பவளமும் மணியும் மூன்று மூத்ததலைமுறையினருடன் மூன்று நாட்கள் - முருகபூபதி

.
“ படிப்பென்ன படிப்பு, கலியாணப்படிப்பு” என்று தனது இளமைக்கால சுவாரஸ்யத்தை சொல்கிறார் எண்பத்திரண்டு வயது அம்பித்தாத்தா. இலங்கையில் கொன்றை மரங்கள் செழித்து வாழ்ந்த நாவற்குழி கிராமத்தில் 1929 ஆம் ஆண்டு பிறந்த அம்பிகைபாகர் ஈழத்து இலக்கிய உலகில் கவிஞராக நன்கு அறியப்பட்டவர்.

தற்போது அவுஸ்திரேலியாவில் சிட்னியில் தமது மனைவி, மக்கள், மருமக்கள். பேரப்பிள்ளைகள் புடைசூழ படுக்கையிலிருந்தவாறு தமது இளமைக்காலத்தை அசைபோடுகிறார். 
“ என்னால் முன்புபோல் சரளமாகப்பேச முடியவில்லை.” என்ற வசனத்தையும் தட்டுத்தடுமாறி உதிர்க்கின்றார் ஈழத்தின் மூத்ததலைமுறை படைப்பாளியும் வானொலி ஊடகவியலாளரும் இன்றும் தமிழ் இணையங்களில் பேசப்படும் ‘பொன்மணி’ திரைப்படத்தின் கதைவசனகர்த்தாவுமான காவலூர் ராஜதுரை. இவரும் சிட்னியில் மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன் தமக்கேயுரித்தான அமைதியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

இன்று படைப்புலகிலும் ஊடகத்துறையிலும் கல்விப்பீடங்களிலும் தமது பெயர்களை பதிவுசெய்துள்ள பலரின் பல்கலைக்கழக ஆசானாக ஒரு காலத்தில் விளங்கிய பேராசிரியர் பொன். பூலோக சிங்கம் அவர்களும் சிட்னியில் மருத்துவ சிகிச்சைகளுடன் கண்கள் கலங்கியவாறு காலத்தைப் போக்கிக்கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே பவளவிழா கண்டுவிட்ட அம்பியையும் காவலூர் ராஜதுரையையும் அடுத்த ஆண்டு பவளவிழா காணவிருக்கும் பேராசிரியர் பூலோக சிங்கம் அவர்களையும் சந்திப்பதற்காக அண்மையில் எனக்குக்கிடைத்த ஈஸ்டர் விடுமுறை நாட்களை பயன்படுத்திக்கொண்டேன்.

எனக்கு சில வருடங்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து கிடைத்த ஒரு தமிழ் இதழில் வெளியான சிறு விளம்பரம்தான் நினைவுக்கு வருகிறது.

“ லண்டனில் வசிக்கும் எழுபது வயது கடந்துவிட்ட ஒரு இலங்கை அம்மாவுடன் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரையில் உரையாடிக்கொண்டிருக்க ஒருவர் தேவை. வாரத்திற்கு 200 பவுண்ஸ் தரப்படும்”

வெளிநாடுகளில்தான் இந்நிலைமை என்றில்லை. இலங்கையிலிருக்கும் தமது முதிய பெற்றவர்களை பராமரிப்பதற்கு வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகள் தேர்வு செய்துள்ள முதியோர் இல்லம் ஒன்றை கடந்த ஜனவரியில் இலங்கை வந்திருந்தபோது கொழும்பு வெள்ளவத்தையில் பார்த்தேன்.

யாழ்ப்பாணம் சென்றபோது எழுவைதீவில் ஒருநாள் இரவு தங்கியிருந்தேன். அங்கே நான் சந்தித்த ஒரு முதியவர் சொன்ன கதை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது பிள்ளைகள் நோர்வேயிலிருக்கிறார்கள். இவரையும் அழைத்து தங்களுடன் வைத்திருக்கிறார்கள். ஆனால் மூன்று மாதங்களில் இவருக்கு அந்த நாட்டு வாழ்க்கை சலித்துவிட்டது. தொடர்ந்து இருந்திருப்பின் நோர்வே வதிவிட உரிமையும் இவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் அதனையும் வதிவிட உரிமையினால் கிடைக்கவிருந்த சலுகைகளையும் உதறித்தள்ளிவிட்டு தனது கடல் சூழ்ந்த அழகிய கிராமத்துக்கு வந்துவிட்டார். அவரது காலம் பசுமாடுகள், ஆடுகள், கோழிகளுடன் கழிந்துகொண்டிருக்கிறது. இரவு பத்து மணிக்குமேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும் அந்தக்கிராமத்தில் இரவு ஒன்பது மணிக்கு லண்டன் பி.பி.ஸி. தமிழ் ஓசை கேட்டவாறு மகிழ்ச்சியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் இன்னுமொரு முதிய பெற்றோருக்கும் மக்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் வெளிநாடுகளில்தான்.

“உங்களைப் பார்க்க வருவார்களா?” – என்று கேட்டேன்.

“ ஆம் எப்போதாவது வருவார்கள். தம்பி இப்போது எங்கள் யாழ்ப்பாணத்திலும் தெகிவளை மிருகக்காட்சி சாலை போன்றதொரு Zoo உருவாகியிருக்கிறது” என்றார்.

“ எனக்குப்புரியவில்லை” என்றேன்.

“ வருவார்கள். தாய்மொழி பேசத்தெரியாத தமது பிள்ளைகளை அழைத்துவந்து துலாக்கிணற்றையும் பனைமரத்தையும் காண்பித்துவிட்டு, இதுதான் Grandpa (தாத்தா) , இதுதான் Grandma ( பாட்டி) என்று உறவுமுறை சொல்லி காண்பித்துவிட்டு இங்கே சரியான நுளம்புக்கடி என்று சொல்லி அழத்துப்போய்விடுவார்கள்” என்றார்.

இப்படி அவுஸ்திரேலியாவிலிருந்து தம்மைப்பெற்றவர்களின் ஊரைப்பார்த்துத் திரும்பிய சில குழந்தைகள் தாம் பார்த்த துலாக்கிணற்றை, “ஆழமான சுவிமிங்பூல் (Swimming Pool) ஆனால் நீந்த முடியாது” என்று சொல்லிச்சிரிக்கக் கேட்டிருக்கின்றேன்.

இந்தச்சுவாரஸ்யங்களை கதைகதையாக எழுதிக்கொண்டிருக்கலாம். சரி, இனி மீண்டும் எனது சிட்னிப்பயணத்துக்கு வருகின்றேன்.

இங்கே நான் குறிப்பிடும் மூத்ததலைமுறைப்படைப்பாளிகள் மூவரும் எம்மால் அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கப்பட்டவர்கள். இம்மூவரும் தாம்சார்ந்து பணியாற்றிய துறைகளில் ஆக்கபூர்வமாக சமூகத்திற்கு பயனளித்தவர்கள். இவர்களின் வாழ்வும் பணிகளும் எம்மவர்களுக்கு முன்னுதாரணமானவை.

“கொடிது கொடிது முதுமை கொடிது.

அதிலும் கொடிது முதுமையில் நோயில் வாடுதல்”- என்பார்கள். மருந்துகள், சிகிச்சைகள் ஒருபுறமிருக்க நோயுற்றவர்களை பார்க்கவருபவர்கள் சொல்லும் மருத்துவ ஆலோசனைகள் கொடுமையாக அமைந்துவிடுவதும் உண்டு.

அதனால்தான் இந்த சுவாரஸ்யமும் சொல்லப்படுகிறது.

“ ஒரு சத்திர சிகிச்சை, டொக்டருக்கு சம்பவம்தான். ஆனால் நோயாளிக்கோ அது சரித்திரமாகிவிடும்”

சுகம்விசாரிக்க வருபவர்களுக்கெல்லாம் நடந்ததை சொல்லிச்சொல்லியே சரித்திரம் படைத்துவிடுவார்கள்.

என்னாலும் சம்பிரதாயத்துக்கு கேட்காமல் இருக்க முடியவில்லை. அதற்கும் அப்பால் நான் சந்தித்த இம்மூவரையும் உற்சாகப்படுத்துவதும் எனது நோக்கமாக இருந்தது.

கவிஞர் அம்பி எப்போதும் அங்கதச்சுவையுடனும் நகைச்சுவையுணர்வுடனும் பேசுபவர். படுக்கையிலிருந்தார். சக்கரநாற்காலியில் வீட்டை வலம்வருகிறார். அத்துடன் நடப்பதற்கு உதவும் வோக்கரையும் பயன்படுத்துகிறார். அவர் எப்போது கட்டிலுக்கு ஏறுவார் என்று காத்திருந்து அவரது ஒரு வயது பேரன் (மகனுடைய குழந்தை) அந்த வோக்கரை தள்ளிக்கொண்டு, “Car... Car...Car....” மழலை மொழி பேசி வீட்டினுள் வலம்வருகின்றான்.

அவன் “ த்தா. த்தா” எனச்சொல்லிக்கொண்டு தன்னை நோக்கி ஓடிவருகையில் தன்னால் அவனைத் தூக்கி எடுத்து கொஞ்சமுடியாதிருக்கிறது” என்று கண்கள் பனிக்கச்சொல்கிறார் அம்பி.

தான் நோயுற்று படுக்கையில் ஏறியதும் வீட்டில் பலரும் டொக்டர்களாகவும் தாதிகளாகவும் மாறிவிட்டனர். என்றார்.

அவர் சொன்னதை நேரில் பார்க்க முடிந்தது. மகளும் பேரப்பிள்ளைகளும் அவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் இன்சுலின் ஏற்றுவது முதல் மருந்து, மாத்திரைகளை நேரம் தவறாமல் தருவது சக்கரநாற்காலிக்கு இறக்குவது உட்பட பல பணிவிடைகளை செய்துகொண்டிருக்கிறார்கள்.

“ அம்பி நீங்கள் கொடுத்து வைத்தவர், முதியோர் இல்லத்துக்கு உங்களை அனுப்பிவிடாமல் பார்ப்பதற்கு இங்கே இத்தனைபேர் உங்களை வலம்வருகிறார்கள்” என்றேன்.

தமிழகத்தில் ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் வாடும் பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நினைவுக்கு வந்தார்.

நாம் கடந்த 24 வருடங்களுக்கும் மேலாக நடத்திவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தொண்டு நிறுவனம் பற்றிக்கேட்டார். அம்பி சில வருடங்களுக்கு முன்னர் பாப்புவா நியூகினியில் வாழ்ந்த காலத்தில் எமது கல்வி நிதியம் ஊடாக உதவிய ஒரு மாணவர் தற்போது டொக்டராக எங்கோ பணியாற்றுகிறார். மருத்துவக்கல்லூரிக்கு அம்மாணவர் பிரவேசித்த காலப்பகுதியில் தான் அவருக்கு ஒரு ஸ்டெதஸ்கோப் வாங்கி பரிசளிக்க விரும்பியிருந்தாராம். ஆனால் போர்க்காலத்தில் தொடர்புகள் அற்றுப்போனதனால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை என்றார் கவலையுடன்.

கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் எமது பராமரிப்பிலிருக்கும் குழந்தைகளை பார்ப்பதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் குறிப்பாக வன்னியில் முல்லைத்தீவுக்கும் சென்று வந்த தகவல்களை பரிமாறினேன்.

இறுதிக்கட்டப்போரில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் மீதுதான் நாம் எமது கவனத்தை தீவிரப்படுத்தவேண்டியிருப்பதையும். ஒழுங்கான பராமரிப்பின்றி வாடும் குழந்தைகள் சிற்றேவல் தொழிலுக்கு உறவினர்களினால் அனுப்பிவைக்கப்படும் அபாயம் தோன்றிவிடுமோ என்ற கவலைதான் மனதை அரிக்கிறது. அதனால் வன்னியில் இயங்கும் பாடசாலைகளில் மாணவர் விடுதிகளை அமைத்து அங்கே இந்தக்குழந்தைகளை பராமரித்து அவர்களது கல்வி வளர்ச்சிக்கு உதவும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகச்சொன்னேன்.

அப்பொழுது, “பூபதி உமக்கு ஒரு கதை சொல்லட்டுமா?” என்றார்.

சொல்லுங்கள்.

“ நாவற்குழியில் ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில்தான் நானும் பிறந்தேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது வீட்டிலே வறுமை தாண்டவமாடியது. கொப்பி புத்தகங்கள் வாங்குவதற்கு ஒரு பத்து ரூபா தேவைப்பட்டது. எனது தகப்பனாரின் தமையனார் நாவற்குழி சந்தியில் ஒரு சிறிய தேநீர்க்கடை வைத்திருந்தார். அங்கே தேநீர் கோப்பி, வடை, மோதகம், இடியப்பம் விற்பார்கள். அவர் எனக்கு உதவக்கூடிய நிலையிலிருந்தமையால் சென்று கேட்டேன். உடனே அவர் முகத்தை சுழித்துக்கொண்டு “பத்து ரூபாயோ...? பத்துச்சதமும் இல்லை. என்ன படிப்பு... கலியாணப்படிப்பு... உந்த கண்டறியாத படிப்பை விட்டுப்போட்டு இங்கே வந்து கடையில மேசையைத்துடை. ஒரு ரூபா தாரன் சம்பளம்” என்றார்.

“அதன் பிறகு நான் அவரது முகத்திலும் விழிக்கவில்லை. கல்வியின் அருமை தெரியாதவர்கள் அன்றும் இருந்தார்கள். இப்பொழுதும் இருப்பார்கள். குழந்தை போராளிகள் உருவான காலம் போய் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகும் காலம் வன்னியில் வரலாம். என்னைப்போன்றவர்கள் விதிவசத்தால் இங்கே முடங்கிப்போனோம். உம்மைப்போன்றவர்களாவது வன்னிக்குழந்தைகளை கவனியுங்கள்” என்று சொல்லிக்கொண்டே கண்ணயர்ந்தார்.

அம்பி கல்வியால் தன்னை வளர்த்து ஆசிரியராகி, கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில் பணியாற்றி பல குழந்தை இலக்கிய நூல்களையும் படைத்திருப்பவர்.அம்பியின் மகனை அழைத்துக்கொண்டு பென்டல் ஹில் என்னுமிடத்தில் மகன் வசீகரனுடன் வசிக்கும் காவலூர் ராஜதுரையை பார்க்கச்சென்றேன்.

இலங்கை வானொலியில் பல உரைச்சித்திரங்களை வழங்கியவர், தற்போது சரளமாகவும் சீராகவும் உரையாற்ற இயலாமல் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும் புத்தகங்கள் இதழ்கள் படித்துக்கொண்டும் பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார். இவரைப்பற்றி ஏற்கனவே அவரது பவள விழாக் காலத்தில் ஞானம் இதழில் விரிவாக எழுதியிருக்கின்றேன். அவர் கதை,வசனம் எழுதிய பொன்மணி திரைப்படத்தை அவரது மைத்துனர் தயாரித்தார். இலங்கையில் பிரபல திரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜ இயக்கினார். இந்தப்படத்தில் ஒரு விசேட அம்சம் இதில் நடித்த பலர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள். ஊடகவியலாளர்கள். திருமதி சர்வமங்களம் கைலாசபதியும் நடித்திருந்தார். திருமதி காவலூர் ராஜதுரையும் நடித்தார். மௌனகுரு, சித்திரலேகா மௌனகுரு, டொக்டர் நந்தி, பொறியியலளர் திருநாவுக்கரசு தொலைக்காட்சி, வானொலி ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா உட்பட பலர் நடித்த பொன்மணி வசூழில் சாதனை செய்யாதபோதிலும் இன்றும் இணையங்களில் பேசப்படும் படமாகத்திகழ்கிறது.

சமீபத்தில் குத்துவிளக்கு படத்தின் மறுவாசிப்பாக ஒரு நூலை படங்களுடனும் குறிப்புகளுடனும் வெளியிட்டிருந்தார் தம்பிஐயா தேவதாஸ். அதுபோன்று பொன்மணி பற்றியும் ஒரு நூல் வெளியாகவேண்டும் என்றேன்.

“ யார் செய்வது”? எனச்சொல்லி புன்னகையுடன் கைகளை விரி;த்தார் காவலூர். பேசுவதில் அவருக்கிருந்த சிரமத்தை அவதானித்த அம்பியின் மகன் சில சிகிச்சை முறைகள் பற்றி சொன்னார்.

ஒரு நாள் எதிர்பாராமல் வந்த பக்கவாதம் அவரது குரலை பெரிதும் பாதித்துவிட்டிருக்கிறது. என்னை பேசச்சொல்லிவிட்டு அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இலங்கையில் நாம் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு காலத்தில் நான் சந்தித்த அவரது வனொலி பத்திரிகை, இலக்கியத்துறை நண்பர்களைப்பற்றிச்சொன்னேன். எல்லோரையும் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் முடியவில்லை.” என்றார். நான் நெகிழ்ந்துபோனேன்.

அவரால் சரளமாகப் பேச முடியாது போனாலும் இணையத்தளங்களில் வெளியாகும் தகவல்களை ஒழுங்காகப்பார்க்கின்றார். தொலைக்காட்சிகளில் செய்திகளை அவதானிக்கின்றார். மகன் வசீகரன் உடனிருப்பதனால் அவரால் வௌ;வேறு இடங்களிலிருக்கும் மக்கள் மருமக்களை பேரப்பிள்ளைகளை சென்று பார்த்துவர முடிகிறது.

சில சந்தர்ப்பங்களில் பேரப்பிள்ளைகளை வீட்டிலிருந்து பராமரிக்கும் Baby Sitter ஆகவும் இயங்குகிறார்.

அம்பியின் இல்லத்திலிருந்து பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் அவர்களை பார்க்கப்புறப்படும் தருவாயில் சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் SBS தேசிய வானொலியின் தமிழ் ஒலிபரப்பு ஊடகவியலாளர் நண்பர் ரேமண்ட் செல்வாஜை (ரெய்செல்) சந்தித்தேன். பூலோகசிஙகம் சிட்னி கொன்கோட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் அவர் வீட்டுக்கு வந்துவிட்டாரா என்பதை நிச்சயப்படுத்திக்கொண்டு பார்க்கச்செல்லுங்கள் என்று ஆலோசனை கூறினார். என்னிடமிருந்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டபோது அது செயலில் இல்லை என்பது தெரிந்தது.

“ வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்யுக்கு அலையாதே” என்று சொன்ன அம்பி தன்னிடமிருந்த புதிய இலக்கத்தை தந்தார். உடனே புறப்பட்டு பூலோகசிங்கம் வசிக்கும் தமிழர்கள் செறிந்துவாழும் ஹோம் புஷ் என்னுமிட்டத்தில் அமைந்திருந்த பார்லிங்டன் டவர் மாடிக்குடியிருப்பை அடைந்தேன். என்னை தமது காரில் அழைத்துச்சென்றார் அம்பியின் மகன் திருக்குமாரன்.

“ அங்கிள் நீங்கள் வந்தால்தான் நாங்களும் இவர்களைச் சந்திக்கின்றோம். இல்லையென்றால் எமக்கிருக்கும் பிஸியான வாழ்க்கையினால் எவரையும் பார்க்கச்செல்ல நேரம் ஒதுக்க முடியவில்லை.” என்றார் திருக்குமாரன்.

பேராசிரியர் கண்கள் பனிக்க எழுந்து வரவேற்க முயற்சித்தார். நான் வேகமாக அவர் அருகில் சென்று ஆரத்தழுவிக்கொண்டேன். அந்த மாடிக்குடியிருப்பில் அவரும் அவரது மனைவியும்.. மகன் மலேசியாவில். வவுனியாவில் 1936 ஆம் ஆண்டு பிறந்த பூலோகசிங்கம் அவர்கள் பற்றிய விரிவான கட்டுரையை அவரது மாணாக்கரான கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலை விரிவுரையாளர் முருகேசு கௌரி காந்தன் என்பவர் வீரகேசரி வாரவெளியீட்டில் சமீபத்தில் எழுதியிருந்தார். அதனை சிட்னியிலிருந்து இயங்கும் தமிழ் முரசு இணைய இதழ் மறுபிரசுரம் செய்திருக்கிறது.

ஆடல் பாடல் அரங்கேற்றங்கள் மலிந்த அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்க சிலர் இருப்பதனால் தொடர்ச்சியாக 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவையும் ஒன்றுகூடல் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றோம். பல சந்தரப்பங்களில் அதற்கும் அரசியல் சாயம் பூசி அசி;ங்கப்படுத்தும் புலன்பெயர்ந்தவர்களும் எம்மத்தியில் இருக்கிறார்கள். 2001 ஆம் ஆண்டு முதலாவது எழுத்தாளர் விழாவை நாம் மெல்பனில் நடத்தியபோது நாற்பதுக்கும் அதிகமான பேராளர்கள் சிட்னியிலிருந்து வருகைதந்து கலந்துகொண்டார்கள். சில புலன் பெயர்ந்தவர்களின் அழுத்தங்களையெல்லாம் புறம் ஒதுக்கிவிட்டு வருகை தந்தவர் பேராசிரியர் பூலோகசிங்கம். அவர்தான் அன்றையதினம் மாநாட்டு கண்காட்சிகளை சம்பிரதாயபூர்வமாக நாடாவை வெட்டி திறந்துவைத்தார். 2008 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த எட்டாவது விழாவில் பேராசிரியர் பூலோகசிங்கமும் கட்டிடக்கலைஞரும் குத்துவிளக்கு திரைப்படத்தயாரிப்பாளருமான வி.எஸ். துரைராஜாவும் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

ஏற்கனவே இந்தப்பத்தியில் குறிப்பிட்டவாறு ஒருவர் வாழும்காலத்திலேயே அவரது உழைப்புக்காக பாராட்டி கௌரவிக்கப்படல்வேண்டும். மறைந்த பின்னர் விருது கொடுப்பதும் ஆகா... ஓகோ எனப்புகழ்ந்து ஈடு செய்ய முடியாத இழப்பு எனப்பிதற்றுவதும் மாறாத விதியாகிப்போயுள்ள சமுதாயத்தில், படைப்பாளிகளாவது கலை, இலக்கிய, ஊடகப்படைப்புத்துறைகளில் கடினமாக உழைத்த எம்மவர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடவேண்டும்.

பூலோக சிங்கமும் அங்கதச்சுவையுடன் உரத்துச்சிரித்து மகிழ்வூட்டுபவர். ஆறுமுகநாவலரைப்பற்றி நாம் அறியாத பல பக்கங்களை அவரது நூற்றாண்டு காலத்தில் தான் பேசிய மேடைகளில் சொன்னவர். நாவலர் நூற்றாண்டை முன்னிட்டு நீர்கொழும்பில் நாம் நடத்திய நிகழ்ச்சிக்கு பேராசிரியரையும் அழைத்திருந்தோம். சோமகாந்தன், பிரேம்ஜி ஞானசுந்தரன், உயர்நீதிமன்ற நீதியரசர் எச். டபிள்யூ தம்பையா ஆகியோரும் உடன் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் உரையாற்றியபோது நாவலரைப்பற்றி நாம் அறியாத தகவல் ஒன்றைச்சொல்லி சிலிர்க்கவைத்தார்.

ஒரு சமயம் கடும்கோபத்துடன் தமது உறவினர் ஒருவரை வெட்டுவதற்காக ஒரு வெட்டுக்கத்தியுடன் நாவலர் ஓடியிருக்கும் செய்தியே அந்தத்தகவல். அப்படி தமது பேச்சுக்களினால் எங்களை சிலிர்க்கச்செய்த சிங்கம் தற்போது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து தனது கடந்த பொற்காலங்களை நினைத்துக்கொண்டிருக்கிறது.

ஒரு நாள் வெளியே நடந்துசென்றபோது எதிர்பாராதவிதமாக தடுக்கியோ மயங்கியோ விழுந்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு படிப்படியாக தேறியிருந்தாலும் பவளவிழா நெருங்கும் காலப்பகுதியில் விதியானது தன்னை இப்படி முடங்கியிருக்கச்செய்துவிட்டதே என்ற கவலை அவரது பேச்சில் தொனித்தது. அவர் வெளியே விழுந்த வேளையில் வீட்டினுள்ளே அவரது அன்புத்துணைவியார் விழுந்திருக்கிறார். அவரும் தற்போது சிகிச்சைகளுடன் கணவருக்கு பணிவிடைசெய்துகொண்டிருக்கிறார்.

வாசகர்கள் இந்தப்பத்தியில் நான் ஏற்கனவே குறிப்பிட்ட லண்டன் பத்திரிகை விளம்பரத்தை மீண்டும் பார்க்கலாம்.

தமது வீட்டில் நிறைந்திருக்கும் பெறுமதியான நூல்களை என்ன செய்வது என்ற கவலையும் அவர்கள் மனதை அரிக்கத்தொடங்கியிருக்கிறது. வன்னியில் இயங்கத்தொடங்கியுள்ள பாடசாலைகளில் நூலகங்களை அபிவிருத்தி செய்யவேண்டியதும் காலத்தின் தேவை எனக்கருதி சில பணிகளை நாம் முன்னெடுக்கின்றோம். இதுபற்றி அவர்களிடம் சொன்னபோது, தமக்கும் இந்தத்திட்டத்திற்கு உதவுவதற்கு விருப்பம் இருப்பதாகச்சொன்னார்கள் அவர்கள் இருவரும்.

புலப்பெயர்வும் இடப்பெயர்வும் எவருக்கும் தற்காலிகமானதுதான். வேர் அங்கும் வாழ்வு இங்குமாக படர்ந்திருப்பவர்கள் இனி எங்கே... எப்போது... என்ற கேள்விகளுக்கான விடைகளை மனக்குகை ஓவியங்களாக தீட்டிக்கொண்டிருப்பார்கள்.

----0----7 comments:

kirrukan said...

[quote]ஆடல் பாடல் அரங்கேற்றங்கள் மலிந்த அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்க சிலர் இருப்பதனால் தொடர்ச்சியாக 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவையும் ஒன்றுகூடல் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றோம். பல சந்தரப்பங்களில் அதற்கும் அரசியல் சாயம் பூசி அசி;ங்கப்படுத்தும் புலன்பெயர்ந்தவர்களும் எம்மத்தியில் இருக்கிறார்கள். 2001 ஆம் ஆண்டு முதலாவது எழுத்தாளர் விழாவை நாம் மெல்பனில் நடத்தியபோது நாற்பதுக்கும் அதிகமான பேராளர்கள் சிட்னியிலிருந்து வருகைதந்து கலந்துகொண்டார்கள். சில புலன் பெயர்ந்தவர்களின் அழுத்தங்களையெல்லாம் புறம் ஒதுக்கிவிட்டு வருகை தந்தவர் பேராசிரியர் பூலோகசிங்கம். [/quote]


ஆடல் பாடல்களை துறந்து இலக்கியதுக்கு வாரவன் அரசியல் எண்ணத்துடன் தான் வருவான்.தனிய இலக்கியதாகத்துடன் ஒருத்தன் வந்து நீங்கள் செய்வது எல்லாம் சரி என்று சொல்லுவது என்றால் அவனுக்கு புலன் இல்லாமல் இருக்க வேண்டும்.

ஜயாவுக்கு அரசியல் என்றால் பிடிக்காது போல கிடக்குது...அதற்காக அரசியல் சாயம் பூசுபவர்களை புலன் பெயர்ந்தவர்கள் என்று எண்ண வேண்டிய அவசியமில்லை...

மனித வாழ்க்கையில் அரசியல் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை ஜயா ஏற்றுகொள்ள மறுக்கிறார் போல கிடக்குது....

திருநந்தகுமார் said...

நான் அருகிருந்தும் பேராசிரியரையோ காவலூராரையோ அண்மைக்காலத்தில் சந்திக்கவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன் கவிஞர் அம்பி அவர்களை மட்டும் சென்று பார்க்க முடிந்தது. மெல்பேர்னிலிருந்து இங்கு வந்து மும்மணிகளையும் பார்த்துச் சென்று பதிவாக்கியமை மன நிறைவைத் தருகிறது. அவ்வப்போது விவகாரங்களுக்குள் அகப்பட்டாலும் எழுத்தாளர்கள் மீதும், தமிழ் அறிஞர்கள் மீதும் முருகபூபதி கொண்ட ஈடுபாடு போற்றத்தக்கது.
எத்தனையோ செய்கிறோம்! முதுமைக்காலத்தில் தமிழர்கள் தமது சூழலில் வாழ்வை நகர்த்த சிட்னி மண்ணில் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்யவேண்டும்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்களால் முடியாதது எதுவுமில்லை.(ஆலயங்கள் உட்பட).

Ramesh said...

மெல்பேணில் இருந்து வந்த பூபதி அவர்களை சென்று பார்த்து அவர்களை கௌரவப்படுத்தியது எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கௌரவம்தான். நாம் சிட்னியில் இருந்து கொண்டும் இவை பற்றி சிந்திக்காமல் இருப்பது வேதனையாகத்தான் உள்ளது.

திருநந்தகுமார் said...

ஆசிரியர் குழுவிற்கு
கவிஞர் அம்பி மற்றும் காவலூர் இராஜதுரை படங்கள் இப்பக்கத்தில் வரவில்லை. மீள் பிரசுரிக்க முடியுமா?

kirrukan said...

[quote]முதுமைக்காலத்தில் தமிழர்கள் தமது சூழலில் வாழ்வை நகர்த்த சிட்னி மண்ணில் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்யவேண்டும்[/quote]

தமிழனின் சூழல் என்ன ஜயா?சிட்னியில் பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து பராமரித்தாலே போதுமே அவர்கள் மகிழ்ச்சி அடைய..அதைவிடுத்து தமிழ்சமுகத்திடம் குற்றம் காண்பது ஏனோ?

திருநந்தகுமார் said...

நன்றி கிறுக்கன்.
கவிஞர் அம்பியிடம் நான் பலதடவை பேசியிருக்கிறேன். தன் குழந்தைகளுடன் இருப்பதை அவர் பெரிதும் விரும்புகிறார். எனினும் இனி இருந்து என்ன பயன்? விரைவில் போகவேண்டும் என்றும் அலுத்துக்கொள்கிறார். அவரின் அனுபவத்தையும், அறிவையும் பகிர்ந்துகொள்ள விரும்பியபோதும் அது முடியவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் இருக்கின்றது.

பேராசிரியர் பூலோகசிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த நேரம் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். அவரிடம் சிலவார்த்தைகள் பேசினேன். அப்போது எனக்குத் தகவல் சொன்ன நண்பர் சொன்ன செய்தி தூக்கி வாரிப்போட்டது. பேராசிரியரின் மனைவிக்கு தகவல் சொல்ல முயன்றபோதும் முடியவில்லை என்று சொன்னார்கள். முருகபூபதி சொன்னபடி அவர் மனைவியும் அன்று சுகயீனமுற்றிருந்தார்.
இருவருக்கும் ஒரே வேளையில் முடியாதபோது என்ன செய்வது.
சென்ற மாதத்தில் எனது தந்தையை இழந்தேன். அவர் முதியோர் காப்பகத்தில் இருந்தார். வைத்தியசாலையில் இருந்து நேரடியாக முதியோர் காப்பகத்திற்குத் தான் அவரை அனுப்பினார்கள். 24 மணி நேரமும் கவனம் தேவைப்படும் ஒருவராக அவர் இருந்ததே காரணம். அவர் அங்கு மகிழ்ச்சியாக இருக்கவில்லை. எதுவும் பிடிக்கவில்லை. ஆகையினால் தான் முழுமையான தமிழ்ச் சூழலில் ஒரு காப்பகம் இருந்தால் நல்லது என்கிறேன். எனது தந்தைக்கு கிடைக்காமல் போனது வருங்கால முதியோருக்காவது கிடைக்கட்டுமே என்ற ஒரு அங்கலாய்ப்புத் தான். வேறு ஒன்றுமில்லை.

Anonymous said...

You get "Tamil envronment" in Mr Suntharesan's nursing home in Homebush.