லண்டன் எரிகிறது -நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

அழகிய மாநகரம் லண்டனை பார்த்து இரசித்து வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. லண்டனிலே கலவரம் கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மாநகரில் மட்டுமல்ல அயலில் உள்ள மன்செஸ்டர் (Mancheste) பேர்மிங்ஷாம்(Birmingham), நோட்டிங்ஷாம்(Notingham) என கலவரம் பரவுவதை தொலைகாட்சியில் கண்டேன் பார்த்து அறிவது என்பது ஒரு வகை. ஆனால் அனுபவத்தில் உணர்வது உள்ளத்திலே பாதிப்பை ஏற்படுத்தி மாற வடுவாக நிலைத்துவிடுவதும் வேறுவகைதான். 1983 கலவரத்திலே உயிரை காப்பாற்ற அடுத்த முஸ்லிம் வீட்டில் தங்கியது, வாழ்ந்த வீடு தீக்கிரையாவதை கண்டு உணர்ந்தவள். அதனால் கலவரம் என்பது என்னை நேரிடையாக தாக்கிய விஷயம்.
பல  வருடங்கட்கு முன் பிருத்தானியாவிலே வசித்த காலத்தில் லண்டனில் பல இடங்களை இரசித்து இரசித்து பார்த்தேன். அவை மனதிலே உந்த லண்டனில் தொல்பொருட் காட்சிசாலையில் அன்று 40 வருடங்கட்கு முன் இரசித்ததில் ஞாபகத்தில் என்றுமே பசுமையாக இருந்த சிற்பம் சிலை ஏன் எகிப்திய மம்மியையும் பார்த்தேன். National Gallery அழகிய ஒவியங்கள், மகாராணி விக்டோறியாவும், கணவர் (Albert)அல்பேர்ட் உம் இரசித்து சேர்ந்த பொருட்கள் 2 லட்சத்திற்கும் அதிகம் Victoria Albert  காட்சிசாலையில் அத்தனையும் நாட்கணக்கில் பார்க்கலாம். ஒரு கட்சிப்பொருட்களை tourist ஆக பார்த்து விடமுடியாது. எப்பொழுதுமே அவற்றை இரசிக்கும் போது எப்போ திரும்பிவந்து அந்த அழகை பருகுவேன் என்ற தாபத்துடனேயே அவ்விடத்தை விட்டு அகலுவேன். அன்று 40 வருடங்கட்கு முன் இழம் பெண்ணாக பார்த்த இரசனையை மனதில் கொண்டு இன்று போய் பார்த்தேன் என்றால் அதன் அழகை உங்களால் கற்பனை பண்ண முடியும். எனது மனதைவிட்டு அகலாத ஒவியங்களையும்  சிலைகளையும் இன்றும் கண்டேன். ஒரு வித்தியாசம் அன்று அனுபவம் அற்ற இரசிகை. இன்றோ வாழ்வின் அனுபவம் என்ற முதுமை. வெறும் இரசிகையாக அல்லது நாட்டின் பொருளாதாரம் அன்று அவைட லண்டன் கொணரப்பட்ட போது அவர்கள் ஆழுமை, உலகமே உள்ளங்கையில் என் ஆண்ட பாரம்பரியம்  சூரியன் அஸ்தமனமாகாத ஆட்சி என் மார்தட்டியது அத்தனையும் எனது சிந்தனையில் வந்து போயின. அங்கு காட்சிப் பொருட் சாலைகள் மட்டுமல்ல தெருக்களும் கட்டிடங்களும் பழம் பெருமை பேசின. ஏன் எனபோன்றவருக்கு நாம் ஆண்ட பரம்பரை என கூறாமல் கூறி சிரித்தன.

இத்தனையும் இரசித்து சிந்தித்து எப்போ போய் மீண்டும் இவற்றை பார்ப்பேன் என்ற எண்ணத்துடனே இங்கு நான் வந்தேன். வந்த களை ஆறவில்லை, லண்டன் எரியும் காட்சி தொலைகாட்சியிலே.

எப்பொழுதுமே இத்தகைய கலவரம் நடக்கும்போது கொள்ளையும் அதன் அங்கம். கொள்ளை அடிக்கப் படும்போது கூறப்படுவது இல்லாதவர்கள் இருப்பவரின் உடமையை பறிப்பார்கள், கொள்ளை அடிப்பார்கள். இல்லாதவர் இருப்பவரை பார்த்து அவர்கள் படாடோபம் நமக்கில்லை என ஏற்பட்ட வெறுப்பு விரக்தி இதுவே கொள்ளைக்கு காரணம் எனவும் கூறப்படும் ஆனால் லண்டனில் நடந்தது இல்லாதவர் இருப்பவரிடம் பறித்ததா?

வானொலியில் கேட்டேன் இரு பெண்கள் “It's a fun, you get some free things ” என்றார்கள். ஒரு கோடீஸ்வரரின் மகள் கார் நிறைய கடையில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை கடத்தி உள்ளார். மாணவருக்கு உதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர் கொள்ளை அடித்துள்ளார். ஏன் 12 வயது சிறுவர் முதல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவையாவும் இல்லாமையா? வறுமையா? பேராசை அவா சமூகத்திலே ஏற்பட்ட பெரிய மாறுதல், யாவற்றையும் வாங்கவேண்டும் தேவை தேவையற்றவை என்ற பாகுபாடு கிடையாது. விளம்பரங்களால் உந்தப்பட்ட அதிகப்படியாக கொள்வனவு செய்யும் சமூதாயத்தின் சீர்கேடே இது. திருடிய பொருளை வைத்திருக்கிறோம், பாவிக்கிறோம், என்ற குற்ற உணர்வு சிறிதும் அற்ற சமுதாய வெளிப்பாடே இதற்கு காரணம் எனலாம்.

சமூகமும் பாடசாலைகளும் பலவகையான கல்வியை புகட்டுகிறது. சமூகமோ தொழில் நுட்பத்தில் முன் ஏறுகிறது. சந்திர மண்டலத்தையும் கண்டுவிட்டோம் ஆனால் அன்றைய சமூகம் போல் நீதி நேர்மை என்பதை எங்காவது கற்பிக்கிறார்களா? நாம் கல்வி கற்ற காலத்திலே ஒளவை பாட்டியின் அறம்செய்ய விரும்பு முதல் மனனம் பண்ணிநோம் பெரியவராகி அர்த்தம் புரிந்தோம். எட்டு பத்து வயதிலே உண்மையை நிலைநிறுத்த அரிச்சந்திர மகாராசா கதை பசுமரத்தாணியாக பதிந்துவிடுகிறது. அதற்கும் மேல் வீட்டுக்கு வீடு காந்திதாத்தா பற்றியே கதை. அத்தனையும் உருவாக்கிய சமூதாயம் மலை ஏறிவிட்டது. பச்சை பாலகனை மடியிலே வைத்துகொண்டு பாட்டி அவன் கைகளை பிடித்து குறுக்காகவும் நேராகவும் இருந்து விளையாடும் போதும் பொய் சொல்லாதே களவெடுக்காதே என பாட்டாக பாடியதை கேட்டுள்ளேன்.

களவும் பொய்யும் சமூகத்தால் வெறுக்கப்பட்டன சிறாருக்கு அவற்றை செய்யாதே என போதித்தார்கள். ஆனால் இன்றைய பெற்றோர் தம் சிறாருக்கு போதிப்பது என்ன? எங்கே நயிக்கி வாங்கலாம் மற்றவர் பார்க்க எவ்வாறு தமது படாடோபத்தை காட்டலாம் என்பதே அவற்றின் வெளிப்பாடே இந்த சீர்கேடு

இன்று லண்டன் எரியலாம் நாளை நமது நகரமும் எரியலாம் நாமே அதற்கு காரணமாகி விடுவோமா? 

No comments: