பேரப்பிள்ளைகள் தினத்தில் அருந்திய சிறுகையழாவிய கூழ்

.
                                                                                                     -பத்மினி சோதிராஜா-


சென்ற ஞாயிற்றுக் கிழமை (29.5.2011) அன்று, நியுசவுத் வேல்ஸ் மூத்த பிரசைகள் சங்கத்தினரின் வருடாந்தப் போரப்பிள்ளைகள் தினக் கொண்டாட்டம் ஹோம்புஷ் ஆண்கள் உயர் பாடசாலை மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. கொண்டாட்டம் என்றால் நமக்குக் கொண்டாட்டந்தானே. அதுவும் பேரன் பேத்தியருடைய கொண்டாட்டம் மேலும் சிறப்பான கொண்டாட்டம். விழாவுக்கு சங்கத்தின் தலைவர் சிவா பசுபதியவர்கள் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக ஸ்றத்பீல்ட் நகரபிதாவும் அவரது துணைவியாரும் வந்திருந்தனர். விழா நிகழ்ச்சிகள் மாலை 5.30 மணிக்குத் தொடங்க ஏற்பாடாகியிருந்தது.


குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு ஐந்து நிமிடங்கள் பிந்தி நிகழ்ச்சிகள் தொடங்கியது பெரும் குறையாகத் தோன்றவில்லை. அவுஸ்திரேலிய மண்ணில் பிறந்து வளர்ந்தாலும், தாரணியில் தமிழன் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை என்ற உணர்வை ஊட்டியது அன்றைய பேரப்பிள்ளைகளின் நிகழ்வுகள். மூத்தபிரசைகள் சங்கத்தினர் விளக்கேற்றினர் ஆரம்பமாக.


தமிழ் மொழியை வாழ்த்திப் பாடித் தேசிய கீதமும் இசைத்தனர் சின்னஞ் சிறு மழலைகள். நடனமாடி வரவேற்றனர் இரு பேரச் செல்விகள். பிஞ்சு விரல்கள் மீட்டின வீணையில் நாதம். புல்லாங்குழல் இசை, மழலைப் பேச்சில் கவிதை மழை. அனைத்தும் தமிழ் மணம் வீசின. அதை நுகர்ந்த ஒவ்வொரு நொடியும், நாங்கள் எங்கள் இதயங்களைத் துடைத்துக் கொண்டோம்.  

நிகழ்வுக்கு மகுடம் வைத்தாற் போல் அமைந்திருந்தது ஒரு பேரத் தமிழ்ச் சிறுவன் 13 வயதில் எழுதிய“Moral Stories From Thirukkural” ன்ற சிறுவர் நு}ல் வெளியீடு. இந்தச் சிறுவன் சுதந்திரமாக விளையாடித்திரியும் அவுஸ்திரேலிய மண்ணில் பிறந்து வளர்ந்தவன். அவன் 10 குறட்பாக்களை வைத்துக் குழந்தைகளின் மனங்களைக் கவரக்கூடிய விதத்தில் வண்ணப் படங்களையும் சேர்த்து “காலத்துக்கேற்றபடி நாம் மாறவேண்டும்” என்று திருவள்ளுவர் கூறியதற்கு அமைய அருமைப் பேரன் எழதியுள்ளான். வண்ணப் படங்களை வரைய சீன இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவியை ஏற்படுத்தியிருப்பது இந்நாட்டின் பல்லினக் கலாசாரத்தை ஆதரிக்கும் முயற்சியாக எனக்குத் தோன்றியது. கதைகளும் படங்களும் கால ஓட்டத்துக்கு ஏற்றபடி படைக்கப் பட்டிருக்கின்றன. இந்த நு}ல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரை உயிர்ப்பித்திருக்கிறது.

கொண்டாட்டத்தில் 2010- 2011 ம் ஆண்டில் பாடசாலைத் தேர்வில் அதி உயர் புள்ளிகளைப் பெற்ற திறமைசாலிகளுக்கும், கலாச்சார நிகழ்வுகளில் பங்குபற்றிய பேரப்பிள்ளைகளுக்கும் பிரதம விருந்தினர் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்தர். தன்னுடைய தாய் மொழியின் மீதும், தாய் நாட்டின் மீதும், கலை கலாச்சாரத்தின் மீதும், இனத்தின் மீதும் தன்னுடைய சமயத்தின் மீதும் பற்றும் மரியாதையும் குறைந்து போகின்ற இந்தக் கால கட்டத்தில், அன்றைய நிகழ்வு பெரியதோர் மனநிறைவைத் தந்தது, சோர்ந்து போன மனங்களுக்கு. தமிழ்ப் பற்றையும், கலை கலாச்சாரத்தையும் இந்தமண்ணில் பிறந்து வளர்ந்த நமது பேரக் குழந்தைகள் குழைத்து ஊட்டினார்கள். கண்டு களித்தோம். உண்டு மகிழ்ந்தோம்.

நமது பேரக் குழந்தைகளின் திறமைகள் வெளிவரச் சந்தர்ப்பங்கள் வேண்டும். அதனைப் பலரும் அறிவதற்கு ஒரு மேடை வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்த தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தினருக்கு நன்றி. பணி தொடர வாழ்த்துக்கள்.
                               


No comments: