கொழும்பு வழியே ஒரு பயணம் - ஈழ விடுதலையுடன் நிறைவுறுகிறது - வித்யாசாகர்!!

.

பீரங்கிக்கே துணிந்துவிட்ட தமிழினம் துப்பாக்கிக்காகவா பயம் கொள்ளும். மார்பை விரித்துக் காட்டி நின்றனர் எல்லோரும்.

யாரைச் சுடப்போகிறாய் என்னைச் சுடுகிறாயா? சுடு சுடு.. என்னை சுடு இவனை சுடு எங்கள் எல்லோரையும் சுட்டுவிட்டுப் போ. என்ன கிடைத்துவிடும் உனக்கு, எங்களின் பிணம் வழியெங்கும் இரைந்துக் கிடக்க அதன்மீதேறி படுத்து உறங்கினால் உறங்கிவிடுவாயா நீ?

உறங்கிவிடுவாயெனில் ம்ம் சுடு................." ஒருவன் உரக்க கத்த ஒரு கூட்டமே அவன் பின் குரல் கொடுத்து மார்பு காட்டி நின்றது.


"உன் குழந்தை ஒன்றை ஒரு கையில் தூக்கி வானத்திற்கு காட்டி பொட் பொட்டெனச் சுட்டால் அப்போ தெரியும் உனக்கு உயிரின் வலியும் விடுதலையின் விலையும் என்னவென்று!!"

அந்த கூட்டம் மீண்டும் வலியோடு பேச; காவலாளிகள் ஒரு அடி பின்னே விலகினர். இது உணர்ச்சிவயப் பட்ட கூட்டமல்ல, சிந்தித்து சிந்தித்து அழுது அழுது வேறு வழியின்றி நரம்புப் புடைத்தெழுந்த மக்கள் சக்தி என்று அவர்களுக்குத் தெள்ளனவே விளங்கிற்று.

ஆயினும், காவலர்கள் கட்டளைக்கு உட்பட்டவர்கள் என்பதால் வேறொருவன் மிக வேகமாக முன்வந்து துப்பாக்கியெடுத்து மாணவர்களின் கால் பார்த்துச் சுட; சற்றும் அசராத அந்த மாணவனில் ஒருவன் எகுறி துப்பாக்கியை அவனிடமிருந்து பறித்து 'உனக்கு சுடத் தானே வேண்டும் இதோ நான் சுடுகிறேன், டிஷ்யூம்!! டிஷ்யூம்!! டிஷ்யூம்!! மூன்று மாணவர்களின் காலைப் பார்த்து அந்த மாணவனே சுட்டான், "போதுமா போதுமா.. இதோ டிஷ்யூம்!! அவன் தன் காலிலும் சுட்டுக் கொண்டான், இன்னும் பார்க்க வேண்டுமா டிஷ்யூம்!! தன் ஒரு கையில் இன்னொரு கையினால் துப்பாக்கி முனையை வைத்து அழுத்திச் சுட்டுக் கொண்டு கையில் ரத்தம் சொட்டச் சொட்ட போதுமா போதுமா என்றான்.

அதற்குள் சத்தியசீலனுக்கு ஒரு பொறி தட்டியது, உயிரை திரியாக்கி துப்பாக்கியில் இட்டானவன், ஓடிச் சென்று அந்த மாணவனிடமிருந்து அந்த துப்பாக்கியைப் பிடுங்கினான், டிஷ்யூம்!! டிஷ்யூம்!! டிஷ்யூம்!! தன் இரண்டு காலில் மாறி மாறி சுட்டுக் கொண்டான், மக்களெல்லாம் அவனை காப்பாற்ற ஓடி வந்தது.., "யாரும் அசைய வேண்டாம், நமக்கு நம் உயிர் பெரிதல்ல, நம் விடுதலை முக்கியம்' என்று அவன் 'பேசிக் கொண்டிருக்கும் போதே மாதங்கி விமானத்தில் உடன்வருகையில் பேசியதும், குழந்தைகளை சிங்களன் கொன்றதும், பெண்களை எல்லாம் பாலினக் கொடுமைக்கு ஆளாக்கி துன்புறுத்தப் பட்டதும், காடுகளில் தமிழரை இருத்தி தமிழர் வாழ்ந்த இடத்திலெல்லாம் சிங்களக் குடிமக்களை அமர்த்துவதும் என எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவில் வர -

தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்தான்; கடைசியாய் "காவலாலிகளே இதோ என் உயிரும் இனி எம் விடுதலைக்கு துச்சம், எம் தாகம் தமிழீழ தாயகம்' என்று சொல்லி; டிஷ்யூம்!! துப்பாக்கி வெடித்து ரத்தம் எதிர் முனையில் பாய சத்யசீலன் உயிரற்று கீழே விழுந்தான். காவலாளிகள் துப்பாக்கியை போட்டுவிட்டு ஓடி அவனைத் தூக்க எல்லாம் நேரடி ஒளிபரப்பாக ஊடகம் மூலம் உலகம் முழுக்கக் காட்டப் பட்டது. ஒவ்வொரு நகர்வும் செய்தியாக்கப் பட்டது.

துடிதுடித்தனர் உலகமக்கள். ஆங்காங்கே படை திரண்டனர் தமிழர்கள். அத்தனையையும் பதிவு செய்து இணையம் முழுதும் ஒளிபரப்பி அதன் மூலம் தங்களின் நியாயத்தை உலகின் பார்வைக்கு விளக்கி முன்வைத்தனர். அடுத்தடுத்த வினாடிகளில் ஒவ்வொன்றாய் பரவி இந்தியாவின் மூலைமுடுக்கெங்கும் இது மட்டுமே தலைப்புச் செய்தியானது.

ஆங்காங்கே ஒருசிலர் மாணவர்களின் போராட்டத்தை பலப் படுத்தும் விதமாக உயிரோடு தீக்குளித்தனர். குடும்பமாக மாடியில் இருந்து குதித்துக் காட்டினர். இனியும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இனி பிணக்குவியல்களே தெருவெங்கும் கிடைக்கப் பெறுமென்று எச்சரிக்கை விடுத்தனர். இது ஈழ விடுதலை கிடைக்கும்வரை நீடிக்கும் என்று அறிவிப்பு செய்து சுவரெல்லாம் ஒட்டி தன் கண்ணீரை விளம்பரப் படுத்தினர். உலகநாடுகள் இவைகளை எல்லாம் கேள்வியுற்று தொலைகாட்சிகளின் மூலம் கண்டு பதறி அவசர நடவடிக்கை யெடுக்கும் படலாமாக உடனடியாக ஒன்று கூடியது.
 
ஐ.நா தலையிட்டு விசாரித்து, தமிழருக்கு எதிராக நடந்தவையில் அதிகபட்சம் போர்குற்றமே என்றும் உடனே அரசை களைத்து உரியவர் மேல் தக்க நடவடிக்கை எடுக்கும்படியும், சம்மந்தப் பட்ட அனைவரையும் சர்வதேச குற்றவாளி கூண்டில் அடைக்குமாரும் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டு பகிரங்கப் படுத்தி உலக நாடுகளுக்கு அறிக்கை விட்டது. சிங்கள அரசு எத்தனை முண்டியடித்தும் தீவிரமாய் மறுத்தது உலக நாடுகள்.

இத்தனை நடந்தபின்னும் அம்மக்களுக்கு சிங்கள அரசால் விடிவு கிடைக்காது. கிடைத்தாலும் அது அடிமைத்தனம் கொண்டதாகவே இருக்கும். அதனை காட்டிலும், ஒரு ஆதி மொழி கொண்ட இனம், தனியே வாழ தகுதியுள்ள ஓர் இனம், இத்தனை கோடி மக்கள் தொகையை கொண்ட ஓர் இனம் வெகு நிச்சயமாய் தனிநாடாக விடுதலை பெற முழு உரிமையும் பலமும் கொண்டுள்ளதென்று உலகநாடுகள் அத்தனையும் சிபாரிசு செய்தன.

இந்தியா பொறுத்துப் பார்த்து தன் படையை மொத்தமும் பின்னுக்கெடுத்தது. போர்குற்றம் வெட்டவெளியாக அம்பலமாக, தான் இனி இலங்கை அரசுக்கு துணை நிற்கப் போவதில்லை என்றும், அதர்ம வழியில் போரிட்டு மக்களை அழித்தமையால் தான் இனி தன் உதவிகளை அனைத்தையும் ரத்து செய்துக் கொள்ளப் போவதாகவும், தமிழ் மக்களுக்கு தனிநாடு தருவதொன்றே அவர்களுக்கு பாதுகாப்பினை அளிக்கவல்லதென்றும் திட்டவட்டமாக அறிவித்தது.

தமிழர்கள் வானம் பார்த்து கைகூப்பினர். இந்தியக் கொடி கண்டு நிமிர்ந்து நின்று வணக்கம் செலுத்தினர். இந்தியா என் தேசம்; எம் மக்களின் நலனுக்கு துணை சேர்த்த இந்தியர் எம் சகோதரர்கள் என்று மேடைகளில் முழங்கினர்.

உலக நாடுகள் இந்தியாவிற்கு வாழ்த்துக்கூறி ஐ. நா வை முன்னிலை படுத்தி சிங்களத்தை தனியாகவும் தமிழர்கள் வாழும் பகுதியினை தனியாகவும் வேறு வேறு நாடுகளாக அறிவிக்கக் கூறின. உலக தமிழர்கள் தன் ஒட்டுமொத்த நன்றியையும் உலக நாடுகளுக்குத் தெரிவித்து 'இந்தியாவை தன் சகோதர தேசமென்று கொண்டாடினர்.
 
தமிழீழ தேசம் அமைப்பதன் பேரில் தலைவர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப் பட்டு பதினைந்திற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கூடிய கூட்டத்தில் வெகு மனிதம் மிக்கவராகவும், துரோகம் இழைத்தவனையும் மன்னிக்கத் தக்கவராகவும் பேசுகிறார். 'தண்டனைக்குரிய 'சிங்கள அரசு சார்ந்தோரை மன்னித்து விட்டுவிட வேண்டு மென்றும், ஆர்மி செய்த தவறுகளால் அப்பாவி மக்கள் ஒருபோதும் தண்டிக்கப்படக் கூடாதென்றும், அரசின் தவறான அணுகுமுறைக்கு பொதுமக்கள் பொருப்பல்ல என்றும், இனி வாழும் எம் எஞ்சிய மக்களேனும் நிம்மதியும் மகிழ்வும் பூரித்திருக்கத் தக்க நாங்கள் வாழும் 'தமிழிழீழம்' வரை எங்கள் தேசமென்று அறிவித்தால் போதுமென்றும், அவர்கள் ஆளுமிடத்தை இலங்கையாக அவர்களே ஆண்டுக் கொள்ளட்டுமென்றும் கூற, 'தமிழரின் பெருந்தன்மையும், இத்தனை நடந்தும் எஞ்சிய மக்களுக்காக சிந்தித்த நியாயம் வழுவிடாத மனமும் உலக மக்களிடத்தில் மொத்த தமிழினத்திற்கே பெருமையை சேர்த்தது.

மன்னிப்பினை ஏற்றுக் கொண்ட சிங்கள அரசும், காலத்தின் சூழலில் நாங்களும் கட்டாயத்திற்கு தள்ளப் பட்டோம் என்றாலும், நடந்தவை போர்முறை சார்ந்ததன்றி தமிழர் மேல் எங்களுக்கும் எந்த தனிக் கோபமுமில்லை. அவர் பூமியை அவர் ஆளட்டும் எங்கள் இலங்கையை நாங்கள் ஆண்டுக் கொள்கிறோம்" என்றும் முழங்க -

பட்டாசு வெடித்தது விடுதலையின் ஆரவாரம் ஊரெங்கும் பரவியது. சுதந்திரத்தை தன் மண்ணில் பெற்றுவிட்ட சந்தோஷம் உள்ளூரப் பொங்கியது. உலகமெங்கும் அகதிகளாய் திரிந்த தமிழரெல்லாம் ஈழம் நோக்கி உடனடியாகத் திரும்பினர். வராதவர்களும் அன்பு கரம் கொண்டு வரவழைக்கப் பட்டனர். தமிழீழக் கொடி ஓர் நல்ல நாள் பார்த்து வானில் கனகம்பீரமாக பறக்க, தலைவர் கண்களில் பெருகிய நீர்துளியோடு மாவீரர்களை நினைத்து மனமுறுகி நிற்க; இந்திய பிரதமர், இலங்கை அதிபர், உலக நாடுகளின் இன்னபிற தலைவர்களின் முன்னிலையில், தமிழக முதல்வரும் அருகில் நின்று எல்லோரும் சேர்ந்து எழுப்பிய கரவொலியின் ஆராவரத்தில் 'தமிழீழ தேசம்' விடுதலைப் பெற்ற சகோதரத்துவ நாடாக அறிவிக்கப் பட சுதந்திர இசை முழக்கத்தின் மத்தியில் பெருங்கம்பீர்மாய் ஒலித்ததந்த சத்யசீலனின் கவிதையொன்று -
 
னவு சுமந்தோம் கனவு சுமந்தோம்
ரத்தம் சொட்ட வருடம் சுமந்தோம்,
உயிரை துறந்தோம்; உயிரை துறந்தோம்
ஓர்நாள் வெல்லும் உறுதியைக் கொண்டோம்!

விடிவு பிறக்கும் வாசல் திறக்க
உயிரை கடந்தும் காத்துக் கிடந்தோம்,
வருடம் தொலைந்து உறவுகள் இழந்தும் -
வெல்லும் உறுதியில் கனவு சுமந்தோம்!

வேரூர் பறந்து உறவு பிரிந்து
விடியல் நோக்கிப் பயணம் செய்தோம்,
அகதியாய் பட்டக் கரையைத் துடைக்க
ஈழக் கொடியை ஏந்தி பிடித்தோம்!

றுதி யெடுப்போம் உறுதி யெடுப்போம்
ஒற்றுமை யெமது நெற்றிப் பொட்டென
வளர்ச்சி யொன்றே என்றும் மூச்சென
மதமும் இனமும் கடந்துப் பறக்கும் -

ழக் கொடியினை உயர்த்திப் பிடிப்போம்;
உலக மக்கள் பார்வையி லெங்கள் - தமிழை
தமிழரை பெருமைபடுத்தி - தேசம் சிறக்க
கனவு சுமப்போம்!

னவு சுமப்போம் னவு சுமப்போம்
மா - வீரர்கள் கண்ட கனவையும் சுமப்போம்;
கனவுகள் வெல்லும் முழுமை நாளில்
தமிழராய் மட்டுமோர் குடையினில் நிற்போம்!!


...முற்றும்...
 
 
கொழும்பு வழியே ஒரு பயணம் - நன்றிகளுடன் - வித்யாசாகர்!
 
முக்கிய குறிப்பு: ஒரு இனத்தின் அழிவினை, அடிமைத் தனத்தினை எதிர்த்து சிந்திக்கவும், யாருக்கும் நோகாமல் எம் உறவுகளின் இத்தனைக் காலப் போராட்டத்தினை வெல்லவும், நடந்த உண்மைகளை செய்தி வழியாகவும், இணைய உதவிகளாலும் திரட்டி, நேரே சிலரிடம் விசாரித்தும், கொழும்பு வழியே வருகையில் சந்தித்த சிலர் பகிர்ந்துக் கொண்ட சோக நிகழ்வுகளை ஆராய்ந்தும் புனையப் பட்ட கற்பனைக் கதையிது.

இதில்; அவரவர் எண்ணப்படி நிறைய மாற்றுக் கருத்துகள் இருக்கலாம், மாற்று யோசனைகள் வரலாம், மறுப்புக் கூட தெரிவிக்க முனையலாம், அது, அவரவரின் எண்ணத்திற்குத் தக்க, கருத்து சார்ந்த, வலி சார்ந்த, அனுபவம் சார்ந்த, அறிவும் தெளிவும் சார்ந்த, அக்கறையின் கோணத்திற்குத் தக்கதான ஒரு சுதந்திரம் என்றே கொள்வோம்.

எதுவாயினும், இதுவரை இழந்தவைகளை கடந்து எஞ்சிய மக்களுக்கேனும் வளம் சேர்க்கக் கூடிய எண்ணங்களை சிந்திக்க வைக்கும் 'ஒரு இனத்தின் விடிவின் சிந்தனைக்கான தூண்டுதலை ஏற்படுத்துமொரு பொறி மட்டுமே இது என்பதையும் தெரிவித்து, நடந்த இழி செயல்களையும், என் இனமக்களுக்கு இயற்றப் பட்ட கொடுமைகளை கொடூர மனித தன்மையற்ற செயலினை பதிவாக்கும் பொருட்டாகவும், ஒருவேளை இங்ஙனம் நடந்திருந்தால் யாருக்குமே இதனால் நட்டமில்லையே என்பதை எல்லோருக்குமே அறிவிக்கும் வண்ணமும், உடனிருந்தே சதி செய்வோருக்கு எங்களின் தேவை இதுமட்டுமே என்று அறியப் படுத்தும் ஒரு யோசனையாக மட்டுமே இக்கதையின் நோக்கமிருப்பதன்றி வேறில்லை' என்பதனை இதுவரை தொடர்ந்து கருத்துப் பரிமாறி ஆதரவு நல்கிய நல்லுள்ளங்களுக்கும், நட்புள்ளங்களுக்கும், இணையத் தள உறவுகளுக்கும், பிற அச்சு இதழ்களுக்கும் தெரிவித்து, மானசீகமாய் நன்றி பாராட்டி நிறைவு செய்கிறேன்!!

_வித்யாசாகர்

No comments: