டயானா மோதிரத்தில் இலங்கை மாணிக்கம்



.

டயானா மோதிரக் கல் இலங்கையிலிருந்து வந்ததுபிரிட்டனின் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனின் திருமணம் வெள்ளிக்கிழமை(29.4.11) அன்று லண்டனில் இடம்பெறவுள்ள நிலையில், கேட் அவர்களுக்கு வில்லியம் அளித்த நிச்சயதார்த்த மோதிரத்தில் இருக்கும் நீல மாணிக்கக் கல் இலங்கையிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
காலஞ்சென்ற இளவரசி டயானா தனது நிச்சயத்தின் போது அணிந்த அந்த மோதிரத்தை பின்னர் அவரது மகனான வில்லியம் தனது மனைவியாக வரவுள்ள கேட் மிடில்டன்னுக்கு தங்களது நிச்சயார்த்தத்தின் போது அணிவித்தார்.
அம்மோதிரத்தில் இருக்கும் நீல மாணிக்கக் கல் இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் சுமார் 35 வருடங்களுக்கு முன் அகழ்ந்து எடுக்கப்பட்டது என்று கூறுகிறார் இலங்கையின் ரத்தின கற்கள் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனத்தின் உறுப்பினரான அப்துல் ரஹுமான் ஷெரீஃப்

இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு வந்த விதம்

நீல மாணிக்க கல்
நீல மாணிக்க கல்




























அகழ்ந்து எடுக்கப்பட்ட போது அது 32 காரட் எடை கொண்டதாக இருந்தது என்றும், பின்னர் அது 18 காரட் கொண்ட அந்த நீலக் கல் பட்டை தீட்டப்பட்டு கொழும்பிலுள்ள ஒரு நகை வியாபாரிக்கு விற்கப்பட்டது என்று கூறும் ஷெரீஃப் பின்னர் கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு வியாபாரிக்கு அது விற்கப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார்.
அந்தக் கனேடிய வியாபாரி அதை மீண்டும் 12 காரட்டுகள் கொண்ட கல்லாக வெட்டி லண்டனில், ராஜ வம்சத்துக்கு நகைகளை செய்யும் கரார்டுக்கு விற்றுள்ளதாகவும், கரார்ட் அதை வைரங்களுடன் பதித்து டயானாவின் நிச்சயதார்த்ததுக்கு வழங்கியது என்றும் தெரிவிக்கிறார் ஷெரீஃப்.
35 வருடங்களுக்கு முன்னர் சுமார் 25,000 அமெரிக்க டாலர் பெறுமதியாக இருந்த அந்த நீலக் கல் தற்போதைய சந்தை விலையில் 600,000 டாலர்கள் அளவுக்கு இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது.
உலகளவில் இடம்பெறும் நீல மாணிக்க வர்த்தகத்தில் இலங்கையின் பங்கு சுமார் 25 சதவீதம் என்றும் அதன் வருடாந்திர மதிப்பு 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இலங்கையின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பகுதியில் ரத்தினக் கற்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்நாட்டின் ரத்தின கற்கள் மற்றும் நகை வியாபாரிகளின் சம்மேளனம் கூறுகிறது.

Nantri:bbc tamil

No comments: