இலங்கைச் செய்திகள்

வன்னி யுத்தத்தின் போது தொண்டாற்றிய மருத்துவர் சத்தியமூர்த்திக்கு சர்வதேச விருது

[ செவ்வாய்க்கிழமை, 31 மே 2011, 02:11.07 PM GMT ]

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான மருத்துவ உதவிகளை வழங்கிய வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்திக்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தினால் 2011 ம் ஆண்டுக்கான உள்ளக மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது போதியளவு மருத்துவ வசதிகள் இல்லாத போதும் பல தடைகளுக்கு மத்தியில் தனது உயிரையும் பொருட்படுத்தாது பொறுப்புணர்வோடு பணியாற்றியமைக்காக சத்தியமூர்த்திக்கு இவ்வாண்டிற்கான விருதை வழங்குவதில் தாம் பெருமையடைவதாக சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


வன்னிப்போரின் உச்சக் கட்டத்தின் போது தனது உயிரைத் துச்சமாக மதித்த இவர் ஏனைய மனிதாபிமானச் செயற்பாட்டாளர்களுடன் ஆற்றிய பணிகளை சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனமும், ஐ.நா. தொண்டு நிறுவனங்களும் பாராட்டியுள்ளதாக சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

2003 முதல் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

கிளிநொச்சி மருத்துவமனைக்கான வைத்திய மேலதிகாரியாகவும், வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோய் ஒழிப்புக்கான இயக்கத்தின் தலைவராகவும், செட்டிக்குளம் மெனிக் தடுப்பு முகாமின் சுகாதார இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

நன்றி தமிழ்வின்

"இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையும் ஜெயலலிதாவும்'  01 - 06 - 2011
இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையின் வடிவம் சிதைவடையுமானால் தமிழ்நாடு வெறும் அவதானியாக இருக்கமாட்டாது என்பதற்கான உறுதிமொழியாக ஜெயலலிதாவின் அறிக்கை அமைந்திருப்பதாக ஆசிய கற்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் வி.சூரியநாராயணன் குறிப்பிட்டுள்ளார்.

"ஜெயலலிதாவும் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையும்' என்ற தலைப்பில் சூரியநாராயணன் எழுதியுள்ள கட்டுரையில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; முன்னொருபோதுமில்லாத வகையில் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து ஊடகங்களுடனான தனது முதலாவது சந்திப்பின்போது முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வு செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்போவதாக உறுதியளித்திருந்தார். நான்காவது ஈழப்போரின் இறுதிக்கட்டத்தின்போது இலங்கை அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை வெளிப்படுத்தி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது மட்டுமன்றி, இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் விடயத்திற்கும் அழுத்தம் கொடுக்கப்போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு கோரி காலத்திற்குப் பொருத்தமான தருணத்தில் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளானது உலகளாவிய ரீதியில் தமிழர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எவ்வாறாயினும் இந்த விடயமானது முக்கியமானதொரு கேள்வியை எழுப்புகிறது. இந்திய வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதில் சமஷ்டி அலகுகளின் பங்களிப்பு என்ன? என்பதே அக்கேள்வியாகும்.

அயல் நாடுகளுடனான இந்தியா போன்றதொரு பெரிய நாட்டின் வெளியுறவுக் கொள்கையானது அந்தத் தேசங்களுடன் தொடர்புபட்டுள்ள இந்திய மாநிலங்களுடன் உடனடியாக சச்சரவை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவுகள் ஜம்புகாஷ்மீர், பஞ்சாப்,இராஜஸ்தான்,குஜராத் ஆகியவற்றுடன் உடனடி சச்சரவுக்குள் உட்படும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. சீனாவுடனான வெளியுறவுக் கொள்கையானது அருணாச்சலப் பிரதேசம்,சிக்கிம், உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல், ஜம்புகாஷ்மீர் ஆகியவற்றில் தாக்கத்தையேற்படுத்தும்.

நேபாளத்துடனான கொள்கையானது பீகார்,சிக்கிம், உத்தராஞ்சல், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றுடன் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டதாகும். இந்தியாவுக்கும் பூட்டானுக்குமிடையிலான உறவுகள் மேற்குவங்கம்,அசாம்,அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தாக்கத்தையேற்படுத்த வல்லவையாகவுள்ளன. மியன்மாருக்கும் (பர்மா) இந்தியாவுக்குமிடையிலான உறவு அருணாச்சலப் பிரதேசம்,மிஸோரம்,நாகலாந்து,மணிப்பூர் ஆகியவற்றுக்கிடையிலான சமன்பாடுகளைக் கொண்டதாக அமையும். அதேசமயம், இந்தியாவுக்கும் பங்களாதேஷûக்குமிடையிலான உறவுகள் மேற்குவங்கம் மேகாலயா,மிஸோரம், திரிபுரா,அசாம் ஆகியவற்றுக்கிடையிலே தொங்கிநிற்கிறது. அதேபோன்று இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் விளைவுகள் தமிழ்நாட்டில் தங்கியுள்ளன.

இந்திய அரசியலமைப்பின் பிரகாரம் வெளியுறவுக் கொள்கையின் வடிவமைப்பும் அமுலாக்கமும் மத்திய அரசாங்கத்தின் சட்டவரையறைக்குள் பிரத்தியேகமாக வருகின்றது. உண்மையான நடைமுறையின்போது பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாகவுள்ள இந்திய மாநிலங்களின் நலன்களை புதுடில்லி பலிகொடுத்துள்ளது. அத்தகைய கொள்கையானது மத்திய அரசாங்கத்துக்கும் சமஷ்டி அலகுகளுக்குமிடையில் முறிவுகளைத் தோற்றுவித்திருந்தது. இந்தப் பிரச்சினையானது இந்தியாவுக்கு மட்டும் தனித்துவமானதொன்றல்ல. அமெரிக்கா,சீனா, முன்னாள் சோவியத் ஒன்றியம் போன்ற பல நாடுகளுக்குப் பொதுவான விடயங்களாகவுள்ளன. யூகோஸ்லாவியாவில் அந்நாடு பல தேசங்களாகப் பிரிந்து செல்வதற்கு முன்னர் சமஷ்டி அலகுகள் வெளிவிவகாரத் திணைக்களங்களைத் தனித்தனியே கொண்டிருந்தன. வெளியுறவுக்கொள்கையை இந்த சமஷ்டி அலகுகள் நிர்வகிக்க வேண்டுமென்று நான் ஆலோசனை கூறவில்லை. ஆனால், இதுவொரு பொறிமுறை என்றே நான் குறிப்பிடுகின்றேன். அதாவது தொடர்ச்சியாகவுள்ள இந்திய மாநிலங்களின் நலன்கள் தொடர்பாக இந்தப் பொறிமுறை குறித்து நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்த நலன்கள் மத்திய அரசாங்கத்தினால் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பானதாகவிருக்கும் விடயமானது இந்திய அரசாங்கத்திற்கு தீமையானதாக இருக்க வேண்டிய தேவையில்லை. இந்தியாவின் அயல் உறவுக் கொள்கையை உருவாக்கும் விடயத்தில் சமஷ்டி அலகுகள் வேறுபட்ட முறையில் தமக்குச் சாதகமான விடயங்களை உள்ளடக்கியவாறு சேர்த்துக் கொள்ளுதல் அவசியமானதாகும்.

தமிழ் நாட்டின் நலன்களை மோசமாகப் பாதிப்படைய வைத்த இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை எவ்வாறு வழிநடத்தப்பட்டது என்பதற்கான சில விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1964 இல் ஸ்ரீமாவோசாஸ்திரி உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களின் பெருந்தொகையானவர்களுக்கு இந்தியப் பிரஜாவுரிமையை வழங்குவதென புதுடில்லி தீர்மானித்திருந்தது. இந்த விடயமானது ஜவஹர்லால் நேருவின் பரிசீலிக்கப்பட்ட கொள்கையில் ஏற்பட்ட பின்னடைவு மட்டுமன்றி, இலங்கையிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பத்தை பரிசீலனைக்கு எடுக்காமல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமுமாக உள்ளது.

தமிழ்நாட்டிலிருந்த சகல முக்கியமான தலைவர்கள்காமராஜ் நாடார், வி.கே.கிருஷ்ணமேனன்,சி.என்.அண்ணாத்துரை, பி.இராமமூர்த்தி ஆகியோர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். எவ்வாறாயினும் அச்சமயம், பொதுநலவாய செயலாளராகவிருந்த சி.எஸ்.ஜாவின் ஆலோசனையின் பிரகாரம் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, இந்திய வம்சாவளி மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் பார்க்க இலங்கை அரசாங்கத்துடன் அதிகளவு நட்புறவுக்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இரண்டாவது உதாரணமாக அமைவது கடல் எல்லை உடன்படிக்கையாகும். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் 1974 இலும் 1976 இலும் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உடன்படிக்கைகளின் விளைவாக இராமநாதபுரம் ராஜாவின் ஜமீனுக்குச் சொந்தமாகவிருந்த கச்சதீவு மட்டுமன்றி, கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது மட்டுமன்றி, இந்திய மீனவர்கள் அனுபவித்து வந்த பாரம்பரியமான மீன்பிடி உரிமைகளும் கைவிடப்பட்டன. இதேபோன்றதொரு சூழ்நிலை 1950 களில் ஏற்பட்டிருந்தது. இத்தகைய நிலைமையை மத்திய அரசாங்கம் எதிர்கொண்டிருந்தது. கிழக்குப் பாகிஸ்தானுக்கு பேரூபாரியை மாற்றுவதற்கு மத்திய அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அச்சமயம், மேற்குவங்க முதலமைச்சராகவிருந்த பி.சி.ரோய், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார். வழக்கில் வெற்றிபெற்றார். இந்திய ஆட்புல எல்லை கையளிக்கப்படும் விடயம் தடுக்கப்பட்டது. இந்திய ஆட்புல எல்லையான கச்சதீவானது இலங்கைக்கு கைமாற்றப்படும்போது அதனைத் தடுப்பதற்கு 1974 இல் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசாங்கமானது ஏன் நீதித்துறை மூலம் நிவாரணத்தை நாடியிருக்கவில்லை என்பதற்கு எந்தவொரு திருப்திகரமான விளக்கமும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

பாக்குநீரிணையில் இலங்கை பக்கம் உள்ள மீன்வளம் கொண்ட பகுதியானது அடிக்கடி தமிழக மீனவருக்கும் இலங்கைக் கடற்படையினருக்கும் சச்சரவையேற்படுத்தும் இடமாக உருவாகியுள்ளது.இதன் விளைவாக இந்திய மீனவர்கள் பலரின் மரணத்துக்கு இந்த விடயம் இட்டுச் சென்றுள்ளது.

அண்மைய வருடங்களின்போது இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் கடுமையான சிக்கல்களையும் திருப்பங்களையும் ஆய்வு செய்வதற்கான யோசனையாக இது முன்வைக்கப்படவில்லை. ஆனால், ஒரு உண்மையை இங்கு கோடிட்டுக்காட்ட வேண்டியது அவசியமானதாகும். அயல் நாடொன்றில் ஏற்பட்டுவரும் உள்மட்ட விவகாரங்களில் இந்தியா எத்தகைய செல்வாக்கைச் செலுத்த முடியும் என்பது குறித்து அவதானிக்கக்கூடிய எல்லைகள் உள்ளன. ஆனால், 1983 இல் லோக்சபாவில் பிரதமர் இந்திரா காந்தி, இலங்கையானது இப்போது மற்றொரு நாடாக இல்லையென்று கூறியிருந்தார். இலங்கையின் ஸ்திரத்தன்மை தொடர்பாக மட்டுமன்றி தமிழர்களின் கௌரவம்,நலன்கள் தொடர்பாக முக்கியமான பங்குடைமைகளையும் இந்தியா கொண்டுள்ளது. இந்தப் பரிமாணத்தின் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் விடயத்தை சர்வதேசமயப்படுத்துவதில் தமிழர்களுக்கு புதுடில்லி உதவியளித்தது மட்டுமன்றி, பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு முன்னெடுக்கப்பட்டால் வெறுமனே மௌனமாக அவதானித்துக் கொண்டு தொடர்ந்தும் இந்தியா இருக்கப்போவதில்லையென்பதை கொழும்புக்கு தெளிவுபடுத்தியிருந்தது. 1987 மே இல் இந்திய விமானங்கள் யாழ்ப்பாணத்தில் உணவையும் மருந்துப் பொருட்களையும் வான்மார்க்கமாகப் போட்டபோது ஒருநாடு கூட இந்தியாவுக்கு எதிராக எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.

அத்தகைய செயற்பாட்டுத் திறனுடையதாக இந்தியாவின் கொள்கை அமைந்திருந்தது. ஆனால், 1987 முதல் பாக்கு நீரிணையின் ஊடாக அதிகளவு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையானது மிக மோசமான விதத்தில் மாற்றமடைந்தமை மிகவும் துன்பியலாகும். புலிகளுக்கு எதிரான யுத்தமானது நான்காவது ஈழப்போரின் இறுதிக்கட்டங்களில் தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிரான யுத்தமாக பரிமாணம் பெற்றிருந்தது.சுமார் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியா வெறுமனே அமைதியான அவதானியாக இருந்தது.அத்துடன், ஐ.நா. வில் இலங்கையை இந்தியா பிணையெடுத்திருந்தது. எமக்கு வெட்கமான விடயமாக ஐ.நா.வில் நாங்கள் சீனாவுடனும் ஜெயலலிதா ரஷ்யாவுடனும் கூட்டுச்சேர்ந்திருந்தோம். இவற்றின் அடிப்படையில் வரவேற்புக்குரிய அறிவிப்பானது இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையின் வடிவம் கெட்டுவிடுமேயானால் தமிழ்நாடு வெறுமனே சாட்சியமாகத் தொடர்ந்தும் இருக்காது என்ற உறுதிமொழியை வழங்குவதாகவுள்ளது.
நன்றி தினக்குரல்

8 மாவட்டங்களில் கடும் மழை,மண்சரிவு 32,774 பேர் பாதிப்பு; 343 வீடுகள் சேதம்


நாடளாவிய ரீதியில் எட்டுமாவட்டங்களில் பெய்த கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் நேற்று வரையிலும் எட்டுப் பேர் பலியானதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த இயற்கை அனர்த்தங்களினால் 8622 குடும்பங்களை சேர்ந்த 32 ஆயிரத்து 774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இயற்கை அனர்த்தங்களினால் எட்டு மாவட்டங்களிலும் 72 வீடுகள் முழுமையாக சேதமடைந்ததுடன் 343 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கொழும்பில் இடம்பெயர்ந்தவர்களில் 79 குடும்பங்களை சேர்ந்த 339 பேர் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் நிலையம் அறிவித்துள்ளது. கேகாலை, காலி,களுத்துறை, கொழும்பு, கம்பஹா, குருணாகல், இரத்தினபுரி, மற்றும் நுவரெலியா ஆகிய எட்டு மாவட்டங்களிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவரும், காலிமாவட்டத்தில் ஒருவரும், மின்னல் தாக்கம்,வெள்ளத்தில் விழுந்ததில் களுத்துறை மாவட்டத்தில் இருவரும் பலியாகியுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் 1670 குடும்பங்களை சேர்ந்த 4970 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 406 குடும்பங்களை சேர்ந்த 1286 பேரும், கொழும்பு மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் 4108 குடும்பங்களை சேர்ந்த 16174 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 2437 குடும்பங்களை சேர்ந்த 10341 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் மூன்றுபேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 79 குடும்பங்களை சேர்ந்த 339 பேரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உலருணவு பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் நிலையம் அறிவித்துள்ளது.
நன்றி தேனீ


தூத்துக்குடிகொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து இரு வாரங்களில் ஆரம்பம் 6 அடுக்குக் கொண்ட குளு குளு கப்பல் சேவையில்

01/06/2011
ship1தூத்துக்குடி: தூத்துக்குடிகொழும்புப் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்படுகிறது.இதன் மூலம் இந்தியா,இலங்கையிடையே கலை, பண்பாடு சுற்றுலா மேம்பாடு அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தென்தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று இக்கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க இந்தியஇலங்கை அரசுகள் அனுமதியளித்தன.இதற்காக தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கப்பல் பயணிகள் முனையம் அமைக்கப்பட்டது.மேலும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளைப் பரிசோதிப்பதற்காக சுங்கா இலாகா குடியுரிமைத் துறை சார்பில் தனித்தனி கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் 24 மணிநேரமும் இங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்.பயணிகளுக்கு மருத்துவம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

இக்கப்பல் போக்குவரத்தை கூட்டாக இயக்க இரு தனியார் நிறுவனங்களை மத்திய கப்பல் கழகம் தேர்வு செய்தது.இப்போக்குவரத்து மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பிக்கவிருந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்ததாலும் இதற்கான கப்பல் லிபிய கலவரத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்கச் சென்றதாலும் சேவை ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல் முடிந்து இக்கப்பல் வந்த நிலையில் இதற்கான வெள்ளோட்டம் மே 28 இல் நடந்தது.அன்று காலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இக்கப்பல் பணியாளர்களுடன் எட்டரை மணிநேரத்தில் கொழும்பு துறைமுகத்தைச் சென்றடைந்தது.அனுமதி கிடைத்தவுடன் அக்கப்பல் மீண்டும் அங்கிருந்த தூக்குக்குடி வரவுள்ளது.

வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடந்ததால் இக்கப்பல் போக்குவரத்தை ஜூன் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்க மத்திய கப்பல்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜூன் 11 இல் ஆரம்ப விழா நடத்தப்படலாம் எனக் கூறிய அவர்கள் அதற்கான அழைப்பிதழ்களும் தயாராகி வருவதாகக் கூறினர்.எனினும் இதுகுறித்து இவ்வார இறுதியில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.முதற்கட்டமாக வாரம் மூன்று முறையும் பின்னர் வாரத்தில் எல்லா நாட்களும் இக்கப்பல் இயக்கப்படும்.இதன் மூலம் இந்தியாஇலங்கை நாடுகளின் கலாசாரம், பண்பாடு,சுற்றுலா வளர்ச்சியடையும்.

ஆறு அடுக்குகளைக்கொண்ட குளுகுளு கப்பல்:

மொத்தம் ஆறு அடுக்குகளைக் கொண்ட முழுமையாக ஏசி வசதி செய்யப்பட்டுள்ள ஸ்கோட்டியா பிரின்ஸ் என்ற பெயரிலான இந்த கப்பலில் 1,200 பேர் வரை பயணம் செய்யலாம்.700 தனி கேபின்கள் இதில் உள்ளன.நான்கு பேர் ஒன்றாக சேர்ந்து தங்குவதற்கான அறைகள் உள்ளன.ஆறு உயிர்காக்கும் படகுகள் உள்ளன.பயணிகளின் பொதிகளை 300 தொன் வரை வைக்க இதில் இடமுள்ளது.இதுதவிர மேலும் பல நவீன வசதிகளைக்கொண்ட இக்கப்பலில் குறைந்தபட்சம் 2,500 ரூபாவிலிருந்து அதிகபட்சம் 14,000 ரூபா வரை பயணக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆயினும் கட்டணம் உள்ளிட்ட இதர விபரங்கள் குறித்து ஓரிரு நாளில் இறுதி முடிவு செய்து அறிவிக்கப்படவுள்ளது.

தினமலர்
நன்றி தினக்குரல்




ஓமந்தை வரை ரயில் சேவை நீடித்தும் வடபகுதி பயணிகள் வவுனியாவுக்கே வருகின்றனர்
01/06/2011
train
வடபகுதி ரயில் சேவையை போக்குவரத்து அமைச்சு வவுனியாவுக்கப்பால் ஓமந்தை ரயில் நிலையம் வரை நீடித்துள்ள போதிலும் வடபகுதிப் பயணிகள் வவுனியா ரயில் நிலையத்திற்கே வருகை தருகின்றனர்.

அதேபோல வவுனியா ரயில் நிலையத்திலிருந்தே வடபகுதிப் பயணிகளும் தமது ரயில் பயணத்தை ஆரம்பிக்கின்றனர். வவுனியா நகரைப்போல ஓமந்தையில் உணவுக் கடைகளோ ஏனைய வசதிகளோ இல்லை எனவும் அதனால் தாம் வவுனியா ரயில் நிலையத்திலேயே இறங்கி வடக்கின் ஏனைய பகுதிகளுக்கு பஸ்களில் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

1990 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பிக்க முன்பு ஓமந்தையில் சிறிய ரயில் நிலையமே இருந்ததாகவும் இங்கு யாழ்தேவி மற்றும் கடுகதி ரயில்கள் நிறுத்தப்படுவதில்லையெனவும் தெரிவித்தனர். அத்துடன், ஓமந்தையில் மக்கள் முழுமையாக மீளக்குடியேறவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்புகோட்டையிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் வவுனியாவுக்கான இரவு தபால் ரயில் அதிகாலை 2.30 மணியளவில் வவுனியாவை அடைகிறது. இதனால் பயணிகள் விடிந்த பின்னரே தமது சொந்த இடங்களுக்குச் செல்கின்றனர்.
நன்றி தினக்குரல்

கணவரை இழந்த இலங்கை தமிழ்ப் பெண்களுக்கு இந்தியா ரூ. 20 கோடி உதவி


கொழும்பு, ஜூன் 2: இலங்கையின் கிழக்குப் பகுதியில் விWIDOWSடுதலைப்புலிகளுடனான சண்டையின்போது கணவனை இழந்த பெண்களுக்கு இந்தியா சார்பில் ரூ. 20. 3 கோடி மதிப்பிலான உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்குமான சண்டை 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. அதற்கு முன்பு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த சண்டையில் கிழக்குப் பகுதியில் மட்டும் குறைந்தபட்சம் சுமார் 49 ஆயிரம் பெண்கள் கணவனை இழந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வட பகுதியில் சண்டையால் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சண்டையால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் விதவைகளுக்கு உதவ இந்தியா முன் வந்துள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் அசோக் கே. காந்தா, வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது: "போரால் கணவனை இழந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வழிவகை செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்த நிதி உதவித் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன் வாழ்வாதாரத்துக்கான வழிவகைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த உதவித் திட்டம் மிகவும் முக்கியமானது. இந்தத் திட்டம் அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும். கிழக்குப் பகுதியின் ஒட்டுமொத்த சமூக - பொருளாதார நிலையை மேம்படுத்த இந்தியா இந்த உதவிகளைச் செய்கிறது. இதன்படி மட்டக்களப்பில் சமுதாயப் பயிற்சி மையம் மற்றும் வர்த்தக மையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் இலங்கை அரசுடன் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த உதவித்திட்டம் இலங்கையின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். சண்டையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்தியா அளித்துவரும் மறு சீரமைப்புப் பணிகளுக்கான உதவிகளின் தொடர்ச்சியே இந்த உதவித் திட்டமாகும்' என்றார் அவர்.

நன்றி தேனீ

No comments: