வானவில் திட்டம்- வ.ந.கிரிதரன்

.
"நடேசனின்  வானவில் திட்டம் கட்டுரைக்கு பதிவு கிரிதரனின் பதிலும் அதற்கு நடேசனின் விளக்கமும் "
உங்களது திட்டம் நன்மையானது. நியாயமானது. பாராட்டப்பட வேண்டியது. அதே சமயம் போர் முடிந்து இரு வருடங்களைக் கடந்து விட்ட நிலையிலும், வட கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் படும் துயர்களையும், அனுபவித்த துயரகரமான அனுபவங்களையும் பற்றி அண்மையில் ‘இந்தியா டுடே’ மிக விரிவாக வெளிப்படுத்தியிருந்தது பற்றியும் கவனத்தில்கொள்ள வேண்டும். இன்றைய ஸ்ரீலங்கா அரசுடன் அதிகளவு தொடர்புகளை வைத்திருக்கும் உங்களைப் போன்ற செல்வாக்கு மிக்க தமிழர்கள் நீடித்த நிலையான சமாதானத்தின் அவசியத்தைப் பற்றியும், அத்தகைய சமாதானம் தமிழர்களுக்கு உரிய உரிமைகளையும் வழங்குவதன் மூலமும், இதுவரை தமிழர்கள் அனுபவித்த துயரங்களுக்கான அரசின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும், நடைபெற்ற போர்க் குற்றங்களை சர்வதேச அனுசரணையுடன் சுயாதீன விசாரணையொன்றினை நடாத்துவதன் மூலமும்தான் ஏற்படுத்த முடியுமென அரசினை வற்புறுத்துவதன்மூலமும்தான் ஏற்படுமென நாம் கருதுகின்றோம். தமிழர்கள் பிரச்சினை தீர்க்கப்படாதவிடத்து, மீண்டும் எழும் மோதல்களுக்கான சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை. அத்தகைய நிலையொன்று ஏற்படுமானால் உங்களைப் போன்றவர்களின் இத்தகைய திட்டங்களும் பாதிக்கப்படுமென்பதையும் கருத்தில்கொள்ள வேண்டுமெனக் கருதுகின்றோம். இலங்கை அரசானது மிகவும் தந்திரமாகத் தமிழர்களை, தமிழ் அரசியல் அமைப்புகளை, தமிழ் விடுதலை அமைப்புகளை (முன்னாள்) தனது பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் பிளவு படுத்திக்கொண்டு, தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்களை இராணுவமயப்படுத்தி, சிங்கள மயப்படுத்தி வருவதாகவே தெரிகின்றது. இத்தகைய அணுகுமுறை தொலை நோக்கில் அவர்கள் எதிர்பார்க்கும் பயனெதனையும் தரப்போவதில்லை என்பதே எமது கருத்து. உண்மையில் இதற்கு மாறான விளைவுகளையே ஏற்படுத்துமென்பதையே இது வரையிலான வரலாற்று நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. 


முள்ளிவாய்க்காலில் முடிந்த போரின் அகோரத்தாலும், உறுதியான அரசியல் தலைமையற்ற நிலைமையினாலும் ஒரு வித மன அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள தமிழ் மக்கள் சிறிது சிறிதாக அவ்விதமான அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதையே, வந்துள்ளதையே அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. கிழக்கிலோ, வடக்கிலோ தமிழ் மக்கள் தங்கள் நிலைப்பாட்டினை உறுதியாகத் தெரிவித்துள்ளது இதனையே காட்டி நிற்கின்றது. தமிழ் மக்களை அடிமைகளாக நடைமுறையில் நடாத்திக்கொண்டு (வாயளவில் நீலிக் கண்ணீர் விட்டுக்கொண்டு) அவர்கள் மேல் திணிக்கப்படும் எந்தவிதமான தீர்வுகளும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தப் போவதில்லை என்பதே எமது கருத்து. நடந்து முடிந்த நிகழ்வுகளிலிருந்து பெற்ற பாடங்களின் மூலம் அடைந்த அறிவு கொண்டு, இலங்கை அரசாங்கங்கள் இதுவரை தமிழ் மக்கள் மேல் நடாத்தி வந்த அடக்குமுறைகளை உணர்ந்து கொண்டு விமர்சிப்பதை மறந்து விட்டு, தமிழ் விடுதலை அமைப்புகள் நடாத்திய மனித உரிமை மீறல்களை அல்லது போர்க் குற்றங்களை முதன்மைப்படுத்திக்கொண்டு தமிழ் மக்களை அரசுடன் இணைந்து செயலாற்ற வாருங்கள் என அழைக்க முடியாது. இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமே இதுவரை இலங்கையினை ஆட்சி செய்த (1948 இலிருந்து) ஆட்சி செய்த இனவாத அரசுகளின் அடக்குமுறைகள்தான் என்பதை மறந்து விட முடியாது. ஆண்டுகள் பலவாக இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழர்கள் பற்றியும் கவனத்தில்கொள்ள வேண்டும். அவர்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டும். – பதிவுகள்-]
அன்பின் நண்பருக்கு
எனது கட்டுரையை பதிவுகளில் போட்டதற்கு மிக நன்றிகள்.
தமிழ்த் தலைவர்கள் தமிழர்களை முள்ளில் போட்ட சீலையாக்கிவிட்டார்கள். இது மிகவும் கவனமாக எடுக்கப்படவேண்டியது. கூச்சலாலோ ஆர்பாட்டத்தலோ சாதிக்கமுடியாது
என்னை நான் ஒரு இலங்கை அரசாங்கத்தில் செல்வாக்கு உள்ளவனாக பார்க்கவில்லை. தொடர்சியான எனது புலி எதிர்ப்பை தமிழ் மக்களின் நன்மை கருதிதான் செய்தேன்.
மற்றவர்கள் போல் எழுதிவிட்டோ, விருந்துகளில் கதைத்து விட்டு போவது எனது வழக்கமல்ல.
இலங்கைத்தமிழரின் தலைவிதி அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களினால் தான் தீர்மானிக்கப்படுகிறது. இதை வெளியே உள்ள நானே ,நீங்களோ மாற்றமுடியாது.
அரசியல் மாற்றம் ,இலங்கையில் சிங்களவர்கள், தமிழர், இஸ்லாமியர் என மொத்தமான மக்கள் மத்தில் ஏற்படவேண்டும். வெளிநாடுகளோ, வெளிநாட்டுத் தமிழர்களோ உருவாக்க முடியாது. 87ல இந்தியா ஒரு இலச்சம் படைகளுடன் வந்து இலங்கையை பணியவைத்து உருவாக்கி 13 ம் சரத்துக்கு என்ன நடந்தது என்பது நமக்கு தெரியும். இப்பொழுது மேற்கு நாடுகளும் சனல்4 மற்றும் ஐக்கிய நாடுகளால் எதுவும ஏற்படும் என்ற நம்பிக்கையை கொடுப்பது மூலம் மீணடும் மீண்டும் நிழல் மானை வேட்டையாட தமிழரை தயார் படுத்தவேண்டாம். தவறான பரிசோனைகளால் தற்பொழுது இலங்கை தமிழர்களில் மூன்றில் ஓருவர் வெளியேறிவிட்டார்கள். இந்த தவறுகள் தொடர்ந்தால இலங்கை தமிழர் வடகிழக்கில்  இருந்த வரலாறுதான் மிஞ்சும். தமிழர்கள் அல்ல , என்பது எனது  திடமான நம்பிக்கை. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு  மனிதாமிமான உதவிகளும் ஆத்ம பலமும் பெற உதவுவது தான் எமது கடமை. இல்லையேல் நாம் அறுபது வருடங்களாக பாடம் கற்கவில்லை என்பதுதான் உண்மை.
நானும் நினைத்தால் இராஜபக்சாவுக்கு எதிராக சில கட்டுரையை தமிழிலோ அல்லது ஆங்கிலத்தில எழுத முடியும். அல்லது மெல்பேன் நகர முன்றலில்  இலங்கை அரசை எதிர்த்து சில வார்த்தைகள் பேசமுடியும. இவற்றால வன்னியில் வாழும் மக்களுக்கு எந்த ஆறுதலும் கிடைக்க போவதில்லை.
நன்றி : பதிவு, நோயல் நடேசன்

No comments: