கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை) - வித்யாசாகர்!!

.

9
சடாரான ஏதோ வந்து மேல் விழுந்தது போலிருந்தது. கண்களை திடுக்கிட்டுத் திறந்தால் அம்மாவின் கையை விட்டுவிட்டு ஓடிவந்த குழந்தை யொன்று என் மீது விழுந்து எழுந்து மன்னித்துக் கொள்ளுங்கள் அங்கிள் என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு ஓடியது.

ஒரு நொடி எனக்கு எங்கிருக்கிறேன் என்னானது என்று ஒன்றுமே புரியவில்லை. பின் கடந்த ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். விமான நிலையத்திலிருப்பதையும் யோசித்துக் கொண்டே கண்ணயர்ந்துப் போனதையும் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவுறுத்திக் கொண்டேன்.


இப்பொழுது அந்த பாப்பா சற்று தூரம் சென்றும் திரும்பிப் பார்த்து சிரித்துக் கொண்டே போனது. அதை பார்த்து கையசைத்துவிட்டு தலையில் கைவைத்து அமர்ந்துக் கொண்டேன். "ச்ச... ஏதேதோ யோசித்துக் கொண்டே உறங்கிப் போனேனா... கடைசியில். கனவு வேறு கண்டிருகிறேன், அதும் பாவம் மேகநாதன் அண்ணன் என் கண்ணெதிரிளேயே கத்தியால் 'சதக் 'சதக்கென்று குத்தப் பட்டதுபோல் கனவு!! என்ன மனிதன் நான், இதைப் பார்த்துக் கொண்டு சிரிக்க வேறு செய்கிறேன். என்னாலேயே என்னை புரிந்துக் கொள்ள முடியவில்லை. எனை தாண்டி எப்படி கனவு வரும்; ஏதோ அவர் மீதான கோபம் உள்ளூர பதிவாகியுள்ளது அன்றி வேறில்லை.

ஏன் நாமெல்லாம் இப்படி முழுமையாய் மன்னிக்கும் மனோபாவமே நமக்கில்லையா? ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மிருகத்தை வைத்துக் கொண்டுதான் திரிகிறோமா நாமெல்லோரும்? என் கேள்விகளால் நானே வருந்தினேன். மேகநாதண்ணன் பாவம், எத்தனை பரிவு காட்டினார் கடைசியில், இப்படி செய்தே இருக்கக் கூடாது நான். எங்கோ அவர் மேலெழுந்த கோபம் இன்னும் மனதில் மிச்சமாய் இருக்கிறது தான். இருந்தாலும் எப்பொழுது தூங்கினேன்; எப்போது கனவு வந்ததென்றே விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆழ்ந்து யோசித்தத்தில் எனையறியாது சோர்ந்து தூங்கிவிட்டேன் போல்.

உண்மையில் மேகநாதன் அண்ணன் ஆரம்பத்தில் அத்தனை அர்த்தமற்று பேசினாலும் அவரை விட்டுப் பிரிகையில். பிரியா விடை பெற்றேன் என்று சொன்னாலே தகும். ஏனெனில் ஈழம் பற்றி அவ்வளவு உருகினார், ஈழம் பற்றிய எந்த உதவி வேண்டுமாயினும் உடனே அழைக்கச் சொன்னார், அல்லது ஏதேனும் தமிழகத்தில் இருந்து செய்வது என்றாலும் பரவாயில்லை செய்யத் தயாரென்று அவர் சொல்லி அனுப்பியதெல்லாம் நினைவிலேயே இருந்தது.

அவரிடமிருந்து விடை கொள்கையில்; யாரோ ஒரு ஜீவனுக்குள் இருந்த விடுதலையின் தீயை மேலும் ஒரு சொட்டு எண்ணெய் ஊற்றி எரியவைத்ததாகவும், ஈழம் குறித்த விழிப்பினை; நாம் கொள்ளவேண்டிய அக்கறையினை நம் தமிழ்மண்ணின் மைந்தர் ஒருவருக்கு தன்னால் இயன்றவரை பதித்துவிட்டதாகவும் ஒரு திருப்தி எழுந்தது.

சட்டென நேரமாயிருக்குமோ என்றொரு பதட்டம் வர நேரம் பார்த்தேன்.. ஒரு மணி நேரத்திற்கு மேல் கழிந்து விட்டிருந்தது. மனதிற்குள் என்னவோ பல வருட வாழ்க்கையினை மூன்று மணிநேர திரைப்படத்தில் பார்த்துவிடுவதுபோல்.. நாளெல்லாம் நாங்கள் பேசி கழித்த பொழுதுகளெல்லாம் ஒரு மணி நேர ஓட்டத்தில் நினைவினை தொட்டு கடந்து போயிருந்தது.

மேகநாதன் அண்ணன் மற்றும் அவரை போல் ஈழத்தின் விடிவு குறித்து எந்த அக்கறையுமே இல்லாதவர்கள் பற்றியும், தன் வீடு, உறவுகள், குழந்தைகள், நாடு, இனத்தின் விடியல் என எல்லாம் குறித்தும் சிந்திக்க சிந்திக்க மனதிற்குள் ஏனோ மிக வெறுமையே உண்டானது.

மனதோடு சேர்ந்து சற்று உடலும் பாரமாக, வெகு நேரம் உட்கார்ந்திருந்தே உறங்கிவிட்டதனாலும், கணவு போல நேரம் கடந்துவிட்ட உணர்வும் உள்ளே பதட்டத்தோடு எழ; எழுந்து நின்று கைகளை சோம்பல் முறித்தவனாய் இங்கும் அங்கும் திரும்பிப் பார்க்கிறேன்.

கைப் பையினை இருக்கையின் மெது வைத்துவிட்டு மடிக்கணினியை மட்டும் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு, 'கொழும்பு விமான நிலையத்தின் அடைக்கப் பட்ட கண்ணாடியோரம் நின்று; விமானங்களையும், விமானத்தை புறப்பட தயாராக்கிக் கொண்டிருக்கும் ஊழியர்களையும், உடன் சேர்ந்து பணி புரியும் பெண் தொழிலாளர்களையும், ஆணுக்குப் பெண் நிகராக பளு தூக்கி, குறிப்பெடுத்து, ஆண்களோடு சேர்ந்து நேசமோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் சிறப்பினையும் கண்டு எல்லாவற்றையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டே வருகிறேன்.

ஒவ்வொரு விமானங்களையாக மாறி மாறிப் பார்ப்பது சற்றுத் தூரத்தில் இருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்மிக் காரர்களுக்கு எப்படித் தெரிந்ததோ என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. ஆழ்ந்து என்னையே பார்த்தார்கள்.

விர்ரென எழுந்து, தேடிக் கொண்டிருந்த திருடன் ஒருவனை பிடித்துவிட்டது போல்; அவசரமாக தோளில் மாட்டியிருந்த துப்பாக்கியினை வெளியே எடுத்து சரி செய்துக் கொண்டே எனை நோக்கி ஓடி வந்தனர்.

நான் புகைப்படம் எடுப்பதை அவர்களுக்காக நிறுத்தவில்லை. அவர்கள் என்னருகில் வந்ததும் என்ன செய்கிறாய் என்றனர். சிரித்துக் கொண்டே மிக அழகான ஊர் உங்கள் ஊர் என்றேன். விமானங்களை ஏன் படம் எடுக்கிறாய் என்றார்கள். விமானம் தாண்டி பசுமை பூத்திருக்கும் ஊரை தானெடுத்தேன், விமானம் எங்கள் ஊரில் இதைவிட நிறைய நிற்கும் என்றேன்.

சற்று முறைத்தவாறு உன் பெயரென்ன கேட்பதற்கு மட்டும் பதில் சொல் என்றனர், சொன்னேன். எங்கிருந்து வருகிறாய் என்றனர், சொன்னேன். பிறகு எங்கே போகிறாய் என்ன செய்கிறாய் யாருடன் வந்தாய் போன்ற சாதாரண கேள்விகள் தான், என்றாலும், இடையே புகுந்த ஒரு கருங்காளி யொருவன் வெடுக்கென என் கையிலிருந்த புகைப்படப் பெட்டியை பிடுங்கிக் கொண்டு 'என்ன வைத்திருக்கிறாய் பையில் என்றான், கணினி என்றேன். திற என்றான், திறந்தேன். அது என்ன என்றான்; மடிக் கணினி என்றேன். கணினியை மேலே எடு என்றான். எடுத்தேன். கீழே அடியில் தெரியுதே அது என்ன என்றான். போச்சுடா..!! என்று நினைத்துக் கொண்டேன்.

எனக்கு தூக்கிவாரி போட்டது. அதொன்றும் இல்லை, எல்லாம் புத்தகங்கள் தான் என்றேன், அந்த புத்தகத்தை எடு என்று அடியிலிருந்து கொஞ்சம் மட்டும் தெரியும் ஒரு புத்தகத்தை காட்டினான். அவன் காட்டிய இடத்தில் எனக்கு வந்த எமன் போல அழகாக ஓரம் மட்டும் தெரிந்துக் கொண்டிருந்தது அட்டையின் கொட்டை எழுத்தில் பெயர் பதிக்கப் பட்ட ‘விடுதலையின் வேட்கை’ எனும் அந்த ஈழக் கவிதைகளின் புத்தகம்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதை எடுத்து இரண்டுப் பக்கம் தான் பிரித்தான் உள்ளே “அண்ணன் பிரபாகரனுக்கு சமர்ப்பணம்” என்றிருக்க முயலை காது பிடித்துத் தூக்கிப் போவார்களே; அதுபோல என்னை தூக்காத குறை தான்; ஒரு நிமிடத்தில் அவர்களின் தோற்றம் செய்யல பார்வை பேச்சு எல்லாமே மாறிப் போனது.

ஒருத்தன் அடி என்றான், ஒருத்தன் பிடி என்றான், குத்திடுவேன் வெட்டிடுவேன்னு குதிக்கிறானுங்க மாற்றி மாற்றி. நான் எதற்கும் துணிந்தவனாகவே சாதாரணமாக நின்றிருந்தேன். அதற்குள் ஒருவர் அமைதி பூனைப் போல வந்து தோளில் கைபோட்டு நேராக விமான நிலைய காவல் துறையின் உயர் அதிகாரிகள் இருக்கும் அறைக்கு அழைத்துப் போனார்.

எல்லோரும் என் பின்னே கத்திக் கொண்டே ஓடிவந்து அந்த அறைக்குள் புகுந்தனர். வரும் வழியிலேயே வாக்கிடாக்கியில் யார் யாரையோ அழைத்து சொல்லிவிட்டார்கள் பின்னால் வந்தவர்கள்.

உள்ளே அறைக்குள் போனதும், ஒருவரை மாற்றி ஒருவர் எனை அடிக்க கை ஓங்கினர். நான் சற்றும் பொருமை இழக்கவில்லை, பயம் துளியும் கொள்ளவில்லை; வெகு தெளிவாக கூறினேன், என்னைப் பற்றிய விவரம் சரிவர கேட்காது யாரும் என் மேல் கைவைக்க அதிகாரம் கிடையாது., நான் உங்கள் விமானத்தில் பயணிக்க விருப்பப்பட்டு வந்த ஒரு பயணி. வேண்டுமெனில் தீர விசாரித்துக் கொள்ளுங்கள், பிறகு நீங்கள் சொல்வதற்கு நான் கட்டுப் படுகிறேன், காரணம் நீங்கள் ஏன் இப்படி என்னை நடத்துகிறீர்கள் எனபதே எனக்கு புரியவில்லை' என்றேன்.

ஒருவன் பின்னால் வந்து தலையில் கைவைத்துத் தள்ளினான்.. ‘நீ என்ன பெரிய புடுங்கியா, உனக்கு சொல்லனும்னு எல்லாம் அவசியம் கிடையாது என்பது போல் ஏதோ ஏதேதோ அவனது மொழியில் திட்டினான். நல்லவேளை எனக்குப் புரியவில்லை ஒன்றும் என்றாலும் அந்த தலையில் கைவைத்து தள்ளிய கோழிக் கிறுக்கன் யாரென்று பார்ப்பதற்குள் அதிகாரி ஒருவர் அங்கே அவசரமாக ஓடிவந்து; 'யாரும் பயணியின் மேல் கை வைக்காதீர்கள், நாம் விசாரித்துவிட்டு சந்தேகமெனில் சிறப்புக் காவலாளிகளிடம் ஒப்படைத்து விடுவோம்' என்று சொல்லிவிட்டு விசாரிக்க மட்டும் உத்தரவிட்டார்.

"எப்படி வந்தது இந்த புத்தகம் உன்னிடம்?" என்றார் இடையே வந்த ஒருவர். இல்லை இல்லை இது இவனுடைய புத்தகம் புகைப்படம் இருக்கே, பின்னாடி பார் என்றான் மற்றொருவன். அவன் புத்தகத்தை திருப்பி பின்பக்கம் பார்த்து விட்டு -

எத்தனை புத்தகம் எழுதி இருக்கிறாய், யார் நீ?”

“நானா?!!!!!!!!!, நான் சத்தியசீலன். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கணக்காளன். எனக்கும் புத்தகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை' என்றேன். என்ன கதையடிக்கிறாய் இதோ உன் புகைப்படம் இருக்கிறதே?” என்றான் ஒருவன் ஆவேசமாக.

அதை நன்றாக பாருங்கள், அவர் வேறு நான் வேறு நானென்ன அத்தனை சிறுவனா? எனக்கு முப்பத்தேழு வயதாகிறது. பார்வை மங்கி கண்ணாடி இட்டுத் திரிகிறேன். அவர் வேறு யாரோ' நானல்ல என்றேன்.

இல்லை இல்லை பொய் சொல்லாதே உன்னை போலவே இருக்கே இந்த புகைப் படம் என்றனர்.

அதற்கு நான் பொறுப்பில்லை. அவர் என்னைப் போல் இருக்கலாம் அதற்காக சத்தியசீலன் எப்படி "காதம்பரி" ஆக முடியும்? அதும் ஒரு பெண் பெயர் எப்படி எனதாக இருக்க முடியும். நானொரு ஆண். சொல்ல வேண்டிய கட்டாயம் வேறு எனக்கு.

ஆனால், நானொரு ஆண், அது ஒரு பெண்ணின் பெயர் என்ற பொது தான், அவர்களுக்கு தெளிவே வந்தது. ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொண்டனர். தமிழ் தெரிந்த ஒருவரை அழைத்து வந்து கேட்க புத்தகத்தில் 'காதம்பரி' என்று எழுதியிருப்பதாக சொல்ல.

பிறகு இந்த புத்தகம் எப்படி உன் பையில் வந்தது?” என்றனர்.

“நான் வரும் வழியில் ஒரு கடையில் விற்றது, வாங்கினேன்" என்றேன்.

"அப்போ இந்த படத்தில் இருப்பது நீயில்லையா?"

"சத்தியமாக நானில்லை. இதோ என் கடவுச் சீட்டு, பயணச் சீட்டு எல்லாம் பாருங்கள்” எடுத்துக் கொடுத்தேன்.

ஒவ்வொன்றினையாய் பிரித்து எல்லோரும் பார்த்தார்கள். விமானம் புறப்பட இன்னும் ஏறக்குறைய ஒரு மணிநேரமே உள்ளது நான் புறப்படுகிறேன் என் புகைப்படக் கருவியை கொடுங்கள் என்றேன்.

அவர்களுக்குள்ளேயே ஒரு ஐந்து நிமிடத்திற்கு கலந்து பேசிக் கொண்டார்கள். முடிவாக விட்டுவிடலாமா என்று பேசிக் கொண்டிருக்கையில் ஒரு சதி காரன் வந்தான்.புத்தகத்தை வாங்கிப் பிரித்து பார்த்து விட்டு -

"இதோ இந்த புத்தகத்தில் தான் வலைதள முகவரி இருக்கிறதே என்று காட்ட; புத்தகத்தில் உள்ள முகவரி படி இணையத்தை திறந்து வலைதளத்தை காட்டி, தமிழ் படிக்கத் தெரிந்த ஒருவரை அழைத்து படித்துச் சொல்லச் சொன்னனர்.

அவர் உடம்பில் ஒடுவதென்ன தமிழர் ரத்தம் தானே ஏதோ விவகாரம் உள்ளதரிந்து; அத்தனை சரியாக முழுதாக சொல்லவில்லை. இதை அருகில் நின்று பார்த்த கொஞ்சநஞ்சம் தமிழ் தெரிந்த சிங்கள ஆர்மி காரர்கள் கண்டுக் கொள்ள, ஒருவன் அவரைப் பார்த்து உறுமினான்.

இவன் புலியோட ஆளு, கள்ளன், சரியாய் சொல்லமாட்டான், விடாதீங்க இவனை; என்று அவனை சட்டையை பிடித்து தள்ளிவிட்டு, தமிழ் படிக்கத் தெரிந்த வேறு ஒரு சிங்களக் காரரை கூட்டி வந்து படிக்கச் சொல்ல, அவன் லேசாக அங்கும் இங்குமாய் பார்த்துவிட்டு 'இது ஒரு பொது வலைத்தளம் தான், வெறும் காதல் கவிதைகள் தான் இருக்கிறது என்றான் மேம்போக்காக.

அதற்குள் இன்னொருவன் தொடர்பு விவரம் இருக்கா பார் என்று சொல்லி எப்படியோ இதை அதை அழுத்தி பெயர் - சத்தியசீலன், விலாசம் இது இது மேலும் குவைத் என்றிருக்க, அதை அந்த சண்டாளன் படித்தும் காட்டிவிட, எகுறி எல்லோரும் என் மேல் பாயாத குறையாக, எட்டிச் சட்டையை பிடித்துக் கொண்டார்கள்.

நான் எதற்கும், அசருவதாக இல்லை, ஒரேயடியாக அடித்து என் தலைமீது சத்தியமாக நான் இல்லவே இல்லை என்றேன். 'காதம்பரி' என்றால் எனக்கு யார் என்ன என்று கூடத் தெரியாதென்றேன். அதெப்படி ஒரே முகம் ஒரே பெயர் வருமென்று கேட்டு ஒருவன் துப்பாக்கியால் பின்னாலிருந்து குத்தினான்.

விட்டக் கொடுக்கவில்லை நான். அதை பற்றி எனக்கு கவலையே இல்லை. என் பெயர் சத்தியசீலன், நானிருபப்து லண்டனில் நீங்கள் குவைத்தினை பார்த்துவிட்டு பேசுகிறீர்களே’ என்று சத்தமாகவும் அழுத்தமாகவும் கேட்க; அவர்கள் பயணச் சீட்டினை வாங்கி மீண்டும் பார்த்துவிட்டு –

சரி அந்த வலைதள முகவரிப் படி கொடுத்துள்ள குவைத் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பினை கொடுங்கள் என்று சொல்ல -

உடனே அந்த எண்ணில் அழைத்து பேசிப் பார்க்க, குவைத்திலிருந்து தொலைபேசி எடுக்கப் பட்டு எப்படியோ யாரோ ஒருவர் ஆமாம் 'காதம்பரி' என்பவர் இங்கு தான் இருக்கிறார். இந்த தொலைபேசி எண் கூட அவருடையது தான், அவரிடமிருந்து என் நண்பர் வாங்கிக் கொள்ள, என் நண்பரிடமிருந்து நான் தற்காலிகமாக வாங்கினேன்' என்று சொல்ல, லோட்ச்பீக்கரில் அதை கேட்ட எனக்கு நிம்மதிப் பெருமூச்ச்சே வந்தது.

"பார்த்தீர்களா; நான் சொன்னேனில்லையா, இப்போது லண்டனுக்கு அழைத்துப்பாருங்கள் என்று லண்டனின் நிறுவன விவரம் சொல்ல; ஆம் இங்ஙனம் பெயரில் ஒருவர் இங்கு பணியாற்றி வருகிறார் என்று அவர்கள் தெரிவிக்க மீண்டும் நான் அழுத்தமாக பிடித்துக் கொண்டேன் -

"ஏன் ஒருவரை போல் ஏழு பேர் இருப்பதாய் சொல்வார்களே உங்களுக்கு தெரியாதா? அதும் நான் ஒரு இந்தியன் என்னை இப்படி நடத்துகிறீர்களே என்றேன் ( உள்ளே கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது).

அதலாம் விடு, அதிகம் பேசினால் பிடித்து சிறப்பு காவலாளியிடம் ஒப்படைத்து விடுவோம் என்றான் ஒருவன். உன்னை சுட்டு அதோ அந்த மூலையில் கடாசிவிட்டு 'புலி' என்று சொல்லி விசாரணை கூட ரத்து செய்துவிடுவோம், கூடுதல் பேசாதே' என்றான் இன்னொருவன். மாறி மாறி ஒவ்வொருவர் ஒவ்வொன்று சொன்னார்கள்.

வயலுக்குள் திரிந்த எலியை பத்து கழுகுகள் சூழ்ந்து கொண்டது போல் இருந்தது எனக்கு. புத்தகத்தில் என்ன எழுதியுள்ளது என்று தெரியுமா என்றார்கள்; என்னவோ கவிதை தொகுப்பு போல் என்றெண்ணி தான் வாங்கினேன் இன்னும் படிக்கவில்லை' என்று சொல்ல.

என் முகத்தை மாறி மாறி பார்த்தார்கள். சாணக்கியனின் நினைவு மட்டுமே உள்ளிருந்தது எனக்கு. எதிர்காலத்தில் 'என் தமிழ்மக்கள் சானக்கியனுக்கு பதில் என்னை சொல்லட்டும் என்பது போலொரு உறுதியினை உணர்வு முழுக்க நிறைத்துக் கொண்டு பாவம்போல் அமர்ந்திருந்தேன். என்னை உட்கார வைத்துவிட்டு கால் மணிநேரம் அவர்களுக்குள் அவர்கள் மாறி மாறி பேசிக் கொண்டார்கள்.

பிறகு; இதுபோன்ற புத்தகத்தை எல்லாம் இனி வாங்கிவரக் கூடாதென்று சொல்ல, தொடக் கூட மாட்டேன் என்றேன். சரி, அப்போ போ..., விடு போகட்டும்' என்றார் அந்த மேலதிகாரி.

நான் நகர்ந்து வெளியே வர, என் பின்னே ஒருவன் ஓடிவந்து; 'இடைஞ்சலுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள், எங்கள் பணியை நாங்கள் செய்தோம்' தவறாக எண்ண வேண்டாம், இந்தியரை நாங்கள் மதிக்கிறோம்' என்றான்.

மண்ணாங்கட்டி" என்றி மனதில் நினைத்துக் கொண்டு, பரவாயில்லை பரவாயில்லை ஒரு பயணியை நாலுபேர் பார்க்க இப்படி அழைத்துவந்து அசிங்கம் செய்கிறீர்கள். எனக்கு விமானத்திற்கு வேறு நேரம் நெருங்கிவிட்டது, விடுங்கள் நான் போகிறேன்'' என்று அவசரம் காட்ட -

அவனோடு இன்னும் இருவரும் வந்து நிற்க, அவர்கள் மூவரும் கலந்து பேசிவிட்டு; அங்கிருந்தே வாக்கிடாக்கியில் விமான அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி, பிறகு, என்னோடு விமானமேறும் அறை வரை வந்து; விமான ஊழியர்களிடம், சோதனையின் காரணமாக தாமதமாகி விட்டது என்று விவரம் தெரிவித்து, இருந்தாலும் எதற்கும் சற்று கவனம் கொள்ளுமாறு கிசுகிசுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அவர்களை எல்லாம் நான் கூடுதல் கவனத்தில் கொள்ளவில்லை, விமானத்தில் ஏறி அமர்ந்தேன். ஆர்மிக் காரர்களால் கொண்டுவந்து விடப் பட்டதால் எல்லோரும் என்னையே ஒரு குற்றவாளி போல் பார்த்தனர். ஒரு நடுத்தர வயது பெண். கண்ணீரில் ஊறிய விழிகளோடு அவளும் என்னை பார்த்தாள். என்னைப் பிடித்ததும் விட்டுவிட்டதும் எனக்கு ஒரு கனவு கண்டு விழித்தது போலவே இருந்தது. என்னை விட்டுவிடுவார்கள் என்று நான் நம்பவேயில்லை.

எப்பொழுதும்; வேகமோ உணர்ச்சிவயப் படலோ சில இடத்தில் அத்தனை பயனைத் தருவதில்லை. இங்கும், அவர்களிடத்திலும், அது தான் நடந்தது. சற்று யோசித்து என் கடவுச் சீட்டில் என்று நான் இந்தியா போனேன். எப்போது மீண்டும் லண்டன் சென்றேன். குவைத் இதற்கு முன் சென்றுள்ளேனா, இல்லையா ஒரு விவரமும் பார்க்கத் தோணவில்லை அவர்களுக்கு.

ஒரு சின்ன குழந்தையிடம் இப்படி நடந்தது என்று சொன்னாலும், ஏன் நான் குவைத்திலிருந்துவிட்டு ஊர் சென்றிருக்க கூடாது, பிறகு லண்டன் போயிருக்கக் கூடாது' என்றெல்லாம் யோசித்து விட்டிருக்கக் கூடும். இவர்களும் அதை யோசித்து என் காவுச் சீட்டினைப் பார்த்திருந்தால் நான் தான் அந்த "காதம்பரி" என்பது மிக தெளிவாகியிருக்கும். அந்த புத்தகத்தை எழுதியது நான் தானென்று அறிந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. இதலாம் தான் கடவுள் செயல் போலும்.

அறிவாளிகள் தவறு செய்வதும், முட்டாள் தெளிந்துவிடுவதும் கூட சிலநேரம் யதார்த்தமாகவே நடந்துவிடுகிறது.

அதற்குள் வெஇருந்து மீத பயணிகளும் விமானத்தினுள்ளே வர ஒரே சலசலப்பாக இருந்தது எனக்கு. ஆங்காங்கே தன் இருக்கை பார்த்தும், பொதிகளை இங்குமங்கு மாற்றி வைத்துக்கொண்டும் இருந்தனர் பிற பயணிகள்.

நான் ஒரு பெருமூச்சு விட்டவனாய் அமைதியாக என் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். அந்த பின்னாளிருந்து வந்து தலையில் தட்டிய ஆர்மி குபீரென நினைவிற்கு வந்தான்.

அதை யோசிக்க வேண்டாமென மாற்றி யோசித்தேன். மறுமுறை அந்த துப்பாக்கியால் குத்திய ஆர்மியும் நினைவிற்கு வந்தான். உயிர்போனால் போகட்டுமென திருப்பி யடித்திருப்பேன் தான், நான் தானடா "காதம்பரி" என் தங்கையின் பெயரையே புனைப் பெயரை வைத்து எழுதுகிறேன், என்னத்தை கிழித்து விடுவாய், அதிகமாக செய்வதெனில் சுடுவாய்' அவ்வளவு தானே சுடு!!' என்று கேட்டிருப்பேன் தான். ஆனால; எனக்கு என் சுய மானத்தை விட, எனக்கு நான் படும் என் அசிங்கத்தை விட; என் தேசம் பெரிதாகப் பட்டது. என் மக்கள் பெரிதாகப் பட்டார்கள்.

சட்டென கொண்டுவிடும் கோபத்தை விட, அமைதி காத்து சாதிக்கும் வல்லமை ஒரு வித்தை. மிச்சமிருக்கும் என் கடமைகளை முடிக்க அந்த வித்தை எனக்கு சரியெனப் பட்டது.

மேகநாதன் போல் இன்னும் நிறைய பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள்; அவர்களிடம் அவருக்கு சொன்ன விவரத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நூலிழையிலான நேரத்தில் மின்னலென வெட்டியது அந்த எண்ணம்.

என் உறவுகள் கொத்து கொத்தாய் தூக்கிப் போட்டு பிணமாக எரித்த கோர சம்பவங்களை, ஒரு தேசம் எனும் பெயரில் மறைந்துக் கொண்டு இன்னொரு இனத்தையே அழிக்க செய்த மோசடிகளை இதுபோல் என் புத்தகம் வாயிலாக பதிவு செய்திடல் வேண்டும் எனும் எண்ணம் எனை பொறுமை இழக்காமல் என் கைகளை கட்டிப் போட்டது.

உயிரை கொடுத்த என் உறவுகளுக்கு மத்தியில், ஆண்டாண்டு காலமாய் மாய்ந்த என் மாவீரர்களுக்கு மத்தியில்; அவன் தலையில் தட்டியது ஒன்றும் எனை பேரவுமானத்திற்குள் தள்ளிவிடாது.

காலம் ஓர் தினம், திரும்பி என் இனத்தின் வீழ்ச்சிக்கான பதிலை சொல்லாமலா போகும்? அன்று எனக்குள்ளே நான் கர்வப் பட்டுக் கொள்வேன்' என்று நினைத்துக் கொண்டே இருக்கையில்; அந்த வலியும், திருப்பி அவனை பதிலுக்கு அடிக்க இயலா சுயமானமும் கண்ணீராக கரைந்து சூடாக என் கன்னங்களில் வழிந்தது. கண்களை இன்னும் இறுக்கி மூடிக் கொண்டேன்.

ஒரு விமானப் பணிப்பெண் வந்து அழைத்தாள். விமாணம் புறப்பட உள்ளது என்று சொல்லி நேராக அமரும் படி கேட்டுக் கொண்டார். நிமிர்ந்து அமர்ந்தேன். "ஏதேனும் இயலாமையா? உதவிகள் ஏதேனும் வேண்டுமா" என்றாள்? அதலாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, மொத்தம் நீங்கள் எத்தனை பணிப்பெண்கள் இந்த விமானத்தில் உள்ளீர்கள் என்றேன், அவளிடம்.

அவள்; ஏன் என்று வினவி; பின் சற்று நிதானித்து, எட்டு பேர் வரை உள்ளோம் என்றார். எல்லோருமே தமிழா என்றேன். இல்லை இல்லை; எல்லோருமே சிங்களம் என்றார் ஆங்கிலத்தில். அப்படியா!! நல்லது என்று சிரித்துக் கொண்டேன். ஏன் இதலாம் கேட்கிறாய் என்றாள் அவள். இல்லை தெரிந்துக் கொள்ளத் தான் கேட்டேன்' என்று சொல்ல – சிரித்துக் கொண்டே போனார் அந்த சகோதரி.

எனக்கு உள்ளே ஈட்டி போல இறங்கியது, அந்த ஓரவஞ்சக அமிலம். இலங்கையில் நடக்கும் ஒரு இன அழிப்பின் தந்திரம் இங்கிருந்தும் புரியவந்தது. சரி, தமிழில் ஏதேனும் ஒரு வார்த்தையேனும் சொல்கிறார்களா என்று பார்த்தேன்; ஒருவள் தமிழுக்கு பதில் டமிலில் ஏதோ பயிற்சி எடுத்துக் கொண்டு பேசுவது போல் 'வண்கம்' என்று சொல்லிவிட்டு அதே பாவனையில் பேசினாள்;

பொறுமையே இல்லை எனக்கு. முதுகில் அடிக்கும் கோழைகள்; குள்ள நரிகள்; பத்து பேரில் ஒரு தமிழச்சிக்கு வேலை கொடுத்தாலென்ன விமானம் நொறுங்கி வீழ்ந்துவிடுமா' என்றேன் உணர்ச்சி அடக்கமாட்டாமல்.

என்னருகில் அமர்திருந்த சகோதரி ஒருவர் ‘விமானம் எல்லாம் நொறுங்காது, தமிழராகிய நாம் தமிழராக அடையாள பட்டுப் போவோமே என்றாள்.

நான் தமிழில் பேசிய ஒரு பெண் குரல் கேட்டு மகிழ்வுற்றவானாக அவரைப் பார்த்து ‘நீங்கள் தமிழா' என்றேன்.

"ஆம்"

"எந்த ஊர் ஈழமா?"

"ஆம்"

"ஈழத்தில் எங்கே?"

"கிளிநொச்சியை சேர்ந்தவள்"

"கிளிநோச்சியா?" சற்று சத்தமாக கேட்டுவிட

"சத்தம் போடாதீர்கள். நானே தப்பித்து செல்பவள்" என்றார் அவர்

எனக்குப் புரியவில்லை. என்னாச்சு எங்கிருந்து என்று சந்தேகப் பார்வையோடு அவர்பக்கம் திரும்ப. விமானம் மேலே ஏறி நடுவானத்தைப் பிடித்து பறக்கத் துவங்கியது.

பணிப்பெண் ஒருத்தியும் ஒரு ஆடவருமாக வந்து எங்கள் அருகில் நின்று தள்ளுவண்டியினுள் இருந்து உணவினை தட்டில் வைத்து சிரித்துக் கொண்டே கொடுத்தனர். அவள் சைவம் பெற்றுக் கொண்டாள், நானும் எனக்குத் தந்த அசைவத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு சைவம் போதுமென்றேன்.

அவள் அந்த உணவுத் தட்டினை வாங்கி வெறுமனே வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தால். எனக்கோ; நேற்று மாலையிலிருந்தே ஒன்றும் கழித்திடாத மயக்கம். இருந்தாலும் நான் மட்டும் தனியாக உண்பதற்கு நெருடலாக இருக்க; ஏன் நீங்கள் சாப்பிட வில்லையா’ என்றேன்

"சிங்களன் கையில் தண்ணி வாங்கிக் குடிப்பதை விட நானென் கழுத்தை அறுத்துக் கொண்டு சாவேன்" என்றாள். அவளின் வீரியம் என்னை கலவரப் படுத்தியது. "இதை நான் குடித்தால் என் மண்ணுக்காக மாய்ந்த எம் வீரர்களுக்கு பாவம் தான் சேரும்" என்றாள்.

"அப்போ நீங்கள் யார்?" என்றேன்

என் மண்ணிற்காக செத்த மாவீரர்களுக்கு மத்தியில்; உயிரை காப்பாற்றிக் கொள்ள, கல்ல கடவுச் சீட்டில் நாடு கடந்துப் போகும் ஒரு கோழை" என்றாள் அவள்.

"என்னிடம் சொல்கிறீர்களே நான் யாரிடமேனும் சொல்லிவிட்டால்?" என்றேன்.

உன்னை கொன்றுவிட்டு பிறகு நானும் செத்துப் போவேன் என்றாள். சற்றும் யோசிக்காமல்..

தொடரும்..


No comments: