மீதூண் விரும்பேல் -அ.முத்துலிங்கம்
.
                                                                        அனுஷ்யா என்பவர் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அது முக்கியமான, பயனுள்ள கடிதம் என்பதால் அதை மொழிபெயர்த்து சுருக்கி கீழே கொடுத்திருக்கிறேன்.

‘ஜேர்மனி வளர்ந்த நாடு, பொருளாதாரத்தில் மிகவும் வலுவான நாடு என்பது தெரிந்தது. அப்படியான நாட்டில் மக்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள் என்றுதான் நினைக்கிறோம். நான் கற்பதற்காக அங்கே போயிருந்தபோது அந்த எண்ணத்தை மாற்ற வேண்டி நேர்ந்தது.


ஒருநாள் ஹம்பேர்க் நகரில் நாங்கள் சிலர் ஓர் உணவகத்துக்கு சாப்பிடப்  போனோம். மேசைகளில் உட்கார்ந்து சாப்பிட்டவர்களுக்கு பரிசாரகர்கள் அவ்வப்போது உணவு பரிமாறிக்கொண்டிருந்தார்கள். எங்கள் பக்கத்து மேசையில் சில முதிய பெண்கள் அமர்ந்து அமைதியாக உண்டனர். நாங்கள் பசியோடு இருந்ததனால் பலவிதமான உணவு வகைகளுக்கும் ஆணை கொடுத்தோம். பக்கத்து மேசைப் பெண்கள் எங்களை அவதானித்தபடியே உணவருந்தினர். நாங்கள் சாப்பிட்டு முடித்தபோது கணிசமான அளவு உணவு மீந்துவிட்டது. உணவுக்கான கட்டணத்தை கட்டிவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.

ஆனால் பின்னுக்கிருந்து சத்தம் எழுந்தது. பக்கத்து மேசை மூதாட்டி நாங்கள் உணவை மிச்சம் விட்டதற்காக முறைப்பாடு வைத்ததுதான் அந்தச் சத்தம். எங்கள் நண்பர் ‘நாங்கள் முழு உணவுக்கும் பணம் கட்டிவிட்டோம். இது உங்கள் பிரச்சினை இல்லை’ என்று கடுமையாகச் சொன்னர். மூதாட்டிக்கு கோபம் உச்சமாகிவிட்டது. தன் செல்பேசியை ஆத்திரத்துடன் திறந்து ஏதோ அவர்கள் மொழியில் பேசினார். அடுத்த நிமிடம் சீருடை அணிந்த சமூக நலன் அதிகாரி எங்களை நோக்கி வந்தார். மீந்து போன உணவை பார்வையிட்டுவிட்டு 50 மார்க் தண்டம் விதித்தார். நாங்கள் திகைத்துப்போய் பணத்தை கட்டிவிட்டு அமைதியாக வெளியேறினோம். அப்பொழுது அந்த அதிகாரி சொன்னார். ‘ உங்களால் சாப்பிட முடிந்ததை மட்டுமே ஓடர் பண்ணுங்கள். உணவுக்கு கட்டும் பணம் உங்களுடையதுதான். ஆனால் அந்த உணவை தயாரிக்கத் தேவையான  வளங்கள் ஒரு சமுதாயத்துக்கு சொந்தம். அதை விரயம் செய்ய தனி ஒருவருக்கு உரிமை கிடையாது. இந்த உலகத்தில் உணவில்லாமல் பட்டினிகிடப்போர் எண்ணிக்கை பெரியது.’

ஜேர்மனியில் நாங்கள் படித்த அந்தப் பாடம் முக்கியமானது. அந்த அதிகாரி சொன்ன அறிவுரையும் மறக்கமுடியாதது. ஆழ்ந்து சிந்திக்கவேண்டியது. ஒரு செல்வந்த நாட்டில் வாழும் மூதாட்டிக்கு இருந்த தார்மீக உணர்வு எங்களிடம் இருக்கவில்லை. நாங்கள் வெட்கப்பட்டோம்.’

கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மீதி உணவை எடுத்துச் சென்று வீட்டிலே சாப்பிடலாம். இதிலே ஒருவித இழிவும் இல்லை. சேவகர்களே வந்து ’அருமையான உணவு வீணாகப் போகிறது, வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள்’ எனக் கூறி வாடிக்கையாளரின் கூச்சத்தை போக்குவார்கள். ஆனால் வளரும் நாடுகளில் இப்படிச் செய்வதை வெட்கக்கேடாக கருதுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அதிக உணவுக்கு ஆணை கொடுத்து மிச்சம் விடுவது ஒரு நாகரிகமாகக் கருதப்படுகிறது. இது அந்தஸ்தின் அறிகுறி. உலகத்தின் அனைத்து நாடுகளும் உணவை விரயமாக்குபவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதி செய்தால் அது வரவேற்கத்தக்கது.

’மீதூண் விரும்பேல்’ என்றார் ஒளவையார். அதிகமாக உண்பதற்கு ஆசைப்படாதே. தேவைக்கு அதிகமானதை நீ அனுபவித்தால் அது இன்னொருவரிடம் இருந்து திருடியது.

அண்டன் செக்கோவ் எழுதிய கூஸ்பெர்ரிஸ் சிறுகதையை படிக்கவேண்டும்.

Nantri: amuttu.net

No comments: