இலங்கை அவுஸ்திரேலியா முதல் போட்டி: ஆஸி. 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றி


8/11/2011
 வொட்சன், கெடின் ஆகியோரின் சிறந்த ஆரம்பம் கைகொடுக்க பொண்டிங்கிளார்க் ஆகியோரின் இணைப்பாட்டத்தில், இலங்கை அணி நிர்ணயித்த 192 ஓட்டங்கள் என்ற இலக்கை அடைந்த அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றியீட்டியது.


இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக்கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று கண்டி, பள்ளேகலயில் நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இதன்பிரகாரம் அணிக்கு ஆரம்பத்தினை அமைக்கும் வகையில் உப்புல் தரங்க, அணித்தலைவர் டில்ஷான் ஆகியோர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்தனர்.

ஆஸி. அணியின் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சிறந்த ஆரம்பத்தினை அமைத்த இவர்கள் முதலாவது விக்கெட்டுக்காக 54 ஓட்டங்களைப்பகிர்ந்து கொண்டனர். 34 ஓட்டங்களைப்பெற்ற தரங்க போல்டாகி அரங்கு திரும்பினார். பின்னர் சங்கக்கார களம் நுழைய டில்ஷான் 29 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

இதனையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஆட்டம் கண்ட இலங்கை அணிக்கு ரன்தீவ் (41 ஓட்டங்கள்), குலசேகர (34 ஓட்டங்கள்) ஆகியோர் ஆறுதலளித்தனர்.

இந்நிலையில் 41.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி 191 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக 10 ஓவர்கள் பந்து வீசிய ஜோன்சன் 6 விக்கெட்டுக்களை பதம் பார்த்தார்.

192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 38.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றியீட்டியது.

அணியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய வொட்சன், கெடின் ஆகியோர் முதலாவது விக்கெட்டுக்காக 59 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இதில் கெடின் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க வொட்சனுடன் இணைந்து கொண்டார் பொண்டிங். இந்நிலையில் ஆரம்ப வீரராக களமிறங்கி அரைச்சதத்தினைக்கடந்து அதிரடியாக 69 ஓட்டங்களைக்குவித்த வொட்சன் ஒரு நாள் போட்டியில் 4,000 ஓட்டங்களைப் பதிவு செய்து, ரன்தீவின் பந்தில் ஜெயவர்தனவிடம் பிடிகொடுத்து அரங்கு திரும்பினார்.

இதனையடுத்து பொண்டிங்குடன் இணைந்து கொண்ட அணித்தலைவர் கிளார்க் சிறப்பான இணைப்பாட்டத்தினை அமைத்தார். இந்நிலையில் பொண்டிங் 53 ஓட்டங்களுடன் ரன்தீவின் பந்தில் போல்டாக கிளார்க் 53 ஓட்டங்களுடனும் ஹஸி 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழப்பின்றி களத்திலிருந்தனர். இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலிய அணி 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கின்றது.

நன்றி வீரகேசரி

ஆஸி. இலங்கை இடையிலான இரண்டாவது போட்டியிலும் ஆஸி. இலகு வெற்றி

8/15/2011
-ரிக்கிப் பொண்டிங், கிளார்க் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டத்தில், இலங்கை அணி நிர்ணயித்த 209 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்த அவுஸ்திரேலிய அணி தொடரில் தனது 2 ஆவது வெற்றியை பதிவு செய்தது.

இலங்கைஅவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக்கொண்ட ஒரு நாள் தொடரின் 2 ஆவது போட்டி நேற்று ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது.

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. முதல் போட்டியை பறிகொடுத்த நிலையில் இப்போட்டியில் வெற்றிபெறும் கனவுடன் களமிறங்கிய இவ்வணிக்கு இதிலும் அதிர்ச்சியே காத்திருந்தது.

இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களைப்பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தரங்க 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க டில்சான் 24ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய சங்கக்கார நிதானமாக துடுப்பெடுத்தாடி 52 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க மெத்தியுஸ் 35, குலசேகர 34 ஓட்டங்கை பெற்றனர். ஏனைய வீரர்கள் 10க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் பொலிங்கர் 3, பிரட்லீ மற்றும் ஜோன்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 209 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய ஆஸி. அணி 38.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களைப்பெற்று 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றியீட்டியது.

இதில் பொண்டிங் (90), கிளார்க் (58) ஆகியோர் ஆட்டமிழப்பின்றி களத்திலிருந்தனர். எனவே ஐந்து போட்டி கொண்ட இந்தத் தொடரில் ஆஸி. அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.

நன்றி வீரகேசரி


No comments: