தமிழ்மகன் “இராபர்ட் கால்டுவெல்”- சிறப்புக்கட்டுரை --சிவசுப்பிரமணியன்

.


இன்று (07.5.2014) தமிழ்த்தாயின் தலைமகன் “கால்டுவெல்” அவர்களின் 200-வது பிறந்தநாள்.அவரை பற்றிய சிறப்புக்கட்டுரை:

’’இந்த நாட்டை ஆண்டுவந்த ஆங்கிலேயர்களின் மூலமாகத்தான் நம் மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளது. அந்த வகையில், தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் நம்மைப்போல பலகோடி மக்கள்   இருந்தாலும் தமிழின் பெருமையை நிலைநாட்டிய பெருமை “இராபர்ட் கால்டுவெல்” என்ற ஆங்கிலேயர் ஒருவருக்குத்தான் சேரும்.

காலங்காலமாக தமிழறிந்த புலவர்கள் எல்லோரும், மன்னர்களையும், பணக்காரர்களையும் புகழ்ந்து பாடியும், கோவில், திருவிழாவில் புராணக்கதைகளை சொல்லியும் தங்களின் வயிற்று பிழைப்புக்கு மட்டுமே தமிழை பயன்படுத்தி வந்தனர்.

தமிழ் மொழிக்கு உள்ள வரலாற்று, பழமை, தொன்மை, தனித்து நிற்கும் சொல்வளம் போன்ற பல சிறப்புதன்மைகள் நமக்கெல்லாம் முழுமையாக தெரியவில்லை. தெரிந்த சிலர் சொன்னதை உலகம் ஏற்கவில்லை, அல்லது அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையின் நம்மவர்களால் சொல்ல முடியவில்லை. தெரியாமலிருந்த அல்லது மறைக்கப்பட்ட தமிழ்மொழியின் பெருமைகளையெல்லாம் எல்லாம் உலகுக்கு எடுத்துக்காட்டியவர் “இராபர்ட் கால்டுவெல்”

1834-ம் ஆண்டு மே 7-ம் நாள், அயர்லாந்து நாட்டின் "கிளாடி' ஆற்றங்கரையிலுள்ள “பெல்பாஸ்ட்” என்ற சிற்றூரில் பிறந்தவர் “இராபர்ட் கால்டுவெல்” இவருக்கு தரமான கல்வியை கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில், கால்டுவெல்லை பள்ளியில் சேர்க்கும் வயதில், அவரது பெற்றோர்கள் தங்களின் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் கூட்டிக்கொண்டு போய் "கிளாஸ்கோ' நகரில் குடியேறினர்.


பள்ளியில் சேர்ந்து படித்த “கால்டுவெல்” தனது 16-வயதுக்குள், ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங் களைக் கற்றுத் தேர்ந்தார். அதன்பின் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சிறந்த ஓவியக்கலைஞரானார். தம் இருபதாம் வயதில், கிறித்துவ சமையப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர் சங்கத்தில் (Propagation of the Gospel Mission) சேர்ந்தார்.அச்சங்கத்தின் சார்பாகக் “கிளாஸ்கோ” பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பியாவில் உள்ள பல மொழிநூல்களையும் சமய நூல்களையும் கற்று வந்தபோது, இவருக்கு  கிரேக்கமொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் “டேனியல் ஸ்டான் போர்ட்” என்பவர் கிரேக்க மொழியின் பெருமையை கால்டுவெல் நன்றாக புரிந்து கொள்ளும்படியும், ஏன் கிரேக்க மொழி செம்மொழியாக திகழ்கிறது என்பது குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார். பின்னாளில், தமிழ் மொழியும் செம்மொழிதான் என்பதை ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்த “கால்டுவெல்” அவர்களின் ஆய்வுக்கு பெரும்துனையாகவும், வழிகாட்டி யாகவும் இருந்தவர் அப் பேராசிரியராவார்.

லண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் சார்பாகச் சமயப்பணிக்கென 1838-ல் "அன்னைமேரி' என்னும் கப்பலின் மூலமாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட கால்டுவெல், கப்பலில் வரும்போதே சி.பி.பிரெளன், என்னும் ICS அதிகாரியுடன் நட்புகொண்டார். அவர் முன்பே இந்தியாவில்  பணியாற்றிய அனுபவமுள்ளவர் என்பதால் அவருக்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்திருந்தார். கப்பலில் வரும்போதே பிரெளன் மூலமாக தமிழ் தெலுங்கு மொழிகளைக் கொஞ்சம் கற்றுக்கொண்டார் கால்டுவெல்.

சென்னை வந்த அந்த பெருமகனார் தமிழ் மீது கொண்ட காதலால், சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கி தமிழ்மொழியை கற்றுள்ளார். பின்னர், சமையப்பணியை தொடர முடிவு செய்த கால்டுவெல் நெல்லை அருகிலுள்ள இடையன்குடிக்கு சென்று பணியாற்ற அங்கு கிளம்பினார்.

பல்வேறு வட்டார வழக்குகளை கொண்டுள்ள தமிழ்மொழியின் பேச்சு வழக்கை தெரிந்துகொள்ளவும், தமிழ்மொழியின் மூலத்தை ஆய்வு செய்யவும் விரும்பிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார்.

நடந்து செல்லும்போது, அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், பேச்சு, மொழி ஆளுமை, பிற மொழி கலப்பு   முதலானவற்றை அறியலாம் என நினைத்தவர். முதலில், சிதம்பரம் சென்றார், அங்கிருந்து மயிலாடுதுறை வழியாக தரங்கம்பாடிக்கு போய் அங்கே சில நாள் தங்கினார். “டேனிஷ்” கோட்டையில் நடைபெற்றுவந்த கிறித்துவ மிஷினரியினரின் பணிகளை பார்த்தார். பின்பு குடந்தை வழியாகத் தஞ்சாவூர் சென்று, பெருவுடையார் கோவிலையும், மராட்டிய மன்னர் சரபோஜியால் தோற்றுவிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தையும் பார்வையிட்டார். அங்கிருந்த மக்களோடு சிலநாட்கள் தங்கியவர் தமிழில் முதல் நாவல் எழுதிய அறிஞரான மாயாவரம் வேதநாயம் பிள்ளை அவர்களையும் கண்டு உரையாடியுள்ளார்.

பின்னர், திருச்சிராப்பள்ளி வழியாக நீலகிரி மலைக்கு சென்றவர். அங்கு “ஸ்பென்சர்” எனும் கிறித்துவ மத பெரியாரை கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி, படுகர், தோடர் இனமக்களின் மொழியான பழங்கன்னடம் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர், கோவை, மதுரை வழியே நெல்லை மாவட்டம் இடையன்குடிக்கு சென்று அங்கு தங்கி சமையப் பணியாற்றினார். அன்றைய காலத்தில் இடையன்குடி என்பது பெரும்பாலும் பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் கூரைவீடுகளிலேயே வாழ்ந்து வந்தனர். உயர்ந்து வளர்ந்த பனைமரங்களும், கள்ளிச்செடிகளும், சுள்ளிச்செடிகளும் நிறைந்த இந்தப்பகுதியில் தங்கிய கால்டுவெல் பெருமகனார் அங்கே நாகரிகமான குடியிருப்புகளையும் கோயிலையும் உருவாக்கினார். தேவாலயம், வீடுகள், தெருக்கள், சாலைச் சந்திப்புகள், கிணறுகள் என அந்தக் கிராமத்தை திட்டமிட்டு அவரே வடிவமைத்தார். கிணறுகளை தோண்டி தண்ணீர் எடுத்தார். தெருக்களிலும், நிலங்களிலும் மரங்களை நட்டு அழகுபடுத்தினார். அவர் தன் வாழ்வின் இறுதிவரை மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டினார்.

மன்னர்கள் ஆட்சியின் போது எழுதவும், படிக்கவும் உரிமையில்லாமல் கிடந்த அந்தப்பகுதி மக்களுக்குக் தாய்மொழியை கற்றுத் தந்தார். அப்பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மையின நாடார் இன மக்களைக் கல்வியறிவுப் பெற்றவராக மாற்றினார். 1847-ல் அங்கு கிறித்துவ தேவாலயப்பணியைத் தொடங்கி கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி, 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1880-இல் கோவிலை கட்டி முடித்தார்.

சென்னை மாநில ஆளுநராக இருந்த நேப்பியார் அவர்கள் கால்டுவெல்லின் திருப்பணிகளைக் காண விரும்பி இடையன்குடிக்கு வந்து ஒருவாரம் அங்கே  தங்கினார் என தெரிகிறது. மேலும், ஆலயதிருப் பணிக்கு 500-ரூபாய் நன்கொடை வழங்கியதாகவும் தெரிகிறது.

இடையன்குடியில் சமையப்பணியை தொடர்ந்தபடியே தமிழ், தெலுங்கு, கண்டம், மலையாளம், துளு, கூர்க், துதம், கோதம், கோந்த், ஓரியன், பிராகி மற்றும் வடமொழியாகிய சமற்கிருதம் ஆகிய மொழிகளை கற்று தேர்ந்து. இந்த மொழிகளிலிருந்து வேறுபட்டு தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள சிறப்புகளை ஆய்வு செய்தார்.

மற்ற மொழிகளில் இல்லாத பல சிறப்பு தமிழில் இருப்பதை உணர்ந்த கால்டுவெல் அவர்களின் கவனம் தமிழ் இலக்கியங்களின் பக்கம் திரும்பியது. திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல் முதலிய நூல்களைக் கற்றார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல இடங்களிலும் அவர் பணியாற்றிய காலத்தில், அந்த பகுதியின் வரலாறு பற்றியும் ஆய்வு செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், உள் நாட்டு வெளிநாட்டு நாணயங்கள் முதலானவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.

மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் முடிவில் கிடைத்த தகவல்களை கொண்டு "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely)'' என்னும் நூலை எழுதினார். இது 1881-ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. "தொடக்க காலம் முதல் கி.பி. 1881 வரையிலான திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறுகளை கொண்ட இந்நூலில், இந்தியர்களுக்கு வரலாற்று அறிவோ, நிகழ்வுகளை ஆவணப்பூர்வமாக பதிந்துவைக்கும் அவசியமோ தெரியவில்லை என்ற பொதுவான  குற்றச்சாட்டுடன் தொடங்கும் கால்டுவெல், ஒன்பது பகுதிகளாக நூலை எழுதியிருக்கிறார். முதல் இயலில் மாலிக்காபூர் படையெடுப்பு, காயல் துறைமுகத்தில் நடந்த முத்துக்குளிப்பு என ஒவ்வொரு இயலையும் வரலாற்றுப் பூர்வமாக உருவாக்கியிருக்கிறார். கட்டபொம்மன் தூக்கிலிடப்படும் நிகழ்வு, ஊமைத்துரை, மருது சகோதரர்களை ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள், முகமது யூசுப்கானிடமிருந்து மதுரையை ஆங்கிலேயர் கைப்பற்றிய வரலாறு போன்றவை தெளிவாக இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந் நூலில், பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும்,அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் குறிப்பிட்டுள்ள கால்டுவெல், பழந்தமிழரின் வாணிப நகரமாக இருந்த கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, துறைமுகத்தின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பை வெளிக்கொண்டுவந்தார்.

மேலும் கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார். ஆறடிக்குகீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும் கடல்சங்கும் சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். இன்றுள்ள கொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று தந்து ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டார். பழங்காயல் என்னும் ஊரையும் ஆய்வு செய்தார். இவ்வூரும் பண்டைய கடற்கரைத் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என எழுதினார்.
இந்த காலகட்டங்களில், சிங்கள வரலாற்று இலக்கிய நூலான மகாவம்சம் நூலின் துணைகொண்டு ஈழ-தமிழக உறவுகளையும் கால்டுவெல் ஆய்வு செய்தார், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் எழுதிய பலகட்டுரைகளை ஆய்வு செய்தார். அவ்வகையில் பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனக்கண்டார்.

ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்து தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் தான் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளையும், தமிழகமெங்கும் தாம் மேற்கொண்ட பயணத்தின் வழியாக மொழிகளில் தனக்கு கிடைத்த தரவுகளை ஓன்று திரட்டிய “கால்டுவெல்” ஆய்வுக்கட்டுரைகளை எழுதினர். பின்னர் அவற்றையெல்லாம் தொகுத்து 1856-ல், “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

அதில்,  மலையாளம், தெலுங்கு, கன்னடம்,துளு ஆகிய மொழிகளில் உள்ள சமற்கிருத மொழியின் கலப்பு குறித்த தனது ஆய்வில், இந்த மொழிக்கலப்பு உண்மையான தேவை குறித்து மேற்கொள்ளாது, காலக் கோளாறு விரும்பும் வெளிப்பாட்டுக் காரணமாகவே மேற்கொள்ளப்பட்டது” என்று கூறினார். மேலும், தெலுங்கு, கண்டம், மலையாளம் ஆகிய மொழிகள் தத்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாது என்ற அளவு சமற்கிருத சொற்களை அளவுக்கு மீறி கடன் வாங்கியுள்ளன. ஆதலின், சமற்கிருத கலவைகளை கைவிடுவது தெலுங்கு மொழிக்கு அரிதாம் என்பது உண்மை. கன்னடத்திற்கு அதனிலும் அரிதாம். மலையாளத்திற்கு அவை எல்லாவற்றை காட்டிலும் அரிதாம் என்றவர்.

ஆனால், திராவிட மொழிகளில் அனைத்திலும் உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் “தமிழ்” தண்ணிடையே இடம் பெற்றிருக்கும் சமற்கிருத சொற்களை அறவே ஒழித்துவிட்டு தனித்து உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல், வளம் பெற்று வளர்வதும் இயலும், அவ்வாறு கைவிடுவது ஒன்றினாலேயே, தமிழ் மொழி முன்னைய நிலையிலும் சிறந்த உயர் தனிச் செம்மொழியாக பெரு நிலையை பெற்றுவிடும் என்று கூறினார். 

“கால்டுவெல்” பெருமகனாரின் இந்த ஆய்வு நூல், தேவ பாஷையான சமற்கிருதம் தான் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி, மற்றதெல்லாம் நீஷ மொழிகள் என்று எளனம் செய்துகொண்டிருந்த வடமொழி ஆசிரியர்கள் எல்லோரையும் அடித்து தள்ளியது.

உலக அரங்கில் இருந்த அனைத்து மொழி அறிஞர்களும் “கால்டுவெல்” அவர்களின் ஆய்வு முடிவுகளை ஏற்றனர். கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்பட்டது. கால்டுவெல் பெருமகனாரின் ஆய்வுப்பணிகளைக் கண்ட “கிளாஸ்கோ” பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அதன் பிறகுதான், தமிழ் மொழியும் செம்மொழி தான் என்று உலகமே ஒத்துக் கொண்டது.

கால்டுவெல் அவர்கள் பல மொழிகளை கற்றவர், இந்தியாவுக்கு வந்தபின்னர் 15,மொழிகளைக் கற்றுக்கொண்டார். தமிழகம் முழுவதும் சுற்றிபயணம் செய்தவர். பல்வேறு இடங்களில் தமிழ் மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு போன்றவற்றையும், அவர்களின் வாழ்க்கை முறையை பற்றியும் நிரம்ப அறிந்தவர். கிறித்துவம் தவிர பல்வேறு சமய அறிவு நிரம்பப்பெற்றவர். எனவே தம் அறிவு முழுமையும் பயன்படுத்தி பல மொழி நூலையும் வரலாற்று நூலையும் சமய நூலையும் உருவாக்கித் தமிழர் பெருமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டியவர்.

இப்போதுள்ள நூல்களின் வரிசையில் திராவிடம் என்ற சொல் முதன்முதலில் கால்டுவெல் அவர்களால் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மண்ணில் காலம் காலமாக வாழ்ந்தவர்கள் திராவிடர்கள்(தமிழர்கள்) அவர்கள் பேசிய மொழி தமிழ் என்பதை சரியான ஆய்வுகளின் படி உலகிற்கு காட்டியவர்.

தன்னுடைய குடும்ப வாழ்க்கையில், கால்டுவெல் தமது 29-வது வயதில், நாகர்கோவிலில் வாழ்ந்த “மால்ட்” என்பவரது மகளான எலிசா (வயது-21) என்ற ஆங்கிலேய பெண்ணை மணமுடித்தார். எலிசா ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்தவர். இடையன்குடியில் பெண்கள் கல்விகற்பதற்கும், மக்கள் சுகாதாரத்துடன் வாழவும், குடும்ப மேலாண்மையில் பெண்கள் முன்னேற்றம் காணவும் எலிசா பாடுபட்டார்..

தமிழகம் மட்டுமல்ல, கேரளம், கர்நாடகம், துளு, கூர்க் மொழியை பேசும் தென் கர்நாடகம், தெலுங்கு, ஒரிய, கோண்டு மொழியை பேசும் மக்கள் வாழும் வட ஆந்திரப்பகுதி என பல இடங்களுக்கும் சென்று தமிழ்மொழி ஆய்வு நடத்திய கால்டுவெல் வாழ்க்கை எளிமையானது. பெரும்பாலான இடங்களுக்கு நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் செல்லும் ஊர்களில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு வாழ்ந்தார்.

கால்டுவெல் தமிழகத்திற்கு வந்து தங்கிய பிறகு மூன்றுமுறை மட்டுமே தன்னுடைய தாய்நாட்டுக்கு சென்று வந்துள்ளார். தன்னுடைய வாழ்நாளை தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காவுமே ஒப்படைத்து பணியாற்றியுள்ளார்.  கி.பி. 1877-இல், திருநெல்வேலி மறை ஆயராக பொறுப்பேற்றுக் கொண்ட கால்டுவெல், 1891-சனவரியில் 31-ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து ஓய்வுபெற்று கொடைக்கானல் சென்று தங்க முடிவு செய்தார்.

அக்காலங்களில் கொடைக்கானல் செல்ல சரியான பாதை வசதியில்லாத நிலையில், அம்மைநாயக் கனூரில் இருந்து கடும் மலைப்பாதை வழியாக நடந்தே சென்றார். அங்கே தங்கியிருந்த போது கடும் குளிரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கால்டுவெல் அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ஆம் நாள் இயற்கை எய்தினார். பின்னர், அவரது உடல் இடையன்குடிக்குக் கொண்டுவரப்பட்டு அவர் அமைத்த கோயிலிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

கல்வி, சுகாதாரம், பொருளாதார வசதிகளில் நம்மைகாட்டிலும் பல மடங்கு உயர்ந்த நிலையிலிருந்த இங்கிலாந்தில் படித்து பட்டம் பெற்ற ஒருவர் அங்கிருந்த எந்த வசதியுமில்லாத தமிழகத்தின் கிராமங்களில் கால்நடையாக சென்று மதம், கடவுள், பேய், பிசாசு என்ற மூடநம்பிக்கைகளிலும் சாதிய ஏற்றத்தாழ்வுகளில் சிக்கிக்கிடந்த இந்த மண்ணில் வாழ்ந்துவந்த மக்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அதை உலகின் பார்வைக்கு கொண்டு சென்று தமிழ் மொழிதான் உலகின் முதல்மொழி என்று அடையாளம் காட்டியவர்.

இன்று (07.5.2014) தமிழ்த்தாயின் தலைமகன் “கால்டுவெல்” அவர்களின் 200-வது பிறந்தநாள்.
“செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்
செய்யகுரிய செயகலா தார்”
என்ற வள்ளுவரின் வாய் மொழிக்கேற்ப கால்டுவெல் பெருமகனார் தமிழுக்கு பணியாற்றிய பல சான்றோர்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளார். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தமிழர்கள் “கால்டுவெல்” என்ற அந்த பெருமகனை மறக்க மாட்டார்கள்.

ஆம், அவர் இடையன்குடியிலே இருந்து தமிழர்களோடு, தமிழர்கள் உள்ளவரை வாழ்வார். 


Nantri 
http://ilakkiyam.nakkheeran.in/

No comments: