பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான அறிவுரைகள்

பாகம் 1
இளைஞர்களே! யுவதிகளே! இவ்வுலகின் வருங்காலக் குடிமக்களே!

ஓழுக்கம்

இவ்வுலகின் எதிர்காலம் - நன்மையோ அன்றித் தீமையோ – எதுவானலும் உங்களது நடத்தையைப் பொறுத்தே அமையப்போகிறது. இவ்வுலகம், பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், அமைதியாகவும், வளமாகவும், இருக்க வேண்டுமானால் உங்கள் நடத்தையும், ஒழுக்கமும் நல்லதாக இருக்கவேண்டும். இவ்வுலகத்திற்குத் தற்போதையத் தேவை, ஆடம்பரமும், உலகியல் சுகங்களும் அல்ல, மேன்மையான குணங்களும், நல்ஓழுக்கமும் நிறைந்த ஆடவரும், பெண்டிரும் தான். சரியான வழி முறைகளில், இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் நடவடிக்கைகள் அமையாமல் போகுமானால் நாடு துண்டு துண்டாகச் சிதறிவிடும்.

சத்யம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப் பின்பற்றி நடப்பவனே உண்மையான மனிதன். சத்யம் என்பது நீதி, தர்மம் என்பது ரீதி, தியாகம் என்பது க்யாதி. இவை மூன்றும் சேர்ந்தே மானவஜாதி. (மனிதகுலம்). இந்த மனிதகுலம் சத்யத்திலிருந்து உருவாயிற்று.

இந்தப்படைப்பு அனைத்தும் சத்தியத்திலிருந்தே பிறந்து உருவாகிக் கடைசியில் சத்தியத்திலேயே ஐக்கியமாகிறது. சத்யம் இல்லாத இடமே இவ்வுலகில் இல்லை. இந்தத் தூய கலப்பற்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

இதை ஆதாரமாகக் கொண்டே, பண்டைய முனிவரும், மகரிஷிகளும் ஸத்யம் ப்ருயாத், ப்ரியம் ப்ருயாத், ந ப்ருயாத் சத்யமப்ரியம் (உண்மையே பேசு, இனிமையாகப் பேசு, மனதிற்கு ரசிக்காத உண்மையைப் பேசாதே)

இங்கே ஸத்தியம் ப்ருயாத் என்பது நேர்மை என்னும் குணநலனைக் குறிப்பிடுகிறது.

மானவஜாதி (மனிதகுலம்) நீதி (நேர்மை, ஓழுக்கம்) இன்றி வாழமுடியாது.
ஸத்யம்

அநியாயம், பொய்மை, அதர்மம், இவற்றால் எல்லாம் சூழப்பட்டு இன்றைய உலகம் தத்தளிக்கிறது. சரந்துவரும் மனித உயர்குண நலன்களை மீட்டு வந்து நிலைநாட்ட இளைஞர்களாலும், யுவதிகளாலும் மட்டுமே முடியும், மனிதன் நேர்மையைப் போற்றி அதன் வழி நடக்கும் போதுதான், சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவை, சமுதாயத்தில் நிலவும். நேர்மையை தன்வழி முறையாகக் கொள்ளவேண்டுமானால் மனிதன் சத்யத்தை ஒட்டி நடக்க வேண்டும். அதனால்தான் ஸத்யம் ப்ருயாத் எனக்கூறுகிறார்கள். இதுதான் மனிதனின் தலையாய கடமை. இரண்டாவது, ப்ரியம் ப்ருயாத் (இனிமையாகப் பேசுங்கள்). இது தர்மம் என்னும் குணநலனைக் குறிக்கிறது. இதைத்தான் அடிப்படையாகக் கொண்டு பகவத்கீதை

அனுத்வேக கரம் வாக்யம் ஸத்யம்

ப்ரிய ஹிதம் சயத்

(சத்யத்தை இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள். உங்களது பேச்சு, மற்றவர்களது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தூண்டிவிடுவதாக அமையக்கூடாது) மூன்றாவது ந ப்ருயாத் ஸத்யம் ப்ரியம், என்பது ஆன்மீக குணநலன்களை குறிப்பிடுகிறது. ஆன்மீகப் பாதையில் செல்ல இந்தக் குணநலன்களை மனிதன் கைக்கொள்ள வேண்டும்.

ஹிமாசலம்

இந்தியாவின் வடஎல்லையாக இருப்பது ஹிமாசலம் என்கிற இமயமலை. ஹிமாசலம் என்பதற்கு உட்புற அர்த்தம் என்ன? ஹிமா என்றால் பனி, அல்லது பனிக்கட்டி. அது து}ய்மைக்கும், அமைதிக்கும் எடுத்துக் காட்டாய் இருக்கிறது. அசல் என்பது நிலையான, சலனமற்ற என்பது பொருள். ஆகவே ஹிமாசலம் என்பது தூய்மை, அமைதி, நிலையான ஒன்று என்பனவற்றைக் குறிக்கின்றது. வற்றாத, ஜீவ நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவை, மனித உடலில் ஓடும் இடைவிடாத இரத்த ஓட்டத்தை உருவாகப்படுத்துகின்றன. இராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம் போன்ற இதிகாசங்கள், மனித இயல்பகளின் சாரத்தை வெளிப்படுத்துகின்றன.

பாரதநாட்டின் ஆதர்சங்களை மதித்து அதன் வழி நடப்பவனைத் தான், உண்மையான பாரத நாட்டவன் என அழைக்க முடியும். பாரதம் என்ற வார்த்தையில் பா என்பது பாவத்தையும் (உள்ளுணர்வுகளையும்) ரா என்பது ராகத்தையும், தா என்பது தாளத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. பாவம், ராகம், தாளம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இறைவனை வழிபடுபவர்கள் பாரத நாட்டவர் எனப்பொருள் கொள்ளலாம். பா  என்பது ஒளிப்பெருக்கு, ஜாஜ்வல்யம் என்னும் பொருளிலும் உணரப்படலாம். அதனை வைத்து பாரத நாட்டவர் தெய்வீகப் பேரொளிப் பெருக்கத்தைத் தேடிச் செல்பவர் எனவும் கொள்ளலாம். நீங்கள் பாரத தேசத்தவர் என்று பெருமை கொள்ளலாம். இதனை விடச் சிறந்த தகுதி வேறெதும் இல்லை. பாரதநாடு மட்டும் தான் இவ்வுலகம் முழுமைக்கும் ஆன்மீக ஞானத்தைப் பரவச்செய்கிறது. அது மட்டுமல்லாமல், இவ்வுலக மாந்தர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறது. லோகாஸ் ஸமஸ்தா ஸீகினோ பவந்து (இந்த உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்) எனவும் வாழ்த்துகிறது.

ஆத்மதத்துவம்

நீங்கள் அனைவரும் ஒன்றே. எந்த தேசத்தைச் சேர்ந்தவராயினும் சரி, பல்புகள் வேறானாலும், அவற்றினுள் பாயும் மின்சாரம் ஒன்றே. அதைப்போலவே, நாடுகள், உடல்கள், உணர்வுகள் இவையெல்லாம் வேறுவேறாயினும், ஆத்ம தத்துவம் மட்டும் அனைத்திலும் ஒன்றே. ஆகவே ஜாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் பெயரால் வேறுபாடுகளைத் துறந்து, ஒற்றுமையின் செய்தியை எல்லோரிடத்தும் பரவச் செய்யுங்கள்.

நாடுகள் பல, ஆயினும் மண் ஒன்றே!

நகைகள் பல, ஆயினும் தங்கம் ஒன்றே!

நட்சத்திரங்கள் பல, ஆயினும் வானம் ஒன்றே!

பசுக்கள் பல, ஆயினும் பால் ஒன்றே!

உடல்கள் பல, ஆயினும் மூச்சு ஒன்றே!

இவ்வாறு அனைத்து உயிரனங்களிலும் ஒற்றுமை கண்டு, நீங்கள் சேவை புரியும் போதுதான் ஆனந்தம் அனுபவமாகிறது.

நீங்கள் அன்பிலேயே பிறந்தீர்கள். அன்பிலேயே வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள். அன்பிலேயே ஐக்யமாகிறீர்கள். பஞ்ச பூதங்கள், சுயநலமற்ற தன்மைக்கு முழுமையான வடிவங்கள். சூரியன், சிருஷ்டிக்கப் பட்ட உயிரினங்களுக்க ஒளியும், வெப்பமும், வாழ்வும் தந்து போஷிக்கிறது. மரங்கள் கரியமிலவாயுவைத் தன்னுள்ளே ஏற்று மனித வாழ்க்கைக்குத் தேவையான பிராணவாயுவைத் தருகின்றன. தாய் போன்ற மண்ணோ, பொறுமைக்கும், தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாய் பாடம் போதிக்கிறது. எந்தவிதமான பிரதியபகாரமும் எதிர்பாராமல் இவை மனித குலத்துக்குத் தொண்டாற்றுகின்றன. அன்பிற்கு சிறந்த உதாரணம் வேறெதுவும் இல்லை. இயற்கையில் பிறந்து, இயற்கையினாலேயே போற்றிப் பாதுகாக்கப்படும் மனிதன், இயற்கை வெளிப்படுத்தும், இத்தகைய நற்குணங்களைத் தன்னகத்தே கொள்ளாமல், சுயநலமும், சுயலாபமும் கொண்ட வாழ்க்கை வாழ்வது மிகவும் அவமானகரமானது. இளைய தலை முறையினர் சுயநலத்தையும், சுயலாபத்தையும் ஒரு சிறிய துளி கூட மிச்சமிராமல் வேரோடு களைய வேண்டும்.

தொடரும் ......

No comments: