உலகச் செய்திகள்

லண்டனில் அமைதி: மற்றைய நகரங்களில் தொடரும் வன்முறைகளில் ஒருவர் பலி(பட இணைப்பு) _

108/2011
இங்கிலாந்தின் பல நகரங்களில் தொடர்ச்சியாக வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும், லண்டனின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் சுமார் 16,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் மெஞ்செஸ்டர், செல்போர்ட், லிவர்பூல், நொட்டிங்ஹம், பெர்மிங்ஹம் நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டுவருவதுடன் தீவைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கார்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ளதாக அந் நகர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி வன்முறை சம்பவங்களில் பொலிஸாருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் பாரிய சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.நொட்டிங்ஹாமில் மூன்று பொலிஸ் நிலையங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன.
இதேவேளை இவ் வன்முறைகள் காரணமாக ஏற்பட்ட முதல் உயிர்ப் பலி நேற்று பதிவாகியது.

தென் லண்டனின் குரயிடொன் பகுதியில் 26 வயது இளைஞன் ஒருவன் காருக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமையே அச்சம்பவமாகும்.
லண்டனில் இதுவரை சுமார் 768 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களில் அதிகமானோர் 15 - 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பதுடன் இக் கொள்ளைச் சம்பவங்களில் பெண்களும் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளோரில் அதிகமானோர் பல்வேறு குற்றச் செயல்களில் ஏற்கனவே ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை மார்க் டக்கன் என்பவர் (29 வயது) பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற சிறியளவிலான ஆர்ப்பாட்டமே இவ்வாறு பாரிய கலவரமாக அங்குள்ள பல நகரங்களுக்கும் வியாபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி இணையம்


 
 
 
 
 
 
 

[]

[]


[]


[]


வீதி கலாசாரம் பிரிட்டனை ஆக்கிரமிக்க இடமளியோம் பிரதமர் கமரூன்
Thursday, 11 August 2011

பிரிட்டனில் நான்காவது நாளாக கலவரங்கள் நீடித்திருக்கும் நிலையில் தெருக்களில் வீதிக்கலாசாரம் ஆக்கிரமிக்க பிரிட்டன் ஒருபோதும் இடமளியாதென அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கமரூன் நேற்று புதன்கிழமை சூளுரைத்துள்ளார்.


தேவையேற்படின் தண்ணீர் குண்டுகளை பயன்படுத்தும் திட்டத்தை பொலிஸார் வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சட்டம், ஒழுங்கை எமது வீதிகளில் நிலைநாட்டுவதற்குத் தேவையான சகலவற்றையும் நாங்கள் மேற்கொள்வோம் என்று தொலைக்காட்சி மூலம் விடுத்த அறிக்கையில் கமரூன் கூறியுள்ளார். பிரிட்டனில் இடம்பெற்றுவரும் கலகங்கள் தொடர்பாக அவசர விவாதத்திற்காக பாராளுமன்றத்தை கமரூன் கூட்டியிருந்தார். லண்டன் நகர் நேற்று அமைதியுடன் காணப்பட்ட அதேசமயம் ஆயிரக்கணக்கான பொலிஸார் வீதிகளில் ரோந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான கலவரங்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக நீடித்தன. லண்டனில் நேற்று குறிப்பிடத்தக்க அமைதி நிலை ஏற்பட்ட போதும் மான்செஸ்டர், பர்மிங்காம் பகுதிகளில் கொள்ளைகள் மோசமாக இடம்பெற்றுள்ளன. காரினால் மோதப்பட்டு மூவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நேற்று ஆரம்பமாகின. தலைநகரில் அமைதி நிலவிய போதிலும் நேற்றும் நூற்றுக்கணக்கான கடைகள் மூடப்பட்டிருந்தன.

கொள்ளையடிக்கப்பட்ட களஞ்சியங்கள், எரிக்கப்பட்ட கார்கள், புகை வடிந்த கட்டிடங்களை லண்டனில் காண முடிந்தது. அடுத்த கோடை காலத்தில் ஒலிம்பிக் விளையாட்டுகளை பிரிட்டன் நடத்தவுள்ள நிலையில் இந்த நாசகார நடவடிக்கைகளினால் பிரிட்டிஷ் மக்கள் பெரும் கவலையும் விசனமும் அடைந்துள்ளனர்.

சட்டம், ஒழுங்கை அமுல்படுத்தும் நடவடிக்கைகளில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இதுவரை 1,200 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். லண்டன் வீதிகள் தோறும் கவச வாகனங்கள் ஆயுதம் தரித்த பொலிஸார் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். 16 ஆயிரம் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை வன்செயல்கள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து லண்டனில் மாத்திரம் சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகருக்கு வெளிப்புறத்தே கொள்ளைகள் அதிகரித்துள்ளன. பர்மிங்காமில் 250 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், தடுத்து வைக்கப்பட்டோரிடம் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. மான்செஸ்டர் நகரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நகர மத்திய நிலையத்தில் போத்தல்களையும் கற்களையும் பொலிஸார் வீசி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன், கடைகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பெண்கள் ஆடைகளை விற்பனை செய்யும் நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் விரும்புகின்ற பொருட்களே சூறையாடப்படுகின்றன. சைக்கிள்கள், இலத்திரனியல் பொருட்கள், றப்பர் பொருட்கள் போன்றவையே அதிகளவில் கொள்ளையடிக்கப்படுகின்றன. பகிடிக்கு செய்வது போன்று அவர்கள் கடைகளுக்குத் தீ வைக்கின்றனர். இதேவேளை, பொதுமக்கள் தமது வாசஸ்தலங்களுக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு லண்டனிலுள்ள சௌத் ஹோலிலுள்ள சீக்கியர் ஆலயமொன்றில் தமது ஆயுதங்களுடன் சீக்கியர்கள் காவல் காத்து வருகின்றனர்.


நன்றி தினக்குரல்
பிரிட்டனில் சூறையாடலில் ஈடுபடுவோர் யார்?

பி.பி.சி

london riots 1நிறைய இளைஞர்கள் கடையுடைப்பில் ஈடுபட்டுள்ளனர். அச்சமோ கூச்சமோ இன்றி தைரியமாகத் திருட்டிலும், வேண்டுமென்றே அடுத்தவர்களின் சொத்தை சேதப்படுத்துவதிலும் ஈடுபடும் அந்த இளைஞர்கள் யார்?

பிரிட்டனில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் கலவரங்கள், சூறையாடல்கள் மற்றும் சொத்து சேதங்களில் ஈடுபட்டவர்கள் என்று தெரிவிக்கப்படும் ஆட்கள் சிலரின் படங்களை நாட்டின் நாளேடுகள் பலவும் வெளியிட்டு வருகின்றன.

இந்தப் படங்களைப் பார்த்து அதில் காணப்படுவோர் யாரையும் அடையாளம் தெரிந்தால் பொலிசில் தெரிவிக்குமாறு இந்தப் பத்திரிகைகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.

இந்தப் படங்களை எல்லாம் பார்த்தால் கலவரங்களில் ஈடுபட்டவவகள் பெரும்பாலும் இளைஞர்களாகவே தோன்றுகின்றனர்.

கருப்பினத்தார், வெள்ளையினத்தார், யுவதிகள், சிறுவர்கள் போன்றோரும் அட்டூழியங்களில் ஈடுபட்டனர். கருப்பினத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள், வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

பொதுப்படையாகச் சொல்லவேண்டுமானால், இவர்கள் எல்லாம் ஏழ்மையான வட்டாரங்களில் இருந்து வரக்கூடிய இளைஞர் எனலாம்.

ஆனால் இவர்களில் பெரும்பான்மையானோர் குறிப்பிட்ட ஒரு இனப் பின்னணி கொண்டுவர்கள் என்று கூறமுடியாது.

கலவரங்கள் ஆரம்பித்த சமயத்தில் இவர்கள் எல்லாம் குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்டது. ஆனால் அப்படி இல்லை என்பது போகப்போக தெளிவாகிவிட்டது.

லண்டனில் பர்மிங்ஹாம் போன்ற நகரங்களில் பல்வேறு இனத்தாரும் சேர்ந்து வாழக்கூடிய வட்டாரங்களிலும் தீ பரவ, கருப்பின இளைஞர்கள் தான் இந்த வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் என்ற தப்பபிப்ராயம் அகன்றுவிட்டது.

சூறையாடல்களில் ஈடுபடுவோரை பொலிசார் சந்தர்ப்பவாத குற்றவாளிகள் என்று வருணிக்கின்றனர். எந்தப் பிரச்சினையும் வராது என்று தெரிவதால்தான் தாங்கள் கடைகளை உடைத்து பொருட்களை எடுத்துச்செல்வதாக மான்செஸ்டர் நகரத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சொல்கின்றனர்.

இந்தக் சூறையாடல்களில் பத்து வயதுப் பிள்ளைகள் கூட ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு லண்டனிலும் சரி, வேறு பல இடங்களிலும் சரி, இந்த அட்டூழியங்களில் பதின்ம வயது விடலைப் பெண்கள் பலரும் ஈடுபட்டிருந்தனர்.

"இந்த மாதிரியான அட்டூஷியங்கள் தங்கள் கண் முன்னர் அரங்கேறுவதை பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, அட நாமும் இதையெல்லாம் செய்து பார்க்கலாமே என்று சட்டெனத் தோன்றும்."

இந்தக் கலவரங்களைச் செய்வோரில் கொஞ்சம் பேர் ஏற்கனவே காவல்துறையின் பார்வையில் விழுந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் தைரியம் வந்து அட்டூழியங்கள் செய்வோர்தான் நிறைய பேர் எனகுற்றவியல் நிபுணர் பேராசிரியர் ஜான் பிட்ஸ் கூறுகிறார்.

"இந்த மாதிரியான அட்டூஷியங்கள் தங்கள் கண் முன்னர் அரங்கேறுவதை பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, அட நாமும் இதையெல்லாம் செய்து பார்க்கலாமே என்று சட்டெனத் தோன்றும். தாங்களும் கடையுடைப்பிலும் திருட்டிலும் ஈடுபடலாம் என அவர்களுக்கு தைரியம் பிறந்துவிடுகிறது." என பேராசிரியர் பிட்ஸ் கூறினார்.

சந்தர்ப்பவாதம் என்பதும் இந்த அட்டூழியங்களுக்கு ஒரு பங்கில் காரணமாக உள்ளது என்றாலும், இவற்றில் ஈடுபடும் இளைஞர்கள் பலர் தாங்கள் சமூகத்தின் மீது ஏதோ ஒரு வகையில் விரக்தி அடைந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் வறுமைதான் இந்த அட்டூழியங்களுக்கு காரணம் என்று எளிதாக முடிச்சுப்போடுவது ஆபத்தானது என பிரிட்டிஷ் கல்வித்துறை அமைச்சர் மைக்கெல் கொவ் எச்சரித்துள்ளார்.

வன்முறைகள் ஆரம்பமானதிலிருந்து நாட்டில் இதுவரை 1200 பேர் கைதாகியுள்ளனர். தவிர வன்முறையில் ஈடுபட்டவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியிலும் துப்பறியும் பொலிசார் நிறையபேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கலவரத்திலும் சூறையாடல்களிலும் ஈடுபட்ட இளைஞர்கள் பலரின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. நிறைய பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

----------------------------------------------------------------------------------------------------------
வேட்டை ஆரம்பம்: கலகக்காரர்களை தேடும் இங்கிலாந்து பொலிஸார்


11/8/2011
இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் பொலிஸார் கலகக்காரர்களைத் தேடும் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

பலரது வீடுகளுக்குள் புகுந்து அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது அங்கு இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஞாயிறு முதல் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களால் சுமார் 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

டொட்டென்ஹெம் நகரில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் பின்னர் இங்கிலாந்தின் பல நகரங்களுக்கும் பரவியது.

இதன்போது பல இலட்சக்கணக்கான சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தப்பட்டது. .

கடந்த வியாழக்கிழமை மார்க் டக்கன் என்பவர் (29 வயது) பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் பெரிய கலவரமாக உருவாகியது.

இங்கிலாந்தின் பல நகர மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் பாதிப்படைந்தது.

இதனைப் பயன்படுத்திக்கொண்ட கொள்ளைக்காரர்கள் பல கோடிகளுக்கு மேற்பட்ட சொத்துக்களைக் கொள்ளையடித்தனர்.

இவற்றைத்தடுக்க முயன்ற பொலிஸாரும் தாக்கப்பட்டதோடு பொலிஸ் நிலையங்கள் மற்றும் வாகனங்களும் தாக்குதலுக்குள்ளாகின.

இந்நிலையில் தற்போது நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து பொலிஸார் கலகக்காரர்களைத் தேடி தமது வேட்டையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

No comments: