன்னர்களில் ஒருவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தம்பியாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற அரசன் பெருஞ்சோறு அளித்ததை பாலைக்கௌதமனார் என்ற புலவர் பதிற்றுப்பத்தில் பாடியுள்ளார்.

வருநர் வரையார் வார வேண்டி
விருந்துகண் மாறா(து) உணீஇய பாசவர்
ஊனத்(து) அழித்த வால்நிணக் கொழும்குறை
குய்யிடு தோறும் ஆனா(து) ஆர்ப்பக்
கடல்ஒலி கொண்டு செழுநகர் நடுவண்
அடுமை எழுந்த அடுநெய் ஆவுதி


தன்னைத் தேடி வருபவர்கள் வரையறை இல்லாமல் உண்ண வேண்டி, விருந்தோம்பலில் இன்றியமையான அன்பு மாறாமல் சமையல்காரர் வைத்து சமைத்துப் போடுவார்.  ஊனை வெட்டும்  மரக்கட்டை மேல் வைத்துக்  கொத்தித் துண்டித்த நல்ல வாசம் பொருந்திய  இறைச்சியின் வெண்ணிறக் கொழுப்பை நெய்யாக்கித் தாளிக்கும்போது எழும் ஒலியானது கடல் அலைகள் எழுப்பும் ஒலி போல் இருக்குமாம். இந்த விருந்தோம்பலானது செழுமையான நகரின் நடுவே வைத்து செய்யப்படும்

நெடுஞ்சேரலாதன்  தந்தையாகிய உதியன் சேரலாதன் பாரதப் போரில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பெருஞ்சோறு அளித்தான் என நிறையப் பேர்கள் கூறுவதும் இதைத்தான்..

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
                                                - புறநானூறு

புரவி ஐவரொடு - ஐவர் எனக் குறிப்பிடுவதால் பாண்டவர் எனவும், ஈரைம் பதின்மரும் - எனக் குறிப்பிடுவதால் கௌரவர் எனவும் கொள்கின்றனர். இது ஆராயத்தக்கது.

தொல்காப்பியத்தில் "பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை" எனக் குறிக்கப் படுகிறது. அதாவது ஒரு காரியம் செய்யும் முன்னே முன்னோர்களின் ஆசி வேண்டி அவர்களுக்கு படையல் செய்து ஊர் மக்களுக்கு / உறவினர்களுக்கு  சோறு படைப்பதையும் பெருஞ்சோறு எனக் கொள்ளப்படும். மன்னன் பெருந்திரளான வீரர்களுக்கு சோறு படைக்கிறான் மற்றவர்கள் உறவினர்களுக்கு சோறு அளிக்கின்றனர்.

சோறு என்ற தமிழ் வார்த்தை பல ஆயிரம் வருடங்களாக உபயோகப்படுத்தி வரும் ஒரு செழுமையான வார்த்தை.


Nantri:yarl.com

No comments: