மே தினம் என்றால் என்ன? – தந்தைப்பெரியார்


.

மே தினம், அதாவது பிரதி வருஷத்திய மே மாத முதல் நாளை உலகமெங்கும் உழைப்பவர்களால் பெரு நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில், முதல் அமெரிக்க தேசத்தில், தொழிலாளர், கிருஷிகர் அடங்கிய மக்கள் 8மணி நேரத்திற்கு மேல் தொழிற்சாலைகளிலும், வயல்களிலும், நிலங்களிலும் வேலை செய்வது அநீதி என்றும், அதனை வற்புறுத்துவது அதனினும் அநீதி என்றும், 8மணி நேர உழைப்பே போதுமானதென்றும் ஒரு கிளர்ச்சி புறப்பட்டது. அக்கிளர்ச்சியை முதலாளிகள் அடக்க முயன்றனர். அவ்வடக்கு முறை, மே மாதம் முதல் நாள் கொடூரமாக முடிந்ததன் பயனாக, எளிய தொழிலாளர், விவசாயிகளின் இரத்தம் சிந்தியபடியால், அந்நாள் தொழிலாளர்களின் மாபெரும் தியாக ஞாபகார்த்தமாகக் கொண்டு உலக முழுமையும் அத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்கள்.
தொழிலாளர் உலகில் முதலாளித் திட்டம் ஏற்பட்டது முதல் 8மணி நேரம் மாத்திரமல்ல, அவர்கள் உழைத்து வந்தது 10மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் ஊண் உறக்கமின்றி உழைத்து வந்திருக்கின்றார்கள்.


 சுரங்கங்களிலும், குன்றின் மேற்களிலும், புயல் காற்றிலும், பெரும் வெள்ளத்திலும் உழைத்து வருகின்றார்கள் . தொழிலாளர்களில் முதியோர் மாத்திரமல்ல, சிறு குழந்தைகளும் தூங்க வேண்டிய இரவிலும் உழைத்து வருகின்றனர். அனுதினமும் வேகா வெய்யிலிலும், குளிரிலும் தீக்ஷண்யத்திலும், வயலிலும், பாலைவனத்திலும் உழைத்து வருகின்றவர் யார்? இவ்வளவு கஷ்டமும் தங்கள் வயற்றுக்கு மட்டிலும் தானா? மணிக்கு 100 மைல் ஓடும் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஆயிரக்கணக்கான பிரயாணிகளுடைய உயிர் ஒரு சிக்னல் மென் அதாவது, அடையாளம் காட்டும் ஒரு கூலிவயமிடமிருக்கின்றது! அவனைப் பன்னிரண்டு மணி நேரம் இரவில் விழித்திருக்க வேண்டுமென்றால் இதனினும் கொடுமை எங்குளது. இவன் 8மணி நேரம் வேலை செய்வதுதான் உசிதமென்று வாதமிட்டால், அவனை மிஷின் கன்களைக் கொண்டு கொல்லுவதென்றால் யாரால் பொருக்க முடியும். இத்தியாதி கொடுமைகளைப் போக்கி, உலகத்தில் தொழிலாளருக்கு நியாயத்தை ஸ்தாபிக்க நேர்ந்த தினம் இந்நாளாகும்.
சென்னை புளியந்தோப்பில் பன்னீராயிரம் நெசவுத் தொழிலாளர்கள் ஐந்து மாத காலமாக பசியும் பட்டினியாயும் கிடக்க நேரிட்ட காலையில் அவர்களுக்குப் பதிலாக வேலைக்குப் போகும் கருங்காலிகளை நிறுத்த எத்தனித்த காலையில், அமைதிக்கும் ஒழுங்குக்கும் ஏற்பட்டுள்ள அதிகாரிகள் தொழிலாளர் எழுவரைச் சுட்டுக் கொன்றனர்!! இத்தியாகத்தைக் கொண்டாடும் தினமும் மே தினமாகும்.
1905ம் வருஷத்தில் வீணாக ஜப்பானியர் மேல் படையெடுத்த ஜார் சக்கிரவர்த்தியின் கொடுமையைத் தடுக்க முயன்ற ரஷியத் தொழிலாளிகள், பதினாயிரக்கணக்காக கொல்லப்பட்ட ஞாபக தினமும் இத்தினமாகும்.
பிரான்சு தேசம் புரட்சிக்கு பின்பு பிரான்சு நாட்டில், அநீதியும் கொடுமையும் மிகுந்து வந்தபடியால் பிரான்சு தேச தொழிலாளிகளும், விவசாயிகளும் ஒன்று சேர்ந்து, பாரீஸ் நகரத்தில் ஏகாதிபத்திய ஆட்சியை, தீ கம்யூன் என்ற உழைப்பவர்கள் ஆட்சியை ஸ்தாபித்த காலை, முதலாளிகளுடைய தந்திரத்தால் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான பிரான்சுத் தொழிலாளர்களுடைய ஞாபகத்தைக் குறிக்கும் தினம் இம் மேதினமாகும்.
ஆங்கில நாட்டினும் நிலவரியிலும், நிலங்களை இழந்ததாலும் மனம் பொறாத தொழிலாளர்கள் சார்ட்டிஸ்ட் என்ற இயக்கத்தைக் கிளப்பியதன் காரணமாக, அக்கூட்டத்தைச் சேர்ந்த அனைவரையும் நாசப்படுத்திய ஞாபகப் படுத்தப்படும் தினம் இத்தினமாகும்.
சீன நாட்டில் சன்யாட்சன் என்ற பெரியோர் ஸ்தாபித்த தேசீயத்தை அபிவிருத்தி செய்ய ஏற்பட்ட தொழிற்கட்சியை நாசமாக்கிய ஞாபக தினமும் இதுவாகும்.
நேற்று தென்இந்திய ரயில்வேயில் முப்பதினாயிரம் பேர்கள் வேலை நிறுத்திய காலையில் அவர்களின் தலைவர்கள் நிரபராதிகளாகிய பதினெட்டு பேரை, பத்து வருஷம் சிறை வாசமிட்ட ஞாபக தினமும் இத்தினமாகும். இவ்விதமாக உலகம் முழுமையும் அந்தந்த நாடுகளின் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றிய நாள் முதல் பல்லாயிரக்கணக்காக கஷ்டப்பட்டு, மாண்டு மடிந்த உழைப்போர்களுடைய தியாகத்தை ஞாபகார்த்தமாக கொண்டாட இத்தினம் ஏற்பட்டுள்ளது.
உலகில் உயிர் முளைத்த கால முதல், கஷ்டமும் தியாகமும் அவ்வுயிர் களுடன் கலந்தேயிருக்கின்றன. இது பிரபஞ்ச வாழ்க்கையிலொன்றாகும். கஷ்டமில்லாமல் தியாகமில்லாமல் ஒன்றும் கை கூடுவதாக வில்லை. உலகத்தின் மேல் நடப்பது, பெரும்பான்மை மக்களுக்கு முள் கம்பளத்தின் மேல் நடப்பதைப் போல் ஒத்திருக்கின்றது. முள் கம்பளத்தின் மேல் நடக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆனால் அக்கம்பளத்தின் மேல் நடந்தால்தான், சுகப் பேற்றையடைய முடிகின்றது. இதைத்தான் தொழிலாளர் இயக்கத்துக்கு ஆசானாகிய காரல் மார்க்ஸ் என்பார் லோகாயுதத்தின் முரண் என்பார். கஷ்டமில்லாமல் சுகமில்லை. சுகமும் கஷ்டமில்லாமல் கிடைப்பதில்லை. இதுதான் சமதர்மத் தத்துவத்தின் முரண்பாடு. பொது உடைமைக்காரர் யாராகிலும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அலட்சியம் செய்ய முடியாது. சோஷலிஸ்ட் அனைவரும் இந்த பிரபஞ்ச முரண்பாட்டை அடிப்படையாக வைத்து தங்கள் தத்துவத்தைக் கட்ட வேண்டும். சுதந்திரம் வேண்டுமானாலும், ஸகோதர தத்துவம் வேண்டுமானாலும், சரிசம தத்துவம் வேண்டுமானாலும் தியாகத்தால் தான் அடைய முடியும்.
உடலுக்கு உணவு வேண்டுமானால், அறிவுக்குக் கல்வி வேண்டுமானால், தியாகம் அன்னியில் எதையுமடைய முடியாது! சுகம், துக்கம்; துக்கம், சுகம் வாழ்வில் பிணை கொண்டிருக்கிறபடியால், தியாக மூர்த்திகள் செய்து வரும் தியாகம் உலக ஞாபகத்தில் இருந்து கொண்டேயிருக்கும். இவ்வித தியாக மூர்த்திகளின் ஞாபகத்தைக் கொண்டாடும் தினம் இந்த மே மாதம் முதல் தேதியாகும்.
இந்த மே தின ஞாபகம் ஏகாதிபத்திய ஆட்சிக்கல்ல, செல்வத்திற்கும் சம்பளத்திற்குமல்ல, கொடுங்கோன்மைக்குமல்ல, உலக மக்களனைவரும் உண்டு உடுக்கவும், இருந்து வாழவும், சந்ததி விருத்தி செய்யவும், அந்த சந்ததியார் உலக சுகப் பேற்றை பெறவும் செய்யும் தியாகமாகும்.
தற்போது உலகம் பலவித இடுக்கண்களால் கஷ்டப்பட்டு வருகின்றது. இல்லாமையும் வறுமையும், பஞ்சமும், வெள்ளமும் உலகை ஒருபுறம் வருத்தி வர கொடுங்கோன்மைக் கட்சிகளாலும், முதலாளிகளின் அட்டூழியத்தாலும், வறுமையாலும் உலக நெருக்கடி அதிகரிக்கும் போலும்! உலகம் பிற்போக்கால் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிவரும் போலும்!! உலக நெருக்கடி குறைந்த பாடில்லை. சேனைத் தளங்கள் உலகில் அதிகரித்து வருகின்றன. மகாயுத்தத்தின் முன்னிருந்த சேனைத்தளங்களைவிட எண்மடங்கு அதிகரித்திருக்கின்றன. இத்யாதி வியர்த்தங்களால் உலக மக்கள் இனிவரும் மாபெரும் யுத்தத்தில் மடியப் போகின்றனர். இனிவரும் யுத்தம் உலகில் விளைபொருள் போதாதென்பதற்கல்ல. செய்பொருள் செய்ய முடியவில்லை என்பதற்கல்ல. வல்லரசுகளின் ஆணவத்தாலும் அகம்பாவத்தாலும் விளையப் போகும் மகா பாதகமென அறிக!!! இம்மாபெரும் கேட்டைத் தடுப்பதற்கு உலகில் ஒருவரேயுளர். அவர்களால்தான் ரஷ்ய தேசம், புரட்சிக்குப் பின் நடந்த உள்நாட்டுக் கலகம் அடக்கப்பட்டது. வெளிநாடுகளின் உதவி பயன்படாமல் போயிற்று. போலண்ட் தேசத்து நெருக்கடியைச் சாக்காக வைத்துக் கொண்டு வல்லரசுகள் சோவியத் அரசை நசுக்கச் செய்த முயற்சி வீணானதாயிற்று. இவர்கள் யாரெனில் அகில உலக தொழிலாளர்களாவர். இவர்கள் தான் உலக சமாதானத்தை நிலைக்க வைக்க வலிமை கொண்டவர். இவர்கள்தான் அகில உலகப் போரை நிறுத்த வல்லவர். இவர்களுக்கு வேண்டியதொன்றே. அதாவது, அகில உலகத் தோழர்கள் ஒற்றுமைப்பட்டு சுகத்திலும், துக்கத்திலும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய தொன்றே. இந்த ஒற்றுமைக்காக உலகத் தொழிலாளர் பல்லாண்டுதோறும் பட்ட கஷ்ட நிஷ்டூரங்களை யெல்லாம் ஞாபகப்படுத்தும் தினம் மே மாதம் முதல் தேதியாகும்.
—————தந்தை பெரியார் – “ புரட்சி” தலையங்கம் 29.04.1934
******************************************************
மே விழாவும் ஜூபிலி விழாவும்
மே மாதம் முதல் தேதியில் மே தினக் கொண்டாட்டமும், மே மாதம் 6ந் தேதி மன்னர் ஜூப்பிலியும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஒன்று போலவே எங்கும் கொண்டாடப்பட்டிருக்கும் விஷயம் தினசரிப் பத்திரிகைகளில் பரக்கக் காணலாம்.
மே தின விழாவானது உலகம் பாடுபட்டு உழைக்கும் மக்களின் ஆட்சியின் கீழ் வர வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டாடுவதாகும்.
ஜூப்பிலி விழா இன்று ஆட்சி புரியும் அரசரின் ஆட்சியைப் பாராட்டியும் அவரது ஆட்சிக்கு கால் நூற்றாண்டு ஆயுள் ஏற்பட்டதை பற்றி ஆனந்தமடைந்தும் இனியும் நீடூழி காலம் இவ்வாட்சி நீடிக்க வேண்டும் என்று ஆசைபட்டும் கொண்டாடியதாகும்.
இந்தியாவின் பிரதிநிதித்துவ சபை என்று சொல்லப்படும் இந்திய தேசீயக் காங்கிரசானது மேற்கண்ட இரண்டு தத்துவங்களுக்கும் விரோதமான மனப்பான்மையைக் கொண்டது.
எப்படியெனில் முறையே (சூத்திரர்) தொழிலாளி, (பிராமணர்) முதலாளி அல்லது அடிமை எஜமான் என்கின்ற இரண்டு ஜாதிகள் பிறவியின் பேரிலேயே இருக்க வேண்டும் என்றும், அன்னிய ஆட்சி என்பதான பிரிட்டிஷ் ஆட்சி கூடாது என்றும் சொல்லும்படியான கொள்கைகளைக் குறிக்கோளாகக் கொண்டதென்று சொல்லிக் கொள்ளும் ஸ்தாபனமாகும்.
ஆனால் இந்திய மக்கள் இந்த இரண்டு கொள்கைகளைக் குறிக்கோளாகக் கொண்ட காங்கிரசை சிறிதும் மதிக்கவில்லை என்பதை இந்த இரண்டு விழாவும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக்காட்டி விட்டது.
காங்கிரசானது வெளிப்படையாக இந்த இரண்டு விழாக்களையும் எதிர்க்க யோக்கியதை இல்லையானாலும் மனதிற்குள் தனக்கு உள்ள அதிர்ப்தியை பல வகைகளில் காட்டியது போலவே நடித்துக் கொண்டது. ஒரு பயங்கொள்ளித் தீர்மானத்தையும் போட்டு விளம்பரப்படுத்திற்று. என்ன செய்தும் ஜபம் சாயவில்லை.
இந்த இரண்டு விழாவும் இது வரை நடந்ததைவிட பல மடங்கு அதிகமாகவே கொண்டாடப்பட்டுவிட்டது.
இந்த நாட்டில் தேசீய அபிலாசைகளுக்கு சர்வாதிகாரிகளாகவும், ஒரே பாஷ்யக்காரர்களாகவும், இருந்து வந்தவை இந்து, சுதேசமித்திரன் பத்திரிக்கைகள்.
அவைகள் தங்களுக்கு இஷ்டப்பட்டபோது அரசரை விஷ்ணுவின் அம்சம் என்று பூஜிப்பதும் தங்களுக்கு இஷ்டமில்லாதபோது அரசர் மாளிகைக்குள் யாராவது சென்று வந்தால் அவர்களை தேசத் துரோகிகள் என்றும், தேசத்தைக் காட்டி கொடுப்பவர்கள் என்றும் சொல்லுவதுமாய் மக்களை ஏய்த்து ஆட்சியையும் மக்களையும் தங்களுக்கு அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்தன.
இந்த இந்து, சுதேசமித்திரன் சூட்சிகளையும் அவர்கள் கூட்டத்தினர் களின் மோசங்களையும் கண்டபின் இந்திய மக்கள் பெரும்பான்மையோர் அன்னியர் ஆட்சியாலேயேதான் இக் கூட்டத்தாரின் சூட்சிகளிலும் கொடுமை களிலிருந்தும் விடுதலை பெற முடியும் என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.
இதை உணர்ந்த இந்து, சுதேசமித்திரன் கூட்டம் இப்பொழுது ராஜபக்திக்குப் போட்டி போட ஆரம்பித்து விட்டன.
அதாவது கொஞ்சகாலத்துக்கு முன்பு இந்நாட்டுக்கு விஜயம் செய்த இளவரசர் அவர்களை என்னஎன்னமோ பொருத்தமில்லாத வீம்புகளையும், வீரியங்களையும் எடுத்துச் சொல்லி பஹிஷ்காரம் செய்யத் தூண்டிய கூட்டம் இன்று நொண்டிச் சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு நிபந்தனையற்ற சரணாகதி போல் வாழ்த்துப் பாடி இருக்கின்றன.
அதாவது “மாட்சிமை” தங்கிய ஐந்தாம் ஜார்ஜ் அரசர்,
“வெள்ளி விழா கொண்டாடும் இந்த சுபதினத்தில் மன்னர் பிரானை நாம் மனப்பூர்வமாகப் பாராட்டுவதோடு அவர் ஆரோக்கியமாக திடகாத்தரராக நீடூழி வாழ்ந்துவர வேண்டுமென்று நாம் பிரார்த்திக்கிறோம்”.
“அவருடைய இந்தியப் பிரஜைகளுக்கு அவரிடத்தில் பூரண நல்லுணர்ச்சி இருந்து வருமென்பதில் சந்தேகமில்லை”.
“மனமார வாழ்த்துக் கூறுகிறோம்” என்று எழுதி இருக்கின்றன.
இந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் நாம் ஆக்ஷேபிக்க வரவில்லை. இந்தியா ஒட்டுக்குமே பஹிஷ்காரம் செய்த சைமன் கமிசனை வரவேற்று உண்மையை எடுத்துரைத்தவர்களுக்கு அரசரிடத்தில் மனஸ்தாபம் கொள்ள எவ்வித காரணமும் இருக்காதல்லவா. ஆனால் தேசீயப் பித்தலாட்டத்தின் யோக்கியதையை வெளிப்படுத்த இதை எழுதுகிறோம்.
நிற்க, இன்று இந்தியாவில் பிரிட்டிஷ் அரசராலோ, அரசாங்கத்தாராலோ ஏதாவது காரியங்கள் ஆக வேண்டி இருக்குமானால் அது பழய அரசர்களைப் போல் பிராமணர்களைக் காப்பாற்றுவதோ சுதேச அரசர்களுக்கும் ஜமீன்தாரர்களுக்கும் பாதுகாப்புகள் அளிப்பதோ வியாபாரிகளுக்கும் வட்டிக் கடைக்காரர்களுக்கும் கொள்ளை லாபம் உண்டாகும்படி நீதி செலுத்துவதோ அல்ல. இந்தக் கூட்டங்கள் ஏற்கனவே உச்ச ஸ்தானத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தையும் கைக்குள் போட்டுக் கொண்டு சுபீக்ஷமாக ஒன்று பத்தாக அக்ஷயமாக வாழ்ந்து வருகின்றன.
எனவே அரசர் கருணையும் அரசாங்க நீதியும் ஏழை மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்களுக்கும் ஏதாவது விமோசனம் செய்வதற்குப் பயன்பட வேண்டியதே முக்கியமாகும். இந்தத் துறைகளில் இதுவரை இந்த ஆட்சி ஏழை மக்களுக்கு ஒரு விதாயமும் செய்ததாகத் தெரியவில்லையானாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பெண் மக்களுக்கும் இதுவரை இந்தியாவில் இருந்த எந்த அரசும் ஆட்சியும் செய்திராத காரியத்தை ஒரு அளவுக்காவது செய்திருக்கிறது என்பதை நாம் தைரியமாய்ச் சொல்லுவோம்.
மற்றும் வேறு யாராவது குறை சொல்வதாய் இருந்தாலும் இத்துறைகளில் இதுவரை செய்தது போதாது என்றுதான் சொல்ல முடியுமே யொழிய ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லிவிட முடியாது.
ஆதலால் நமது மன்னர் அவர்களும் அவரது ஆட்சியும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களால் பாராட்டக் கூடியதே என்பதோடு இந்த ஆட்சியை நீடூழி காலம் நிலவ வேண்டும் என்றும் அவர்களால் வேண்டப்படுவதுமாகும்.
ஏழை மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு என்பது மாயத்தி னாலும் மந்திரத்தினாலும் சாத்தியப்படக் கூடியதல்ல.
பலர் ஊரைக் கொள்ளையடித்து குதிரில் கொட்டிக் கொண்டு 10 மூட்டை அரிசியை வேக வைத்து நொண்டி, முடம், கூன், குருடு, சோம்பேறி களுக்குப் போட்டுவிட்டால் ஏழை மக்களுக்குப் பெரிய உபகாரம் செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். இந்த முறை இந்த ஜூபிலியிலும் மே விழாவிலும் கூட பல இடங்களில் கையாளப்பட்டிருக்கிறது.
சிலர் சத்திரமும் சாவடியும் கட்டி சோம்பேறிகளுக்கும் சோதாக்களுக்கும் அன்னமளித்து உறங்க இடம் கொடுத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இது ஏழை மக்களை ஏமாற்றுவதேயாகும். இதனால் யாதொரு பலனும் ஏற்படப் போவதில்லை. சோம்பேறிகளும் காலிகளும் தான் இன்னமும் அதிகமாவார்கள்.
சிலர் பார்ப்பனர்களுக்குச் சாப்பாடு, கல்வி, கல்யாணம், சாந்தி முகூர்த்தம் செய்வித்தல் ஆகியவைகளைச் செய்து விட்டால் அதுவே ஏழைகளுக்குச் செய்ய வேண்டிய, பெரிய தருமம் செய்து விட்டதாக எண்ணுகிறார்கள். இவர்களைப் போல கண்காட்சிக்கு அனுப்பக் கூடிய ஞான சூனியர்களைக் காண்பது அரிது என்றுதான் சொல்ல வேண்டும்.
எனவே ஏழைகளுக்கு உதவி செய்வது என்பது ஏழ்மைத் தன்மை மனித சமூகத்தில் இல்லாமல் இருக்கும்படி செய்வதே ஒழிய இங்கொரு வனுக்கு அங்கொருவனுக்கு சோறு போடுவதால் அல்ல என்பதே நமது அபிப்பிராயம்.
ஏழ்மைத் தன்மை என்பது மனித சமூகம் ஒட்டுக்கே அவர்களது சாந்தமான வாழ்க்கைக்கே ஒரு பெரும் தொல்லையும் அசௌகரியமுமான காரியம் ஆகும்.
ஆதலால் மன்னர்பிரான் இந்த ஏழ்மைத் தன்மையை அடியோடு ஒழிப்பதற்கு சென்ற 25 ஆண்டு மாத்திரம் அல்லாமல் இன்னும் 50 ஆண்டும் அல்லாமல் 100 ஆண்டு ஆள வேண்டும் என்றும் ஆசைப்படு கின்றோம். அவரது வெள்ளி விழா, மே விழாவை ஒட்டி வந்திருப்பதாலும், மே விழா வெள்ளி விழாவை விட உலக முழுவதும் சுதந்திரத்தோடும் குதூகலத்தோடும் உணர்ச்சியோடும் கொண்டாடப் பெற்றிருப்பதாலும் இதுவே உலக பாட்டாளி மக்களின் அபிலாசையைக் காட்ட ஒரு சாதனமாய் இருப்பதாலும் அடுத்த விழா அதாவது அரசரின் தங்க விழா சமதர்ம விழாவாக மக்கள் எச்சாதியினராயினும், எம்மதத்தினராயினும், எத்தேசத்தவராயினும் பேதமற்று ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் எங்கும் இல்லாமல் இருக்கும்படியாகச் செய்த தினத்தைக் கொண்டாடும் விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்பதே நமதபிப்பிராயமும் ஆசையுமாகும்.
மே திருவிழா விஷயத்தில் தமிழ்நாட்டு மக்கள் நாம் எதிர்பார்த்ததற்கு மேலாகவே நடந்து காட்டியதற்கு மகிழ்ச்சியோடு பாராட்டுவதுடன் இனி கொண்டாடப் போகும் மே விழாக்கள் மற்றவர்களைப்போல் நாம் ஆக வேண்டுமென்று ஆசைப்படும் திருவிழாக்களாக இல்லாமல் நம்மைப் பார்த்துப் பிறர் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படும் திருவிழாவாக நடைபெற வேண்டுமென்றும் ஆசைப்படுகின்றோம்.
—————– தந்தை பெரியார் -“குடி அரசு” தலையங்கம் 12.05.1935
*********************************************
மே தினம் என்றால் என்ன?
இந்தியாவுக்கு ஏற்ற மே தினம்
தோழர்களே!
மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.
மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதானாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெய்னில் கொண்டாடப்படுவது போல் பிரஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.
அதுபோலவே தான் மேல் நாடுகளில் ஐரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை.
ஏனெனில் ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகின்றது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை.
ஆரம்ப தசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.
இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொருத்ததாகும்.
இங்கிலாந்து, பிரஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடுவதன் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப்படுவதாகும்.
எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாத வித்தியாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.
ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள்.
மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொருத்து இருக்கிறார்கள்.
அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி யென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்தியாவில்
ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு அடிமைப் படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய்க் கொள்ளாமல் மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும் செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்ற கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.
ஏனென்றால் இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும் அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.
நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்வதன் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.
ஐந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதியான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.
இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.
இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும் ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.
பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100க்கு 99லு பேர்கள் இன்று அடிமையாக இழி மக்களாக நடத்தப்பட வில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல்லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல்லாமல் ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப்பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக்காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப்பாளி களாகவும், ஏவலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா என்று பாருங்கள்.
மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளிகளாகவோ, சரீரப் பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும் சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா என்றும் பாருங்கள்.
இந்தியாவில் தொழிலாளி முதலாளி அல்லது எஜமான் அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான் சூத்திரன் பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில் தான் பெரியதொரு கிளர்ச்சியும் புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாட வேண்டியதாகும்.
இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் ஒரு ஜாதியார் 100க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளியாகவும், அடிமையாகவும், ஏழைகளாகவும், மற்றவர்களுக்கே உழைத்துப் போடுகின்றவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப்பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறுவிதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.
இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி அந்தஸ்துடன் வாழுவதையும் பாடுபடுகின்றவன் ஏழையாய் இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லுகின்றோம்.
ஆகவே ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத்தன்மையையும் அழிக்காமல் வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.
இந்தியாவில் ஏழை மக்களுக்கு ஆக தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆக பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும் மதத் தன்மையையும் ஒழிக்க சம்மதிக்க வில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர்களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.
ஏதாவது ஒரு தொழில்சாலையில் நித்திய கூலிக்கோ மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசி விடுவதினாலேயே அல்லது அத் தொழிலாளிகள் விஷயமாய்ப் பேசி விடுவதினாலேயே அல்லது அவர்களுக்கு தலைமை வகிக்கும் பெருமையை சம்பாதித்துக் கொண்டதினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளி களுக்குப் பாடுபட்டவர்களாகக் கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல் தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களாகவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.
இந்து மக்களின் மதமும் அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத்தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத் திற்கும், இந்நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுகின்றேன்.
இந்த முதலாளி தொழிலாளி நிலைமைக்கு வெள்ளையர் கருப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் தொழிலாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்கு கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களேயாகும். அந்த முறை மாற்றப்படக் கூடாது என்பதை மதமாகக் கொண்டிருக்கிறவர்களே கருப்பர்களாகும்.
ஆகையால் இதில் வெள்ளையர் கருப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.
இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும் மதத்தையும் காப்பாற்று வதையே முக்கியமாய்க் கொண்டிருப்பதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழிலாளி முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன்.
இன்று நம் நாட்டில் உள்ள பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி முதலாளி கிளர்ச்சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனாகவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி முதலாளி வகுக்கப்பட்டிருப்பது ஒரு அளவு மாறி வருகின்றது.
இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும் தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.
இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந்தனைகளைப் பார்த்தால் வகுப்புத் துவேஷம் வகுப்புக் கொடுமை என்பவைகள் யாரால் செய்யப் பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.
நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண் பெண் கொடுமையும் ஒழிய வேண்டியதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும் தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிற பேதங்கள் நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.
இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்ய வேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.
நிற்க, இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில் நமது பண்டிகைகளில் அனேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப்படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும் வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர் கூடி இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இன்னாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவைகளே அல்ல.
பெண்களையும் வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன.
தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம் பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில்விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படுவதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக்கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்மந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.
ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.
——————01.05.1935 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்ற மே நாள் விழாக் கொண்டாட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையேற்று ஆற்றிய முடிவுரை. ”குடி அரசு” – 12.05.1935
***********************************
மே தினக் கொண்டாட்டம்
சர்வ தேசங்களிலுமுள்ள தொழிலாளர்கள் ஆண் பெண் அடங்கலும் மே 1ந் தேதியை தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
ரஷியாவில் தொழிலாளர் தங்களது ஓரளவு வெற்றியை நினைத்து வெற்றி தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
மற்ற தேசங்களில் தொழிலாளர் குறைபாடுகளை வெளிப்படுத்தி உலக அரசியலிலும், சமூக இயலிலும் தொழிலாளர்கள் சமத்துவமும் ஆதிக்கமும் பெறவேண்டுமென்று ஆசைப்பட்டு மே தினம் கொண்டாடுகிறார்கள்.
இந்தியர்களாகிய நாமும் சமூகத்துறையில் ஜாதி மத இழிவிலிருந்தும், பொருளாதாரக் கொடுமையில் இருந்தும் விடுதலை பெறவும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி பொதுக்கூட்டம் கூட்டி நமது இழிவையும், கொடுமையையும் எடுத்துச் சொல்லி சகல மக்களுக்கும் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கவேண்டுமென்று விளக்கிக் கொண்டாட வேணுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன்.
———————- ஈ.வெ.ராமசாமி – ”குடி அரசு” அறிக்கை 19.04.1936

Nantri:meenakam.com

No comments: