மீனும் மீனும் பேசிக் கொண்டன - வித்யாசாகர்

“கரையோரம் சென்று மனிதனென்ன செய்கிறானென்று பார்த்து வருவோம் வா..”ஒரு மீன் சொன்னது

“வேண்டாம் வேண்டாம்..மனிதன் நம்மை கொன்று விடுவான்” மற்றொரு மீன் சொன்னது

“அசடே இன்னும் உனக்கு மனிதரை பற்றி புரிய வில்லையா” அந்த மீன் கேட்டது

“உனக்கென்ன புரிந்தது பெரூசாசாசாசா..சொல்லேன் பாப்போம்..” மற்ற மீன் கேட்டது..

“மனிதன் எதையும் இருக்கும் இடத்தில் தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்”அந்த மீன் சொன்னது


“அப்படியா!!”

“அப்படித் தான். நீ வேணும்னா என் கூட வந்து பாரேன்..”

இரண்டு மீன்களும் கரைக்கு வர அதை தொடர்ந்து ஒரு மீன்களின் கூட்டமே கரை நோக்கி ஓட.. வலைஎடுத்துக் கொண்டு மீனவர்கள் மீன் பிடிக்க ஆழக் கடல் நோக்கி சென்றார்கள்.

கடவுள் மேலிருந்து இவற்றை பார்த்து -

“மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான் மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்” என மீன்களின் காதுகளில் கிசுகிசுத்து சிரித்தும் கொண்டார்..

(மீனும் மீனும் இன்னும் நிறைய பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டும்
கரையில் இருந்து கடக்க, வழியில் வந்த மீனவர்களிடம் சிக்கி, சந்தைக்கு வந்து, பணம் தந்து வாங்கி, அறுபட்டு, வறு பட்டு, அவைகளின் வாழ்க்கை அழகு புரியாமல், நீந்தும் அழகு புரியாமல், அவைகளின் வாழ்வின் அர்த்தம் புரியாமல், நாக்கு தட்டி தட்டி தின்று விட்டு ஏப்பம் விடும் நேரத்தில் மீன் கவிதை படிப்பது வேறு சோகமான கதை!)


2
இரண்டு மீன்கள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டே ஆழ்கடல் நோக்கி சென்றது.


அந்த இரண்டு மீன்களில் பெரிய மீன் சொன்னது…

“ஏய் அங்க நிறைய பூச்சிங்க எல்லாம் தின்ன கிடைக்கும் வா அங்கே போகலாம்”

“ஐய.. நீ பூச்சிங்கள்லாம் தின்னுவியா??” சின்ன மீன் கேட்டது.

“ஏன் உனக்கு இறைச்சி பிடிக்காதா ” பெரிய மீன் கேட்டது

“பிடிச்சா எல்லாத்தையும் தின்னுட்றதா.. ” சின்ன மீன் சலித்துக் கொண்டது.

“கொன்றால் பாவம் தின்றால் போகும்” பெரிய மீன் சொன்னது.

“யார் மனுஷன் சொன்னானா..? சின்ன மீன் கேட்டது.

“எப்படிகண்டு பிடிச்ச…” பெரிய மீன் ஆச்சர்யப் பட்டது

“இப்படியெல்லாம் அசிங்கமா மனுஷன் தான் சிந்திப்பான்” சின்ன மீன் சிரித்தது.

“இவரு பெரிய ராஜா மீனு; இவருக்கு மட்டும் எல்லாம் தெரியும்னு நினைப்போ” பெரிய மீன் கோபமுற்றது.

“எனக்கு ஒன்னும் தெரியாது, ஆனா பிற உயிர்களை கொண்ணா துடிக்கிதுல்ல; அது தெரியும்” சின்ன மீன் வருத்தப் பட்டது.

“தின்னா துடிக்கும் தான், தாவரம் தின்னா அதுக்கு மட்டும் துடிக்காதா, அதுவும் உயிரு தானே” பெரிய மீன் தன் தவறை கேள்விக்குள் மறைக்கப் பார்த்தது.

“அதுவும் உயிரு தான், ஆனா ஒரு மரத்தை வெட்டினா இன்னொரு மரம் துடிக்குமா? ஒரு காயை பறித்து இரண்டா வெட்டினா; பக்கத்துல இருக்க இன்னொரு காய் வந்து ஐயோ வெட்டாத அது பாவம்னு சொல்லுமா? வெட்டாதேன்னு அழுவுமா?” சின்ன மீன் கேள்வியில் ஜாலம் செய்தது.

“அதலாம் சொல்லும். நமக்குத் தான் அதலாம் புரியறதில்ல, தப்புன்னா எல்லாம் தப்பு தான்” பெரிய மீன் உண்மையும் வீம்புமாய் விளம்பியது.

” அப்போ சரின்னா எல்லாம் சரியா???” சின்ன மீன் விகல்பமாய் கேட்டது.

“வேற என்னவாம்..??” பெரிய மீன் கர்வத்தை கேள்வியில் எழுப்பியது.

“சொல்றேன் கேளு, இயற்கையா எதலாம் இயங்குதோ, ‘அதுக்கெல்லாம் உயிரிருக்கு; எதுக்கெல்லாம் உயிருருக்கோ, ‘அதெல்லாமே நம்மிடம் பேசவும்; நாம் பேசுவதை கேட்கவும் சக்தி கொண்டுதானிருக்கு. ஆனாலும், நாம வாழும் வாழ்க்கை ஒரு சார்பு வாழ்க்கை. தவளை பூச்சியை தின்னும், பாம்பு தவளையை தின்னும், கீறி பாம்பை தின்னும், கீறிய வேற எதனா தின்னும் இப்படி ஒன்ன சார்ந்து ஒன்னு இருக்கு” சின்ன மீன் சமதர்மம் போதிக்க முயற்சித்தது.

“அடி சக்கைனானாம், அப்படி வா வழிக்கு. நானும் அதை தானே சொன்னேன் ‘ஒரு உயிரை தின்னு தான் இன்னொரு உயிர் வாழுது” பெரிய மீன் தன் கேள்விக்கான வட்டத்திலிருந்து வெளி வரவேயில்லை.

“அசடு.. அசடு.. அது மிருக வாழ்க்கை. மிருகங்களுக்கு பாம்புக்கும் பல்லிக்கும் பகுத்தாராய முடியாது, கிடைக்கறத தின்னும். நீ என்ன மிருகமா..? மனுஷன் தானே? உனக்கு ஒரு வரைமுறை வேணாமா..? இருக்கறதெல்லாம் அடிச்சி தின்னா ‘நாளைக்கு மனுஷன் தான் மிஞ்சுவான்;தின்னுவியா???” சின்ன மீன் கேட்டு நிறுத்தியது.

“ஆமா.. ஆளப் பாரேன்.. உனக்கென்னா பெரிய்ய்ய்ய…. மனுசன்னு நினைப்போ…?” பெரிய மீன் கேலிக் கூத்தடிக்க

“சூ.. சூ.. சத்தம் போடாத.., மனுசங்க நாம் பேசுறத கேட்டுன்ருக்காங்க; அதான் கொஞ்சம் கூட்டி சொன்னேன், அங்கே பாரு ஒரு ஆளு வலையை எடுத்து வரான்..” சின்ன மீன் கை காட்ட

“ஐயோ.. அந்த ஆளு வலைய வீசுறான்.. வா ஓடி போலாம்” பெரிய மீன் கூறி வீட்டு சின்ன மீனின் வாள் கடித்து இழுக்க

“ஓடு ஓடு.. சீக்கிரம் ஓடு..” இரண்டு மீன்களும் துள்ளிக் குதித்து ஓடியது. ஒரு மீனவன் நீண்டு விரிந்த வலையை எட்டி வீசினான். வீசிய வலையில் அந்த இரண்டு மீன்களை பார்த்து அங்கே வந்து குவிந்த ‘மீதி அத்தனை மீன்களும் சிக்கிக் கொள்ளுமென யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம் தான், ஆனால் சிக்கிக் கொண்டதென்பதே வருத்தமான முடிவு.

(சிக்கிய மீன்களையெல்லாம் கூடை பத்து ரூபாயென விற்று விட்டு, கிடைத்த பணத்தில் அரிசியும் மிளகாயும் புலியும் பருப்பும் வாங்கி மணக்க மணக்க உணவு சமைத்து, சாப்பிட ஒரு வாயெடுத்து வைக்கையில் ‘இந்த ஒரு பிடி சோற்றிற்கு எத்தனை உயிர் பலியானதோ’ என யோசிக்க மனிதனுக்கு தோன்றவில்லையென்றாலும்…… ‘அந்த இரண்டு மீன்களும் பேசிக் கொண்டது கூட கேட்காமல் போனதே நம் சாபம்)


3
கடல் கரை ஓரம் சென்றால் துடிக்க துடிக்க மீன் வாங்கி வரலாமேயென கடலோரம் சென்று மீன் வாங்கி வந்து சட்டியிலிட்டேன், துடித்த மீன்களில் சங்கரா மீனொன்று ஏதோ முனங்கிக் கொண்டிருக்க கிளிச்சை மீன் துள்ளிக் குதித்து அருகில் சென்று


“என்ன முனகல்? அதான் சட்டியில் விழுந்துவிட்டோமே; சும்மா சாவு. இன்னும் சற்று நேரத்தில் நம் செவிள்கள் வெட்டி செதில் பிய்த்து கழுத்தருப்பதற்குள் உலகை கடைசியாய் ஒரு முறை நன்றாக பார்த்துக் கொள்;

“சுயநல உலகமிது பார்த்து என்ன செய்ய சீக்கிரம் அறுக்க சொல்” சங்கரா சொன்னது

”ஆஹா.. பிறகேன் புலம்பினாய்?” கிளிச்சை கேட்டது

”என் புலம்பல் எனக்கானதல்ல” சங்கரா சொன்னது

“வேறு ?” கிளிச்சை கேட்டது

“அதொரு கவிதையின் காதில் கேளாத சப்தம்” சங்கரா சொன்னது

“கவிதையை பற்றியெல்லாம் உன்னால் பேச முடிகிறதா?” கிளிச்சை கேட்டது

“முடியுமா முடியாதா என்று எவர் அறிய முயற்சித்தார்?”

“ஆமாம் ஆமாம் நான் சுவையா நீ சுவையா என்பதே மனிதனின் கேள்வி? போகட்டும்

கவிதை சொல்..” கிளிச்சை கேட்டது

கவிதை: தொட்டில் மீன்கள் எட்டி - நான்கு கதம் வைத்தால் இடிக்கும் தொட்டி; எத்தனை முறை பார்த்துக் கொண்டாலும் மூன்றோ நான்கோ பேர் மட்டுமே உறவும் நட்புமென்றானது தொட்டியின் தலையெழுத்து; பசித்தாலும் பசிக்காவிட்டாலும் போடுவதை போடும் நேரத்தில் உண்ணுமளவு மட்டுமே உணவின் சுதந்திரம்; மனிதன் சுத்தம் செய்ய மறந்தாலும் நினைத்தாலும் அவனுக்கு போக எஞ்சிய ஏதோ ஒரு தண்ணீரில் தான் வாழ்வின் பயணம்; உண்பதும் உறங்குவதும் தொட்டியில் முட்டி முட்டி உழன்றுக் கிடப்பதுமெனவே வளர்கிறது என் காட்சி பொருளான உடல்; பிள்ளைகளோ பூனையோ விளையாட்டாய் கொன்றாலோ தின்றாலோ; பெட்டி இடறி விழுந்தாலோ - துடித்து துடித்தே இறப்போமோ எனும் பயம் வேறு அவ்வப்போது; இதில் வேறு - வீட்டில் மனிதன் செய்யும் அத்தனை அட்டகாசங்களையும் சகித்துக் கொள்ளவெண்டுமென்பது விதி; பிறகும் - தொட்டியில் அடைத்தவன் சொன்னான் வளர்க்கிறானாம்!!”
——————————————————————–
கவிதையை முடித்துக் கொண்டு சங்கரா கிளிச்சையை பார்க்க  , ஆஹா.. இப்படி உனக்கு கவிதை கூட சொல்லத் தோன்றுமா என ஆராய கிளிச்சை மீனென்ன எனக்கே கூட இயல வில்லை தானே?????

எப்படியோ கவிதை முடியும் தருவாயில்..நானென்ன அறிந்தேன் மீன்களை பற்றி; எடுத்து அறுத்து கண்டம் துண்டமாக்கி குழம்பில் கொதிக்க ஆஹா வாசனை எத்தனை சுகமாக மூக்கை துளைத்ததென்றேன்; எத்தனை உயிர் தொலைத்ததை நினைக்க முடியாமல்!

அந்த சங்கராவின் உயிர் போன கடைசியில் ஏதோ கிசுகிசுப்பது

கிளிச்சையின் காதுகளில் விழாமலில்லை..கிளிச்சை அடுத்ததாக வெட்டு பட இருக்கையில் சங்கராவை பார்த்து

“சாகக் கிடக்கிறாய் வலிக்க வில்லையா அங்கென்ன அப்படி பார்க்கிறாய் முனுமுனுக்கிறாய் என்றது”

“நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்;

சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது”
—————————*——————————–*——————————–
(பார்த்தென்ன செய்ய, சங்கராவும் கிளிச்சையும் சில மணிப் பொழுதிற்குள் மீன் சட்டியில் கொதித்து வயிற்றில் செரித்து விட, தொட்டியிலிருந்த மீன்கள் தினம் அழுத சப்தமோ; வாணலியில் வரு பட்ட மீன்களின் வலியோ நமக்குப் புரியாமலே காலம் நகர்கின்றன தான், மீன்கள் கொள்ளப் படுகின்றன தான்)

4

“ச்சே.. நாற்றம்.. நாற்றம்..” மீன் வாங்க வந்தவன் மீன் சந்தையில் நின்று மூக்கை பிடித்துக் கொண்டான்.


“ஏண்டா மான் வாங்கவா வந்த, மீன் வாங்க தானே வந்த நாற்றமில்லாம” ஏதோ வேறொரு குரல் போல் கேட்க அவன் இங்குமங்கும் திரும்பி திரும்பி பார்த்தான். யாரும் அவனை பார்க்கவோ, அவனிடம் பேசவோ இல்லையென தெரிய, ‘பிறகென்ன பிரம்மையோ’ என நினைத்துக் கொண்டு திரும்பினால், ஒரு மீன் லேசாக துள்ளிக் குதித்து வந்து அவனருகில் வீழ்ந்தது.

அது சிலிர்ப்பி வீழ்ந்ததில் அதன் மீதிருந்த தண்ணீர் தெறித்து அவன் முகத்தில் பட.. “ச்சே.., ச்சே..கவுச்சி கவுச்சி” என தூரம் விலகினான் அவன்..

மீன் அவனை கடித்து குதறி விடுவது போல் பார்த்தது. அவன் அந்த மீனை எடுத்து “ஏம்ப்பா.. இந்தா.. இதுமாதிரி நல்ல உயிருள்ள மீனா போடு, பழைய மீனா போட்டு பணம் பார்த்துடாத” என்று சொல்லியவாறே மீனை எடுத்து தராசு தட்டில் போட..

மீன் விற்றவர் அவருக்கருகிலிருந்த கூடையின் அடிவரை கைவிட்டு துழாவி எடுத்ததில் இன்னொரு மீன் துள்ளியெழுந்து வந்து அந்த பழைய மீனுக்கருகில் விழுந்தது.

“நீயும் இங்க தான் இருக்கியா..?” பழைய மீன் கேட்டது.

“கத்தி பேசாதா அவன் நம்மளையே பார்க்கிறான்” புதிய மீன் சொன்னது.

“இல்லன்னாலும் விட்டுட்டா போவான்.. போவியா…”

“அதுவும் சரி தான். ஆனா.., நம்மல பத்தியெல்லாம் இந்த மனிதர்களுக்கு ஒரு உயிருன்னு எண்ண கூட அவகாசமில்லை ல்ல.. ” புதிய மீன் கேட்டது.

“உயிர்னா ஒரு வாழ்க்கை இருக்கும். அசைவு இருக்குற இடத்துல; ஆசையும் இருக்கும்னு’ தெரிந்தா தானே ‘ஐயோ அழிக்கிறோமேன்னு தோணும் இவுங்களுக்கு”

“விடு விடு மனிதர்னாலே சுயநல வாதி தானே..”

“அப்படி எல்லாம் சொல்லாதே. நம்ம மேல கருணை காட்டவும் நிறைய மனிதர்கள் இருக்காங்க” பழைய மீன் சொன்னது.

“எப்படி சொல்ற??”

“வேற, அங்க பாரு ‘மீனும் மீனும் பேசிக் கொண்டனன்னு’ ஒரு தொடர் போட்டா அதை எத்தனை பேரு வந்து படிக்கிறாங்க?? நம்ம மேல அப்படி ஒரு இரக்கம், அக்கறை எல்லாம் அவுங்களுக்குள்ள இல்லைன்னா இப்படி விழுந்து விழுந்து படிப்பாங்களா?? ”

“படிச்சா போதுமா, படிச்சிட்டு நம்மல கொள்ளாமையா விட்ற போறாங்க” புதிய மீன் கேட்டது

“சரி அதை விடு .. கேட்டா விதின்னுவா மனித(ன்)”

“அவன் எதனா சொல்லிக்கட்டும், நம்ம பொறுத்த வரை அது கொலை தான்.. கொலை தான்..”

“விடுப்பா.. வேறெதனா பேசலாம்.. ஏன் வீணா இப்படி மனிதர் பத்தி பேசி நேரத்தை போக்குவானேன்??” பழைய மீன் சலித்துக் கொண்டது.

“அப்படி ஏன் நினைக்கிற.., நான் இன்னைக்கு முழுக்க முழுக்க ஒரு மனிதர பத்தி தான் சொல்ல போறேன், நேத்து நான் நடு கடல்ல உல்லாசாமா சுத்திக்குனு இருந்தேனா அப்போ அந்த பக்கம் ஒரு பெரிய மீன் ஓன்னு வந்து, என்னை அப்படி துரத்துச்சி தெரியுமா??”

“அதென்ன ‘அப்படி’ ? இப்போ எல்லாம் பேச்சு வாக்குல மனிதர்கள் பயன் படுத்துற வார்த்தை இது ல்ல..??? சரிவிடு சொல்லு, அப்புறம் என்னாச்சி?”

“அப்புறமென்ன தொரத்தி தொரத்தி என்னை சாப்பிட அலஞ்சிது”

“நீ என்ன பண்ண?”

“என்ன பண்றது ஓடி ஓடி கடைசியா, ஒரு படகு வர, அது பின்னாடி போயி ஒளியலாம்னா, அந்த நேரம் பார்த்து அந்த படகுல வந்த ஒரு மனுஷன் அதை பார்க்க உடனே வலைய எடுத்து வீசிட்டான், எனக்கு ‘ஐயோ போயும் போயும் மனுஷன் கிட்டயா மாட்டினோம்னு ஒரு நொடி ஆடி போயிட்டேன், ஆனா அந்த ஆளு நல்லவனா இருந்தான், என்னை காப்பாத்தறதுக்காக அந்த பெரிய மீனை பிடிக்கத் தான் வலையை வீசி இருக்கான்.”

“அப்புறம்”

“அப்புறமென்ன, நம்ம யாரை வேணும்னாலும் சாவடிக்கலாம், நம்மல யாராவது கொல்ல வந்தா(ல்) தான் நிறைய நியாயம் நீதி எல்லாம் பேசும் உலகம். அதுபோல தான் இதுவும், நிறைய நியாயம் பேசி பார்த்துது அந்த பெரிய மீன். துள்ளி துள்ளி எகுறி எல்லாம் குதித்துப் பார்த்துது, அவன் பொருத்து பார்த்துட்டு, வேற ஏதோ ஒரு அம்பு மாதிரி ஒன்னை எடுத்து, அந்த மீனோட கண்ணை பார்த்து விட, பாவம் அது துடிச்சி துடிச்சி செத்துது. எனக்கே பாவமா இருந்துதுப்பா”.

“ஹுஹ்ஹ்ஹும்.. இவரு பெரிய ‘முத்துகுமார்’ போல தியாகின்னு நினைப்பு. அசடு அசடு அதுக்காகவா பாவம் பார்ப்ப? அது தானே உன்னை கொல்ல வந்துது??”

“ஆமாம், அது அப்படின்னா ‘நானும் அப்படியா? என்னை விடுப்பா, நான் செத்தா என்ன, நேத்து வந்தவ. அதும் நான் செத்தா ஏதோ இறக்கப் போறோம்னு ஒரு உணர்வு இருக்கும் அவ்வளவு தான். பொசுக்குனு போய்டுவேன். ஆனா கண்ணுக்கெதிர ஒருத்தர் துடிச்சி துடிச்சி சாவறதை பார்க்கறது இருக்கே உயிரோடிருக்கும் அத்தனை நாளும் நினைத்து நினைத்து சாகுற வலி.. தெரியுமா??”

“அந்த வலி மனுஷனுக்கு இல்லையே ப்பா??” பழைய மீன் வருத்தம் கொண்டது.

“அதுசரி இவுங்க நம்மல கொண்ணு என்ன பண்ணுவாங்க..? இப்படி நம்மல கொண்ணு கொண்ணு போடறதுல இவுங்களுக்கு என்ன வந்துடுமோ தெரியலயே..??!!” புதிய மீன் கேட்டது.

“நீ இன்னைக்கு கேட்குற, இதை நான் என்னைக்கோ நம்ம பெரிய பெரிய மீனுங்க கிட்ட எல்லாம் கேட்டிருக்கேன்.. இதுவரையும் சாவுறோம்னு தெரியுமே தவிர மனுஷன் ஏன் கொல்றான்னு நம்ம மீன் ஜாதில ஒருத்தருக்குமே தெரியாது”.

“தோ பாரு.. தோ பாரு.. கத்தி எடுத்து வரான் வரான் பாரவன், ஓடு ஓடு..”

அந்த மீன்கள் இரண்டும் துள்ளி கீழே குதித்தது. “ஆய் ஆய் எங்க ஓடுற, துள்ளி எகிறிட்டா விட்ருவோமா???” அந்த மீன் வாங்க வந்த ஆள் கத்திக் கொண்டே எட்டி அதை பிடித்தெடுத்து, அந்த மீனின் செவுளை பிய்த்துவிடாத குறையாக விரித்துப் பார்த்தார்.

“ஏம்பா துள்ளி குதிக்கிற.. உயிரோடிருக்க மீனை போயி பிச்சி பார்க்குற.. ? வை.. வை.. போ.. அங்க யாருனா புதுசா வெச்சிருப்பாங்க போ போய் வாங்கிக்கோ” மீன் விற்பவர் கோபமுற.. அட போயாவென வாங்க வந்தவன் கூடையிலிருந்த இதர மீன்களையும் கீழே கொட்டிவிட்டு போக.., அந்த இரண்டு மீன்களும் மீண்டும் துள்ளி துள்ளி அருகருகே வந்து, தன் மீதமுள்ள சில நிமிட பொழுது வாழ்க்கையை பேசி பேசி தீர்க்க தயாராயின..

——————————————————————————————-

தொடரும்.. (மீன்கள் இன்னும் நிறைய பேசும்..)

No comments: