திருக்குறள் நீதிக்கதைகள் - இலட்சியவாதி கபிலன் மகேசன்

.

புதுமையானதொரு புத்தக வெளியீடு சிட்னி ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலையிலே சென்ற ஞாயிறு மாலை மே 29 ம்   நாள் 2011 மிகவும் சிறப்பாக நடந்தேறியுள்ளது புதுமை -ஏனெனில் நூலாசிரியர் பதினைந்தே வயது நிரம்பிய கபிலன் மகேசன்

கபிலனின் Moral Stories From Thirukkural    என்னும்  ஆங்கில நூலை வாசித்த போது  எப்படி இச்சிறுவனால் இவ்வளவு ஆழமாகச் சிந்தித்து எழுத 
முடிந்துள்ளது என வியப்பு ஏற்படுகிறது!-  கபிலன் இந்நூலை முதன் முதலில் எழுதத் தொடங்கியபோது அவருக்குப் பன்னிரண்டு வயதுதான் என்பதை அறிந்தபோது மேலும்  பெரு வியப்பு ஏற்படுகிறது!

காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்றவகையில் கபிலன் இதனை ஆங்கிலத்தில் எழுதியது மிகவும் பொருத்தம்.

சிறந்த கல்விமானான தனது பாட்டனார் திரு மகேசன் அவர்களாலேயே திருக்குறளைக் கற்பதில் சிறு வயது முதலே தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாக  நூலின் முகப்பில் தன்னுரையாக கபிலன் மிகவும் அடக்கத்துடன்  கூறுகிறார்.
எல்லாச்சிறுவர்களையும் போல அவர் திருக்குறளைக் கற்றதோடு நின்று விடவில்லை ---அவருடைய சிந்தனையில் அன்றாடம் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை குறள் கூறும்  கருத்துகளுடன் தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிறது -தான் பார்த்து அனுபவித்தவற்றை  அழகிய ஆங்கிலத்தில் கதைகளாக வடிக்கவும் தெரிவதுதான் சிறப்பு !
பத்துக்குறட்பாக்களை தெரிந்து பத்துக் கதைகளிலே தருகிறார்
அவருடையகதைகூறும் திறமையும் ஆங்கிலப்புலமையும் அக்கதைகளிலே
அவர் காட்டும் ஆழமான மனிதநேயப்பண்புகளும்  வாசகரைப் பிரமிக்க வைக்கின்றன. 
நூலை விரித்தவுடனே முதலாவது கதையே மனதில் நல்ல சிந்தனையை விதைத்து விடுகிறது 
இரு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் , மழை பெய்யத்தொடங்கவே விளையாட்டு பாதியில் நின்றுவிடுகிறது 
இதனால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் மனநிலையையும்  நீரின் இன்றியமையாமையை விளக்கும் நண்பனையும் பார்க்கிறோம் 
இவர்கள் இருவரின் உரையாடல் வழி கதை நகர்கிறது --மழை ஓய்ந்ததும் சிறுவர் மீண்டும் விளையாடி மகிழ்ந்து 
தாகம் தீர நீர் அருந்தி  'நீரின்றி அமையாது உலகு''என்று உணர்வதுபோலக் கதையை முடித்திருப்பது கபிலனின் ஆழமான பார்வை

அன்பு நட்பு இன்சொல் ஒற்றுமை நேர்மை சுயநலமின்மை மற்றும் ஆசை அவா அழுக்காறு போன்றவற்றின் கேடு எனத் தொடரும் நீதிக்கதைகள்  எல்லாவற்றிலும் மனிதநேயமே அடிநாதமாக ஒலிப்பதைப் பார்க்கலாம்

கற்க கசடறக் கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக

என்னும் குறள் எம்மில் பலருக்கும் மனப்பாடம் -ஆனால் நாம் அப்படி வாழ்கிறோமா ?

நமது அன்றாட வாழ்வில் நாம் கற்பதற்கும்  வாழ்வதற்கும்  தொடர்பில்லாமல் இருப்பதை அனுபவத்தில் பார்க்கிறோம்
பெரியவர்கள் ஏன் தவறாக நடக்கிறார்கள் --என்பது சிறுவர்களின் மனதிலே  குழப்பத்தை ஏற்படுத்துகிறது
இதற்கு விடையைக் கபிலன் தருகிறார் --ஓர் உயிரைக்காப்பாற்றும் கடமையிலிருந்து தவறும் வைத்தியரான தனது தந்தையைக் கண்டித்துத் திருத்தும் சிறுமியின் செய்கை மனதிலே நிற்கும் ஒரு கதை.

இந்நூலிலுள்ள கதைகள் பலவும் மாணவர்களின் பாடசாலை வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி எழுதியிருப்பது கபிலனின் கூர்மையான அவதானிப்பைக் காட்டுகிறது --மாணவர் ஆசிரியரோடு மியூசியம் பார்க்கப் போவது நீச்சல் போட்டி மற்றும் பாடசாலையில் நடக்கும் உதைபந்தாட்டப்போட்டி எனக் கதைகளில் காட்சிகள் விரிகின்றன -பொறாமை போட்டிமனப்பான்மை கற்றலில் கேட்டலின் சிறப்பு
என்பவற்றை விளக்கும் குறள் பாக்களை தேர்ந்து நிகழ்வுகளை பொருத்தமாக வர்ணிக்கிறார் கபிலன்.
ஒரு சிறந்த வானொலி ஒலிபரப்பு வர்ணனையாளன் போல உதைபந்தாட்டத்தை விறுவிறுப்பாக வர்ணிக்கும் போது அந்தக்காட்சியை நம்கண்முன்னே கொண்டுவந்துவிடும்  கபிலனின் திறமை  பிரமிக்க வைக்கின்றது !!!!

திருவள்ளுவரின் கருத்துகள் எக்காலத்துக்கும் எச்சமூகத்துக்கும் பொதுவானவை -எந்த இலட்சியத்துடன் வள்ளுவர் குறளை எழுதினாரோ கபிலனும் அந்த வள்ளுவ தத்துவத்தின் வழியிலே ''விளையும் பயிரை முளையிலே தெரியும் 'என்பதற்கிணங்க ஓர் இலட்சியவாதியாக வளர்ந்து வருவது மனநிறைவைத்தருகிறது

இரண்டு கதைகளிலே தொலைந்துபோனவரின் பணத்தைக் கண்டெடுத்தவர் அதை உரியவரிடம் சேர்ப்பது போல வருவதை சற்றே மாற்றி எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது -ஒரு சிறுவனின் கன்னிமுயற்சியில் குறை காணும் நோக்குடன் இங்கு கூறப்படவில்லை --மிகவும் அவதானத்துடன் இந்நூல் எழுதப்பட்டிருப்பதால் கபிலன் இதனையும் கருத்திற் கொண்டிருக்கலாம் என்னும் நல்ல நோக்கத்துடனே கூறப்படுகிறது.

பொருத்தமான படங்களை வரைந்துள்ள ரோஸ் லாஓ  என்னும் மாணவியின் கைவண்ணம் வியக்க வைக்கிறது. சந்தர்ப்பத்துக்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் இவற்றை சிந்தித்து செயல்படுத்தியிருக்கிறார்.

பேராசிரியர் கலாநிதி ரவீந்திரராஜா அவர்களின் முன்னுரை நூலுக்கு மேலும் சிறப்பளிக்கிறது திருக்குறளின் பெருமையை சுருக்கமாகவும் ஆழமாகவும் கூறியதோடு கபிலனின் முதிர்ச்சியான பார்வையையும் பாராட்டுகிறார்.
 
வே சு ஐயர் அவர்களின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பில் அமைந்த குறட்பாக்களை ஒவ்வொரு கதையின் தொடக்கத்திலும் -வாசகர் நலன் கருதி கபிலன் தந்திருப்பதும் நல்ல முயற்சி.

இந்நூலை வடிவமைத்த ஞானம் ஆர்ட்ஸ் அச்சகத்தருக்கு எமது பாராட்டுகள் மேலை நாட்டு ஆங்கிலமொழியிலமைந்த சிறுவர் நூல்களைப்போல் நல்ல அட்டையில் அழகாக அச்சிட்டுள்ளார்கள்

இவ்வேளையில்  திரு மகேசன் அவர்களைப்பற்றியும் கூறுவது எமது கடமை தனது பேரனான கபிலனுக்கு  நல்லதோர் ஆசானாக  அவரின் எழுத்தாற்றலுக்கு வித்திட்ட  திரு மகேசன் அவர்கள்  இலங்கையிலும் தான் இன்று வாழும் அவுஸ்திரேலிய நாட்டிலும் பல சிறுவர்களுக்கும் ''வானொலி மாமாவாகவும் ''  நல்ல வழிகாட்டியாகவும்  விளங்கி  ஆற்றல் மிக்க எழுத்தாளர்களையும் பேச்சாளர்களையும் நாடகக் கலைஞர்களையும்  இன்றும் உருவாக்கிவருகிறார் என்பது பெரும் பேறு!

இன்று எமது மூன்றாம்  தலைமுறையினர்   தங்கள் வேர்களை மறக்காது தாம் வாழும் நாடுகளின் சிறந்த பண்புகளையும் இணைத்துக்கொண்டு நேர்மையுடனும்  பண்புடனும்  தமது வாழ்வை அமைத்துக்கொண்டு நல்லதொரு வாழ்வுக்கு அடித்தளமிடுகிறார்கள் என்பது பெருமையாக இருக்கிறது

 இந்த வரிசையில் கபிலனுக்கு எமது நல்வாழ்த்துகள்

திருமதி பராசக்தி சுந்தரலிங்கம்  


2 comments:

kalai said...

கபிலனுக்கு எனது வாழ்த்துகள்

திருநந்தகுமார் said...

கபிலன் மகேசனின் திருக்குறள் கதைகள் ஆங்கில நூல் வெளியீடு செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சி.
திருக்குறளை எமது இளைய தலைமுறை படித்தும், புரிந்தும் வாழ்வியலோடு இணைக்க இது உதவும் என நம்புகிறேன். மெல்பேர்னில் இடம்பெற்ற தமிழ் எழுத்தாளர் விழாவில் பங்குபற்றிய மாணவர்களுக்கு கபிலனின் திருக்குறள் நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. திரு முருகபூபதி அவர்கள் வேண்டிய நூல்களைத் தருவித்திருந்தார். சிறுவயது முதல் கபிலனுக்கு தமிழ் அறிவை ஊட்டுவதில் தளராது செயற்பட்ட மகேசன் ஐயாவிற்கும் எனது வணக்கங்கள். தமிழ்ப் பணி தொடரட்டும்.