தீர்க்கதரிசி தந்தை செல்வா

.

1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி மலேசியாவில் பிறந்து கொழும்பில் கல்வி கற்று விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராகப் பணி புரிந்து சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1924 ஆம் ஆண்டு சித்தியெய்தி சிவில் சட்டத் துறையைத் தேர்ந்தெடுத்து சட்ட வல்லுனரானார் எஸ்.ஜே.வி. செல்வநாயகம்.


1947இல் நடைபெற்ற தேர்தலில் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செல்வநாயகத்தாரின் ஜூனியராகக் கடமையாற்றிய கோப்பாய் கோமான் கு.வன்னியசிங்கம் கோப்பாய் தொகுதியில் அமோக வெற்றி பெற்றார்.1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது; எனினும் சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது.

அன்று தொடங்கியது தமிழரின் கஷ்ட காலம்! பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க தமிழரைப் பலவீனமாக்கும் முகமாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மந்திரிப் பதவிகள் வழங்கப்பட்டன. மந்திரிப் பதவிகள் ஏற்றுக் கொண்டோர் விபரம்:

ஜி.ஜி. பொன்னம்பலம்: கைத்தொழில், கைத்தொழில் அபிவிருத்தி, கடற்றொழில், கனகரத்தினம் உதவி மந்திரி பதவியை ஏற்றுக் கொண்டார். மேலும் வி. குமாரசாமி, ரி. இராமலிங்கம் போன்றோரும் ஜி.ஜி. யுடன் சேர்ந்து டி.எஸ். சின் அரசில் இணைந்தனர்.

ஆனால் செல்வநாயகம், வன்னியசிங்கம், சிவபாலன் ஆகியோர் அரசுடன் இணைய மறுத்துவிட்டனர். செனட்டராக இருந்த இ.எம்.வி. நாகநாதனும் (பின்னாளில் நல்லூர்த் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்) அரசுடன் இணைய மறுத்துவிட்டார்.

அன்றிலிருந்து அதாவது 1948 ஆம் ஆண்டிலிருந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் "ஜி.ஜி. குழுவென்றும் செல்வநாயகம் குழு என்றும் இருவேறு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறான கூட்டங்கள் நடாத்தத் தொடங்கின. செல்வநாயகம் குழுவினர் இனப்பிரச்சினைக்கு "ஒற்றையாட்சி முறை' ஒத்துவராது; "சமஷ்டி முறையே' சரியான தீர்வைத் தரும் என்று கூறி 1949 ஆம் ஆண்டு மாசி மாதம் 13 ஆம் திகதி பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கருகில் தமது முதலாவது கூட்டத்தை நடாத்தினார்கள்.

1950 ஆம் ஆண்டு தந்தை செல்வா தமது கட்சியான தமிழரசுக் கட்சியின் வளர்ச்சி ஆண்டு என்று பிரகடனம் செய்தார். அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் கிளைகள் அமைக்கப்பட்டன. மூலை, முடுக்குகள் எல்லாம் பிரசாரக் கூட்டங்கள் நடாத்தப்பட்டு சமஷ்டி முறை பற்றித் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 13, 14, 15 ஆம் திகதிகளில் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாடு நடாத்தப்பட்டது.

மேலும் ஓராண்டுக்கு செல்வா தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். கட்சி இளமையாக இருந்ததினால் அப்பதவியைத் தந்தை ஏற்றுக் கொண்டபோதும் பல இளந் தலைவர்களை உருவாக்கும் முகமாக ஒவ்வொரு வருடமும் புதிய தலைவர் இனங் காணப்பட்டுத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை தமது தலைமையுரையில் வலியுறுத்தினார்.

மேலும் தமது தலைமையுரையில் ""தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் அந்தத் தேசிய இனம் பரிபூரண சுதந்திரமாக வாழும் உரிமை உண்டு. தமிழ் பேசும் மக்கள் தம் பாரம்பரிய வரலாற்று பெருமையுடன் சுதந்திரமாக வாழ்வதற்கு அவர்கள் வாழும் பிரதேசமாக தமிழரசு அமைக்கப்பட வேண்டும்; அந்தத் தமிழரசு சமஷ்டி அமைப்பின் அங்கமாக இருக்க வேண்டும்'' என்று வலியுறுத்திக் கூறினார்.

இவ்வுரை அனைத்து தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது. தமிழ் பேசும் மக்கள் அன்னாரின் பின்னே ஒன்று திரண்டனர். சாதாரண சா.ஜே.வே. செல்வநாயகம் தந்தை செல்வநாயகம் என்று போற்றப்பட்டார். அதே உரையில் அவர் தொடர்ந்து,

""சுதந்திரம் என்பது வேறொருவர் கொடுக்க நாம் பெற்றுக் கொள்ளும் ஒரு பொருளல்ல. அது சுக்குமல்ல; மிளகுமல்ல மக்களின் வீரத்தாலும் தியாகத்தாலும் விடா முயற்சியாலும் அதே மக்கள் அடையும் ஒரு உன்னத நிலைதான் சுதந்திரம். உலக சரித்திரத்தை உற்றுப் பார்த்தால் சுதந்திரப் போராட்டம் நடாத்திய எல்லாவினமும் பலவீனமான இனமாகவே இருந்துள்ளன. எனவே நாம் அஞ்சத் தேவையில்லை'' என்றார். அன்று நாட்டின் எமது இனத்தின் முக்கியமான பிரச்சினைகளில் தந்தையின் தீர்க்கதரிசனமான சில கூற்றுக்களை இங்கு பார்ப்போம்.

தீண்டாமை ஒழிப்பு தமிழ் மக்கள் பரிபூரண சுதந்திரம் பெற வேண்டுமானால் எமது சமுதாயத்தில் உரிமையற்றவர்களாக இருக்கும் மக்களுக்கு முதலில் உரிமை வழங்க வேண்டும். நாம் ஒருவருக்கு கொடுமை செய்யும்போது, பிறிதொருவர் எமக்கு கொடுமை செய்வார்.

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சமஷ்டித் திட்டத்தை கிழக்கு மாகாணத் தமிழர்கள் ஆதரிக்கும் அளவுக்கு அங்கு வாழும் முஸ்லிம் மக்களும் ஆதரிக்க வேண்டும். அதற்கு இரு சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். எனினும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகள் சிங்களப் பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? அல்லது தமிழ் பேசும் மக்களின் பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எத்தனை தீர்க்க தரிசனமான கூற்றுக்கள்!

பிறிதொரு தடவை அன்னார் கூறியதாவது, என்னை தமிழ் மக்கள் தலைவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் என்றுமே சொன்னதில்லை; அவ்வாறு சொல்லவும் மாட்டேன். நான் முன் வைத்த கொள்கைகளை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறேன். சாகும்வரை கூறுவேன். தமிழ் பேசும் மக்கள் தன்மானத்துடன் வாழ அதுதான் சரியான தீர்வு என நம்புகிறேன்'' என்றார்.

அன்னாரின் தீர்க்க தரிசனமான பண்டா செல்வா ஒப்பந்தத்தையோ அல்லது பண்டா டட்லி ஒப்பந்தத்தையோ மாறி,மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் நிறைவேற்றி இருந்தால் எத்தனை பொருள் இழப்புக்கள் உயிரிழப்புகள், அனர்த்தங்களை இந்த நாடு தவிர்த்திருக்கும்!

அன்னார் தாம் காலமாகுமுன் தமது 79 ஆவது வயதில் கடவுள் தான் இனி தமிழ் பேசும் மக்களைக் காப்பாற்ற வேண்டும்!'' என்று கூறினார். அக்கூற்றும் தீர்க்க தரிசனமான கூற்றாக மாறியிருப்பது தமிழ் பேசும் மக்களின் துரதிர்ஷ்டமே!
 
நன்றி  வீரகேசரி  

No comments: