எனது அம்மாவுக்கும், அம்மாக்களுக்கும்

.

தாராளம் எனும் வார்த்தை, 
எங்கிருந்து தருவிக்கப்பட்டது? 
விளக்கங்கள் ஏதேனும் உள்ளதா? 
இல்லையேல் இது இருக்கட்டும் ! 
"தாராளம்" 
அம்மாவின் மனது கொடுக்கும், 
அன்புக்கு உரிமைப்பட்ட வார்த்தை !! 
---------------------------------------------------------------- 
எதிர்பார்ப்புகளை எடுத்தெறிந்துவிட்டு, 
உருவாக்கியதை உச்சம் கொண்டுபோகவே, 
போராடி வாழ்ந்து முடிக்கிற ஒரு பிறவி, 
அம்மாவன்றி வேறு எவர் பூமியில்? 
----------------------------------------------------------------------------
தயங்காமல் தருகிறாள், 
கேட்டதை எப்படியேனும், 
அப்படி வாழ முனைவது, 
நூறு சதவீதம் முழுமைபெறாது, 
காரணம் தாய் வளர்ப்பு அல்ல படைப்பு !! 
--------------------------------------------------------------------- 
சாலையோரம் கூவி பண்டங்கள் விற்கும், 
நடைபாதை தேய்த்த ஜீவன்களுக்கு, 
வெட்கம் கூச்சங்கள் இருப்பதில்லை, 
கூப்பாடு போட்டு கதறி விற்பதில், 
அவர்தம் மன ஓட்டங்களெல்லாம், 
பிள்ளைகளின் பசிபோக்கும் முனைப்பிலேயே, 
"அவர்கள் அம்மாக்கள்" 
----------------------------------------------------------------------------- 
பெருமையென்று உனக்கு, 
எதையும் தந்துவிடவில்லை, 
எத்தனை செய்தாலும், 
நீ சுமந்த சுமப்புக்கு, 
பெருங்கடனாளிதான் பிள்ளை அம்மா !! 
-------------------------------------------------------------------- 
சூழ்ச்சிகளால் வீழ்த்தப்படுகிற மனது, 
சூட்ச்சுமம் கற்றுணர நாட்படுகிறது, 
மொத்தமாய் ஏமாறாதிருக்க, 
அங்கே பழியுணர்ச்சி வருவதேயில்லை, 
தாய் நேசம் பெற்றவருக்கு !! 
---------------------------------------------------------------------- 
அமைதிகாக்கவேண்டியஇடங்களில் ஆத்திரப்பட்டு,
அடுத்தகட்டம்போய் முட்டியுடைந்து, 
மூலையில் முடங்கி அம்மா என்று அழுவதே, 
இங்கு அநேக மூர்க்கர்களின் வாடிக்கை !! 
----------------------------------------------------------------------------
பொதிகளை சுமக்கும் கழுதை, 
ஓய்வினில் தளர்த்திக்கொள்லாது இறுக்கங்களை, 
இது நிஜமா என நிரூபிக்கமுடியாது எனினும், 
வாழ்வதை பார்த்திருக்கிறேன் உன்னிடம் அம்மா !!
-------------------------------------------------------------------------------------- 
வெட்டிப்போட்டாலும், 
ரெட்டையாய் துடிக்கிற, 
மண்புழு தாயும் நானும், 
கிட்டத்தட்ட ரெட்டையாக்கப்பட்ட, 
ஒற்றை உயிர்தான் எங்களுக்கும் !! 
------------------------------------------------------------------- 
முடிவு வந்துவிட்டதென்று, 
முயற்சிகளை கைவிடாதே, 
அது முரியுங்கால், 
தொடர எவரேனும் வருவர், 
தொப்புள்கொடிபோல ! 
நியாயமான செயல் எதுவும், 
தாய்க்கு தொடர்புடையதே !! 
--------------------------------------------------------- 
எதிர்பார்ப்புகள் ஏலனப்படும் மனிதரிடை, 
கேள்விக்குறியாகும் கடவுளிடை, 
எப்போதும் பூர்த்தியாகும் அன்னையிடை !! 
------------------------------------------------------------------------- 
எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நிஜம், 
பிள்ளைகளுக்கும் அன்னைகளுக்குமான உறவு, 
எங்கிருந்தாலும் அதன் ஓட்டம் தங்குதடையின்றி, 
இயங்கியபடியேதான் இருந்துகொண்டிருக்கும், 
ஒருவர்மீதான பற்றுதலை ஒருவரால் மேம்படுத்தி !!


No comments: