மிருதங்கக் கலை ஏ.எஸ். ராமநாதன் மறைவு



.
நீண்ட மிருதங்க மாணவ பரம்பரையை உருவாக்கி, 02.03.2011 ல் மறைந்தவரும் இலங்கையின் மிருதங்க கலை வளர்ச்சியில்; முத்திரை பதித்த மூத்த மிருதங்கக் கலைஞன் சங்கீத பூஷணம் பேராசிரியர் சிதம்பரம் ஏ.எஸ்.ராமநாதன் அவர்கள் பணியும் வாழ்க்கையும்
இலங்கையின் இசைக்கலை வளர்ச்சியில் (மிருதங்கம் உட்பட) இந்தியக் கலைஞர்களின் பங்கு மகத்தானதாகப் போற்றப்படுகின்றது. காலத்தின் தேவையறிந்து இந்தியாவிலிருந்து இசைக்கலைஞர்களை வரவழைத்து, இலங்கையின் கலைவளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டும், அவ்வாறு வரவழைக்கப்பட்ட இசைக் கலைஞர்களது இசைப் பங்களிப்பும் போற்றுதற்குரியது. இவ் வகையில் மிருதங்கத்திற்கு பங்களிப்பு வழங்கிய பெரியார், மதிப்புக்குரிய பேராசிரியர் ஏ.எஸ். ராமநாதன் அவர்கள் முதன்மை பெறுகின்றார்.


இந் நிலையில் முப்பந்தைந்து வருடகாலம் இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மிருதங்கக் கலையைப் பாரம்பரிய, பக்குவ, குருத்துவ, சிஷ்ய, சிட்சை முறையில் கற்பித்த பேராசான் திரு ஏ.எஸ். ராமநாதன் அவர்கள் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை இலங்கையின் கலை வளர்சிசிக்கு அர்ப்பணித்த இந்தியக் கலைஞர்களில் முத்திரை பதித்த அல்லது தடம் பதித்த மூத்த கலைஞர் இவராவார்.
இவரது இசைப் பணியினை மூன்று பிரிவுக்குள் வரையறை செய்வது சாலவும் பொருத்தமானதாகும்.
1) 1948 முதல் 1961 வரையிhன பணியும், வளர்ச்சியும்2) 1961 முதல் 1983 வரையிலான பணியும், வளர்ச்சியும்3) வட இலங்கைச் சங்கீதசபை, மற்றும் இசை மன்றங்கள் சார்ந்த பணியும் வளர்ச்சியும்.
1944 – 1948 காலப்பகுதியில் இந்தியாவில் இசைக்கு சிறப்பான தனியிடத்தினை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெற்றிருந்த கால கட்டம். இலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் இசை பயில அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த வேளையது. இவ் இலங்கைக் கலைஞர் பெருமக்களால் சிபாரிசு செய்யப்பட்டவரே மிருதங்கக் கலைஞர் திரு ஏ.எஸ்.ராமநாதன் அவர்கள். குறிப்பாக திரு பரம் தில்லைராஜா, திரு வி.ஆர்.ராசநாயகம், ஆகியோரே திரு ராமநாதனின்வருகைக்கு ஆதார புருஷர்களாக அமைந்தனர் எனலாம்.
1950 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ் நடன பாடசாலையில் பிரவேசித்த பாக்கியத்தினால் இசையோடு பரதம், கதகளி, மிருதங்கம், கிளாரிநெட், புல்லாங்குழல், ஹார்மோனியம் யாவுமே களைகட்டத் தொடங்கிற்று எனலாம். பரதக்கலை வித்தகர் திரு ஏ. சுப்பையா மாஸ்ரர் அவர்களினால் பரதம் பலிதம் பெற்ற வேளையில், லயவாத்தியத்தினைப் பிரகாசிக்கச் செய்த உபகாரியாக ஏ.எஸ் ராமநாதன் விளங்கினார். இசைப் புலவர் சண்முகரத்தினம், பரம் தில்லைராஜா, ராம் குமாரசாமி, திருமதி சத்தியபாமா ராஜலிங்கம், ஐயாக்கண்ணு தேசிகர், பொன். முத்துக்குமாரு, லயஞான குபேரபூபதி தெட்சணாமூர்த்தி, இயலிசை வாருதி வீரமணி ஐயா போன்றவர்களது இசையரங்க நிகழ்வுகளில் திரு ராமநாதன் அவர்கள் மிருதங்க லயப் பிரவாகத்தினைக் காத்திரமாக வழங்கியதன்காரணமாக இசையில் கவரப்பட்ட ஏராளமான குடும்பத்தவர்கள் தமது பிள்ளைகளை மிருதங்க இசைப் பரப்பினில் வளர்வதற்கு பொருத்தமான காலமாகத் துணிந்து ஏற்றதின் பயனாக முதலாவது ஏ.எஸ்.ராமநாதனது சிஷ்ய பரம்பரை உதயமானது எனக் கொள்ளலாம்.
இம் முதலாவது பரம்பரையின் முதலாவது மாணவன் நாச்சிமார் கோவிலடி வி.அம்பலவாணர். தொடர்ந்து ரி.பாக்கியநாதன், ப.சின்னராசா வயது வந்தவர்கள் உத்தியோகத்தர்கள் நீதவான் எச்.டபிள்யூ.தம்பையா அவர்களும் தேர்தல் அதிகாரி எஸ்.ரட்ணதுரை அவர்களும், டாக்டர் சிவஞானரத்தினம் ஏனைய கலை ஆர்வலர்களுமாக மொத்தம் இருபத்தைந்து சிஷ்யர்களை உருவாக்கி சபையிலே அரங்கேறச் செய்து அங்கீகரிக்கின்ற பேற்றினையும் பெற்றுக் கொடுத்தார். மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய திரு ஸ்ரீகாந்தா அவர்களது ஆசீர்வாதம் முதலாவது பரம்மரைக்கு ஆரோக்கியம் அளித்தது எனலாம்.
1962 இல் இருந்து இராமநாதன் அக்கடமிக்கு ஏ.எஸ் அழைக்கப்பட்ட பேற்றினால், ஸ்திரமான பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகத் தன்னை அர்பணித்துக் கொண்டார். திரு. சு.நடேசபிள்ளை அவர்களது கருணையும், மகாராஜபுரம் சந்தானம் அவர்களது இசையமுதும் சங்கீத அக்கடமியின் நீடித்த ஆயுளுக்கு மருந்தாக ஏ.எஸ் அவர்களின் லயவாத்தியமாம் மிருதங்க இசை அமைந்தது. ஏராளமான மாணவர்கள் இராமநாதன் அக்கடமியில் இசையோடு மிருதங்கத்தினையும் பயின்று ‘சங்கீத ரத்தினம்’ என்ற பட்டத்துடன் இசையுலகில் பிரவேசித்தார்கள். சிறப்பாக மகாராஜபுரம் ஸ்ரீநிவாசன், மகாராஜபுரம் ராமச்சந்தின், உடுவில் விஜயசிங்கம், ஏ.கே.கருணாகரன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
திருமணம் நடைபெற்ற பின்னர் 1961 ல் இருந்து திருநெல்வேலியில் தங்கிய போது இரண்டாவது பரம்பரை ஆரம்பமாகியது எனலாம். தற்பொழுது மிருதங்க
பேராசான்களாக விளங்கும் கலாபூஷணம் க.ப.சின்னராசா, கலாபூஷணம் சி.மகேந்திரன், கலாபூஷணம் எஸ்.சிதம்பரநாதன் முதலான பல சீடர்கள் உருவானார்கள். உலகளாவிய ரீதியில் இவரது சக சீடர்கள் மிருதங்க சிட்சையினைக் கற்பித்து வருவதும், அம்மாணவர்களின் அரங்கேற்றங்களுக்கு ஏ.எஸ் அவர்களின் தரிசனமும் ஆசியும் கிடைப்பதும் உண்மையிலேயே அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலான உலக மிருதங்க சாம்ராஜ்ஜியத்தினை ஆண்டுவரும் ஒரு சக்கரவர்த்தியாக உயர்த்திவிட்டது எனலாம். ஏ.எஸ் இடம் கற்ற பாடாந்தர பாணியினை மனோலய பரம்பலாக்கி ப.சின்னராசா, சி.மகேந்திரன்,எஸ்.சிதம்பரநாதன் ஆகியோர் தமது சீடர்களுக்கு நியம சிட்சைப் பிரகாரம் கற்பித்ததின் விளைவாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மிருதங்கக் கலைஞர்களது அரங்கேற்றங்கள் யாழ் மண்ணில் நடைபெற்றதனை வரலாறு  சான்று பகரும். இவையாவும் ஏ.எஸ் ராமநாதன் அவர்களுக்கு கிடைத்த விருதுகள் என்றே கருதலாம்.
ஏ.எஸ் அவர்கள் குறிப்பாக 1971 ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தின் ஆரம்ப மிருதங்க பேராசானாகக் கடமைபுரிந்த பெருமையோடு 1983 வரை பணிபுரிந்து மிருதங்கக் கலையினை இந்த மண்ணில் ஆழப்பதித்து நீடித்த ஆயுளை விஸ்தாரம் செய்திருக்கின்றார். இந்நிலையில் இவரது சிஷ்யர்களான ப.சின்னராசா கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மிருதங்க விரிவுரையாளராகவும், சி.மகேந்திரன், எஸ.சிதம்பரநாதன் இராமநாதன்; நுண்கலைப்பீடத்தின் விரிவுரையாளர்களாகவும் கடமையாற்றி இக்கலையினை சிறப்பாக வளர்த்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
வட இலங்கைச் சங்கீத சபையினரால் நடாத்தப்பெறும்மிருதங்கப் பரீட்சைக்கு காத்திரமான பாடத் திட்டம் அமைக்கும் பணியில், மாணவர்களின் தரங்களுக்கு ஏற்ப பாடத்தரங்களை நிரல்படுத்திய வித்துவான்களில் இவர் முதன்மை பெறுகின்றார். ஏ.எஸ் அவர்கள் நீடு வாழ்வதற்கும், அவரது சீட பரம்பரை ஆயிரமாண்டு காலம் சிரஞ்சீவியாக வாழ்வதற்கும் வட இலங்கைச் சங்கீதசபை பரீட்சைகள் அடித்தளமாக அமைகின்றன.
நிறைவாக யாழ்ப்பாணத்தில் இசை வளர்க்கும் சபைகளான ரசிகரஞ்சனசபா, சங்கீத வித்வ சபை, அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம், வட இலங்கைச் சங்கீத சபை, இளங்கலைஞர் மன்றம், இளந்தொண்டர் சபை யாவற்றிலும் ஏ.எஸ் இன் இசைப் பணி காத்திரமாக அமைந்து சித்தியும் சிறப்பும் அடைந்துள்ளது என்பதனை அவரது சீடர்கள் நன்றியுடன் உணர்த்தி வருகின்றர்hகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அக்கடமியில் ‘சங்கீத ரத்தினம்’ பட்டம் பெற வந்த முக்கிய மாணவர்களில் சிலர் பிரணவநாதன், சின்னராசா, மகேந்திரன், சிதம்பரநாதன், ஜெம்புநாதன், வரதராஜன், ஜெயமணிதேவி, கண்ணன், விவேகானந்தன், நித்தியானந்ததேவி, ஸ்ரீதரன், செல்வநேசன், இன்னும் பலர் தனிப்பட்ட முக்கிய மாணவர்கள் சிலர். ஆனந்தப்பிரசாத், பிரகலாதன், ரவிச்சந்திரன், பாலசிறீ, நேசராஜ், இன்னும் பலராவார்.
பின்னிணைப்பு
பெயர்   : ஏ.எஸ்.ராமநாதன்தந்தை பெயர் : சுந்தரேசன்தாயார் பெயர் : மீனாட்சி அம்மாமனைவி  : சரோஜாதேவிபிறந்த ஆண்டு : 16.08.1930பிள்ளைகள்  : மீனாகுமாரி (மிருதங்கம்)    கலையரசன் (வயலின்)    யோகராஜா (மிருதங்கம்)    கார்த்திகேயன் (மிருதங்கம்)
    லதாங்கி (அகில இந்திய வானொலி)
இவரது மாணவர்கள் சுமார் அறுபதுக்கு மேலே எனலாம்.
(எனது மாணவன் செல்வன் நா.மாதவன் (எம்.ஏ) அவர்களின் (26.02.2011) இறுதிச் சந்திப்பு பற்றிய ஒரு குறிப்பு)
ஏ.எஸ் ராமநாதன் அவர்கள் இலங்கையில் கால்பதித்து மிருதங்க துறைக்குச் சமர்ப்பித்த பாடங்களைத் தாளக்குறியீடுகளின் படி ‘தண்ணுமைத் தண்ணொலி’ எனும் நூலாக எழுதி அவரது ஆசியும் அங்கீகாரத்தையும் பெற்ற பின் (26.02.2011) அவரது இல்லம் சென்று நூலினைக் கையளித்தேன். தமது இயலாமையையும் பொருட்படுத்தாது எனக்கு ஆசி வழங்கியதுடன் இலங்கையிலுள்ள தனது மாணவர்கள் அனைவரையும் விசாரித்து மகிழ்ச்சியுற்றது, எனது வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத பேறு என நினைக்கின்றேன்.
இறுதியாக மிருதங்க லய மாமேதையும் இலங்கையில் மிருதங்க கலை வளர்ச்சியின் பரம்பரை ஒன்றை உருவாக்கி ஓய்ந்த பெருமகனார், சங்கீத பூஷணம் உயர் திரு ஏ.எஸ் ராமநாதன் அவர்களின் 02.03.2011 திடீர் மறைவு குறித்து ஏங்கி, இரங்கி, வருந்தி நிற்கும் சிஷ்யர்களும், கலைஞர்களும் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
இங்ஙனம்
கலாபூஷணம் க.ப.சின்னராசா (மாணவன்


No comments: