தமிழக முதலமைச்சராக 3 வது முறையாக பதவியேற்றார் ஜெயலலிதா

.

தமிழக முதலமைச்சராக 3 வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியை தமிழில் எடுத்துக் கொண்டார் ஜெயலலிதா.

அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். அதில் 24 பேர் புதுமுகங்கள். சட்டசபை தேர்தலில் 160 இடங்களில் போட்டியிட்டு 146 இடங்களை பிடித்த அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள அந்த கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.


இதில் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில், ஜெயலலிதாவை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை கட்சியின் நிர்வாகிகள், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவிடம் நேரில் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று காலை 10.50 மணிக்கு ஜெயலலிதா, கிண்டி கவர்னர் மாளிகைக்கு வந்தார். அங்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவை சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரும் கடிதத்தை கொடுத்தார். இந்த சந்திப்பு 5 நிமிடம் நடந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதற்கிடையே, கவர்னரின் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:ஜெயலலிதா இன்று கவர்னரை சந்தித்து, அதிமுக சட்டமன்ற கட்சியின் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை கொடுத்தார். இதைத் தொடர்ந்து, அவர் விரைவாக அமைச்சரவை அமைத்திட கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கவர்னரை ஜெயலலிதா சந்தித்த பிறகு, கவர்னர் மாளிகையிலேயே தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாலதி நிருபர்களை சந்தித்து பேசிய போது, ‘‘நாளை (16ம் தேதி) பகல் 12.15 மணிக்கு சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது’’ என்றார்.

இதற்கிடையில் நேற்று இரவு ஜெயலலிதாவுடன் பொறுப்பேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 33 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் 24 பேர் புதுமுகங்கள். ஜெயலலிதா தலைமையில் 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவைக்கு கவர்னர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைக்கிறார்.

வீரகேசரி இணையம்No comments: