ஊடகத்துறை விற்பன்னர் சி.வி.இராஜசுந்தரம் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு


.
[ வியாழக்கிழமை, 11 ஓகஸ்ட் 2011,
தொடர்பாடலுக்கும், ஊடகக்கலைத்துறைக்கும் அரும்பெரும் சேவையாற்றிவந்த சி.வி.இராஜசுந்தரம் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத மாபெரும் பேரிழப்பாகும். இவ்வாறு கனடா ரொரன்ரோவில் காலமான திரு சி. வி. இராஜசுந்தரம் அவர்களின் மறைவையொட்டி.....
...இலங்கை ருபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் சேவையின் முன்னாள் பணிப்பாளர் பி.விக்னேஸ்வரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வி.என். மதியழகன் ஆகியோர் கூட்டாக விடுத்த அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச ரீதியில் அதிசிறந்த ஒலிபரப்புத்துறை பயிற்சியாளரும், ஒலிபரப்பு விற்பன்னருமாக விளங்கிய சி.வி.இராஜசுந்தரம் தமது 84 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை ரொறன்ரோ மாநகரில் காலமானார்.
அன்னார் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கல்விச் சேவை நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, தமிழ் சேவையில் உரைச்சித்திர தயாரிப்பாளராக, ஒலிபரப்பு பயிற்சி - ஆராய்ச்சி நிலையத்தில் உதவிப் பணிப்பாளராக பணியாற்றிய பின்னர் 1971 ம் ஆண்டு தொடக்கம் 1977 ம் ஆண்டுவரை தமிழ்சேவை பணிப்பாளராக விளங்கி ஒலிபரப்புத்துறைக்கு ஒரு உத்வேகம் கொடுத்து வந்தார்.
இவர் ஆங்கிலப் புலமையும், சைவத் தமிழ் அறிவும் ஒருங்கே பெற்ற தனி ஆளுமைமிக்க ஒலிபரப்பாளராக விளங்கியவர்.
கனேடிய நகரங்கள் மற்றும் இலங்கை மட்டுமல்ல மேற்கு ஜேர்மனி, ஹொலன்ட், பப்புவா நிய+கினி, வியட்னாம், மாலைதீவு, பாகிஸ்தான், மலேஷியா, சிங்கப்ப+ர் என பல்வேறு நாடுகளிலும் ஒலிபரப்புத்துறை சம்பந்தமான பயிற்சிக் களங்களை, கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடத்தி வந்தவராவர்.
ஒலிபரப்பு சம்பந்;தமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி ஒலிபரப்புத்துறை வல்லுனர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் உலக நாடுகளில் சமர்ப்பித்து வந்தார்.
நாட்டிய நாடகம், தொலைக்காட்சி நாடகம், தொலைக்காட்சி விவரணம், வானொலி சித்திரம் என்பனவற்றைத் தயாரிப்பதில் தனி முத்திரை பதித்தவர்.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, நவாலியூர் சோ.நடராஜன், யாழ்ப்பாணத்து வீரமணி ஐயர், என்.மகாதேவா, வி.என்.பாலசுப்பிரமணியம் போன்ற பிரபல அறிஞர்களின் உரைச்சித்திரங்களை வானொலிக்காக தயாரித்து நேயர்களின் பாராட்டுக்களை பெற்றவர்.
உலக நாடுகளிலுள்ள ஒலிபரப்பு பயிற்சி நிலையங்களில் இவரை அறியாதவர்கள் எவருமே இல்லையென்ற நிலை இருந்தமை இவரது முக்கியத்துவத்துக்கு ஒரு சான்றாகும்.
இளம் ஒலிபரப்பாளர்களை ஊக்குவிப்பதில் இவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
கனடாவில் ரொறன்ரோ றயேசன் பொலிரெக்னிக் பல்கலைக்கழகத்தின் ஊடாக ஒலிபரப்புப் பணிகளை மேற்கொண்டவர். அது தொடர்பாக கனடாவிலிருந்து இலங்கைக்கும் சென்று ஒலிபரப்புப் பணிகளை முன்னெடுத்தவர்.
இவ்வாறு பி.விக்னேஸ்வரனும், வி.என்.மதியழகனும் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிர்நீத்த சி.வி.இராஜசுந்தரம் அவர்களின் இறுதிக் கிரியைகள் ரொறன்ரோவில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Nantri tamilwin

No comments: