உலகச் செய்திகள்

.

 போர்க்குற்ற விசாரணைகளுக்கெதிரான மிலாடிக்கின் மேன்முறையீட்டை சேர்பியா பரிசீலனை
01/06/2011
பெல்கிரேட்: இன அழிப்பு தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள சேர்பியாவின் முன்னாள் இராணுவத் தளபதி, விசாரணைகளுக்காக ஐ.நா.வின் போர்க்குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுவதற்கு எதிராகத் தாக்கல் செய்த மேன்முறையீட்டை சேர்பிய போர்க்குற்றவியல் நீதிமன்றம் பரிசீலனை செய்யவுள்ளது.

199295 பொஸ்னியப் போரின் போது 8000 முஸ்லிம்களை படுகொலை செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக தேடப்பட்டு வந்த சேர்பியாவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரட்கோ மிலாடிக் கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக ஐ.நா.வின் போர்க் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுவதற்கு எதிராக மிலாடிக்கினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டை பரிசீலிப்பதற்கு சேர்பிய நீதிமன்றம் இணங்கியுள்ளது.


ஜெனரல் மிலாடிக் தற்போது மோசமான உடல் நலக்குறைவுக்குள்ளாகியிருப்பதால் அவரால் வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ள முடியாதிருப்பதுடன், அவருடைய நோய்களுக்கான சிகிச்சைகளைப் பெறவேண்டியிருப்பதாகவும் மிலாடிக்கின் வழக்கறிஞரான மிலோஸ் சல்ஜிக் தெரிவித்திருந்தார்.

ஆனால், அரச மருத்துவப் பரிசோதனைகளின் படி அவரது உடல்நலம் நன்றாக இருப்பதால் அவரை ஐ.நா.வின் போர்க் குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைகளுக்காக அனுப்பலாம் என்பதால் அவருடைய மேன்முறையீடு நிராகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் மிலாடிக்கின் மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட சேர்பிய நீதிமன்றம் அதனைப் பரிசீலனை செய்யவுள்ளது.

மிலாடிக்கின் உடல்நிலை தொடர்பில் சர்ச்சைக்குரிய பல கருத்துகள் நிலவிவருகின்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரது உடல்நிலை மிக மோசமடைந்து செல்வதாக அவரது வழக்கறிஞர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணைகளைத் தாமதப்படுத்துவதற்கான ஒரு தந்திரமாக உடல்நலக் குறைவு அமையலாமெனக் கூறி சேர்பியாவின் போர்க் குற்ற வழக்கறிஞர் இவ்வாறான கருத்துகளைத் தவிர்த்து வந்ததால் குறித்த மேன்முறையீடு நிராகரிக்கப்படுமென சேர்பிய அதிகாரிகள் கருதுவதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மிலாடிக்கின் ஆதரவாளர்களால் மேலதிகமாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களால் அவரை அனுப்புவது தொடர்பான செயற்பாடுகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மிலாடிக் எப்போது சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என்பது தொடர்பாக சரியான தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஹேக் நகரிலுள்ள நீதிபதிகள் தெரிவிக்கின்றனர்.

பி.பி.சி.
நன்றி தினக்குரல்

நீதித்துறைக்கே பெருமை!
- அருண் நேரு

பயங்கரவாதிகளின் தீவிரத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் இலக்காகியிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ராணுவ மையங்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றன. அடுத்தது அணுஆயுதங்களாக இருக்கக்கூடும் என்கிற அச்சமும் எழுந்திருக்கிறது. இந்த அச்சத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை. பாகிஸ்தானின் அரசு நிர்வாகத்திலும் ராணுவத்திலும் முக்கியப் பதவிகளில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்போர் இருக்கின்றனர். அதனால்தான் பாகிஸ்தானின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்த முடிகிறது. இப்போது அணுஆயுதங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு மேலும் ராணுவமும் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் தங்கள் அதிகாரிகளின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்போர் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர்களைத் தேடிப்பிடித்து களையெடுக்காவிட்டால் வருங்காலத்தில் பாகிஸ்தானுக்குப் பேரழிவு ஏற்படப்போவது உறுதி.

ஒசாமா கொல்லப்பட்ட பிறகும் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலை அமெரிக்கா விட்டுவிடவில்லை. முக்கியப் பயங்கரவாதிகள் பற்றிய தகவல் கிடைத்தால் ஒசாமா மீதான தாக்குதலைப் போன்ற மற்றொரு தாக்குதலை நடத்துவதற்குத் தயங்க மாட்டோம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. பயங்கரவாதிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சிக்கி இருதலைக்கொள்ளி எறும்பாக பாகிஸ்தான் தவித்து வருகிறது.

அமெரிக்காவில் ராணா, டேவிட் ஹெட்லி ஆகியோர் மீது நடைபெற்றுவரும் வழக்கில் புதுப்புது உண்மைகள் வெளியாகி வருகின்றன. ஆனாலும் தங்களிடையே யாரும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கவில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. பாகிஸ்தான் ஊடகங்களும் இதையேதான் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றன. ஆனால், ஒசாமா பின் லேடன் விஷயத்தில் நடந்தது என்ன? எந்தவொரு அரசு உதவியும் இல்லாமல் அவரால் ராணுவ மையத்துக்கு அருகிலேயே நீண்ட காலத்துக்கு வாழ்ந்திருக்க முடியுமா?

இன்னொரு விஷயமும் நெருடலாக இருக்கிறது. மனித உரிமைகள், ஜனநாயகம் என்று பேசிக் கொண்டிருக்கும் மேலை நாடுகள், பர்வீஸ் முஷாரப் போன்ற ராணுவச் சர்வாதிகாரிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகின்றன. கார்கிலில் சட்ட விரோதமான போர் மூளுவதற்கும், ஆயிரக் கணக்கானோர் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்த, பாகிஸ்தானில் மக்களாட்சியைப் படுகொலை செய்த அவர், இப்போது லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் முஷாரபைப் பயன்படுத்திக் கொண்டன. ஆனால், அவை கொடுத்த ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுப்பதற்காக மட்டுமே பாகிஸ்தான் ராணுவமும் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் பயன்படுத்தின என்பதே உண்மை.

இப்போது நிலைமை முற்றிலுமாக மாறியிருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சி காரணமாக ஒரு சில நொடிகளில் உலகம் முழுமைக்கும் தகவல்கள் பரவி விடுகின்றன. ரகசியங்களைக் கட்டிக் காப்பதெல்லாம் முடியாத செயல். தகவல் பரவி விட்டால், அதைப் பின்பற்றி மக்கள் கருத்து உருவாகும். மேற்கத்திய நாடுகளோ, ஜனநாயக அமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் நம்மைப் போன்றவர்களோ மக்கள் கருத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க முடியாது.

நம்நாட்டில் முழுமையடைந்த அரசு இருப்பதாகக் கருத முடியாது. நம் நாட்டில் மட்டுமல்ல உலகின் வேறு எந்த நாட்டிலும்கூட முழுமையான அரசு இருக்க முடியாது. எல்லா வகையான அரசிலும் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கத்தான் செய்யும். எனினும் நமது அரசு அமைப்பின் சட்டமியற்றும் துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றில் முழு வீச்சிலான சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம்.

நமது மக்கள் ஆட்சியாளர்களைவிடப் புத்திசாலிகள் என்பதை ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன. பரம்பரை ஆட்சி, குடும்ப ஆட்சி, பண அதிகாரம், ஜாதி, மத வாக்கு வங்கி ஆகியவை இருந்தாலும், மக்களின் எழுச்சிக்கு முன்னால் இவையெல்லாம் தோற்றுப்போய் விட்டன.

மக்கள் உஷாராக இருந்தாலோ, சூழ்நிலைகளின் நெருக்குதல் காரணமாகவோதான் மாற்றங்கள் வர முடியும். அந்த மாதிரியான மாற்றங்களுக்கும், குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் நாங்கள்தான் காரணம் என்று சில அரசியல் கட்சிகள் பெருமையடித்துக்கொள்ள முயற்சிக்கின்றன. ஆனால், அரசியல் நிதி வசூல், தேர்தல் செலவு போன்றவற்றில் வெளிப்படையாக இல்லாதவரை எந்த அரசியல் கட்சியும் மாற்றங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்க முடியாது.

அதேபோல், குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றமும் நீதித்துறையும் மட்டுமே பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். 2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த ஊழல் போன்ற வழக்குகளில் நீதித்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருவதை அனைவருமே பாராட்டுகின்றனர். எந்த அதிகார மையமும் இந்த வழக்குகளில் யாரையும் நிர்பந்திக்க முடியவில்லை என்பதை நாம் கண்கூடாகவே காண்கிறோம்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றை தங்களுக்குச் சாதகமாக வளைத்து திமுக காரியம் சாதித்துக் கொண்டிருந்தது. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு நிர்வாக அமைப்பை சீர்குலைத்தது. இந்தத் தவறுகளுக்குத்தான் இப்போது நீதித்துறை பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கிறது.

2ஜி உள்ளிட்ட எந்த விவகாரத்திலும் பிரதமர் மீது யாரும் ஊழல் குற்றம் சுமத்தவில்லை. ஆனால், ஊழல் நடப்பதை மெüனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிந்தார் என்று குறை கூறுகின்றனர். எந்தத் தவறும் நடக்கவில்லை என்று பிரதமரும் அவரது அமைச்சர்களும் பொறுப்பில்லாத வகையில் கூறிவந்தனர். ஆனால், இவர்களைத் தவிர வேறு யாரும் ஆட்சியில் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள். அரசின் உயர்நிலையில் உள்ள யார் ஊழல் வழக்கில் சம்பந்தப்படவில்லை என்பதையும், ஊழல் வழக்குகளில் அவர்கள் தலையிடவில்லை என்பதையும் இப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சிறப்புகளாகக் கருதலாம்.

2011-ம் ஆண்டு பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான இடர்பாடுளைக் கொண்ட ஆண்டாக இருக்கும் என்று நான் பல முறை கூறி வந்திருக்கிறேன். ஜப்பானில் சுனாமி மற்றும் அணுக் கதிர்வீச்சு, பல்வேறு பகுதிகளில் மழை, நிலச் சரிவு என இடர்ப்பாடு அதிகரித்திருக்கிறது. ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துவிட்டன. பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்பதற்காக இந்தியாவும் சீனாவும் மட்டும் இந்த நெருக்கடிகளில் இருந்த தப்பித்துக் கொள்ள முடியாது. அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள்வரை பெரும்பான்மையினர் அனைவரும் விலைவாசியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நமது பொருளாதாரக் குழுவினரின் கணக்கு தப்பாகிப் போயிருக்கிறது.

சர்வதேசச் செலாவணி நிதியத்தில் (ஐ.எம்.எஃப்) குழப்பம் தொடர்ந்து வருகிறது. ஸ்டிராஸ் கானுக்குப் பிறகு அந்தப் பதவிக்கு வருவதற்கு மான்டேக் சிங் அலுவாலியாவை யாரும் பரிந்துரைக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கிஆகியவற்றின் முன்னாள் தலைவர்களைப் போல எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் மான்டேக் சிங் மீது இல்லை. நல்ல திறமைசாலி. ஐஎம்எஃப் தலைவர் பதவிக்குக் கட்சி பேதங்களை மறந்து அவரை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

இப்படியொரு சந்தர்ப்பத்தில்தான் குறைகளைக் காண்பதில் பலரும் அவசரம் காட்டுவார்கள். ஆனால், 2008-ம் ஆண்டில் உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது, இந்தியா மட்டும் ஸ்திரமாக இருந்தது.

பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் நெருக்கடியில் இருந்து மீண்டது. இதற்கு மான்டேக் சிங்கும் ஒரு காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இப்போதுவிட்டால், இன்னொரு சந்தர்ப்பத்துக்கு நாம் நீண்டகாலம் காத்திருக்க நேரிடும்.

- Dinamani -
நன்றி தேனீ

No comments: