கே.பாலசந்தருக்கு பால்கே விருது
.

கே.பாலசந்தர்பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. பாலசந்தர் இந்தியாவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகெப் பால்கே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2010-ம் ஆண்டுக்கான தாதா சாகெப் பால்கே விருது பாலசந்தருக்கு வழங்கப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு வெள்ளியன்று வெளியிடப்பட்டது.
தங்கத் தாமரைப் பதக்கம் மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கம் கொண்டது இந்த விருது .
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக தமிழ்த் திரையுலகிலிருந்து இந்த விருதைப் பெறும் இரண்டாவது நபராகிறார் பாலசந்தர்.


கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகின் வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளவர் பாலசந்தர்.
இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்டுள்ளவர் இவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 100 திரைப்படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.
அவரது திரைப்படங்கள் பெரும்பாலும், மனித உறவுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டதாகவே இருக்கும்.
1930-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த பாலசந்தர், திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னதாக, நாடகத் துறையில் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
1965-ல், நாகேஷ் நடிப்பில் அவர் இயக்கிய முதல் தமிழ் திரைப்படமான நீர்க்குமிழி பெரும் வெற்றி பெற்றது.
அதன்பிறகு அவர் இயக்கி, தயாரித்த பல திரைப்படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றன.
தமிழில் அபூர்வ ராகங்கள், அவர்கள், 47 நாட்கள், சிந்துபைரவி, ஹிந்தியில் ஏக் துஜே கேலியே , தெலுங்கில் மரோசரித்தா மற்றும் ருத்ரவீணா , கன்னடத்தில் பேகியல்லி அரலிட ஹூவு ஆகியவற்றை பாலசந்தரின் முக்கியத் திரைப்படங்களென குறிப்பிட்டுச் சொல்லலாம்.
தற்போதைய சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், நகைச்சுவை நடிகர் விவேக் உள்பட பல நட்சத்திரங்களை திரையுலகுக்குக் கொண்டுவந்து புகழ் சேர்த்த பெருமை பாலசந்தருக்கு உண்டு.
கடந்த சில ஆண்டுகளாக, தொலைக்காட்சித் துறையிலும் தனது முத்திரையைப் பதித்த அவர், திரைத்துறையில் தான் காட்டிய ஆதே நுணுக்கத்தையும், தெளிவையும் தொலைக்காட்சித் தொடர்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
கடந்த 1987-ம் ஆண்டு இந்திய அரசின் பத்மஷ்ரீ பட்டத்தையும், 1973-ல் தமிழக அரசின் கலைமாமணி பட்டத்தையும் வென்றவர்.
இருகோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட அவரது பல படங்கள் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன.

Nantri:bbc tamil

No comments: