மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.
71. எங்கே..?

எங்கே நம்பிக்கை உள்ளதோ, அங்கே அன்பு உண்டு:

எங்கே அன்பு உண்டோ, அங்கே அமைதி உண்டு:

எங்கே அமைதி உண்டோ, அங்கே உண்மை உண்டு:

எங்கே உண்மை உண்டோ, அங்கே ஆனந்தம் உண்டு:

எங்கே ஆனந்தம் உண்டோ, அங்கே இறைவன் உள்ளார்!



72. உண்மையான சாதனை


நீங்கள் கட்டாயம் தீயவற்றைப் பார்க்க வேண்டா:
மாறாக, நல்லதை மட்டுமே பாருங்கள்!

கட்டாயம் தீயவற்றை கேட்க வேண்டா:
மாறாக, நல்லதை மட்டுமே கேளுங்கள்!

கட்டாயம் நீங்கள் தீயவற்றைப் பேசவேண்டா:
மாறாக நல்லதை மட்டுமே பேசுங்கள்!

கட்டாயம் நீங்கள் தீயவற்றை செய்ய வேண்டா:
மாறாக, நல்லதை மட்டும் செய்திடுங்கள்!

இதுவே, உண்மையான ‘சாதனை’ (ஆன்மிகப் பயிற்சி) ஆகும்!

73. வீழ்ச்சிக்குக் காரணமானவை
மந்தரை இராமனைப் பற்றித் தவறாக, இழிவாகப் பேசும் பாவமாகிய தீமையைச் செய்தாள்;: கைகேயி, தீயவற்றைக் கேட்பதற்காகத் தன் செவிகளை ஈந்தாள்: கீசகன், திரௌபதியின் மேல் தன் தீய பார்வையைச் செலுத்தும் தீமையைப் புரிந்தான்: துரியோதனன் தீய எண்ணங்களைத் தன் மனத்தில் வளர்த்த தீமையைச் செய்தான்: இராவணன் தீய செயல்களைச் செய்தான்.

தீயவற்றைப் பேசல், தீயவற்றைக் கேட்டல், தீய நோக்கில் பார்த்தல், தீயனவற்றை எண்ணுதல், தீயவற்றைச் செய்தல் - ஆகிய இவை எல்லாம் ஒருவனின் வீழ்ச்சிக்குக் காரணமாக உள்ளவை என்பதற்கு உதாரணங்களாம்.

74. சத்சங்கம் துர்ச்சங்கம்
‘சத்சங்கம்’ என்பது தூய்மையான, பளிங்கு போன்ற தண்ணீரைப் பருகுவது போன்றது. ‘துர்ச்சங்கம்’ (அல்லது தீயொழுக்கம் உடைய கயவர், கடவுள் வெறுப்பாளர், து}ய்மையற்றவர் போன்றோரின் கூட்டுறவு) என்பது, கடலில் உள்ள உப்பு நீரைக் குடிப்பது போன்றது: எவ்வளவு சர்க்கரையைச் சேர்த்தாலும் குடிப்பதற்கு அது தகுதியாகாது! மேலும், அது தாகத்தை அதிகமாக்கும்!

75. வீண்பெருமை
நீங்கள் ‘புஷ்கோட்’, அணிந்து பெருமித நடை போட்டுத் திரியும் போது, அவற்றை அணிய வசதி இல்லாத சிறு குழந்தைகளிடையே பொறாமையை உண்டாக்கி, நீங்கள் வீண்பெருமை அடித்துக் கொள்கின்றீர்கள். ஆனால், உண்மையிலேயே நீங்கள் உங்களை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்: எப்பொழுதென்றால், ஒயாது திரியும் மனத்தின் அலைச்சல்களைக் கட்டுப்படுத்தி உங்களின் உணர்ச்சிகள், ஆசைகள் ஆகியவற்றைக் கண்ணியமான, ஆரோக்கியமான வழிகளை நோக்கிச் செலுத்தும்போது: உங்களின் நண்பர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்கள், உங்களை எள்ளி நகையாடிக் கேலி செய்த போதும் அதனைத் தைரியமாக எதிர்த்து உங்கள் உணர்ச்சிகளை நல்ல வழியில் செலுத்தினால்! இதுதான் உண்மையான சுதந்திரம், உண்மையான வெற்றி!



No comments: