இலங்கைச் செய்திகள்

.      
இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோற்கடித்தோம்


இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோல்வியடையச் செய்தோம். அதேபோன்று ஐ.நா.வின் பக்கச் சார்பான அறிக்கையையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் தோல்வியடையச் செய்வோம் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.


இலங்கை இந்திய கூட்டறிக்கை இன்றைய காலத்தின் தேவையாகுமென்றும் அமைச்சர் கூறினார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெளிவுபடுத்துகையில்,

இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுப்பதை உறுதி செய்து கூட்டறிக்கை விடப்பட்டுள்ளமை இன்றைய காலத்தின் தேவையாகும். ஐ.நா. அறிக்கை எமது நாட்டுக்கு எதிராக பக்கச் சார்பாக தயாரிக்கப்பட்டது.

உலகில் எமது நாட்டை தனிமைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. எனவே இதற்கு பலம் மிக்க எமது அயல்நாடான இந்தியாவின் உதவியை நாடுவதில் எதுவிதமான தவறும் இல்லை. அத்தோடு அவசர காலச் சட்டம் நீக்கம் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளமை போன்றவை தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகள் இந்தியாவிற்கு அடிபணிவதாக கருதப்படாது. ஏனெனில் பிரபாகரனை தோல்வியடையச் செய்வதற்கு இந்தியாவே எமக்கு உதவியது. எமது எந்தப் பிரச்சினைக்கும் வேறெந்த நாடுகளைவிட எமது அயல் நாடான இந்தியாவின் உதவியே அவசியமானதாகும். இலங்கையும் இந்தியாவும் இணக்கப்பாட்டு ரீதியில் பிரிக்க முடியாத உறவுகளைக் கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளால் 13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதை தடுக்க முடியாது. 18 ஆவது திருத்தத்திற்கு எனக்குள் விருப்பமில்லை. ஆனால் அரசாங்கத்திற்குள் உள்ளேன். எனவே ஆதரவாக வாக்களித்தேன் என்றார். ___

வீரகேசரி இணையம்உயர்கல்வித்துறை எதிர்நோக்கும் நெருக்கடிகள்

19  மே 2011

இலங்கையின் கல்வித்துறை இன்று தடம்மாறி தனது இலக்கினை நோக்கிப் பயணிக்க முடியாததொரு நிலையை அடைந்துள்ளது. கல்வித்துறை சார்ந்தோரால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள், போராட்டங்களினால் அத்துறை பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளது. கல்வித்துறையின் இன்றைய மோசமான நிலைக்கு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலும் அரசியல்வாதிகளும் பிரதான பொறுப்பாளிகள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

பல்கலைக்கழகத்திற்கு புதிதாக அனுமதிபெறும் மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் கட்டாயமாக தலைமைத்துவப் பயிற்சி அளிக்கும் உயர்கல்வி அமைச்சின் திட்டத்திற்கு எதிரான மாணவர்களின் போராட்டமும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை உடனடியாக வழங்கக் கோரிய தொழிற்சங்க நடவடிக்கையுமே முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை முடங்கிப் போகவும் செய்துள்ளது. இவ்விடயங்களில் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளும் பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்புகளும் உறுதியாகவுள்ளதனால் நிலைமை இன்னும் மோசமடையும் சூழ்நிலையே காணப்படுகின்றது.

உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி.திசாநாயக்க பதவியேற்றுக் கொண்ட நாள் முதலாய் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளுக்கும் உயர்கல்வி அமைச்சுக்குமிடையில் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுவதனை அண்மைக்கால சம்பவங்கள் மூலம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. பல்கலைக்கழகங்களில் பகிடி வதைகள் என்ற பெயரில் இடம் பெறும் அநாகரிகச் செயல்களை கட்டுப்படுத்த அமைச்சர் திசாநாயக்க எடுத்த முயற்சிகள் பலரதும் வரவேற்பை பெற்றதை எவரும் மறுத்து விட முடியாது. இதன் ஒரு கட்டமாகவே பல்கலைக்கழக மாணவர்களிடம் குறைந்து போயுள்ள ஒழுக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமெனக்கூறிய உயர்கல்வி அமைச்சு அது தொடர்பில் ஆராய்ந்து எடுத்த முடிவே பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வைத்து கட்டாய தலைமைத்துவ பயிற்சி அளிப்பது என்ற திட்டமாகும். ஆனால் இத்திட்டம் உயர்கல்வி அமைச்சு எதிர்பார்த்தது போல் மாணவர்களிடமோ அல்லது மக்களிடமோ ஆதரவைப் பெறுவதற்கு பதிலாக கடும் எதிர்ப்பையே சம்பாதித்துள்ளது.

உயர்கல்வி அமைச்சின் இராணுவ முகாம்களில் கட்டாய தலைமைத்துவப் பயிற்சி என்ற திட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழக மாணவர்களிடம் இல்லாத என்ன ஒழுக்கநெறி இராணுவத்திடம் உள்ளது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டுமெனக் கோரியது. அத்துடன் பல்கலைக்கழகத்திற்கு வெளியே மாணவர்களைக் கொண்டு சென்று அவர்களுக்கு மூளைச்சலவை செய்து தமது அதிகாரத்திற்குள் வைத்துக் கொள்ளும் ஒரு நடவடிக்கையே இதுவெனக் கூறியுள்ளதுடன் இத்திட்டத்துக்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையெனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு உயர்கல்வி அமைச்சினால் இராணுவ முகாம்களில் வைத்து வழங்கப்படவுள்ள கட்டாய தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் இத்திட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னெடுக்கவும் தயார்ப்படுத்தல்களை மாணவர் அமைப்புகள் மேற்கொண்டுள்ளன.

ஒரு புறத்தில் மாணவர்களுடன் முட்டி மோதிக் கொண்டிருந்த உயர்கல்வி அமைச்சு தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனும் மோதல்களை ஆரம்பித்துள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளத்துடன் தெற்காசிய பிராந்திய பல்கலைக்கழக விரிவுரையாளர்களினதும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளினதும் சம்பளங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த உயர்கல்வி அமைச்சர் இதற்கமைய சிரேஷ்ட பேராசிரியர்களுக்கு மாதாந்த சம்பளமாக 2 இலட்சம் ரூபாவும் விரிவுரையாளர்களுக்கு 70 ஆயிரம் ரூபாவும் வழங்க 2010 ஆம் ஆண்டு இணக்கம் தெரிவித்திருந்தார். ஆனால் அமைச்சரின் இந்த சம்பள அதிகரிப்பு இன்றும் நடைமுறைக்கு வரவில்லை. பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் மாதாந்த சம்பளத்தை 3600 ரூபாவால் மட்டுமே உயர்கல்வி அமைச்சு அதிகரித்தது. இது தொடர்பாக ஏற்கனவே பல தடவைகள் அமைச்சுக்கு சுட்டிக்காட்டிய போதிலும் அது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையிலேயே தற்போது அவர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதித்துள்ளதால் பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள் நியாயமானதா, பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் நியாயமானதா அல்லது உயர்கல்வி அமைச்சின் திட்டங்கள், நடவடிக்கைகள் நியாயமானதா என்பதை ஆராய்வது எமது நோக்கமல்ல. இவ்வாறான போராட்டங்கள், ஆரோக்கியமற்ற திட்டங்கள் என்பனவற்றினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மிகப்பெருமளவில் பாதிக்கப்படுகின்றது என்பதே எமது கவலையாகவுள்ளது. இப்போராட்டங்கள், பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உயர்கல்வி அமைச்சருக்குமிடையே ஒரு ஆரோக்கியமான, நட்புறவும் கலந்து பேசி தீர்வுகளை எடுக்கக்கூடிய சூழல் ஒன்றும் ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே இது தொடர்பில் ஜனாதிபதி தலையிட்டு இலங்கையின் கல்வியின் வளர்ச்சிக்கு பாதகமாக அமையும் இவ்வாறான போராட்டங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகளை சுமுகமாகத் தீர்த்து வைக்கும் வகையில் செயற்படவேண்டும். இல்லாவிட்டால் இலங்கையின் கல்வித்துறை அதல பாதாளத்துக்குள் செல்வதை யாராலும் தடுத்து விடமுடியாது.

நன்றி தினக்குரல்

No comments: