பாமரனுக்காகப் பாட்டெழுதிய பட்டுக்கோட்டையார்


.
.
                                              
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை மக்கள் கவிஞர் என்றழைத்தார்கள். பாமர மக்களுக்காக எளிய பேச்சு வழக்கிலேயே கவிதைகள் எழுதிய கவிஞர் அவர். அவருடைய பாடல்கள் மக்களின் அறியாமையைச் சாடி முன்னேற்றப் பாதையில் அவர்களை முடுக்கி விடும் வல்லமை படைத்ததாக இருந்தன.
இன்றும் பாமர மக்களைக் கவரும் வகையில் தமிழில் பேச்சு வழக்கில் தாங்களும் பாடுவதாக எண்ணிக்கொண்டு குப்பைகளைத் திரைப்பாடல்கள் என்ற பெயரில் பலரும் பல சத்தங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாடல்கள் அந்தந்த கால கட்டங்களிலேயே வந்த சுவடு தெரியாமல் மறைந்து போய் விடுகின்றன. ஆனால் பட்டுக்கோட்டையாருடைய பாடல்களோ காலத்தை வென்று இன்றும் பேசப்படுவதே அந்த மக்கள் கவிஞரின் பாடல்களின் தரத்திற்குத் தரப்படும் சான்றிதழ்.


இன்றும் “தூங்காதே தம்பி தூங்காதே” என்ற பாடலை அறியாத தமிழர்கள் உண்டா? அந்தப் பாடலில் சோம்பிக் கிடக்கும் மனிதர்களுக்கு சாட்டையடி அல்லவா அவர் தருகிறார்! அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் விளைவு. தெருக்கல்லைப் போல நாள் முழுவதும் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளாமல் சும்மா இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலுத்துக் கொள்வது முட்டாள்தனம் என்றும் பொறுப்புள்ள மனிதர்கள் சும்மா இருந்தால் அவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் தடைப்பட்டு போகின்றன என்றும் இந்தப் பாடலில் எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்களேன்

”நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்-சிலர்
அல்லும் பகலும் தெருக்கல்லாயிருந்து விட்டு
அதிர்ஷ்டமில்லையென்று அலுத்துக் கொண்டார்
....    ....     ....    .....       ......           ......
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் – பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா”

இதே போல எல்லாம் விதி என்ற முட்டாள்தனத்தை நீக்கி விட்டு வேலை செய்தால் மட்டுமே உயர்வு என்ற உண்மையை அறிவில் நிறுத்த வேண்டும் என்று இன்னொரு பாடலில் அழுத்தமாகச் சொல்கிறார் பாருங்கள்-

”விதியை எண்ணி விழுந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறணும்”

செயல்படாமல் இருக்க விதி முதலான பல காரணங்களைச் சொல்லும் திண்ணைப் பேச்சு வீரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் நம் தன்னம்பிக்கையைக் குலைத்து விடாமல் இருக்க ஒன்று கூடி ஒற்றுமையாய் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் இன்னொரு பாடலிலும் இந்தக் கருத்தை வலியுறுத்திப் பாடியுள்ளார் கல்யாண சுந்தரம்.

”கர்மவினையென்பார் பிரமனெழுத்தென்பார்
கடவுள் மேல் குற்றமென்பார்
இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி-நம்ம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி”

உழைப்பது முக்கியம் என்பது மட்டுமல்லாமல் அந்த உழைப்பையும் பலரும் ஒன்றுகூடி ஒழுங்கு முறையுடன் செய்ய வலியுறுத்தி அவர் எளிமையாக எறும்பின் உதாரணத்தை ஒரு பாடலில் கூறுகிறார்.

”எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்
ஒடிஞ்சு போன நம்ம இனம்
ஒண்ணா வந்து பொருந்தணும்”

வறுமையை விலக்கவும், பயத்தை அடக்கி வைக்கவும், கவலையைத் தீர்க்கவும் இன்னொரு இடத்தில் அறிவுரையைக் கூறுகிறார். முள் நிறைந்த காட்டை அழித்து வயல் நிலமாக மாற்றவும் அறிவுறுத்துகிறார்.  சுயமுன்னேற்ற சிந்தனைகளை எவ்வளவு கச்சிதமாகச் சொல்கிறார் பாருங்கள்:

”கொடுமையும் வறுமையும் கூடையிலே வெட்டி வை!
கொஞ்ச நஞ்ச பயமிருந்தால் மூலையிலே கட்டி வை!
நெடுங்கவலை தீர்ந்ததென்று நெஞ்சில் எழுதி ஒட்டி வை!
நெருஞ்சிக் காட்டை அழித்து அதில் நெல்லு விதையைக் கொட்டி வை!”

வளரும் பிள்ளைகள் மூடநம்பிக்கைகளிலும், பயத்திலும் சிக்கி முடங்கி இருந்து விடக்கூடாது என்று ஒரு பாடலில் எச்சரிக்கிறார்.

”வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உந்தன்
வீரத்தை கொழுந்தினிலே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
.....          ..........            .....             ...........
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே”.

இது போன்ற விஷயங்களை வேடிக்கைக்காகக் கூட நம்பி விட வேண்டாம் என்று பட்டுக்கோட்டையார் எச்சரிக்க முக்கிய காரணம் ஆரம்பத்தில் மேலோட்டமாய் மனதில் மிதக்கும் அது போன்ற எண்ணங்கள் பின் சிறிது சிறிதாக வேர் விட்டு ஆழமாக மனதில் ஊன்றி விடும் என்பதனால் தான். குழந்தைகளை சிறிது நேரம் அடக்கி அமைதியாக உட்கார வைப்பதற்காகச் சொல்லும் இந்த சின்னப் பொய்கள் அவர்களது வீரத்தையும், தைரியத்தையும் முளையிலேயே கிள்ளி எறியும் செயல் என்றும் அவர் இப்பாடலில் எச்சரிக்கிறார்.

மேலும் வறுமைக் கொடுமையை சகிக்க முடியாமல் நாட்டை விட்டே அதைத் துரத்த முனையும் வீரவரிகளை இன்னொரு பாடலில் பாடுகிறார். அந்தப் பாடலில் நாம் ஏழைகள் என்று நம்பி அப்படியே இருந்து விடாமல் முதலில் மனதில் இருந்து ஏழ்மையை துரத்தி புரட்சிப் பாதையில் தமிழனைப் பயணிக்கச் சொல்கிறார் கவிஞர். எண்ணம் மாறினால் தான் எதுவும் மாறும் என்ற அருமையான மனோதத்துவ சிந்தனையை இங்கே பார்க்க முடிகிறது.

”கஞ்சியில்லை என்ற சொல்லைக் கப்பலேற்றுவோம்
செகத்தை ஒப்ப மாற்றுவோம்
பஞ்சையென்று நம்மை எண்ணும் பான்மை வெல்லுவோம்
புரட்சிப் பாதை செல்லுவோம்”

பயத்தை விட்டுத் துணிந்து முயற்சி செய்தால் வரும் துன்பமுமில்லை. பயந்தும் சோர்ந்தும் இருந்து விட்டால் அடைய முடியும் இன்பமுமில்லை என்பதை ஓரிடத்தில் பாடுகிறார்.

”துணிந்தால் துன்பமில்லை. சோர்ந்து விட்டால் இன்பமில்லை”

மேலும் அறிவு வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை அவர் சொல்லும் விதத்தைப் பாருங்கள்.

”ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி-உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி”

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்” என்று திருவள்ளுவர் கூறியதைப் போல குழந்தையைப் பெற்றவுடன் பெறும் இன்பத்தைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி அவன் அறிவாளியாக உலகால் அறியப்படும் போது தான் என்பதனை எவ்வளவு எளிமையாக பட்டுக்கோட்டையார் பாடியிருக்கிறார் பாருங்கள்.


உண்மைகளை உணராமல் யாரோ சொன்ன தத்துவங்களை கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொல்வதில் ஒரு பயனுமில்லை. ‘காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்று பாடி வைத்த பாடலின் உண்மைப் பொருளை உணராது மேலோட்டமாக உடம்பை அலட்சியப்படுத்துவது முட்டாள்தனம் என்றுணர்த்த அந்தப் பாடலிற்கு எதிர்ப்பாட்டு ஒன்று பாடியிருக்கிறார் பட்டுக்கோட்டையார்.

”காயமே இது மெய்யடா – இதில்
கண்ணும் கருத்தும் வையடா
நோயும் நொடியும் வராமல் காத்து
நுட்பமாக உய்யடா”

இறக்கும் வரை உடல் மெய் தான். அதனைக் கண்ணும் கருத்துமாகக் காத்துக் கொள்வது முக்கியம். எனவே நோய்கள் நெருங்காமல் காத்து உய்வடைய வேண்டும் என்று கூறுகிறார்.

காலன் இவ்வுலகில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களை நீண்ட காலம் வாழ விடவில்லை. ஆனாலும் குறுகிய காலத்தில் அவர் பாடிய பாடல்கள் ஏராளம். அவர் பாடிய பாடல்களில் ஒரு வார்த்தை கூட படிக்காத பாமரனுக்குப் புரியாத வார்த்தையாக இருந்ததில்லை. இந்த அளவு எளிமையாகப் பாடி இருந்தாலும் பாடல்களின் பொருளோ, தரமோ குறைவாக இருந்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. பாமரனின் எண்ணத்தையும், அறிவையும், உழைப்பையும் உயர்த்தும் உயர்ந்த சிந்தனைகளை பசுமரத்து ஆணி போல பதிய வைக்கும் அவரது பாடல்களை தமிழறிந்த யாரும் மறந்து விட முடியாது.

- என்.கணேசன்
Nanri: Mulai org

1 comment:

R.S.KRISHNAMURTHY said...

இன்று காணக்கிடைக்காத (பட்டுக்கோட்டையின்) ஒரு கிராமத்துச் சித்திரம் பாருங்கள்:

“வேப்பெண்ணயப் பூசிக்கிட்டு,
வெறுங்கையால கிண்டிவிட்டு,
வேடுகட்டும் கூந்தலிலே - செங்கமலம்
காக்கா கூடுகட்டப் பார்க்குதடி - ருக்குமணி”

என்னவொரு observation!