தமிழ் சினிமா

.
. "கோ" திரைப்படம் பற்றிய ஒரு பார்வை - வித்யாசாகர்!!
. விஜய்யின் வேலாயுதம் படம் ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ்


 "கோ" திரைப்படம் பற்றிய ஒரு பார்வை - வித்யாசாகர்!!

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின் – திருவள்ளுவர்!இந்த ஏழு சீர், இரண்டு அடியில் ஐயா திருவள்ளுவர் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் சொன்ன செய்திதான் "கோ" எனும் இப்படம் இறுதியாய் சொல்ல வரும் நீதியும்.

அந்த நீதியினை வழங்குவதற்குமுன் மக்களை மக்களோடுப் பின்னி; மக்களை சார்ந்த தொண்டர்களை காட்டி; தொண்டனின் தலைவன் செய்யும் அரசியலை ஒவ்வொரு இளைஞனும் கையிலெடுத்து இத்தேசத்தை திருத்தி ஆளும் தலைவனாக வாழ்ந்தாலென்ன?' என்று மறைமுகமாய் கேட்கும் ‘ஒரு நல்ல தலைவனை தேடும் படம் இந்த "கோ".

தலைவனை தலைவராக்கி, தலைவரை தலைவா என்று மெச்சிக்கொண்ட நமக்கு; வெளி உலகிற்கு தெரியாத ஒரு போலித் தலைவனை, மெய்யிலா தியாகியை, கதாபாத்திரங்களுக்குக் காட்டாமல் மக்கள் முன் தோலுரித்து காட்டிய படம் "கோ". (கோ' எனில் தலைவன் என்று அர்த்தம்)

ஒவ்வொருவரும் தன் மகன் மருத்துவனாவனா உயர் அதிகாரியாவனா நல்ல பொறியாளராக வருவானா என்று எதிர் பார்க்கிறோமே யொழிய தன் மகன் ஏன் நாட்டை, நாட்டு மக்களை வளப் படுத்தும் நல்ல முதலமைச்சராக வரக்கூடாது, ஏன் ஒரு நல்ல பிரதமாரக வரக் கூடாது என்று நாமெல்லாம் நினைப்பதில்லையே? அப்படி நினைக்க வேண்டும் என்கிறது இந்த ‘கோ’ எனும் நல்ல திரைப் படம்.

நான் கூட இதைத் தான் பத்து வருடத்திற்கு முன்பு என் "திறக்கப் பட்ட கதவு" என்னும் ஒரு குறுநாவலில் ஐந்து நண்பர்களை வைத்து அரசியலுக்கு வருவது பற்றி சிந்திக்கும்; திட்டமிட்டுக் கொள்ளும் இளைஞர்களை காட்டி ஒரு கதை எழுதினேன். என் காதல் புத்தகம் விற்றளவு கூட அந்த "திறக்கப் பட்ட கதவு" விற்கவில்லை, என்பது மிக வருத்தமாக இருந்தது.

இருபத்தியெட்டு வயது இளைஞன் நம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கும் ஒரு காட்சி' இப்படத்தில் இறுதியாக வருகிறது. மனதிற்குள் ஆயிரம் விளக்கேற்றி மகிழும் சந்தோச பூ மலரச் செய்தது அந்த காட்சி என்பது உண்மை. என் "திறக்கப் பட்ட கதவு" நூல் விற்பனையாகிவிடாதக் குறை; பத்து வருடங்கள் கழித்து அந்த ஒரு காட்சியினை கண்டதில் தீர்ந்துப் போனது.

மிக திறமையான ஒளிப்பதிவு, அதிக குற்றம் தெரிந்திடாத இயக்கம், உணர்வு ததும்பும் நல்ல பின்னணி இசை, திகட்டாத நடிப்பென; நுழைவு சீட்டிற்கு கொடுத்த பணம் ஜீரணித்துத் தான் போகிறது. இருப்பினும், இடைவேளைக்குப் பின் வரும் அந்த இரண்டுப் பாடல்களையும் 'எழுதப் படாத சட்டங்களை கருதி' வைக்காமல் நீக்கி இருந்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இன்னும் சற்று கூடுதல் தரத்திற்குரிய புரட்சிகரமான படைப்பாக "கோ" இருந்திருக்கும்.

பாடல்களில் வரும் காட்சிகள், இடம் தேர்வு செய்து அழகாக அமைத்த நடனம், அவைகளை அழகாக படம் பிடித்த ஒளிப்பதிவின் திறத்தில் அப்பாடல்கள் மிளிர்ந்தாலும்; என்னதான் எத்தனை அழகென்றாலும் ஒரு இடை சொருகலாக மட்டுமே வருதிருக்கிறதந்த பாடல்கள் என்பது படம் பார்ப்பவர்களுக்குப் புரியாமலில்லை. ஒருவேளை, இடம் மாற்றி வைத்திருந்தால் இன்னும் சிறந்திருக்கலாம்.

கடைசி காட்சிக்கு முன் நெக்ஷலைட் தீவிரவாதியான கதிருக்கு மருத்துவர் ஒரு ஊசியை போட்டுவிட்டு சிரஞ்சியை அருகில் வைக்க, அந்த சிரஞ்சியிலிருந்து சொட்டிய ஒற்றைச் சொட்டு மருந்தின் ஜாலத்தை கூட அழகாக காட்சி படுத்தியிருக்கும் விதமும் அதன் அசைவுகளின் சப்தத்தை கூட இசையால் அடையாளப் படுத்தியதும்போன்ற பல தருணங்கள் இசையமைப்பினையும் ஒளிப் பதிவையும் மெச்சிக் கொள்ளச் செய்கின்றன.

அஸ்வினாக வரும் ஜீவா 'வீடு பற்றி எரியும் கோபத்தை கூட, புன்னகை வீசும் முகத்தால், இணக்கமான பேசினால் மாற்றி விடலாம்' என்பதை நிரூபிக்கும் சில காட்சிகளில் யதார்த்தம் பிசகாமல் நன்றாக நடித்திருக்கிறார்.

ராதா தன்னை மீண்டும் திரைத்துறையில் மறுபதிவு செய்துக்கொண்டது போன்று எண்ணவைக்கும் ஓர் மலர்ந்த முகத்தைக் காட்டுகிறார்; அவரின் மகளாகிய கதாநாயகி கார்த்திகா. மிக ஒய்யாரமான அழகு தான். அடர்த்தி மிகு வளைவுகளை கொண்ட இன்னொரு மீன்போன்ற கண்ணும், நெட்டை நாட்டியமும், குறையறியா நடிப்புமாய்; வெள்ளை ஆடையில் வந்த வெண்கல தேவதையாக மனதை கில்லாமல் கவர்ந்துச் செல்கிறார்.

வசந்தாக வரும் அஜ்மல், வசந்த் நண்பர்களாகிய சிறகுகளின் குழுமம், ஜீவாவாகிய அஸ்வின், கதாநாயகியான கார்த்திகா, கிருஷ் இன்னும் இப்படத்தில் வரும் இவர்களை போன்றவர்களை தேடித் தான் இத்தேசம் கைவிரித்து நிற்கிறது.

அத்தகு, ஒரு தேசத்தின் தேடல் இப்படித் தான்' இப்படிப் பட்ட இளைஞனை தான் தேடியிருக்கும்' எனும் கணிப்பிற்கு உரித்த நாயகர்களாகின்றனர் வசந்தும் வசந்த் சார்ந்த சிறகுகள் அமைப்புக் குழுவினரும். இவர்களைப் போன்று ஒரு இளைஞர் படை நம் நாட்டிலும் வந்திடாதா எனும் ஏக்கத்தை வசந்த் பாத்திரத்தின் நடிப்பு குறையின்றி நம் கண் முன்னேக் காட்டுகிறது. நிச்சயம் அடுத்தடுத்த படங்களில் வசந்த் எனும் அஜ்மல் இனி இருக்கலாம். இப்படத்தின் மூலம் ஒரு பத்து இளைஞர்களாவது தன் தேசத்திற்காக புறப்படலாம்.

சோதனைகள் ஆயிரம் வந்தாலும்; அதை உடைத்தெறியும் தீயை கண்களில் கொதிக்க கொதிக்க சுமந்து திரியும் இளைய ஜோதிகளிடையே அரசியலை ஒரு சாக்கடை என்று சொல்லாமல்; அரசியலுக்கான விழிப்பினை; சரித்திரத்தை திருத்தி எழுதும் சந்தர்ப்பத்தை முன்கூட்டி காண்பித்து கடந்துவிடுகிறது படம்.

மேடைகளில் வசந்த் பேசுவதாக காட்டும் காட்சிகளில்; அசத்தலான தோற்றத்தை காட்டி நடித்திருக்கிறார், அவ் விடங்களுக்கான வசனங்களை இன்னும் கூட சேர்த்திருக்கலாம். இயக்குனரின் வித்தையில் திரைக்கதை எழுதிய பக்கங்கள் சில ஒதுக்கப் பட்டிருக்கலாம் என்றொரு சந்தேகம் கூர்ந்து கவனிக்கையில் எழுகிறது. இருந்தாலும், அதை ஒட்டுமொத்தப் பேரின் நடிப்பும், இசையும், ஒளிப்பதிவும் தூக்கி மறைத்து விட்டு கதையில் நம்மை மூழ்கடித்து தன் படத்திற்கான காரணத்தை தேவையை மிக அழகாக சொல்கிறது "கோ" எனுமிந்த திரைப்படம்.

சரோவை, அஸ்வின் கொஞ்சும் காட்சிகளும், கதாநாயகி கார்த்திகாவிடம் அஸ்வின் காதலால் உருகும் இடமும், கண்களால் அவள் பேசும் அழகும் திரைப்படத்தின் இடையே, 'இன்றைய சமரச நட்பு நிறைந்து பழகும் இளைஞர்களின் நட்பையும், காலத்திற்கும் திகட்டாத காதலின் முகங்களையும் அழகாகவும் உருக்கமாகவும் காட்டுகிறது.

யாரோ ஜெயித்தாலும் கூடி சிரித்து; கொல்லப் பட்டாலும் இறந்ததாய் நம்பி; இறந்து போனவனுக்கு சிலை வைத்தாலும் தியாகியென வணங்கி; இன்னும் அப்பாவித் தனமாகவே நம் நம்பிக்கையையும் உரிமைகளையும் சுதந்திரத்தையும்; நம் நாட்டுப் போலிகளை நம்பி நம்பியே வீணடிக்கிறோம் என்பதையும் மறைமுகமாய் உணர்த்துகிறது "கோ".

எரிய திராணியே இல்லாத விளக்காக இருந்தும், ஊருக்கே வெளிச்சம் காட்டுவதாய் என்னும் சில அரசியல்வாதிகளின் முகங்களை உடைத்தெறியத் துணிந்ததோடு நில்லாமல்; இப்படித் தான் இருக்கிறோம் நாம், இப்படித்தான் நடக்கிறது நம் அரசு, இப்படித் தான் நடத்துகிறார்கள் நம் அரசியல் வாதிகள் நம்மையும் மற்றும் நம் காவல் துறையினையும் என்பதை நமக்கும் காவலாளிகளுக்கும் ஏன் அரசியல்வாதிகளுக்குமே கூட; வலிக்காமல் உரைக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்

தன்னால் இயன்றதையேனும் என் மக்களுக்காகவும் என் தேசத்திற்காகவும் செய்கிறேனே என்பவர்களின் முகத்தையும் காட்டத் தவறவில்லை இந்த "கோ". அதேநேரேம், இன்றும் ரத்தம் கொதிக்க, நரம்பு புடைக்க சமூகத்தின் அவலம் காணும் போதெல்லாம் பொங்கி எழுந்து, மக்களின் சேவைக்கென மறைமுகமாய் உழைத்துக் கொண்டிருக்கும், உலக பார்வைக்கு வராத பல ஆக்கப் பூர்வமான இளைஞர்களை, யுவதிகளை, பெருமைக்குரிய மனிதர்களை இப்படம் காட்சிகளின் ஊடே தரமாக காண்பிக்கிறது.

இரவு நெருப்பில் அணையும் தீபங்களின் விலை, இவ்வளவு என்று' சரோ விபச்சாரிகள் குறித்த விவரங்களை சொல்ல; அஸ்வின் அப்படியா என்று கிண்டலடித்து சிரிக்க, சரி அதை விடு எனக்கு எவ்வளவு விலை தரலாம் சொல்' என்று கேட்க, அஸ்வின் அவளை அளந்து பார்த்துவிட்டு இவ்வளவென்று சொல்ல, அவள் இவ்வளவு தானா என்று சிணுங்கிக் கொண்டே 'சரி இவளுக்கு எவ்வளவு தரலாம் என்று கதாநாயகியை காட்டிக் கேட்க' அவன் அவளையும் அளந்துப் பார்த்துவிட்டு இன்னதென்று சொல்வதாக அமைந்த காட்சி யொன்று சற்று வளர்ச்சியின் விரசமாக தெரிந்தாலும் -

ஒரு ஆணும் பெண்ணும் அப்படி பேசுமளவும், அங்ஙனம் பேசிக் கொண்டாலும் தங்களுக்குள் எந்த காமப் பார்வையின் கொடூர நகங்களையும் பதித்துவிடாமலும், ஆண் என்பவன் பெண்ணை நம்பி, பெண் என்பவள் ஆணை நம்பி, நட்பு ததும்பி நிற்கும் அந்த காட்சிகள்; நம் இளையசமுதாயத்தினருடனான ஒற்றுமையினையும் பரஸ்பர புரிதலையும் காட்டுவதோடு மட்டுமல்லாமல், நாளைய நம் தலைமுறையின் சமரசத்தை நம் சந்தேகப் பார்வையினால் மறைத்துக் கொண்டு; அவர்களை தன் வசத்திற்கே மீண்டும் மீண்டும் வளர்க்க வேண்டாமே' எனும் தெளிவையும் இப்படம் காட்டுகிறது.

என்னதான் இருந்தாலும்; ரொம்ப பெருசாக மெச்சிக் கொள்ளும் படமோ, பேச வேண்டிய பிரம்மிப்போ இல்லை என்று சிலர் இப்படத்தை பற்றிப் பேசிக் கொண்டாலும், நாளைய சரித்திரத்தை மாற்றி எழுதப் போகும் பொறி இப்படத்திலும் இருக்கிறது.

அந்த கிருஷ் எனும் பாத்திரம் அந்த சூழ்சுமம் புரிந்து; தமிழ்நாடே மெச்ச வேண்டிய இளைஞனை நான் மட்டும் மெச்சுகிறேன் என்று சொல்லி முடியும் இடத்தில்; எனக்கு நம் தேசத்தின் அதுபோன்ற எண்ணற்ற இளைய சமுதாயத்தினரின் முகம் அப்பட்டமாய் தெரிந்தது.

ஒரு பெரிய புரட்சிகரமான கதையை; மிக யதார்த்தமான திரைப்பட பாணியில் சொல்ல முயன்ற இயக்குனருக்கு, அதற்கு பலம் சேர்த்த இசையமைப்பாளருக்கு, ஒளிப்பதிவாளருக்கு, அவர்களின் வெற்றியை முழுதுமாக தன் நடிப்பினால் பெற்றுத் தந்த ஜீவா, அஜ்மல், கார்த்திகா மற்றும் சரோ, கிருஷ், கதிராக வரும் பாத்திரங்களும், சமூக அமைப்பான சிறகுகளின் உறவுகளும், பிரகாஸ் ராஜ் போன்ற இன்னும் நிறைய பேர் மட்டுமின்றி திரைக்குப் பின்னின்று உழைத்தவர்கள் அனைவருக்குமே படத்தின் நுழைவுச் சீட்டினை தூக்கி வீசியதோடு நின்றுவிடாமல் மனதார ஓர் நன்றியையும் சொல்வோம்.

காரணம், இப்படத்தின் மூலக் கருத்து நம் தேசத்து ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் புரியவேண்டும். அரசியலுக்காக இளைஞர்கள் படிக்கவேண்டும். நானொரு முதலமைச்சராகி பிரதமராகி என் தேசத்தை உலகம் மெச்ச உருவாக்கிக் காட்டுவேன் என்று இளைய சமுதாயத்தினர் சபதம் ஏற்கவேண்டும். நம் தொகுதி வேட்பாளராகவாவது இளைஞர்கள் தன் ஒட்டுமொத்த அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மெல்ல மெல்ல நகர்ந்து தவறுகளின், சமூக அவலங்களின் ஆணிவேர் வரை ஊடுருவி அவைகளை கற்றையாகப் பிடுங்கி யெறிய வேண்டுமெனில் அரசியல் நமக்கு சரியாக புரியவேண்டும். அரசியல் வாதிகளை நமக்குள்ளிருந்து சரியாக நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு அரசியலை நாம் முறையாக கற்க வேண்டும். அரசியல் குறித்த நம் பங்கினை ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் தெரிந்துக் கொள்ளவேணும் வேண்டும்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது, இந்த இளைஞர்கள் பக்குவப் பட்டவர்கள். இனி வரும் காலங்களில் இவர்களால் இன்னும் ஒரு நல்ல சமுதாயத்திற்குரிய, மனிதர்களை இவர்கள் பெற்றுத் தருவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. நாளைய சமுதாயம் நாளைய மனிதர்களால் எழுச்சிக் கொள்ள இன்றைய இளைய சமுதாயம் நல்ல விதையாக தம்மை தூவிக் கொள்ளுமென்று நான் நம்புகிறேன்.

அந்த நம்பிக்கையினை வலுப்படுத்த இதுபோன்ற திரைப்படங்களின் ஊடாக உணர்த்தப் படும் உணர்வுகள்; கலையினை என்றும் தமிழர்கள் மதிப்பதன் காரணமென்றுக் கருதி, இன்னும் பிற நாட்களின் நம் வளர்ச்சிக்கு நம் தமிழர் பண்பும், மொழியின் வளமும் அதொத்த காதலும், காதலினால் பாகுபாடற்ற தன்மையும் நமக்குள் நிறைந்து நமக்கு துணை நிற்குமென்று நம்பி; அந்த காதலின் மென்மை குறையாது நம் வாழ்தலைப் பற்றிப் பேசும் இதுபோன்ற திரைப் படங்களுக்கு; திரைப்படத்தில் அளவுக்கதிகமாக நாம் நம் நாட்டத்தை செலுத்திவிட்ட காரணத்தினால் நன்றியினை தெரிவிப்போம்!!


வித்யாசாகர்


. விஜய்யின் வேலாயுதம் படம் ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
காவலன் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஜெயம் ராஜா இயக்குகிறார். இப்படத்தை பற்றிய

சுவாரஸ்யமான தகவல்கள்:

மக்களில் ஒருவனாக இருக்கும் ஓர் இளைஞன், மனித நேயப் பண்பால் மக்களுக்கே தலைவன் என்கிற நிலைக்கு உயருவது தான் படத்தின் கதை. சுருக்கமாக சொன்னால் அகரம் ஒன்று சிகரமாய் மாறும் கதை.

படம் ஒரு முக்கோண காதல் கதையாக அமைந்துள்ளது. இந்த காதலுடன் அண்ணன் தங்கை பாசத்தையும் மிக அழககாக, புதுவிதமாக சொல்லும் படமாக இயக்கி இருக்கிறார் ராஜா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாசமலர் படத்திற்கு பிறகு இப்படியொரு அண்ணன், தங்கை பாசத்தை எந்தபடத்திலும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறுகின்றனர்.

கிராமமும், நகரமுமாக மாறி, மாறி பயணக்கிறது வேலாயுதம் படத்தின் கதை. கிராமத்துக் கிளர்ச்சியையும், நகரத்து கவர்ச்சியையும் தரிசிக்க வைக்க காட்சி அமைப்புகள் படத்தில் உள்ளன.

* படத்தில் கிராமத்து பால்காரன் வேலுவாக வரும் விஜய் கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் ஜொலிக்கிறார். அவன் விற்பது பால். ஆனால் அன்பால், நட்பால், பிறரையெல்லாம் தன்பால் ஈர்க்கிறான். அவர் காற்றுமாதிரி இருப்பவன் அந்த ஊருக்கு. காற்றில்லாமல் உயிர் வாழ முடியாது அதுபோலத்தான் ‌இந்த வேலு(விஜய்) அந்த ஊருக்கு. காதலனாக, பாசமுள்ள அண்ணனாக, ஆவேச இளைஞனாக விஜய்க்கு ஜீசல்பந்தி நடத்து வாய்ப்பு இப்படத்தில் கிடைத்துள்ளது.

படத்தில் இரண்டு நாயகிகள் ஒருவர் பத்திரிகையாளராக வரும் ஜெனிலியா, மற்றொருவர் ஹன்சிகா மோத்வானி. இவர்களுடன் சந்தானம் ‌காமெடியில் தன் பங்கிற்கு அசத்த இருக்கிறார்.

* படத்தில் பாலிவுட்டை சேர்ந்த இரண்டு பிரபல வில்லன்கள் உட்பட 15 வில்லன்கள் நடித்திருக்கின்றனர்.

* படத்தில் ஒன்றரை கோடி ரூபாயில் ஒரு திருமண காட்சியை அமைத்துள்ளனர். இந்த திருமணத்திற்காக ஊரே பந்தல்போட்டு, கோலம் போட்டு, சீரியல் லைட்கடடி, தோரணம் அமைத்து ஊர்திருவிழா போல் அலங்காரம் செய்து ஆராவரம் செய்திருப்பது பிரமாண்டமான முயற்சி. ஊர் கூடி தேர் இழுப்பது போல, ஒரு ஊரே முன்னின்று நடத்தி வைத்துள்ள அந்த திருமணக்காட்சி, இதுவரை தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு படத்திலும் அமைந்ததில்லை.

வேலாயுதம் படத்திற்காக அந்த ஊரில் ஒரு கிணறு வெட்டி, அதை அன்பளிப்பாக அந்த ஊருக்கே அளித்திருக்கின்றனர்.

நடிகர்திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த பாசமலர் படத்தினை புதுபிரிண்ட் போட் அந்த ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸில் போட்டு காட்டி மக்கள் பார்ப்பது போன்ற காட்சி படமான போது அனைவரும் படத்தில் மூழ்கிக் கிடக்க டைரக்டர் கட் சொல்ல மறந்து விட்டாராம்.

படத்தில் விஜய்க்கு ஓபனிங் சாங்கை சுமார் ரூ.2 கோடி செலவில் திருமூர்த்திமலையில் படமாகியுள்ளனர். ஏற்கனவே “சிவகாசி”, “போக்கிரி” படங்களில் விஜய்க்கு ஓபனிங் சாங்கிற்கு நடனம் அமைத்த அசோக்ராஜ், இப்பாட்டுக்கு நடனம் அமைத்து இருக்கிறார். கிராமத்து தப்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற ஏராளமான ஆட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் 200கிராமத்து நடன கலைஞர்கள் நயம்காட்ட 150 வெளிநாட்டு நடனக்காரர்கள் ஆடி வெளிநாட்டுக்கலை நயம் காட்டியுள்ளனர். படத்தில் விஜய் எப்படி ஒரு பிரம்மாண்டமோ அதுபோல இந்தபாடலும் பலமடங்கு பிரம்மாண்டமாக இருக்குமாம்.

இப்படத்தின் சூட்டிங்கில் விஜய் நடிக்க தொடங்கியது முதல் முடியும் வரை ஒருநாள்கூட லேட்டாக வந்ததில்லையாம். அவரால் ஐந்து நிமிடம் கூட சூட்டிங் தாமதமானதில்லையாம். படத்தில் ஒவ்வொரு காட்சியையும், உணர்வுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்து கொடுத்திருப்பதாக கூறும் இயக்குநர், விஜய்க்கு இந்தபடம் உச்சகட்ட ‌காமெடி படமாகவும் அமையும் என்று கூறுகிறார்.

படத்தின் தூணாக ஒளிப்பதிவாளர் ப்ரியன் அமைந்திருக்கிறார். ஒவ்‌வொரு காட்சியையும் மிக அழகாக படமாக்கி இருக்கிறாராம். இவர் ஏற்கனவே சாமி, திமிரு, போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

வேட்டைக்காரன் படத்தை மிஞ்சும் வகையில் இப்படத்தின் இசை வ‌ரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்தில் விஜய்‌யை பாடவைக்கலாம் என்று முயற்சித்து இருக்கிறார். ஆனால் கடைசியில் விஜய் ஆண்டனியை பாடும்படி செய்துவிட்டார் விஜய்.

படத்தில் மொத்தம் 5 பாடல்கள், 6 சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கின்றனர்
நன்றி தினக்குரல்

No comments: