ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்?

.
காலச்சக்கரத்தின் பற்கள் வினாக்களால் ஆனவை போலும். பிறப்பு முதல் இறப்பு வரை இந்த வினாத்தொடர் நம்மை விடுவதேயில்லை. கடமை என்கிற காரியங்கள் நடக்கும். காலைமுதல் இரவு வரை வினாக்களும் கண்விழிக்கின்றன. பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகள் எப்படி பரபரப்பை ஏற்படுத்துகின்றனவோ அதைவிட பலமடங்கு மனதில் பதிப்பாகும். தினசரி வினாக்கள் எத்தனை? எத்தனை? விடைதேடி அலைவதற்குத் தானனே பொழுதே விடிகிறது! அன்றைய பிரச்சினை சமாளிப்பதும் அல்லது சந்திப்பதும் நடக்கும்போதே நாளைய கேள்வி நம்மை நோக்கும். என்ன செய்யப்போகிறாய்? எப்படிச் செய்யப் போகிறாய்? உன்னால் முடியுமா? செய்யத்தான் வேண்டுமா? என்று பல துணைக் கேள்விகளும் மனதிற்குள் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு நாளும் துள்ளி குதிக்கின்றன. இறுதியிட்டுச் சொல்வதும்,தீர்மானிப்பதும் எப்போதும் இலகுவாக இருப்பதில்லை. இதனால்தான், மனச்சுமை கூடி மனிதன் தடுமாறுகிறான்.


ஏழே ஏழு ஸ்வரங்கள்தான்.. இதிலிருந்து பிறக்கும் இராகங்கள் பலப்பல.. அதேபோல், இதயச்சுரங்கத்துள் எத்தனைக் கேள்விகள் எழுகின்றன
கண்ணதாசனின் ஆழ்மனம் எழுதிய வரிகளிவை என்றே நேசிக்கிறேன். வாழ்க்கையை அக்கம்பக்கம் படித்துப்பார்த்திட இவ்வரிகளை வாசிக்கிறேன்.

ஏழிசை ஸ்வரமெடுத்து ஏந்திவந்தக் கலைமகளும்
எம்.எஸ்.வி. எனும்மகனை இத்தரணிக்குத்த தந்தனால்..
எங்களைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி என்பதுவும்
இனியதொரு தமிழ்ச்சொல்தான்!

என்று பம்மலில் வரவேற்பு பெற்று கண்ணதாசன்பெயரில் எங்கள் அமைப்பு (கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்) நிறுவிய கண்ணதாசன் விருதினை முதன் முதலாய் பெற்ற நம் அன்பிற்குரிய மெல்லிசை மன்னரின் ஞானலயத்தில் உருவான அதியற்புத அபூர்வராகமிது! முழுக்க முழுக்க கர்நாக சங்கீதத்தில் உருவானது! தனக்கே உரிய அருமையான குரலில் சங்கீதவாணி வாணி ஜெயராம்பாடிய பாடலிது! பாலச்சந்தர் படங்களுக்குப் பாடல் எழுதுவது என்பது இனிய அனுபவம் என்று கண்ணதாசன் சொன்னதற்கு இனிய சாட்சியிது!

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயசுசுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோசத்தில் அவனது கவனம்

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேளிவிதான் மிஞ்சும்

எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

கண்ணதாசனே.. நங்கூர வரிகளை நயமாகத் தந்தவனே!
உன் திசை எதுவோ அதுவே எமக்கு கிழக்கு!!

என்றும் அன்புடன்,
கண்ணன் சேகருடன் இணைந்து
காவிரிமைந்தன்
(மு.இரவிச்சந்திரன்)
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)

No comments: