நிம்மதி; கிலோ நாலு ரூபாய் - வாழ்வியல் கட்டுரை - வித்யாசாகர்!!

.
அது ஒரு மலையடிவாரப் பகுதி. அங்கு ஒரு செல்வந்தர் மகிழுந்தில் வந்து இறங்கினார். சுற்றி நாங்குப் புறமும் பார்த்தார். மலையினை நோக்கி பார்த்தார். சற்று தள்ளி ஒரு வயதானவர் ஒருவர் காவி உடையில் நின்றிருக்க அவரிடம் சென்று -

"ஏங்க இங்க ஒரு பிக்குளி சாமியார் இருப்பாராமே அவரைப் பார்க்க முடியுமா?"

"ஏன் முடியாது, தாராளமா பார்க்கலாம் போய் பாரு"

"எங்க இருப்பார் இப்போ?"

"எங்கனா இருப்பார், போய் சுத்திமுத்தி பாரு சாமி"

"இல்லை பெரியவரே அவர் இருக்கும் ஆசிரமம் ஏதோ இருக்குன்னு சொன்னாங்க. அதற்கு எப்படிப் போவது?"

"பெருசா ஆசிரமம் எல்லாம் அந்தாளுக்குக் கிடையாது. அதோ அந்த மலை ஏறி இறங்கினா ஒரு குடிசை இருக்கும் பார்; அதில இருப்பார்; இல்லைன்னா அந்த குடிசை பக்கத்துல ஒரு பெரிய மரமும் மரம் தாண்டி சின்னதா ஒரு ஆறும் ஓடும் அதன் கரையில இருப்பார் போய் பாரு"

இப்போதெல்லாம் சிலரின் அவதூறு பேசத் தக்க நடத்தையினால்; சாமியார் என்றாலே சலிப்பு வருவதை அத்தனையாக அந்த செல்வந்தர் கண்டுக் கொள்ளவில்லை. பெரியவர் கைகாட்டிய படி நடந்து போனார்.


அப்படி போக, அந்த 'பிக்குளி சாமியார்' எனும் பெயர்கொண்ட நடுத்தரம் தாண்டிய சற்றே வயதான ஒருவர் தண்ணீரின் ஒரு கரையில் நின்று கொண்டு, அடுத்த கரையிலிருந்த மரங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டு, ஆழமான சிந்தனையில் அமர்ந்திருந்தார். செல்வந்தர் அவரருகில் சென்று நின்றதும் அவர் நிமிர்ந்து பார்த்து..

என்ன வேண்டும் ஐயா என்றார். உங்களைத் தேடித் தான் வந்தேன் சாமி என்றாரந்த செல்வந்தர். என்னைத் தேடிவரும் அவசியம் உங்களிடம் தென்படவே இல்லையே. நீங்கள் உடுத்தியிருக்கும் ஆடையே நீங்களொரு பெரிய பணக்காரராகத் தான் இருப்பீர்கள் என்பதை கான்பிக்கிறதே"

"ஆம் சாமி அதற்கெல்லாம் எந்த குறையும் இல்லை"

"வேறென்ன தொழிலில் விருத்தி இல்லையா?"

"அதுக்கெல்லாம் குறையில்லை சாமி, நகரத்திலேயே; பெயர் சொல்லக் கூடிய தொழிலதிபர் நான் தான்"

"மனைவி குழந்தைகள் ஏதேனும் குறை வைத்தார்களா?"

"அவர்களிடமெல்லாம் எனக்கு எந்த குறையும் தெரியவில்லையே சாமி, தங்கமானவர்கள் அவர்கள்"

"வீடு மனைகள் நிறுவனம் ஏதேனும் பறிபோய்விட்டதா ?"

"என்னை எல்லாம் யாரும் தொடக் கூட முடியாது சாமி"

"வீடு இருக்கு, மனைகள் இருக்கு, பணம் இருக்கு, குடும்பம் சூழ இருக்கு பிறகு உங்களுக்கு என்ன தான் குறையென்று எண்ணி என்னிடம் வந்தீர்கள் ஐயா?"

"எனக்கு எல்லாமிருந்தும் ஒரு நிம்மதி இல்லையே சாமி.., தூக்கம்னா என்ன விலைன்னு கேட்கிற வகையில ஆயிட்டேனே சாமி"

"அப்படியா?!!"

ஆம் சாமி; படுத்தால் உறக்கமில்லை, எழுந்தால் நிம்மதியில்லை, வாழ்க்கையில் என்ன அப்படி சுகம் இருக்கோன்னு ஒரு சலிப்பு வருது சாமி, முடிவா சொன்னா; எதற்கு நாமெல்லாம் உயிர் வாழனும்னு இருக்கு"

"சரி நான் ஒரு யோசனை சொல்றேன் செய்வீங்களா?"

"நீங்கள் என்ன சொனாலும் செய்வேன் சாமி.."

"அப்போ போய் முதல்ல உங்களின் சொத்தை எல்லாம் விற்று ஒரு பெட்டியில் கொண்டு வாருங்கள், உங்களுக்கான புகழ் எல்லாம் அந்த ஒரு பெட்டியில அடங்கிடனும்"

"அது முடியாதே சாமி.."

"ஏன்...?"

"ஒரு பெட்டியில் எல்லாம் என் பணமும் புகழும் நிரையாதே சாமி"

"சரி அப்போ ஒன்னு செய் மொத்தத்தையும் விற்று தங்கமா மாற்றிக் கொண்டு வா.."

"அப்போ கூட போதாது சாமி"

"சரி; அப்போ ஒண்ணு செய், அந்த சொத்தை மொத்தத்தையும் உன்னைத் தவிர, உன் குடும்பம் தவிர, உனக்குப் பிடிக்காதவங்க யார் பேரிலாவது எழுதி அந்த பத்திரத்தை ஒரு பெட்டியில் போட்டுக் கொண்டு வா, யார் அந்த பெட்டியை அடைகிறார்களோ அவர்களுக்கே அந்த சொத்து முழுதும் போகும் அதை மனசுல வைத்துக் கொள்" என்கிறார் அந்த பிக்குளி சாமி.

உடனே அந்த செல்வந்தர், வீட்டிற்கு போய் இப்படி இப்படி விவரம், வேறு வழியில்லை, சாமியார் சொல்லிட்டாரு, நான் எல்லாவற்றையும் விற்கப் போகிறேன் என்று சொல்ல; பிள்ளைகள் சொந்தமெல்லாம் அதை மறுக்க, இவர் அதட்ட, அவர்கள் கொபமுற, இவர் அடிக்கப் போக, யாரோ வந்து சிபாரிசு செய்யும் நிலைக்கு ஆகி கடைசியில்; இதில் எந்த மாற்றமும் இல்லை, பிடிக்காதவங்க வெளியில போங்க என்று சொல்ல -

எல்லோரும் வீட்டை விட்டே வெளியேற்ற. வீடு மற்றும் மொத்த சொத்தையும் 'இங்ஙனம் இதை யார் அடைகிறார்களோ அவர்களுக்கே சொந்தம்" என்று எழுதி ஒரு பெட்டியில் போட்டு வைத்து விட்டு, நாளை சென்று சாமியை பார்க்கலாமென்று எண்ணி, அவ்வளவு பெரிய மாளிகையில் சென்று தனியே ஒற்றை ஆளாக படுத்துக் கொள்கிறார்.

சற்று நினைத்துப் பாருங்கள், யாருமில்லாத அந்த வீடு எப்படி இருக்கும் என்று. எப்படி இருக்குமென்ற வருத்தம் நமக்குப் புரியும் முன் அந்த செல்வந்தருக்கு புரிய வந்தது.

பிள்ளைகளும், பேரக் குழந்தைகளின் அன்பும் அவர்களின் பேச்சும் அரவணைப்பும் இல்லாத அந்த வீடு, தன் சுயநலத்திற்காக எல்லோரையும் வீட்டை விட்டே விரட்டிவிட்டு படுத்திருக்கும் இந்த வீடு 'மயனாத்தில் தனியே படுத்திருக்கும் ஒரு பிணத்தை காட்டுவது போல அவருக்கு ஒரே வாரத்தில் காட்டியது.

எங்கு திரும்பினாலும் குழந்தைகள் முகமும் மனைவியின் அன்பும் உறவுகளின் உபசரிப்பும் மாறிமாறித் தெரிய; யாருக்காக இத்தனை நாள் நாம் வாழ்ந்தோம், நம்மை வாழ்விக்கும் காரணிகள் எது எது என்று அவருக்கு நாளுக்குநாள் புரியவர, மேலும் அந்த வீட்டில் இனி ஒரு நொடி கூட தங்க மாட்டேன் என்று எண்ணிக் கொண்டு, அந்த செல்வந்தர் அங்கிருந்து எழுந்து அந்த பிக்குளி சாமியை தேடி ஓடுகிறார்.

இந்த இடைப் பட்ட நாட்களில் அவர் நடந்துக் கொண்ட அவருடைய செய்கையினால் இதுவரை அவருக்கு இருந்த பேரும் புகழும் போய் அவரை ஒரு பைத்தியம் போல் எல்லோரும் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். எடுத்ததை விடுவதற்குத் தயாராக இல்லாத அவரும் செய்வதை நிறுத்தவில்லையென்றாலும்; பொருளும் படையும் என எல்லாம் இருந்தபோது இவ்வுலகம் அவரை எப்படிப் பார்க்கிறது யாரும் தன்னோடு இல்லாமல் தனியே இருந்தால் எப்படி அவமதிக்கிறது என்பதை உணர்ந்தவராக அந்த சாமியாரை நோக்கி நடுஇரவையும் பாராமல் ஓட,

அவர் வருவாரென்பதையும் வருகிராரென்பதையும் முன்னமே அறிந்து கொண்ட அந்த சாமியார் வேறொரு மாறுவேடம் தரித்து; காட்டிற்குள் புகுந்த அந்த செல்வந்தரை வழி மறித்து, முகத்தில் ரெண்டு குத்துவிட்டு கீழ்தள்ளி பெட்டியையும் பிடுங்கிக் கொண்டு ஓடி மறைந்துவிடுகிறார்.

அந்த செல்வந்தரும் துரத்தி துரத்தி பின் பிடிக்கவும் முடியாமல் அதற்குமேல் அவரால் ஓடவும் முடியாமல் விட்டு விட; இருட்டிய நடுஇரவின் மெல்லிய வெளிச்சத்தில், பூச்சுகளின்; பறவைகளின் ரக்கையடிப்புகளில், மிருகங்களின் கத்தும் பிளிறும் சப்தத்தில், வெளிறிய முகத்தோடு ஓரிடத்தில் அமர்ந்துக் கொண்டார்.

ஐயோ மொத்த சொத்தும் போச்சு, சொந்தபந்தமும் போச்சு, பெரும் புகழும்கூட போச்சே; இனி யாரை நம்பி நான் வாழ்வது? பொருளற்ற என்னை இனி யார் மதிப்பார்? இந்த சாமியார் பேச்சைக் கேட்டு எல்லாத்தையும் இழந்தேனே, என் நிம்மதியே.......... போச்சே' என்று கதறி கதறி அழுதார்..

அந்நேரம் பார்த்து அந்த பெட்டியை பிடுங்கிப் போனவர் போல் யாரோ ஒருவர் எதிரே தெரிய துரத்திக் கொண்டு மீண்டும் ஓடினார், அப்போது தான் தெரியவந்தது, அந்த பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடுவது அந்த பிக்குளி சாமியார் என்று.

செல்வந்தருக்கோ கடுங்கோபம். கொலைவெறி பிடித்து மீண்டும் அவரை துரத்திக் கொண்டு ஓடுகிறார். விரட்டுகிறார். கத்துகிறார். கையில் சிக்கியதை எல்லாம் எடுத்து அவரை நோக்கி வீசுகிறார். ஒரு பாட்சாவும் பலிக்கவில்லை பிக்குளி சாமியிடம்.

அது எங்கோ காத்து போல ஓடி ஒளிந்துக் கொண்டது. சுற்றும் முற்றும் தேடி அலைந்து கடைசியாக ஓடி அலைந்து பின் பார்த்தால்; இடம் மாறி வேறெங்கோ வந்துவிட்டிருந்தார். வந்த வழியை தேடி தேடியே ஒரு நாள் போனது. பிறகு அங்குமிங்குமாய் அலைந்து அந்த சாமியாரை காடு முழுக்க தேடி அலைந்ததில் ஒரு வாரம் ஆனது.

ஒன்றுமே நடக்காலம் கடைசியாய் எங்கிருக்கிறோம் என்பது கூட விளங்காமல் ஏதுமற்றவனாய் வெறுமனே தோல்வியோடு ஊருக்குப் போக மனமின்றி காட்டுக்குள்ளேயே கொஞ்சநாள் சுத்துகிறார். இடைஇடையே உறவுகளின் நினைவு அவரை கொன்று வாட்டியது. மாற்றிகொள்ள இயலாத அதே பழைய உடையும், தண்ணீர் கூட ஒழுங்காக குடிக்காத தன் நிலையம் எண்ணி மிகவும் வருந்தினார் அந்த செல்வந்தர்.

அப்போ திடுக்கென அந்த வழியே ஓடி வந்த ஓர் ஆள்; பொம்பளை வேஷம் போட்டுக் கொண்டு வந்து அந்த செல்வந்தரிடம் அந்த பத்திரம் இருக்கும் பெட்டியை திடீரென நீட்டினார்.

செல்வந்தார் ஒரு கனம் திகைத்து ஏதோ போன உயிர் திரும்ப வந்துவிட்டதாய் எண்ணி அந்த பெட்டியை பிரித்து பத்திரங்கள் இருக்கிறதா என்று பார்க்கிறார். போன தன் உயிரே வந்துவிட்டது போல் மார்போடு அனைத்துக் கொள்கிறார். பத்திரத்தை அதுதானா என்று படித்துப் பார்த்துவிட்டு கண்ணீரோடு ஒரு பெரும் மூச்சினை இழுத்து விட்டுவிட்டு, அந்த பெண்மணியாக வந்த ஆளிடம் "இப்போ தான் எனக்கு நிம்மதியே வந்தது" என்கிறார்.

அந்த பெண் வேசமிட்டிருந்த ஆசாமி விழுந்து விழுந்து சிரித்தார்.

ஏளன சிரிப்பு கண்டு அந்த செல்வந்தர் நிமிர்ந்து அந்த பெண்ணாக வந்த ஆசாமியை பார்க்க, "பின்ன என்ன ஐயா வெறும் பெட்டியையும் காகிதங்களையும் பெற்றுக் கொண்டு நிம்மதியே இப்போ தான் வந்தது என்கிறீர்களே" என்று அவரிடம் வினவ, "இது என் செல்வம், இது என் உழைப்பு, இது நான் சம்பாரித்த என் சொத்து, இது கிடைத்து விட்டால் இனி எல்லாம் கிடைத்துவிடும், இதனோடு போன என் நிம்மதியும் பேரும் புகழும் வந்து சேரும்.

வாழ்க்கைக்கான அர்த்தமே உறவுகளோடு பகிர்ந்து மகிழ்வாக வாழ்வது தானேப்பா? இப்படி யாருமின்றி இக் காட்டில் அனாதையாக திரிவது ஒன்றுமில்லையே" என்று சொல்ல, தன் பெண் வேஷத்தை கலைத்துப் போட்டு விட்டு, உன் நிம்மதியை உன்னிடமே வைத்துக் கொண்டு எங்கெங்கோ நிம்மதி தேடி அலைந்தீர்களே ஐயா என்று அந்த பிக்குளி சாமியார் கேட்க.

செல்வந்தர் பிக்குளி சாமியின் நாடகங்களெல்லாம் தன் நிம்மதி எதுவென்று தனக்குப் புரிய வைக்கத் தான் என்று எண்ணி, தன்னை மன்னித்து ஆசி வழங்குமாறு கேட்க, பிக்குளி சாமியின் ஆசியுடன் அந்த செல்வந்தர் மீண்டும் சென்று தன் உறவுகளை அழைத்துக் கொண்டு, மாடமாளிகையும் கூட கோபுரங்களோடும்; பேரும் புகழுமாய் நிம்மதியாக வாழ்ந்தாராம்" என்பதோடு கதை முடிகிறது.

இது வெறும் ஒரு கதை மட்டுமில்லை, இதன் பாடம் தான் நாம் அத்தனை பேருக்குமே இன்றைய வாழ்வு நிலையில் தேவையும் படுகிறது. வாழும் ஐம்பது சதவிகித மக்கள், நிம்மதியை உறவிகளிடத்திலும் , வீட்டினுள்ளும் ஏன் தன் கையிலேயே வைத்துக் கொண்டு தான் ஊரெல்லாம் தேடி அலைகிறது.

எனவே, அங்ஙனம் தன் நிம்மதியை பிறரிடம் தேடுவதை விட்டுவிட்டு, தன்னிடமே இருப்பதில் இன்பம் கண்டு, போதும் எனும் நிறைவோடு, வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் திறத்தோடு, தன்னாலியன்றதை தனக்கு கீழுள்ளோரோடும் பகிர்ந்து, எல்லோருமே நல்மனதோடு வாழ முயற்சித்தால்; நமக்கும் நம்மோடிருப்பவர்களுக்கும் நிம்மதி நம்புமளவு நிச்சயம் கிடைக்கும். கிலோ நாலுக்கல்ல இனாமாகவே பெறலாம்!!

கடைசியாய் விடைபெறும் முன் ஒன்றே ஒன்றினை சொல்லிக் கொள்கிறேன் "எல்லோரும் நலம் வாழ நாமும் வாழ்வதே; நிம்மதியும், மேன்மையுமன்றி வேறில்லை!!

-------------------------------------------------------------------------------------------

வித்யாசாகர்

No comments: