.
நன்றி truetamilan
வருடத்திற்கு ஒரு படம்தான் இது போன்று வரும்.. தமிழ்த் திரையுலகில் ஒரு சிலர்தான் தங்களது அறிமுகப் படத்தில் இப்படி முத்திரை பதிப்பார்கள். இது போன்ற கதையம்சத்துடன் படத்தை எடுக்க முன் வர, தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும். முதலில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றிகள்..
தினம்தோறும் கண்ணில்லாத மனிதர்களைப் பார்க்கிறோம். பேருந்து நிலையம், ரயில் நிலையம்.. ரயில்கள்.. என்று எங்கும் அவர்களது குரல்கள் ஒலிக்கின்றன. ஒரு சில இடங்களில் வரிசையாக கைப்பிடித்தபடியே அவர்கள் நடந்து செல்வதைப் பார்க்கின்றோம். ஒரு நிமிடம் யோசிக்கிறோம். நாம் பரவாயில்லையே என்று முருகனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.. ஆனால் அவர்களுடனான ஒரு நாள் வாழ்க்கையை வாழ நாம் யோசிப்பதில்லை. பயமாக இருக்கிறது நமக்கு. கண் இருப்பவர்களுக்குத்தான் இருட்டை பார்த்து பயம். பார்வையற்றவர்களுக்கு எதைப் பார்த்தும் பயமில்லை.
ஆண்டவனின் படைப்பில் மிகக் கொடூரமானது இந்தக் கண்ணில்லாதவர்கள்தான்.. இவர்களது வாழ்க்கையை வைத்து இதுவரையிலும் நிறைய தமிழ்ப் படங்கள் வந்திருந்தாலும் அனைத்துமே ஒவ்வொரு ரகம்.. ராஜூ முரூகனுக்கு இது முதல் படம் என்பதால் படத்தில் காதல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது அவரது தலையெழுத்து. கதையம்சம் வித்தியாசமாக இருந்தாக வேண்டும் என்பது அவரது எழுத்தாளர் என்ற தகுதிக்குரிய தலையெழுத்து. இயக்கம் என்பது மூன்றாவதாக அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள காட்ட வேண்டிய வித்தை.. இதையும் சரியாகவே செய்திருக்கிறார்..
ஏதோ ஒரு ஊரில் தமிழ் என்பவனுக்கும், சுதந்திரக் கொடி என்பவனுக்கும் இடையில் நடந்த காதலைப் பற்றிச் சொல்கின்ற கதையல்ல இது. இதன் மாந்தர்கள் நம் அருகிலேயே இருக்கலாம்.. அல்லது நாம் கேள்விப்பட்டிருக்கலாம். கண்ணில்லாதவர்கள் என்றில்லை. கண்ணிருந்தும் மற்ற சாதாரணமானவர்களை போலவே இந்த ஜோடிகளை பார்த்திருக்கலாம்.. இது ஒன்றுதான் இதில் இருந்த வித்தியாசம்..
ரயில்களில் பொருட்களை விற்றுக் கொண்டும், பகுதி நேரமாக மேடைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டும் பொழைப்பை நடத்தும் தமிழ் என்னும் பார்வையற்ற ஹீரோவுக்கு சுதந்திரக்கொடி என்னும் இன்னொரு பார்வையற்ற பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. வழக்கம்போல மோதலில் ஆரம்பித்து கடைசியில் காதலிக்க வைக்கிறது காதல்.. அதுதான் காதல்..
கண் இல்லையென்றாலும் ஆள் அழகு என்பதால் ஹீரோயின் மீது நடுத்தர வயதுள்ள குடும்ப நண்பரான ஷேர் ஆட்டோ டிரைவருக்கு ஆசை.. ஹீரோயினின் டீச்சர் வேலைக்காக எம்.எல்.ஏ.வுக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணத்தை தானே கொடுத்து ஹீரோயினை புக் செய்து வைத்திருக்கிறார் டிரைவர். இந்த காதல் விவகாரம் ஹீரோயின் வீட்டுக்கும் தெரிய.. அவசர கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். இன்னொரு பக்கம் தமிழை ஏமாற்றி பணம் பறிக்கவும் முயல்கிறார்கள் ஹீரோயினின் அண்ணனும், டிரைவரும்..
இந்தக் காதல் கடைசியில் என்ன ஆனது என்பதைத்தான் 2 மணி 40,நிமிட படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
கண் பார்வையற்றவராக நடிப்பதென்பது சாதாரண விஷயமல்ல.. ‘அட்டகத்தி’ தினேஷின் இந்த நடிப்பார்வத்திற்கு ஒரு சல்யூட்டே செய்ய வேண்டும்போல் உள்ளது. இத்தனை குறுகிய காலத்தில்.. திரையுலகத்திற்கு வந்த புதிதிலேயே இது போன்ற சோதனை முயற்சி நடிப்பை மேற்கொள்வது பெரிய நடிகர்களே செய்யத் தவங்குவதுதான்.. தன்னுடைய உடல் மொழியால் பல இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார் தினேஷ். ஒரு இடத்தில்கூட அவர் நடிக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது.. இயக்கத்தின் வேகம் காரணமாய் கிளைமாக்ஸில் திரைக்கதை மெலோ டிராமாவாக ஆகிவிட்டாலும் இவருடைய நடிப்பில் எதுவும் சோடையில்லை..
ஹீரோயின் அவரைத் தாக்கியவுடன் அவர் காட்டும் ரியாக்சன்.. ஹீரோயின் அவரை தனியே அழைத்துச் சென்று அவர் நெற்றியில் பட்ட காயத்தைத் தொட்டுப் பார்த்து ஜெயம் செய்யும் காட்சியில் அவருடைய முகம் காட்டும் திகைப்பு.. நீ எப்படி இருப்ப என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்பது.. உங்க முகத்தைக் கொஞ்சம் தொட்டுப் பார்த்துக்கவா என்று கபோதி இன்ஸ்பெக்டரிடமே பேசுவது.. இப்படி பல இடங்களிலும் ஒரு கண் பார்வையவற்றவனைத்தான் திரையில் பார்க்கிறோம் என்பதை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் தினேஷ்.. வெல்டன்..
ஹீரோயின் மாளவிகா. அறிமுகம்.. புதுமுகம் என்கிறார்கள். நம்ப முடியவில்லை. இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் மிகவும் பிடித்திருக்கிறது. அறிமுகம் இல்லாத நபர்கள் கிண்டல் செய்வதை பொறுக்காதவர்.. தன்னை ஏமாற்றினால் பிடிக்காது என்கிறார். தன் மீது பரிதாபம் காட்டுவதை ஏற்காதவர்.. பழைய துணிகளை வேண்டாம் என்று மறுப்பவர்.. கடன் கேட்பதைக்கூட தவறு என்று நினைப்பவர்.. இப்படி கண்ணிருக்கும் ஒரு மனிதரிடத்தில் காணக் கிடைக்காத குணங்களையெல்லாம் பார்வையில்லாத இந்தப் பெண்ணிடம் சுமத்தி அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர்..
அழகைவிடுத்து நடிப்பும் அந்த நடிப்பும் அழகுதான்.. ஹீரோவை முதல் முறை பார்த்தவுடன் பேச்சில் கடுப்பாகி முகத்தைச் சுழித்துவிட்டு பேசும் காட்சியிலேயே மனம் ஒன்றிப் போய்விட்டது.. டிரெயினில் தான்தான் இடத்தை மாற்றிச் சொல்லி இறக்கிவிட்டதை தினேஷ் சொல்லச் சொல்ல அருகில் இருந்து கேட்டபடியே கோபமாகும் அந்த முகத்தின் வசீகரம்.. கையில் இருக்கும் ஸ்டிக்கால் தாக்கியவுடன் ‘ஐயோ’ என்ற பாவத்தை நம்மிடமிருந்து வரவழைக்கவில்லை என்பதை இப்போதுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது.
பாடல் காட்சிகளின் மாண்டேஜ் சீன்களில் மாளவிகாவின் முக பாவனைகள் அனைத்தும் எக்ஸலண்ட்.. ஹீரோவின் ஆடியோ கேஸட்டை கேட்டுவிட்டு முகச் சுழிப்பைக் காட்டிவிட்டாலும், அடுத்த கணம் யோசித்துப் பார்க்கின்ற அழகுக்கு இன்னொரு பாட்டு வைத்திருக்கலாம்.. காத்திருக்க வைத்த கோபம்.. மற்றவர்களின் முன் தன்னை கிண்டல் செய்த கோபம்.. பெர்பியூமை ஊருக்கே தாரை வார்த்த கோபம்.. கேக்கில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு தன் கையில் கொடுத்திருக்கிறார் என்பதையறிந்தவுடன் முகத்தில் தோன்றும் அறுவறுப்பு.. அத்தனையும் மாளவிகா என்றொரு நடிகையை அடையாளம் காட்டியிருக்கிறது. கோடம்பாக்கம் இவருக்கு ஆதரவு கொடுத்தால் அவருக்கும் புண்ணியம் நமக்கும் புண்ணியம்தான்..
ஹீரோவின் உடன் எப்போதும் துணைக்கு வரும் இளங்கோ, இளையராஜாவின் ரசிகரான முருகதாஸ், சந்திராபாபுவாக நடித்த ஈஸ்வர்.. அவருடைய இரண்டு மனைவிகள்.. அது தொடர்பான காட்சிகள்.. இடையிடையே அவ்வப்போது ஒலிக்கும் ராகதேவன் இளையராஜாவின் இசைப் பாடல்கள்.. அரசியல் புரோக்கர் என்றாலும், பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று நினைக்கும் ஒரு லோக்கல் அரசியல்வாதி ஈ.ராமதாஸ்.. என்று கேரக்டர்களின் துணையோடு படத்தை ஒரு அழகான ஓவியமாகவே கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.
அத்தனைக்கும் முதல் காரணம் கதையல்ல.. இயக்குநரின் இயக்கத் திறமை.. ஒரு ஷாட்டில்கூட நீங்கள் குறை கண்டுபிடிக்க முடியாது.. ஒரு இடத்தில்கூட எடிட்டிங் பிசிறு தட்டவில்லை.. காட்சிகளை அளவோடு வெட்டி எடுத்திருக்கிறார்கள்.. இத்தனைக்கும் மேலாக இவரிடமிருக்கும் பலம் வசனங்கள்தான்.. எழுத்தாளரான ராஜுமுருகனுக்கு வட்டியும், முதலுமாகக் கிடைத்த வசனங்களும் படத்திற்கு ஒரு பிளஸ்..
டிரெயினில் யாருடனும் பேசாமல்.. ஒரே சீட்டில்.. வருடக்கணக்கானப் பயணிக்கும் ஒரு அய்யராத்து அம்பி.. பிச்சைக்காரனை கூட நிமிர்ந்து பார்க்காத குணம்.. அவரை பேச வைத்துவிட்டால் 50 ரூபாய் என்று டிரெயினில் பந்தயமெல்லாம் நடக்கிறது. ஆனால் முடியவில்லை.
ஒரே ஒரு நாள்.. ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தியர்கள் மீது தாக்குதல் என்றவுடன், பதறிப் போய் தனது ஒண்ணுவிட்ட அத்திம்பேருக்கு போன் செய்து.. அங்கே நிலைமை எப்படியிருக்கு என்று விசாரித்துவிட்டு தன் பையனை பார்த்துக்குங்கோ என்று அக்கறையுடன் சொல்லிவிட்டு மீண்டும் அதே வெறித்த பார்வையுடன் சன்னல் பக்கம் திரும்பிக் கொள்ளும் இந்த அம்பிகள்தான் மிகப் பெரிய சுயநலவாதிகள் என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும் ராஜூமுருகனின் உள்குத்து எத்தனை பேருக்கு புரிந்திருக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் இதே அய்யராத்து அம்பிதான்.. போஸ்டரில் இருக்கும் ஹீரோ ஆவடி ரயில்வே ஸ்டேஷனில் இருக்கிறார் என்பதை ராஜூ முருகனுக்கு போன் செய்து சொல்கிறார்.. ஆக எது தேவையோ அப்போதுதான் இவர்கள் பேசுவார்கள் என்பதை ராஜூ சொல்கிறாரோ என்னவோ..? நாம் எப்படி இதனை எடுத்துக் கொள்வது..?
தமிழ்நாடு மின் மிகை மாநிலம் ஆக வேண்டும் என்கிற ஆசையையும், குஜராத்தை போல ஒளிர வேண்டும் என்ற நப்பாசையையும் வசனத்தில் சொல்லியிருக்கிறார். ஆர்.டி.ஐ. சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியிலும் தோலுரித்திருக்கிறார்.. வசனங்கள்தான் இத்தனை நீள படத்தை கொஞ்சம் போரடிக்காமல் கொண்டு செல்ல உதவியிருக்கிறது. சந்திரபாபுவின் வீட்டில் தண்ணயடித்துவிட்டு பேசும் பேச்சுக்களும்.. “பொம்பளைங்களுக்குள்ள சண்டையை மூட்டிவிட்டுக்கிட்டே இருக்கணும். அப்பத்தான் நாம நல்லாயிருக்க முடியும்..” என்ற சந்திரபாபுவின் பேச்சும் செம ரகளை..! தான் இடம் பெற்ற காட்சி முழுவதும் மெளனமாகவே வலம் வந்து கொண்டிருந்த திரை எம்.ஜி.ஆர். ஒரேயொரு காட்சியில் ஒட்டு மொத்த கைதட்டலையும் பெற்றுவிட்டார். இந்தத் திரைக்கதைக்காக ராஜூவுக்கு மீண்டும் ஒரு ஷொட்டு..!
பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் அவ்வப்போது காட்டப்படும் சென்னையின் கழுகுப் பார்வையுடன் தொடர்ச்சியான காட்சிகள் ஆச்சரியப்படுத்துகின்றன. அதிகாலை ரயில் நிலையத்தை அடிக்கடி காண்பித்து நமக்கு ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும், ஹாஸ்டல் காட்சிகளிலும்தான் கேமிராவுக்கு நிறைய வேலைகள் கொடுத்திருக்கிறார்கள்.. மிக இயல்பாக வெளிச்சம் உள்ள பகுதிகளிலேயே ஒளிப்பதிவு உறுத்தாமல் கேரக்டர்களை பதிவு செய்திருக்கிறார் வர்மா.. இந்த கிரேடிங் முறை மட்டும் இல்லாவிட்டால் ஒளிப்பதிவாளர்கள் செத்துவிடுவார்கள் என்பார்கள். இதில் அதனை பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதையே தேடித்தான் பார்க்க வேண்டும்..
சந்தோஷ் நாராயணானின் இசையில ‘கல்யாணமாம் கல்யாணம்’ பாடலும், ‘ஆகாசத்துல’ பாடலும்தான் லயிக்க வைத்தன. பின்னணி இசையில் சோகத்தைத் ததும்பி தந்திருக்க வேண்டியது.. தராமல் போனதன் விளைவு ஒட்டு மொத்தமாய் படத்தின் அந்த பீலிங்கும் கிடைக்காமல் போய்விட்டது..
குறைகளே இல்லையா என்கிறீர்களா..? இருக்கிறது.. அதுதான் கிளைமாக்ஸ்.. 15 நிமிடங்களுக்கு முன்பாக முடிந்திருக்க வேண்டிய படம்.. மேலும் மேலும் இழுத்து புனேவரைக்கும் கொண்டு போயிருக்க வேண்டிய தேவையே இல்லை.. புனே ரயில்வே ஸ்டேஷனில் இருவரும் ஒருவரையொருவர் அடையாளம் காணுவதில் இருக்கும் லாஜிக் மிஸ்டேக் படத்தின் ஒட்டு மொத்த கலைத்தன்மையையும் குலைத்துவிட்டது.. ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் கிளைமாக்ஸில் அடித்த சிக்ஸரை போல மருத்துவமனையிலேயே படத்தை முடித்து நன்றி கார்டு போட்டிருக்கலாம். ஏன் இதனை இப்படி இழுத்துக் கொண்டு போனாரென்று தெரியவில்லை..!
முதல் படம் என்பதால் காதலைத் தொடாமல் படமெடுக்க முடியாது என்கிற நிதர்சன உண்மை இருந்தாலும், மாற்றுத் திறனாளிகளை கதையின் மாந்தர்களாக வைத்திருக்கும்போது அவர்கள் மீது எழும் பரிதாப உணர்வை ஏனோ இப்படம் நமக்குள் விதைக்கவில்லைதான். இதற்கு மூல காரணம் படத்தில் ஒரு காட்சியில்கூட இன்னொருவரின் உதவியினால் இவர்கள் தங்களது ஒரு நாள் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதற்கான காட்சிப் படிமத்தை இயக்குநர் வைக்கவே இல்லை.
ரோட்டில் கிடக்கும் ஹீரோயினின் அந்தக் கடிகாரத்தைக்கூட அத்தனை பிஸியான டிராபிக்கிலும் ஹீரோதான் போய்த் தேடிப் பார்த்து எடுத்து வருகிறார். வருவோரும், போவோரும் கண்டு கொள்ளாமல் செல்கிறார்கள் என்பதை தொடர்ந்து காட்டியிருப்பது நம்பத் தகுந்ததாக இல்லாமல் வலிந்து திணிக்கப்பட்டதாகவும் போய்விட்டது.
படம் முடிந்து வெளியே வரும்போது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் அவல வாழ்க்கையை.. அவர்களைப் பற்றிய ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டோம்.. பார்த்தோம் என்று சொல்ல முடியாத அளவுக்கு படம் நமக்குள் காதல் காவியமாக வியாபாதித்ததுதான் ராஜூமுருகனே எதிர்பாராதது..!
படத்தில் தவிர்த்திருக்க வேண்டிய ஒரே விஷயம்.. ஹீரோவின் நண்பர், பார்வையற்றவரான இளங்கோவும் மது அருந்துவதை போன்று காட்சி வைத்திருப்பதுதான். இப்படி நிஜத்திலும் நடக்கிறதுதான். எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு நாள் நான் பார்த்தபோது வரிசையாக அமர்ந்திருந்த 5 பார்வையற்ற ஆண்களின் கைகளில் சிகரெட்.. திக்கென்றாகிவிட்டது. யார் இதனை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது.. கொடுமையல்லவா..? இந்தப் படத்தை மற்றவர்களின் துணையுடன் பார்க்கவிருக்கும் பார்வையற்றவர்களின் மனதில் இந்தக் காட்சி மட்டும் ஏதேனும் விபரீதத்தை ஏற்படுத்துவிடக் கூடாது என்று கர்த்தரிடம் பிரார்த்திக்கிறேன்..
100 லாஜிக் மீறல்கள்.. 1000 ஓட்டைகள் என்று பலரும், பலவும் பேசினாலும்.. ஒரு புதுமுக இயக்குநர் இப்படியொரு கதையை கருவாக வைத்து.. தைரியமாக முனைந்து... இயக்கத்தில் ஒரு சிறிய தவறுகூட இல்லாமல் இயக்கிக் காண்பித்திருப்பதற்கு தமிழ்த் திரையுலகமே ராஜூ முருகனுக்கு ஒரு சல்யூட் அடிக்க வேண்டும்..!
நன்றிகள் ராஜூ முருகனுக்கு..!
நன்றி truetamilan
No comments:
Post a Comment