.
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
ஒருதலைக் காதல்
தங்களது மனதுக்குப் பிடித்த பெண்ணை எப்படியாவது அடைந்துவிடத் துடிக்கும் ஆண்களின் வாய்மொழிகளாகவும், அவற்றிற்கு மறுமொழிகளாகவும் அமைந்துள்ள பாடல்கள் சிலவற்றைக் இப்பகுதியில் காணலாம்.
வளமான மண்ணை மட்டுமல்ல, அழகான பெண்களையும் கொண்டது மட்டக்களப்பு நாடு. வீடுகள் எல்லாம் நெல் மூடைகள். வீட்டுக்கு வீடு கறவை மாடுகள். பச்சைப்பசேலென்ற காய்கறித் தோட்டங்கள். பால், தயிர், மீன், இறால், நண்டு... இப்படி பற்றாக்குறையில்லாத வளமான பிரதேசம் என்பதால் மக்களின் மனமெல்லாம் மகிழ்ந்திருந்தது. அதனால் அவர்களின் முகமெல்லாம் எப்போதும் மலர்ந்திருந்தது.
வாழ்வு செழித்திருந்ததால் வாளிப்பாக உடல் கொழித்திருந்தது. அதிலும் பெண்கள், கிராமத்து அழகையெல்லாம் தத்து எடுத்தவர்கள் போலப் பார்ப்பவர்களைப் பித்தாக்கும் அழகோடு பிறந்திருந்தார்கள்.
அத்தகைய அழகிய பெண்களை விரும்பிய ஆண்களுக்கு அவர்களை அடைந்தே தீரவேண்டும் என்கின்ற வேட்கை இருப்பது இயல்பானதே. அந்த ஆசையை வெளியிடுவதிலும், விரும்பிய பெண்ணை அடைவதிலும் எத்தனையோ வழிகளை ஆண்கள் நாடினார்கள்.
பெண்களைப் பொறுத்தவரை ஒருதலைக்காதல் வயப்பட்டுவிட்டால் அந்த எண்ணத்தைத் தம் மனதினுள்ளேயே போட்டுப் புதைத்து விடுபவர்களாகவே பொதுவாக இருக்கிறார்கள். ஆண்களோ அதற்கு மாறானவர்கள். அந்தப்பெண்ணை அடையும்வரை ஓயாதவர்கள் சிலர். நாடியவள் கிடைக்காமல் தாடி வளர்த்தவர்கள் பலர். தற்கொலை செய்தவர்கள் சிலர். வற்புறுத்தி மணந்தவர்கள் மற்றும் சிலர். பலவந்தமாக அடைய முயன்று வாழ்வைப் பாழாக்கிக்கொண்டவர்கள் இன்னும் சிலர்.
அத்தகைய வௌ;வேறு சந்தர்ப்பங்களில் ஒருதலைக்காதல் வயப்பட்டோர் தமது எண்ணங்களை வெளிப்படையாகப் புலப்படுத்தி வெளியிட்ட எண்ணற்ற பாடல்கள் உள்ளன.
நெடுநாட்களாக வெளியூரிலிருந்தவன் தன் கிராமத்திற்குத் திரும்பியதும் தனது மாமியிடம் தன் ஆசை மச்சாளைப்பற்றி விசாரிக்கிறான்.
அஞ்சிலே பிஞ்சிலே
அறியாத நாளையிலே
தொட்டிலாட்டி நான் வளர்த்த - என்ர
தோகைமயில் எங்க மாமி?
ஓரு மாமியின் பதில் எப்படியும் இருக்கலாம். ஆனால் இந்த மாமியின் பதில் இப்படியிருக்கிறது.
கட்டிலிலே நீ படுக்க
கையாட்கள் வேலைசெய்ய
பட்டெடுத்து முகம் துடைக்க - இப்போ
பருவமில்லை மருமகனே
இதில் அவள் குறிப்பாக எதனைச் சொல்கிறாள் என்பதே இதிலுள்ள சிறப்பு. அவள் இன்னும் பூப்படையவில்லை என்பதை எவ்வளவு பூடகமாக அவனுக்குப் புலப்படுத்துகிறாள்!
ழூழூழூழூழூ ழூழூழூழூழூ ழூழூழூழூழூ
மாமி மாட்டுப் பண்ணைக்குச் சொந்தக்காரி. மருமகன் முறையான ஒருவனே அந்த மாட்டுப் பண்ணையைப் பராமரித்துக் கொண்டிருக்கிறார். அவளுக்குப் பருவமடைந்த பெண்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருத்திமேல் காதல்கொண்ட அவன் தனக்கேயுரிய தொழில்முறை வார்த்தைகளால் குறிப்பாக அவளைக் குறிவைத்துத் தனக்குக் கட்டித்தருதாறு கேட்கின்றான்.
பட்டியிலே நிற்கும் அந்தப்
பார்வைக்கு ஏற்ற நாகை
கட்டி எனக்குத் தந்தால்
கையெடுத்துக் கும்பிடுவேன்
பெண்ணைப் பெற்றவளின் பதில் பண்ணோடு வருகிறது.
ஏழவண நெல்லும்
எருமைமாடு கன்றுகளும்
தாறதுதான் உங்களுக்குச்
சம்மதமோ சொல் பொடியா
அவனிடம் இதையெல்லாம் கொடுக்க வசதியில்லை என்று தெரிந்துதான் இப்படிக் குத்தலாகக் கேட்கிறாள். திடீரென்று இப்படிக் கேட்டதும் அவன் திகைத்து விட்டான். இருந்தாலும் முயற்சியைக் கைவிடவில்லை. மேலும் கேட்டுப்பார்க்கிறான் இப்படி-
ஓடியோடிக் காசுழைப்பேன்
ஓலைமட்டை நான் இழைப்பேன்
சேனை வெட்டிச் சோறு கொடுப்பேன்
செல்ல வண்டைத் தா மாமி
சொந்தம் ஒருபுறம், நீண்டநாள் பழகிய பந்தம் மறுபுறம் அதனால் எந்தவித கூச்சமும் இன்றி இரப்பதுபோல் கேட்கிறான். ஆனால் இதற்கெல்லாம் அவள் மசியவில்லை. சட்டென்று பதில் சொல்கிறாள் - வெட்டொன்று துண்டு இரண்டாக!
மண்ணாசை அறியாய் நீ
மரத்தாசை அறியாய் நீ
பொன்னாசை அறியாய் நீ
போபொடியா மாட்டடிக்கு
உலகம் தெரியாத மருமகனே! மாட்டுத் தொழுவத்திற்குப் போய் உன் வேலையைக் கவனி. மற்றதையெல்லாம் மறந்துவிடு இனி, என்று முற்றாகச் சொல்லிவிடுகிறாள்.
ழூழூழூழூழூ ழூழூழூழூழூ ழூழூழூழூழூ
பெண்ணைக்கொடுக்கச் சம்மதிக்காத பெண்ணின் தாயிடம் நான் உன் மகளை அடைந்தே தீருவென் என்று சவால்விடும் பாடல்களும் உண்டு.
தன்மகளை மிகவும் கட்டுக்காவலுடன் பாதுகாப்பாக வளர்க்கும் தாயொருத்தியிடம் அந்தப்பெண்ணின்மேல் விருப்பம்கொண்ட ஒருவன் இப்படிச் சவால் விடுகின்றான்.
கல்லூட்டக் கட்டிக்
கற்கதவைப் போட்டாலும்
ஆலா வடிவெடுத்து
ராஞ்சிடுவேன் உன் மகளை.
இந்தப் பாடல் இப்படியும் வழங்குகின்றது.
கல்லால ஊடுகட்டி
காசால ஓடுபோட்டு
அறைக்குள்ளிருந்தாலும்
அணில் போல நான் வருவேன்
மற்றொரு விதமாகவும் இந்தப்பாடல் வழக்கில் உள்ளது.
கல்லால வேலிகட்டி
கதவுநிலை போட்டாலும்
பொல்லாத நாகம்
போரறிஞ்சி முட்டையிடும்
நீ எப்படித்தான் சிறை காத்து வைத்திருந்தாலும், உன் மகளை நிறைகாக்க முடியாமல் செய்து என் வசமாக்கிவிடுவேன் என்ற உட்பொருள் இந்தப் பாடல்களிலே உறங்கிக் கிடக்கிறது.
இதைக் கேட்டதும் கோபங்கொண்ட பெண்ணின்தாய் அவனுக்குச் சாபமிருவதுபோலப் பதில் சொல்கிறாள்.
குடத்தடி வாழை
குடல் அழுகிச் செத்ததுபோல்
ஈரல் அழுகிடுவாய் நீ
என்ன கதை சொன்னாயடா?
ழூழூழூழூழூ ழூழூழூழூழூ ழூழூழூழூழூ
தன் விருப்பத்திற்கு இணங்காத அல்லது தன்னை மணமுடிக்க விரும்பாத பெண்ணை மந்திரமாயங்களால் மயக்கிவிடுவதாகக் கூறிப் பயமுறுத்துகின்ற வழிமுறைகளையும் அந்நாட்களில் ஆண்கள் மேற்கொண்டிருக்கின்றனர். அப்படியேதும் நடந்துவிட்டால் தன் மானம் போய்விடுமேயென்று பயந்து, சம்மதித்துவிடுவார்கள் என்ற நப்பாசையால் எழுகின்ற தப்பாசையே இதற்குக் காரணம்.
வசிய மருந்துகளால், மாந்திரீகத்தால் பெண்ணொருத்தியைத் தன்வயப்படுத்துவது, விரும்பாத பெண்ணை விரும்பவைப்பது என்பதிலெல்லாம் உண்மை இருக்கிறதா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் மக்களுக்கு இவற்றிலெல்லாம் நம்பிக்கை இருந்தது என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை. நம்பாதவர்களும்கூட அத்தகைய சம்பவங்கள் தமது வாழ்வில்; குறுக்கிடும்போது, எதிர்த்து நிற்பது விசப்பரீட்சை என்று விலகியே நடந்தார்கள்.
ஒருதலைக்காதல் வயப்பட்ட ஆண் ஒருவன், தன் நெஞ்சில் குடியிருப்பவளிடம் முதலில் கெஞ்சுவது போலத்தான் கேட்கிறான். தூரத்து உறவுமுறையில் அவள் அவனுக்கு மச்சாளும் கூட. அவளுக்கோ அவனைக் கண்டாலே பிடிக்காது.
கல்லுக்குப் புல்லிணக்கம்
கடதாசிக்கு மை இணக்கம்
என்ர கிளிக்கு நான்
இணக்கம் போதாதோ?
அவன் கேட்டது தனக்குக் கேட்காததுபோல அவனைக் கண்டும் காணாமல் அவள் இருக்கிறாள். அவன் தொடர்கிறான்.
சீவன் கிடந்து இந்தச்
சீமையிலே நான்கிடந்தால்
என்காயம் கிடக்குமென்றால் - உன்னைக்
கண்ணிகுத்தி நான்பிடிப்பேன்
இதைக் கேட்டதும் அவள் அவனை முறைத்துப் பார்க்கிறாள். அவன் தொடர்கிறான். தன் உடலிலே உயிர் இருக்குமானால் அவளை அடைந்தே தீருவதாகச் சொல்லும் அவன் எப்படித்; அதை தான் செய்யப்போகிறான் என்பதையும் சொல்கிறான்.
வெள்ளைப் பொடிச்சி
வெள்ளிநகை பூண்டபுள்ள
கொள்ளிக்குப் போனேயெண்டா - உன்னைக்
கொடுங்கையிலே தூக்கிடுவேன்
அவளது முறைப்பு மேலும் அதிகமாகிறது. முற்றம் பெருக்கிவிட்டு மூலையிலே வைத்திருந்த விளக்குமாறைக் கையிலெடுத்துக் காட்டுகிறாள். இதுதான் உனக்கு என் பதில் என்பதுபோல.
அவன் ஒரு கணம் கலங்கிவிட்டான். ஆனால் தயங்கவில்லை. மீண்டும் தன் மன்மத அம்புகளை வீசுகிறான்.
வானத்தைப் பார்த்தேன்
வளர்த்தேன் பாலமரத்தை - என்ர
சீனிப் பலாவே உன்னைத்
தின்னாமல் போகமாட்டேன்
மேலும் பொறுக்க முடியவில்லை அவளால். பேசாமல் இனியும் இருந்துவிட்டால், கூசாமல் எதையெல்லாமோ கதைத்துவிடுவான் என்றெண்ணி ஏசுகிறாள். கண்டவர்கள் எல்லாம் இப்படிக் கேட்பதற்கு கணிகையா நான் என்று வார்த்தையை வீசுகிறாள்.
போட்டா வரம்பால
புறா நடந்து போறதுபோல்
நாட்டாருக்கெல்லாம் ஒரு
நடைவரம்போ என் சரீரம்?
எனக்கு நீ தகுதியில்லை என்பது ஒரு கருத்து. உன்னைப் போன்றவர்களுக்கு விலைமகளன்றி வேறொருபெண் இணங்கமாட்டாள் என்பது இன்னொரு கருத்து. மார்பிலே ஈட்டிபோல் அவளது வார்த்தைகள் அவன் மனதிலே ஏறின. பயமுறுத்துவதைத் தவிர அவளைப் பணியவைக்க வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வருகிறான்.
பயமுறுத்துவதன் மூலம் அவளைத் துன்புறுத்தவேண்டும் என்று அவன் நினைக்கிறான் என்றும் சொல்லமுடியாது. இந்த இளவுக்கு முயல்கிறான் என்றால், தன்மேல் எந்த அளவுக்குப் பிரியம் வைத்திருக்கிறான் என்று இரக்கத்தோடு தன்னைப்பற்றி எண்ணிப் பார்க்க அவளைத் தூண்டுவதாகவும் இருக்கலாம். அதனால் அவன் சொல்கிறான்,
மண்ணைக் குமிச்சிவைச்சி
மாங்கொட்டை நாட்டிவைச்சி
தேங்காய் உருவேற்றி - உன்னை,
தேடிவர வைச்சிடுவேன்
கேட்டதும் பொங்கியது அவளுக்கு கோபம். பாட்டிலே கொடுத்தாள் அவனுக்குச் சாபம்.
ஊரான்ர வள்ளத்தில
உப்பேத்திப் போற மச்சான்
கல்லாத்து விரிசலில
உன்னக்கவிழ்த்து வெள்ளம் கொட்டாதோ?
மச்சான் என்று இங்கே அவள் குறிப்பிட்டது உறவுமுறை சொல்லியழைத்தல்ல. ஒரு நக்கலாகத்தான்! மச்சான் உறவு கொண்டாட வந்தவனே - அடேய் மச்சானே- உன் உள்ளத்திலே இப்படியான கள்ள எண்ணம் உனக்கு இருக்கிறதே, கல்லாற்றிலே, கடலோடு ஓடை கலக்கின்ற இடத்திலே, நீ போகும் வள்ளம் கவிழ்ந்து, ஓடுகின்ற வெள்ளத்திலே உன்னைத் தள்ளிவிடமாட்டாதா? என்று சாபமிடுகின்றாள்.
அவன் விடுவதாயில்லை. தொடர்கிறது அவனது அச்சுறுத்தல்.
கடலால் பொழுதெழும்பி
காலை வரும் வேளையிலே
மடையால் உருப்பண்ணி
வரவைப்பேன் காலடிக்கு
என்னதான் அவனை எடுத்தெறிந்து பேசினாலும், இப்படியெல்லாம் அவன் சொல்லும்போது அவளுக்குச் சற்றுப் பயமாகத்தான் இருக்கிறது. என்ன கதை கதைக்கிறான் இவன்? துக்கம் தாங்காமல் சபிக்கிறாள்.
கல்லில கரடி ஒத்தக்
கரைச்சையில திராய் முளைக்க
வில்லுக்குப் போற மச்சான் உன்ன
விரிபுடையன் தீண்டாதோ?
இப்படிச் சொல்லிவிட்டுப் பொங்கிவரும் அழுகையை அடக்கிக்கொண்டு வீட்டுக்குள் ஓடுகின்றாள். அங்கே கால்களை நீட்டி அமர்ந்து வெற்றிலை இடித்துக்கொண்டிருக்கும் பாட்டியிடம் நடந்ததைச் சொல்லி அழுகிறாள். அவனுக்குச் சாபமும் இடுகிறாள்.
தோடங்காய் போல
தொண்டையிலே கட்டிடுவான் - என்ர
பால்போல மனசைப்
பதறவைச்சிப் போட்டான்கா
பாட்டிக்கோ அவனுக்கு இவளைக் கட்டிக்கொடுப்பதற்குப் பரிபூரண சம்மதம். பழைய உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளும் ஆதங்கம். ஆனால் அவளுக்குத்தான் அவனை அறவே பிடிக்கவில்லை. கிழவி தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் விதமே தனி. சக்கையாக இடித்து முடிந்த வெற்றிலைப்பாக்கைத் தன் பொக்கை வாயில் போட்டுக்கொண்டே, பக்குவமாய்த் தன் கருத்தை வெளிப்படுத்துகிறாள் பாட்டி.
வட்டமிட்டு வட்டமிட்டு
வாசலுக்கு வாறவர்க்குத்
திட்டமொன்று சொல்லத்
திறம்போதா தென்கிளிக்கு
No comments:
Post a Comment