வசந்தமாலை 2011 - திரு திருநந்தகுமார் -


.   

படப்பிடிப்பு  தனபாலசிங்கம்
சிட்னி தமிழ் அறிவகத்தின் வசந்த மாலை 2011 நிகழ்ச்சி சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை 8/5/2011 அன்று றைட் சிவிக் சென்ரர் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இது அறிவகத்தின் 20ஆவது வருடம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நூலகத்திற்கான வாடகை, நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் வாரப் பத்திரிகைகள் கொள்வனவு, தொலைபேசி மற்றும் மின்சாரக் கட்டணம் போன்ற செலவினங்களுக்கு அங்கத்துவ சந்தாப்பணம் போதாமையினால் வேறு நிதி ஆதாரங்களை தேடுதல் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அங்கத்தவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் வழங்கும் நன்கொடைகள் மூலமும், வருடந்தோறும் நடைபெறும் வசந்தமாலை நிகழ்ச்சி மூலமுமே செலவினங்களை ஓரளவுக்கு
 ஈடுசெய்யக்கூடியதாக உள்ளது. ஆகையினால் அறிவகத்தின் முழு அக்கறையையும், நிர்வாகிகளின் அர்ப்பணிப்பையும் ஈர்க்கும் ஒரேயொரு கலை நிகழ்ச்சியாக வசந்தமாலை திகழ்கிறது. சென்ற ஆண்டு முதல் தலைவராக பணிபுரியும் திரு குணரஞ்சிதன் உள்ளிட்ட நிர்வாகிகளின் அயராத உழைப்பின் பயனை வசந்தமாலை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சபையினர் நன்கு அனுபவித்திருப்பர்.
அறிவகத்தின் இருபதாவது ஆண்டில் நடைபெற்ற வசந்தமாலை பல சுவையான புதுமைகளை இம்முறை கொண்டிருந்தது என்பது மிகையல்ல. நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக தெரிவாகிய ஹோம்புஸ் தமிழ்ப் பாடசாலை மாணவிகளில் இருந்து நிறைவு நிகழ்ச்சியான வளரும் வால் நட்சத்திரங்கள் வரை புதுமைக்குக் குறைவில்லை.

மண்டபத்திற்குள் நுழையும் போதே வாயிலில் நுழைவுச் சீட்டைக் கிழித்துக்கொண்டு விழாமலரை கையில் தருகின்றார் ஒரு பெரியவர். அவர் அறிவகத்தின் முன்னாள் தலைவர் திரு லோகேந்திரன். வாரத்தில் ஐந்து நாட்களிலும் அறிவகத்தில் தொண்டராகப் பணியாற்றுபவர் திரு லோகேந்திரன். வருபவர்களை உபசார வார்த்தைகள் கூறி உள்ளே அனுப்புகிறார் அவர்.
                                                                                    

நேரம் ஆறுமணியை நெருங்கிக்கொண்டிருந்தது. மூடிய மேடையிலே முதல் நிகழ்ச்சியாளரின் ஒலிவாங்கிப் பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. தலைவர் காதருகில் கையடக்கத் தொலைபேசியுடன் அங்கும் இங்கும் அரக்கப்பரக்க நடந்துகொண்டிருந்த போதே புரிந்துவிட்டது. எதிர்பார்த்த யாரோ இன்னும் வரவில்லை என அங்கலாய்க்கிறார் என்று. இடையே இரண்டு இளம்பெண்கள் ஓட்டமும் நடையுமாக வருகின்றனர். ’உங்களைத் தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்’ என்கிறார் தலைவர். மன்னிக்கவேணும். வரும் வழியில் ஒரே வாகன நெரிசல். இடத்தைத் தேடிப்பிடித்து, தரிப்பிடம் தேடி நிறுத்துவதற்கிடையில் நேரமாகிவிட்டது என்று அப்பெண்கள் தயங்கித் தயங்கி சொல்கிறார்கள். அவர்கள் தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் என்று தெரிகிறது. ஆயினும் மேடை இன்னும் தயாராகவில்லை. மணி ஆறைக் கடக்கின்றது. இவ்வளவு நேரம் என்ன செய்கிறார்கள் என்று சலித்துக்கொண்டவர்கள் சிலர். மண்டபம் பாதிக்கு மேல் நிறைந்துவிட்டது. ஒரு வெள்ளைக்காரர் வந்து சேர, முன்வரிசைக்கு அவரை அழைத்துச் செல்கின்றனர். அவர் தான் ஸ்றாத்பீல்ட் தொகுதியின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் திரு சார்ல்ஸ் கசுசெலி என்று பேசிக்கொண்டனர்.

தமிழ் அறிவகத்தின் முன்னாள் தேர்தல் அதிகாரியும், ஹோம்புஸ் தமிழ்க் கல்வி நிலையத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும், சிட்னி சைவ மன்றத்தின் முன்னாள் தலைவரும், சிறந்த சமயப் பணியாளருமான திரு கணபதிப்பிள்ளை அவர்களும் வைத்திய கலாநிதி திருமதி கணபதிப்பிள்ளை அவர்களும் மங்களவிளக்கேற்றி விழாவினை ஆரம்பித்துவைத்தனர். கொண்ட கொள்கையில் உறுதிப்பாடும், தளராத மனவலிமையும் படைத்தவர் திரு கணபதிப்பிள்ளை என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். மங்கள விளக்கேற்றல் நடைபெறும்போது திரைக்கு முன்னே ஹோம்புஸ் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் மஞ்சள் நிற சீருடையில் வரிசையாக நிற்கின்றனர். விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்து, அவுஸ்திரேலிய தேசிய கீதம் என்பவற்றை அழகுற இசைக்கின்றனர் மாணவிகள்.
நிகழ்ச்சி நிரலின் படி முதல் நிகழ்ச்சி திருமதி கலா ஞானியின் மாணவர்கள் வழங்கும் அனுபல்லவி நிகழ்ச்சி. பத்துப் பன்னிரண்டு மாணவர்களுக்காக எவ்வளவு நேரம் தான் மேடையை தயார் செய்வார்கள் என்று நான் சற்றே சலித்ததுண்டு. கடந்த 15 வருடங்களாக சிட்னியில் சங்கீத வித்தியாலயம் என்ற இசைப்பள்ளியை நிறுவி மாணவர்களைப் பயிற்றுவிக்கும் கலா ஞானி அவர்கள் 10 வருடங்களுக்கு மேலாக பண்ணிசையை சைவப்பாடசாலை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தவர் எனக் கூறி அறிமுகத்தை நிகழ்ச்சித் தொகுப்பாளர் முடித்தபோது திரைவிலகியது. முழு சபையும் அமைதியில் ஆழ்ந்தது. மேடையைப் பார்க்கையில் பிரமிப்பாகவும் இருந்தது. முன்வரிசையில் ஆறு மாணவிகள் சிவப்பு நிறத்தாவணியில். நிகழ்ச்சிக்கான கோல உடை போலத் தோன்றியது. நடுவில் ஆசிரியையும், அவர் மகளும் அமர்ந்திருக்கின்றனர். இரண்டாம் வரிசையில் மேலும் ஆறு மாணவிகள். அவர்களோடு சற்றே கம்பீரமாக வளர்தோர் இருவர். மூன்றாவது நான்காவது வரிசையிலும் வளர்தோர்கள் அமர்ந்திருக்கின்றனர். முன்னர் இருந்த வரிசையிலும் சற்று உயரமான ஆசனத்தில் பின்னே இருக்கும் மாணவர்கள். எல்லோரு முகங்களையும் பார்க்க முடிகிறது. மேடை முழுவதும் கலா ஞானியின் மாணவர்கள். இந்த வயதிலும் சங்கீதம் படித்து, மேடையில் பாடமுடியுமா? எனக்குள் எழுந்த வியப்புக்கு அளவில்லை. அதுவும் இரு தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள். புதுமை, புதுமை. ஒலிவாங்கிப்பரிசோதனைக்கு ஏன் அவ்வளவு நேரம் எடுத்தது என இப்போது தெரிகிறது! இரு பக்கமும் அணிசெய் இசைக்கலைஞர்கள். மெல்பேர்னிலிருந்து வந்திருந்த பிரபல மிருதங்க வித்துவான் இராசையா பாலசிறீ அவர்கள் ஒருபுறம். மறுபுறத்தில் இந்தியக் கலைஞர்கள். வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் பிரதம சீடர்களுள் ஒருவரான வித்துவான் ஞானசுந்தரம் அவர்கள் வயலின். பிரபல புல்லாங்குழல் வித்துவான் டாக்டர் என் ரமணி அவர்களின் பேரனும், மாணவருமான ரங்கராஜன் அதுல்குமார் புல்லாங்குழல். பாலசிறீயின் பிரதம மாணவர்கள் இருவரும் மேடையில் மிருதங்கம் மற்றும் கடம் வாத்தியங்களுடன்.
திரை விலகியதும் பிரமித்துப்போன சபையை ஓம் என்ற ஒலியோடு சமநிலைக்குக் கொண்டுவந்தனர். அனுபல்லவி என்று முடியும் ஒரு பாடல்! எல்லோரும் சேர்ந்து பாடுகின்றனர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என்று மாறி மாறி முக்கால் மணிநேரம் அவர்களின் இசையில் தமை மறந்து இருந்தது சபை. நிறைவுப் பாடலுக்கு முதல் ஆசிரியை உங்கள் எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் என்று ஆங்கிலத்தில் கூறுகிறார். தமிழ் தெரியாதவர்களும் வாத்திய இசை வழங்கியமையினால் தான் பல்மொழிப் பாடல்களையும் பாடநேர்ததாக காரணம் கூறுகிறார் அவர். மாணவிகள் சார்பில் ஆசிரியைக்கு பூங்கொத்து, அறிவகத்தின் சார்பில் ஆசிரியைக்கு அன்பளிப்பு மற்றும் சான்றிதழ்கள் என்ற சம்பிரதாயங்களைத் தொடர்ந்து ஆராரோ என்ற நிறைவுப் பாடலுடனும் மங்களத்துடனும் நிறைவடைகிறது நிகழ்ச்சி.
அனுபல்லவியைத் தொடர்ந்து தலைவர் உரைநிகழ்த்தினார். இப்போது மண்டபம் நிறைத சபை. இசை நிகழ்ச்சிக்கென தயார் செய்த மேடையை, நடன நிகழ்ச்சிக்கு தயார்செய்யவேண்டிய நேரம் உரைகளை அமைத்திருந்தனர். சம்பிரதாயபூர்வமான உரைகள் என்று ஆகியபின்னர் மூடிய திரையின் முன்னே தான் உரைகள் என்பது இப்போது எழுதாத சட்டமாகிவிட்டது போலும். விழாமலரில் தலைவர் பேசுவது போலவே எழுதியிருந்தார். எழுதியது போலவே இப்போதும் பேசினார். அறிவகத்திற்கு நிரந்தரக் கட்டிடம் இல்லை என்பதும், தற்போதய இடம் போதாதிருப்பதாகவும் புதிய இடத்திற்குச் செல்ல போதிய நிதிவளம் இல்லையென்றும் தேவைகளை சபைமுன்னே சமர்பித்தார். பேச்சு நடைபெறும்போது மண்டபத்தின் பின்னே சுவரோரம் நின்றவர்கள் கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டு இருந்தது என்னவோ போல இருந்தது. இருபது வருடங்களாக சிட்னி தமிழ் அறிவகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களின் பெயர்களைத் தந்துள்ளோம் என தலைவர் சொன்னபோதுதான் மலரை நோட்டம் விட்டேன். இருபது ஆண்டு கால நிர்வாகிகள் பட்டியலோடு, பத்துவருடங்களை நினைவில் நிறுத்தும் வண்ண நிழற்படங்களும் மலரை அலங்கரித்திருந்தன.
தலைவர் உரையைத் தொடர்ந்து பிரதம விருந்தினரை ஆங்கிலத்தில் சுவைபட அறிமுகம் செய்த்துவைத்தார் அறிவகத்தின் உபதலைவர் கருணாகரன். அதனைத் தொடர்ந்து மேடைக்குத் தாவி வந்த பிரதம விருந்தினர் சார்ல்ஸ் கசுசெலி பா.உ அவர்கள் பேச்சில் ஒரே உற்சாகம். பிரமாதமாக பாராட்டுகளை அள்ளிவீசினார் பா.உ. அவருடைய குரலின் தொனியும், சத்தமும் பேசிக்கொண்டிருந்தவர்களை அப்படியே ஈர்த்த்டிருக்கவேண்டும். சபையில் முழு அமைதி. இடையிடையே கைதட்டல்கள் என அவர் உரை ஒரு சுவாரசியம் நிறைந்த உரை. நீங்களும் அன்னையர் தினத்தைக் கொண்டாடுகிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சியடைந்தேன் என தன் அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார் பா.உ கசுசெலி
“எனது தாயும் தந்தையும் பிளாக்ரவுண் நகரில் உள்ளனர். நான் அன்னையர் தினத்திற்காக அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அவர்கள் வீட்டில் ஒரு தம்பதியினர் இருந்தனர். என் அப்பா அவர்களை எனக்கு அறிமுகம் செய்த போது ”அவர்கள் தான் எம்மை இப்போது தத்தெடுத்துள்ளனர்” என்று சொன்னார். என் பெற்றோர் வீட்டுக்கு அருகில் அவர்கள் குடிவந்து ஒரு வருடமாகிறது. அவர்களிடம் பேசியபோது அவர்கள் தமிழர்கள் என்று தெரிந்துகொண்டேன். அவர்கள் தம்மை மட்டும் பார்க்காது தமது அயலவரையும் நன்றாகப் பார்க்கின்றனர். இது தான் சமுதாய நோக்கு. இன்று உங்கள் நிகழ்ச்சியில் பங்குகொள்ளும்போது எனக்கு இனம்புரியாத இன்ப உணர்வுடன் பங்குகொள்கிறேன்.’ உங்கள் பண்பாட்டின் உன்னதத்தை நான் அறிந்திருக்கிறேன். இன்று உணர்ந்திருக்கிறேன். கடந்த மூன்று மாதங்களில் நான் நான்கு தமிழ் நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளேன். கடந்த நாலு வருடத்தில் ஒருமுறையேனும் ஒரு இத்தாலியர் நிகழ்ச்சி சிட்னியில் நடைபெறவில்லை. உங்கள் குழந்தைகளுக்கு பண்பாட்டை ஊட்டுங்கள். ஒரு வளமான வலுவான அவுஸ்திரேலியாவில் ஏனைய சமூகங்களோடு கைகோர்த்துப் பயணியுங்கள். உங்கள் தேவைகளில் உங்களுக்கு உதவ என்றும் காத்திருக்கிறேன். என்னைத் தேடி எப்போதும் வரலாம்”

இப்படி சுருக்கமாகவும், சுவையாகவும், தெளிவாகவும் பேசினார். பா.உ கசுசெலி. அவர் உரையைத் தொடர்ந்து நாட்டியக் கலைமணி சுகந்தி தயாசீலனின் மாணவிகள் வழங்கிய நடனாஞ்சலி இடம்பெற்றது. வழக்கம்போலவே சிறிய குழந்தைகள் முதல் இளையவயதினர் வரை என சுகந்தியின் மாணவிகள் பகுதி பகுதியாக மேடையில் ஆடி சபையை அடக்கினர். கொக்குவில் கலாபவனத்தில் நடனம் பயின்று பின் இராமநாதன் நுண்கலைக்கல்லூரியில் நாட்டியக் கலைமானி பட்டம்பெற்று உள்ளூரில் நடன வகுப்புகளை நடாத்திய சுகந்தி நியூசிலாந்திலும், பின் சிட்னியிலும் தமது குருவை நினைவிருத்தி கலாபவனம் என்ற பெயரில் நாட்டியப் பள்ளியை நடாத்துவதாக அறிவித்தனர் தொகுப்பாளர்கள். சுகந்தி தயாசீலன் ஏலவே பலதடவைகள் அறிவகத்தின் வசந்தமாலையில் பங்குபற்றியிருந்தார் என்பது நினைவுக்கு வந்தது. பூச்செண்டு, பரிசு, சான்றிதழ் என சம்பிரதாயங்களைத் தொடர்ந்து அடுத்த நிகழ்ச்சி தொடங்கியது.

பல்மருத்துவ கலாநிதி யசோதரபாரதி சிங்கராயரின் பயிற்சியில் சிறுவர்களின் திரையிசை நடனம் நிறைந்த சங்கமம் நிகழ்ச்சி – கிளர்வூட்டும் துள்ளல் இசைப் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடினர் சிறுவர்கள். சென்ற வருடம் நீண்டநேரம் நடைபெற்ற நிகழ்ச்சி இம்முறை இருபது நிமிடங்களில் நிறைவடைந்தது. எல்லாமே முன்னர் கேட்ட பார்த்த பாடல்களாக இருந்தபோதும் நிகழ்ச்சி சுவையாக இருந்தது.
பதினைந்து நிமிட இடைவேளையின் பின் நிகழ்ச்சி தொடங்கும் என அறிவித்தபோதும் இருபத்தைந்து நிமிடங்களுக்கு மேலாகியும் நிகழ்ச்சி தொடங்கவில்லை. மீண்டும் ஓலிவாங்கிப்பரிசோதனைகள். மேடை அமைப்புகள். சிட்னி இளைஞர்களின் இசைநிகழ்ச்சிக்கான ஆயத்தங்கள் என்று தெரிந்தது. நிகழ்ச்சி தொடங்கும் முன்னதாக அறிவகத்தின் பொருளாளர் கௌரிதாசன் நன்றியுரையை வேகமாக முடித்துக்கொண்டார். சின்னஞ் சிறுசுகளைத் தவிர சபையில் முக்கால்வாசிப் பேர் அப்போதும் அப்படியே இருந்தனர். இராஜயோகனின் இசையமைப்பில் சிட்னி இளைஞர்கள் பெருமையுடன் வழங்கும் வளரும் வால் நட்சத்திரங்கள் என அறிவித்தனர். வால்நட்சத்திரங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். வளரும் வால் நட்சத்திரங்கள் என எப்படிப் பெயரை தேடிக்கொண்டனர் என ஒரு கணம் திகைத்து நின்றேன். ஹோம்புஸ் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் இருவர் – கஸ்தூரி முருகவேல் வயலின், ஆதித்தன் திருநந்தகுமார் ஒக்ரோபட், கிற்றார். இவர்களோடு மதுசூதனன் மற்றும் விகாசன். இப்பல்கலை மாணவர் இருவரும் கீ போர்ட் வாசிக்க, தணிகை ராஜன் மற்றும் வருணன் பால்ராஜ் தபேலா இசைவழங்க, ராம் மணிவண்ணன் கிற்றார் இசைக்க இம்மானுவேல் பிரின்சின் அழைப்புக்கு மேடையேறி வந்தாள் சிறுமி விஜயாள் விஜே- ஹோம்புஸ் தமிழ்ப் பள்ளியில் நான்காவது படிக்கும் மாணவி. அந்தச் சின்னஞ் சிறுமியின் சின்ன சின்ன ஆசை பாடலுடன் களைகட்ட ஆரம்பித்தது இசை நிகழ்ச்சி. மொத்தம் ஒன்பது பாடல்கள். அவற்றில் நான்கு பாடல்களுக்கு இறுவட்டிலிருந்து இசைமுழங்கியது. ஏனைய ஐந்து பாடல்களுக்கும் இளையோர்களே வாத்திய இசை வழங்கினர். தன்யா ஐயர், மதுரா ஐயர் சகோதரிகள், விஸ்ணுகர் மற்றும் கலாநிதி கௌரிபாலன் ஆகியோர் அன்று மேடையில் பாடியவர்கள். இவர்களில் கௌரிபாலன் பல்கலை விரிவுரையாளர். ஏனையோர் ஹோம்புஸ் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள். இராஜயோகன், மற்றும் சோனா பிரின்ஸ் ஆகியோர் தனியாகவும் சேர்ந்தும் பழைய பாடல்களைப் பாடி நடுத்தரவயதுக்காரரின் இளமைக்காலத்தை நினைவூட்டினர். மதுசூதனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடலுடன் இசைநிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. ஒரு பாடலுக்கு கஸ்தூரி மேற்கத்திய வயலினில் வாசித்துக்கொண்டிருந்தபோது சத்தம் ஒலிவாங்கியில் வரவில்லை. அவர் முடிக்கும் நேரமே ஒலிவாங்கியை செயற்படவைத்தனர். மேலும் கஸ்தூரி வாத்தியங்களுகுப் பின்னே அகப்பட்டதால் வெளியே தெரியவில்லை. இமானுவேல் பிரின்ஸ் கடைசிப் பாடலுக்கு முன்னர் இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்தது பொருத்தமாக இருந்தது. நிறைவாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய செல்வி தர்சனா சிறீசந்திரபோஸ், செல்வி ஜினோதா லோகேந்திரன் ஆகியோரின் பணியைப் பாராட்டி அவர்களுக்கு அறிவகத்தின் சார்பில் நினைவுப் பரிசில் வழங்கப்பட்டது.
ஒரு நல்ல நிகழ்ச்சியில் வார இறுதிநாளொன்றின் இராப்பொழுது கழிந்ததே என்ற நிறைவோடு எல்லோரூம் வீடு திரும்பினர்.

இருபதாம் ஆண்டில் நடைபெற்ற வசந்தமாலை விழாவில் சில விடயங்களை மீளக் குறிப்பிடுதல் பொருத்தமாகும்.

1. விழா விறுவிறுப்பாகவும் தொய்வின்றியும் நடைபெற்றதோடு பத்துமணிக்கு முன்னதாகவே நிறைவடைந்தது. இது ஒரு நல்ல முன்மாதிரி. நான்கு மணி நேர நிகழ்ச்சி ஒரு வார இறுதிநாளில் போதுமானதே.

2. விழா மலரில் அனுபல்லவி நிகழ்ச்சிக்கு அணிசெய் இசைக்கலைஞர்களைப் பற்றிய குறிப்புகள் இருந்த போதும் விழாவின் போது அவர்கள் பற்றிய எந்த அறிமுகமும் இல்லை. நிகழ்ச்சித் தொகுப்பாளர் பெயர்களை வாசித்ததோடு நிகழ்ச்சி முடிந்தது. பிரபலமான கலைஞர்கள் மேடையில் தோன்றும்போது அவர்களைப் பற்றிய அறிமுகம் அவசியமானது என்பதை ஆசிரியரோ அறிவகத்தினரோ உணர்ந்திருக்கவில்லை போலும்.

3. ஏராளமான கலைஞர்கள் பங்குகொண்டமை இன்னும் சிறப்பாக இருந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட நடன மாணவிகள், இருபதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள், பத்துக்கும் மேற்பட்ட துள்ளல் இசை மாணவர்கள் என பெரும்பாலும் சிறுவர்களும் இளைஞர்களுமே பங்குகொண்ட நிகழ்ச்சியாக அமைந்தமை சிறப்பு.

4. மேடை அமைப்பு, ஒலிவாங்கி ஏற்பாடுகள் என்பவற்றில் நேரம் விரயமாவதை தவிர்ப்பது பயனுடையது.

5. மண்டபத்தின் பின்னே கூட்டமாக நின்று பேசுவதைத் தவிர்ப்பதும் பயனுடையது தான்.

6. நிரந்தர கட்டிடம் வேண்டும் என்ற கோரிக்கையின் பின் உள்ள நியாயமான காரணங்கள் என்ன என்பதையும், எவ்விதங்களில் சிட்னி தமிழ் அறிவகம் சிட்னியின் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட சமூகத்திற்கு சேவையாற்றப் போகின்றது என்பதையும் விளக்கவேண்டிய பொறுப்பு அறிவகத்திற்கு இருக்கின்றது.

7. ஒரு நூலகத்தின் பணிகளுக்கு மேலதிகமாக நிரந்தரக் கட்டிடத்தில் இருந்துகொண்டு என்னவிதமான செயற்பாடுகளை அறிவகத்தினால் செய்ய முடியும் என்பதைப் பற்றியோ, அல்லது இப்போதய இடத்திலிருந்தபடியே இன்னும் எத்தகைய செயற்பாடுகளை செய்ய முயன்றனர் என்பது பற்றியோ சமூகத்திற்கு விளக்கவேண்டிய பொறுப்பு அறிவகத்திற்கு இருக்கின்றது.
8. யாழ் நூலக எரிப்பினை நினைவுபடுத்தி வருடந்தோறும் கொடிவார விழாவை நடாத்தும் அறிவகம் அதில் கொடிவிற்று வரும் தொகையில் ஒருபகுதியை யாழ் நூலகத்திற்கு அனுப்பிவைப்பது மிகவும் பாரட்டப்படவேண்டிய விடயம். யாழ் நூலக எரிப்பை நினைவுகூரும் கொடிதினம் இளைய தலைமுறையினருக்கு ஈழத்தின் வரலாற்றை சொல்லும் என்றபோதும் அது பற்றிய எவ்வித அறிவித்தலும் வசந்தமாலையில் வழங்கப்படவில்லை என்பது ஏன் எனத் தெரியவில்லை.


















No comments: