சொற்கோவை - 2


.
     
தேவையான சொற்கோவை என்றொரு பதிவு ஏற்கனவே (2010-04-22) பதியப்பட்டிருக்கிறது. இப்பொழுது பெருப்பிக்கப்பட்ட சொற்கோவை வந்திருக்கிறது. இன்னும் வரும்.
சமீபத்தில் ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தை படித்து முடித்தேன். அப்படியே கட்டிப் போட்டது எனச் சொல்லலாம்; அவ்வளவு சிறப்பாக இருந்தது. ஆனால் சிலவொரு இடங்களில் சாதாரண ஆங்கில வார்த்தைகள்கூட அப்படியே வந்திருந்தன. டூர், பர்னிச்சர், செமஸ்டர், நார்மல், சில்வர், கிரேட் போன்ற வார்த்தைகள். யாரோ பின்னுக்கு நின்று என்னை தள்ளிவிட்டதுபோல உணர்ந்தேன்.



எழுதும்போது நான் இப்படியான பிழைகளை செய்திருக்கிறேன். அவசரமாக எழுதிக்கொண்டு போகும்போது சில இடங்களில் ஆங்கில வார்த்தைகள் வந்துவிடும். அவற்றுக்கு சரியான தமிழ் பதங்களை தேடும்போது சிந்தனை தொடர் அறுந்து போகும். நினைப்பு எங்கேயோவெல்லாம் போய்விடும். நூலை மொழிபெயர்த்த ஆசிரியருக்கும் இதுமாதிரி ஏதோ நடந்துவிட்டது எனவே நினைக்கிறேன். இதை தவிர்த்திருந்தால் அந்த நூலின் மொழிபெயர்ப்பு மிகச் சிறந்த ஒன்றாக இருந்திருக்கும்.
சொற்கோவை – 2 வந்துவிட்டது. எழுதிக்கொண்டு போகும்போது திடீரென்று ஓர் ஆங்கில வார்த்தைக்கு தமிழ் தேடி அந்தரப்படத் தேவையில்லை. சொற்கோவையில் தமிழ் பதங்களை உடனுக்குடன்  தேடிக் கண்டுபிடித்துவிடலாம். எனக்கு பயன் பட்டது. உங்களுக்கும் பயன் படும். மணி வேலுப்பிள்ளைக்கு மறுபடியும் நன்றி.
கலைச்சொற்கோவையை முன்வைப்பது: தமிழ்ச் சொற்கோவைக் குழாம். அதில் பல துறைஞர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அவர்களுள் மணி வேலுப்பிள்ளை ஒருவர். இன்னும் பலர் அங்கம் வகிக்காமலேயே பங்கு பற்றுகிறார்கள். அவர்களுள் மருத்துவர் முரளி வல்லிபுரநாதன், அ. முத்துலிங்கம், பத்மநாப ஐயர்... அடங்குவர். ஏன், நீங்கள் கூட அங்கம் வகிக்காமல் பங்குப்பற்றுபவரே. உங்கள் மீள்தரவுகளை அறியத்தரவும். இந்த மடலை உங்கள் தொடர்பாளர்கள் அனைவருக்கும்  அனுப்பி வைக்கவும். கலைச்சொற்கோவையாக்கம் ஒரு தொடர்கதை அல்லவா!
தமிழ்ச் சொற்கோவைக் குழாம்
 Nantri: amuttu.com

No comments: