கம்பன் பணியில் ஐந்தாவது அகவை காணும் அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் பெருமையுடன் வழங்கும் இலக்கிய நிகழ்வு.

.
காகுத்தன் கழற்றுணையும், அனுமன் அருளும், கம்பன் ஆசியும், தமிழ் ஆர்வலர்களான உங்கள் ஆதரவும் எமக்கிருக்க, எமது இவ்வாண்டுச் செயற்பாடுகளின் முதல் முயற்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மனம் மகிழ்கின்றோம்.


ஈழவள நாட்டின் புகழ் பூத்த பேச்சாளரும், அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஆணிவேராய்த் திகழும் ‘கம்பவாரிதி’ இ. ஜெயராஜ் அவர்களுடைய பொன்விழா ஆண்டில், அவரது ஆக்கங்களது வகை மாதிரிகளின் தொகுப்பாக “ஜெயராஜ்ஜியம்” எனும் நூல், அவரது மாணாக்கரது பெரு முயற்சியால் வெளியிடப்பட்டது. அவ்வரிய நூலினை அவுஸ்திரேலியாவில் எமது கழகத்தினூடு வெளியிடத் திருவுளம் கொண்டு, எதிர்வரும் ஏப்பிரல் 23ம் நாள் மாலை, நூல் வெளியீட்டு நிகழ்வொன்றை அரங்கேற்றவிருக்கின்றோம். இவ் வெளியீட்டு நிகழ்வை திரு. குமாரதாசன் கந்தையா அவர்கள் (முன்னாள் செயலாளர், அகில இலங்கைக் கம்பன் கழகம்) தலைமை தாங்க, நூல் ஆய்வுரையை பிரபல தமிழ்ப் பேராசிரியர். ஞானா குலேந்திரன் அவர்கள் (முன்னாள் பேராசிரியர் - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்) வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் வெளியீட்டோடு, திரு. இ. ஜெயராஜ் அவர்களுடைய தொடர் சொற்பொழிவுளாக அமைந்த ‘கம்பராமாயண - பாலகாண்ட இறுவெட்டுக்களின் தொகுப்பும் வெளியிடப்படவிருக்கின்றது.


நூல் வெளியீட்டைத் தொடர்ந்து, சிறப்பு நிகழ்வாக, புதியதோர் பாணியிலமைந்த இலக்கிய பட்டி மண்டபமொன்று அரங்கேறவிருக்கின்றது.

கற்றோருக்குப் பெரிதும் வியப்பேற்படுத்தும் மனமாற்றம் எனும் தலைப்பில், மூன்று கம்பராமயணப் பாத்திரங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உண்டாகிய வியத்தகு மனமாற்றங்களை விவாதிக்க இருக்கிறார்கள் ஆறு பேச்சாளர்கள். வாதங்களினடிப்படையில், இருபத்தியொரு நோக்கர்களைக் கொண்ட குழு வாக்களித்து ஒரு அணியை விலக்க, நடுவர் திரு. திருநந்தகுமார்(முன்னாள் தலைவர் - அகில இலங்கைக் கம்பன் கழகம்) தீர்ப்பளிக்கவிருக்கும் விறுவிறுப்பானதொரு பட்டி மண்டபமாக இந்நிகழ்வு அமையவிருக்கின்றது.

ஆன்மீக சொற்பொழிவாளர் திருமதி. பாலம் லக்ஷ்மணன் அவர்கள், நிகழவிருக்கின்ற இவ்விலக்கியப் பட்டி மண்டபம் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துகின்றபோது,

“அழகிய ஒரு பட்டி மண்டபம் நன்கு தெரிவு செய்யப்பட்ட காத்திரமான பாத்திரங்களை மையமாகக் கொண்டு அமைத்துள்ளார்கள். கம்பனுடைய காவிய உலகில் நம்மை ஈர்ப்பதன் காரணம், அதில் உலாவும் பாத்திரங்கள் நம்மிலிருந்து அந்நியமானவையல்ல.

மனங்கள் மாறுகின்றன. தீய சிந்தனைகள் திரிவதும் தெளிவதும் என்றெல்லாம் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உலகியலையெல்லாம் அழகாகச் சொல்வது அந்தக்காவியம். இதை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இப் பட்டி மண்டபம் நன்கு நடைபெற வேண்டும். ஆரோக்கியமான, புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும் என்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
என்று ஆசிகள் வழங்கினார்.

உங்கள் திரளான வருகையால் இந்நிகழ்வைச் சிறப்பித்தருள்க என,
உளமார வேண்டிக் கொள்கின்றோம்.

உங்கள் குறித்த நேரத்திலான வருகை நிகழ்வைச் சிறப்பாக ஆரம்பிக்க உதவுமாதலால் தயைகூர்ந்து கருத்திற் கொண்டு ஏகுமாறு வேண்டுகின்றோம்.

உங்களோடு எமை இணைக்கப் பாலமாய் உதவிய தமிழ்முரசிற்கு எமது
உளமார்ந்த நன்றிகள

அன்புடன்,

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்.
“அனுமதி இலவசம்”
நிகழ்வு நாள்: சனிக்கிழமை, ஏப்பிரல் 23, 2011.
நிகழ்வு நேரம்: மாலை 6மணி.
நிகழ்விடம்: ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப் பாடசாலை மண்டபம்.
“கம்பன்புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்”

3 comments:

kirrukan said...

கம்பர் ராஜ்ஜியம் சிட்னியில் வரும் என்று பார்த்தால் ,ஜெயராஜ்ஜியம் வருகுது....சிட்னி கம்பன்கழகத்தினர் மனமாற்றம் ஆகி ஜெயராஜ் கழகத்தினர் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

எது நடக்க விருக்கிறதோ
அது நல்லாவே நடக்கும்

kalai said...

டக்லஸ் தேவானந்தா தான் தமிழரின் தலைவர் என்று சொன்ன ஜெயராஜின் புத்தக வெளியிட்டு விழா.

இன்னொரு கலை said...

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
அது உதயன் வாயிலாகக் கலை கண்டிருந்தாலும் கூட!