கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை) - வித்யாசாகர்!!

.
இருவரும், என்னருகில் வந்து நின்று துப்பாக்கியை சரி செய்து வைத்துக் கொண்டு. யார் நீ என்றார்கள். லண்டன் செல்லவிருக்கும் ஒரு பயணி என்றேன். அப்படியா விமானச் சீட்டு காட்டு என்றார்கள், காட்டினேன். கடவுசீட்டு காட்டு என்றார்கள், காட்டினேன். அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து, சிங்கள மொழியில் ஏதோ பேசிக் கொண்டனர்.

நான் ஒன்றும் புரியாதவனாய் அவர்களையே பார்க்க, பையில் என்ன வைத்திருக்கிறாய் பிரி என்றார்கள், பிரித்து உள்ளே வைத்திருந்த மடிக் கணினியினை காட்டினேன். சரி சரி போ என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, முகத்தை சற்று சந்தேக தொனியோடு வைத்துக் கொண்டு என்னைப் பார்க்க, நான் எங்கும் போக விரும்பவில்லை, என் விமானம் புறப்பட இன்னும் அவகாசங்கள் உள்ளன என்றேன்.


அவர்கள், ஒன்றும் பேசிக் கொள்ள வில்லை. எப்படியோ கிட என்பது போல் ஜாடை செய்துவிட்டு, சட்டெனத் திரும்பி அவர்களுக்குள் என்னவோ விவாதித்துக் கொண்டு வந்த வழியே போயினர். நான் ஒன்றும் புரியாதவனாய், சற்று பின்னோக்கி தலைதிருப்பி என் இருக்கைக்கு பின்னால் இட்டிருந்த கண்ணாடிக்குள்ளிருந்து தெரியும் என் தோற்றத்தினை பார்த்தேன்.

லேசாக வளர்ந்து; வரும் அவசரத்தில் வெட்டாத தாடியும், அழுத கண்ணீரில் நனைந்து; பின்னரும் கவலையில் கழுவாத முகமும், ஆங்காங்கே கசங்கிய கருப்பு கலந்த அடர் நீலச் சட்டையும், தோளில் மாட்டிவந்த மடிக்கணினிப் பையும், எல்லாவற்றையும் விட; பார்த்த உடனே தெரியும் ‘தமிழன்’ என்னும் முகமும்தான் அவர்களின் சந்தேகத்திற்கு காரணம் போலென்று எண்ணிக் கொண்டேன்.

அவர்கள் விமான நிலையத்தின் வெளியே தமிழரை பார்க்கும் பார்வையின் நம்பிக்கையற்ற தன்மை; விமான நிலையத்தின் உள்ளே 'தெள்ளெனத் தெளிந்த நீர்போல்' புரிந்தது. எம் நிலை என்று மாறும் இறைவா என்றெண்ணி கண்களை அழுந்த மூடி, பின்னால் தலை சாய்த்துக் கொண்டேன்.

நேற்றைய ஞாபகங்கள் மீண்டும் வந்து நினைவைத் தீண்டின. நேற்று விமான சீட்டு வாங்க சென்றதும், வாங்க சென்ற இடத்தில் இந்த தேசம் பற்றி பேசிக் கொண்டதுமெல்லாம் நினைவிற்கு வர, கிராமத்து நடுவே அமர்ந்து வெளிநாடு போக விமான சீட்டு பதிந்துக் கொடுக்கும் அந்த அண்ணன் மேகநாதனும் நினைவிற்கு வந்தார்.

அவர் ஈழம் பற்றியும் அதற்கான போராட்டம் பற்றியும் இன்றைய நிலவரங்கள் பற்றியுமெல்லாம் பேசியது, கேட்டது, நான் கோபமுற்றது பின்பு கைகுலுக்கிப் பிரிந்தது என எல்லாம் ஒவ்வொன்றாய் கோர்வையாக நினைவில் வந்தது.

திடிரென யாரோ எதிரில் நிற்பது போல் தெரிய, பட்டென கண்களை திறந்தேன், வேறு மூன்று ஆர்மி காரர்கள் நின்றிருந்தனர். சற்று பதட்டமாக எழுந்து நின்றேன்..

பரவாயில்லை பரவாயில்லை அமர்ந்துக் கொள் என்றனர். பின் சிரித்து கைகுலுக்கி பெயரென்ன என்றார்கள், சொன்னேன். எங்கேயிருந்து வருகிறாய், எங்கே போகிறாய் என்றார்கள்; மொத்த விவரமும் சொன்னேன். ஒருமாதிரி இருக்கிறாயே பார்க்க; உடம்பிற்கு ஏதேனும் முடியலையா என்றார்கள். இல்லை, வீட்டை நினைத்துக் கொண்டேன், அதான் சற்று வருத்தம் என்றேன். அதற்காக கவலைப் பட்டால் பின் மனிதன் தன் பயணத்தை உலக எல்லைவரை எட்டித் தொடுவதெப்படி என்றார்கள். என்னைப் பொருத்தவரை உலகமே என் வீட்டார் தான் என்றென். உறவுகளை பார்த்துப் பிரிவது பெரிய வருத்தம் தான், இரண்டு நாளானால் சரியாகும் கவலைபடாதே என்றார்கள்.
 
அதுவரை அமைதியாக நின்றிருந்த மூன்று பேரில் ஒருவர், இன்னும் எத்தனை மணிநேரம் தங்கிப் போக வேண்டும் என்றார். நான் மறதியாக தமிழில், நான்கு மணிநேரம் என்றென். அவர் மன்னிக்கவும் எனக்கு தமிழ் அத்தனை புரியாது என்று ஆங்கிலத்தில் சொன்னார். உடனே அருகிலிருந்த இருவரும் உடன் சேர்ந்து நாங்கள் சிங்களவர்கள் என்று சொல்லி புன்னகைத்தனர் நயமான ஆங்கிலத்தில்.

நானும் மனிதரிடையே வேற்றுமை காட்டிக் கொள்ளவேண்டாமே என்றெண்ணி, அப்படியா நல்லது நல்லது, விமானநிலையம் அழகாக சுத்தமாக உள்ளது, ஆங்காங்கே தமிழில் கூட எல்லாமே எழுதி இருக்கிறதே என்றென்.

அவர்கள், ஆம் ஆம், தமிழ் எமது இரண்டாம் ஆட்சி மொழி என்றார்கள். எனக்கு அந்த இரண்டாம் என்பது சற்று வலிக்கத் தான் செய்தது. யாரை வந்து யார் இரண்டாம்பட்சமாக்குவது என்று எண்ணிக் கொண்டாலும் அதை காட்டிக் கொள்ளவேண்டிய மனிதர்களல்ல இவர்கள் என்று நினைத்துக் கொண்டு, அப்படியா மகிழ்ச்சி என்றென்.

சாப்பிட்டாயா என்று கேட்டார்கள் மூவருமாக. இல்லை, பசி தெரியவில்லை என்றென். தேனீர் ஏதேனும் வேண்டுமா என்றார்கள். எழுந்து அவர்களின் கை பற்றிக் கொண்டேன். மிக்க நன்றி அதலாம் ஒன்றும் வேண்டாம், மனசு கொஞ்சம் கனத்து கிடக்கிறது, உங்களின் உபசரிப்புக்களுக்கு நன்றி. தனியாக அமர்ந்திருந்தால் போதுமென்றேன்.

அவர்கள் சிரித்துக் கொண்டே கைகுளுக்கிவிட்டு, எங்களின் விமானத்தில் பயணிப்பதற்கு நன்றி, மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திபோம் என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே என்னைக் கடந்து போயினர். அதில் ஒருவர்வேறு சற்று தூரம் சென்று வளைவில் திரும்பும்முன் நின்று என்னைத் திரும்பிப்பார்த்து சிரித்தவாறே கையசைத்துச் சென்றார்.

பாறைக்குள் நீரில்லாமல் இல்லை, தமிழருக்குத் தான் தக்க இடமும்; போதிய விடுதலையும் இன்னும் கிடைக்கவில்லை' என்று எண்ணிக் கொண்டேன்..
 
சற்று நேரத்திற்கெல்லாம், எதைஎதையோ யோசித்து அசை போட்டவாறே அயர்ந்து போனவனாக கண்களை மூடிக் கொண்டு இருக்கையின் மீது அமர்ந்தவாறே சாய்ந்து படுத்துக் கொள்ள, அந்த அண்ணன் மேகநாதன் நினைவிற்கு வந்தார். அவரோடு பேசியதெல்லாம் கூட நினைவிற்கு வந்தன. கைகளை மேலே உயர்த்தி உடம்பை சற்று முறுக்கி ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். ஒவ்வொன்றாய் எல்லாம் நினைவில் ஊரின...

"வாங்க சத்யா.., எங்க சொன்னீங்க துபாய்தானே"

"இல்லைண்ணே, லண்டன் போகணும் துபாய் வழியா இருந்தாலும் பரவாயில்லை"

"லண்டனா...., என்னைக்கு போனோம்..?”

“நாளைக்குண்ணே, முன்பே தொலைபேசியில் அழைத்து சொன்னேனே”

“ஓ.. மறந்து போனேன்யா..., நீ வருவியோ மாட்டியோன்னு யார் கண்டா...?”

“அதெப்படிண்ணே சொல்லிட்டு வராம, எப்பவும் எடுக்குறவக தானே..”

“சரி, என்னைக்கு வேணும்?”

“நாளைக்கு..”

“நாளைக்கா??!!!!!!! நாளைக்கு லண்டனுக்கு சீட்டு இல்லைன்னு சொன்னாப்லையேப்பு..."

"பாருங்கண்ணே.., வேறு வழி மாறி போற மாதிரி ஏதாவது இருக்கான்னு பாருங்க”

“செத்த இரு, நான் எங்க பார்க்கிறது, கேட்டு தான் சொல்லணும்”

“சரி கேட்டு தான் சொல்லுங்க..”

அவர் சற்று சலிப்பாகவும் வீம்பாகவும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து தொலைபேசியை எடுத்து நகரத்து டிராவல்ஸ் ஒன்றின் தொடர்பு எண்களை அழுத்தி யாரிடமோ பேசினார். நலமெல்லாம் விசாரித்துப் பின் விவரம் சொன்னார். இவ்வளவு குசலம் விசாரிப்பதிலேயே தெரிந்தது இவர் எத்தனைப் பேருக்கு இங்கே பயணச் சீட்டு பதிந்து கொடுக்கிறார் என்று.

இருந்தாலும் எனக்கும் இவரை விட்டால் வேறு வழியில்லை. நம்மால் நகரத்து தூரம் வரைச் சென்று விமானச் சீட்டு வாங்க இயலாது. நேரமும் போதுமானதாக இல்லை. போனமுறை இவர் எடுத்துக் கொடுத்த நம்பிக்கையில் தான் இம்முறையும் வந்தேன். அதற்குள் பேசிக் கொண்டே இருந்த அவர் என் பக்கம் பார்த்து தொலைபேசியின் ஒரு முனையை கையில் மூடிக் கொண்டு -

"ஸ்ரீலங்கா வழியா தான் இருக்காம் பரவாயில்லையா...?" என்றார். கண்ணாடி அவருடைய மூக்கின் மேல் இறங்கி அவரின் கண்களே என்னை கேள்வி கேட்டன. இருந்தாலும் ஸ்ரீலங்கா என்றதும் கொஞ்சம் பரபரப்பு கூடியது.

"ஸ்ரீலங்காவா!!!!!!!!!!!!!!!!? பரவாயில்லையாவா!!!!!!!!!!!? என்னண்ணே நீங்க, தாரளாமாக போடுங்க, புண்ணியமா போகும் உங்களுக்கென்றேன்.

"இல்லைப்பா, அங்க வேற சண்டை, பிரச்சனை, அது இதுன்றான்களே அதான் கேட்டேன்"

"ஆமாம், சண்டை தான் நடக்கிறது, காலங்காலமாய் போராடும் மண்ணிற்கான, உரிமைக்கான சண்டைண்ணே அது.. "

"அதான், அதனால தான், வேணுமான்னு கேக்குறேன்.., பொதுவா சிலபேர் இலங்கை வழி இல்லாம போடுங்கன்னு தான் கேட்டு வாங்குறாங்க"

"உண்மையாவா சொல்றீங்க???"

அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவரிடம் எதற்கோ சரியென்று சொல்லிவிட்டு இணைப்பினை துண்டித்து வைத்துவிட்டு -

"உண்மையைத்தான் சொல்றேன், பொய் சொல்ல எனக்கென்ன ஆசையா. அவன்தான் சண்டை போடுறானாமே அவனோட நாட்டுக்கு ஏன் வருமானம் தரதுன்னு தான்"

"ஆமாம்ணே; அதுவும் யோசிக்கவேண்டிய விஷயம் தான்"

"இருந்தாலும் நம்ம கிட்ட வரதே ஒன்னோ ரெண்டோ கஸ்டமர்தானேப்பு, அதுக வேணாம்னு சொல்லும்..? எதுக்கோ என்னவோ யார் கண்டா, போவ பயமோ என்னவோ; தமிழன்னு சொல்லி ஆர்மி காரன் அடிச்சிப் புட்டானா?”

அவர் நெக்கலாக என்னைப் பார்த்து கண் சிமிட்டினார். எனக்கு அந்த கண்ணைப் பார்த்து ஓங்கி ஒரு குத்து விடலாமா என்று கோபம் வந்தது.

"ஏன் அப்பு உன்னை அடிச்சிப் பிடுவான்னு பாக்குறியா?"

"மேல கைபட்டா தலைய திருவி; தமிழன்னா யாருன்னு காட்டுவேன்"

"இந்த வாய் ஒண்ணுதான் தமிழனுக்கு"

"ஒட்டுமொத்தமும் அப்படி இல்லைண்ணே"

"ஒட்டுமொத்தமும்னா ?"

"உன் போராட்டமும் என் போராட்டமும் சோத்துக்கும் தன் பிழைப்புக்கும் தான், அவர்கள் தமிழ் தேச உணர்வுக்காகவும்; தன் விடுதலைக்காவும் போராடுறவுங்கண்ணே "

"இலங்கை காரங்களா..., எல்லாம் ஒரு குட்டையில ஊறின மட்டை தானே?"

"என்னண்ணே பேசுற நீயி, தமிழன்னா உனக்கு என்ன நீயும் நானும்னு மட்டும் நினைச்சியா? உன்னை மாதிரி என்னை மாதிரி தன் வயித்துக்கு சாவுறவன்னு நினைச்சியா? காலங்காலமா தனகுன்னு ஒரு தேசமும் தன்னிடமிருந்து பறித்துக் கொண்ட மண்ணின் சுதந்திரத்தையும் வாங்க ரத்தமும் உயிரும் கொடுத்துப் போராடும் இனம்.."

மண்ணைப் பற்றி மண்ணுரிமை பற்றி பேச எழ சற்று உணர்ச்சிவயப் பட்டுப் போனேன். அதையும் அவர் கண்டுபிடித்து விட்டார் போல். “சரி, அதுக்கு நீ ஏன்பா இப்படி உணர்ச்சிவசப் படுற?"

"பின்ன என்னண்ணே; என்னமோ நீங்க நம்ம குழாயடிச் சண்டை மாதிரி அவுங்களையும் நினைச்சிப் பேசுறீங்க”

“வேறென்னவாம்; அவன் சண்டை போட்டா நமக்ககென்னப்பு???”

“அண்ணே, அது ஒரு இனத்தின் விடுதலைக்கான சண்டைண்ணே? அறுபது வருடமா தன் உரிமைகளை மீட்பதற்காக நடக்கும் போர் அது.. "

"ஆமா LTTE - க்கும் ஸ்ரீலங்கா காரனுக்கும் சண்டை நடக்கும்னுவாங்களே, அதானே"

"என்னங்க, எல்.டி.டி.ன்னு என்னமோ யாரையோ சொல்றா மாதிரி சொல்றீங்க"

“ஆமா. அவனுங்க எல்.டி.டீ தானே??????????”

“அப்போ அவர்கள் எல்.டி.டீ.ன்னா நீங்களும் எல்.டி.டீ இல்லையா?”

“அட ஏய்யா வெறுப்ப கிளப்பாம நான் ஏன் எல்.டி.டீ யாவனும்? என்ன புடிச்சி உள்ளே போடறதுக்கா??? நீ ஒரு காரியம் செய்யி; இங்க நம்மா மூனாவட்டம் தெருவு இருக்குல்ல அதுல போயி தலையில முக்காடு போட்டுக்குனு ஒரு ஸ்ரீலங்கா பொம்பளை இருக்கா, அவகிட்ட நீ என்ன எல்.டி.டீ.யான்னு கேளு காரி மூஞ்சில துப்புவா. நான் கேட்டேன், கேட்டதுக்கு என் மேல எப்படி சீறி வந்தான்னு எனக்குள்ள தெரியும். அந்த எல்.டி.டீ. காரங்க தான் எங்களை இப்படி நாடுகெட்டு அலைய விட்டானுங்கன்னு அவதான் சொன்னா(ள்)”

எனக்குக் கோபம் தலைக்கேறியது. இருந்தாலும் இதுபோன்ற மனிதரிடம் இனியும் பேசுவதில் எந்த அர்த்தமுமில்லை போல் தோன்றியது. "சரி விடுங்க சீட்டு இருக்கான்னு பார்த்து சொல்லுங்க நான் போறேன்"

"என்னப்பா நீயி லண்டன்லாம் போறவர, விவரம் போதலையே..., ஆமா நான் தெரியாம தான் கேட்கிறேன் ‘அவனுங்க சும்மா அடிச்சிக்கினு வெட்டிக்கினா நாமளா அதுக்கு பொறுப்பு?"

ஓங்கி ஒரு அரை விடலாமா என்றிருந்தது எனக்கு. பெரியவர் ஆயிற்றே என்று அடக்கிக் கொண்டேன்.

"ஏன்யா என்னைய முறைக்கிற?"

"வேற..." தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன் நான்.

"என்னய்யா, உனக்கு ஏன் இம்புட்டு கோபம் வருது, நாம என்ன இலங்கைக்கு பொறுப்பு சுமந்தா கெடக்குறவ....இங்க??????????????"

இதற்குமேல் என்னால் தாங்கமுடியவில்லை.

"ஆமாய்யா.........., பொறுப்பு தான். நாம பக்கத்துலயே இருந்தும் நம்ம மக்கள் சாவுதே, நாம அதுக்கு பொறுப்பில்லையா? நாம் பொறுப்பில்லாம என்ன பக்கத்து நாட்டானா பின்ன வருவான். பக்கத்து வீட்டான் சண்டை போட்டா போய் கேட்குறியே எங்கயோ இருந்து வந்தவன் அடிக்கிறானே; பொறுப்பில்லாம எங்க போயிட்டோம்??? உன் மக்கள், உன் இனம், உன்னைய நம்பின சனங்க அடிபட்டா நீ தான்யா கேட்க போவனும்" கோபத்தில் எழுந்து மேஜை மேல் தட்டி கத்தியே விட்டேன்.

அவரும் சாதாரண ஆளில்லை. அவர் என்னைப்போல் நிறைய பேரிடம் இப்படி சண்டை போட்டிருப்பார் போல். சாவுதானமா எழுந்து நின்று -

"அடப் போப்பா நீயி.." என்றார். என்னை உசுப்பேத்துறாரோ என்றொரு எண்ணம். நான் சற்று பொறுத்துக் கொண்டு,

“'என்னண்ணே, நம்ம தமிழன்ண்ணே, நம்ம தமிழன் தான் அங்க நமக்குன்னு ஒரு நாடு கேட்டு செத்துக் கொண்டிருக்கிறாண்ணே. கொஞ்சம் கூட அத்தனை பேர் சாவறான்ற எண்ணம் கூட உங்களுக்கில்லையா?"

"அட ஏன்பா நீ வேற காலையில வந்து மனுசனை இப்படி படுத்துற. நீ வேணும்னா பாரு இவுங்க மட்டும் நீ சொல்ற ஈழத்தை புடிச்சிட்டா நாளைக்கே தமிழ்நாட்டை சல்லி காசுக்கு மதிக்கிறாங்களா பார், வேணும்னா நல்லா தூத்திப் பேசுவாங்க, நடக்குதா இல்லையான்னு பாரு. பெறவு இந்த அண்ணனை வந்து ஏன் சொன்னேன்னு கேளு.."

அவர் அவரை சரியாக மட்டுமே எண்ணிக் கொண்டு பேசினார். நிறைய பேர் இப்படி தான்; மண்ணை நனைத்த ரத்தத்தின் காரணம் புரியாமலே; அதன் இழப்பு புரியாமலே; உயிர்குடிக்கும் கயவர்களின் தந்திரம் புரியாமல், மோசடித்தனம் புரியாமல் பேசிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த போராட்டத்தின் காரணம் புரிந்துவிட்டால் பின் நிற்பவர்களில் முதலாய் ஆவார்கள் என்று சற்று நிதானித்துப் புரிந்துக் கொண்டேன். அவரையே அமைதியாக பார்த்தேன். அவர் –

அவர் சற்றும் சலிக்காமல் சவால் விட்டவராகவே எதிரே நின்றிருந்தார். நான் மனதை அடக்கிக் கொண்டு -

"அப்படி இல்லைண்ணே. நீங்க சொல்ற மாதிரி எல்லாம் கற்பனை பண்ணிக்க இது சமயமில்லைண்ணே. அங்கே எத்தனை உயிர்கள் செத்து மடிந்துக் கொண்டிருக்கு அது உங்க கண்ணையே உருத்தலையா???”

"விடு தம்பி விட்டுட்டு சீட்டு வாங்குற வழிய பாரு, என் வாயக் கிளராத, ஏதோ எப்பவும் வர, தம்பியாச்சேன்னு பார்க்கிறேன், இவனுங்க எடம் புடிச்சானுங்கனா நாளைக்கென்ன எனக்கு வீடு போட்டா தரப் போறானுங்க இலங்கையில? போவியளா..." என்னால் இந்த சுயநலத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அண்ணனாவது மண்ணாவது எழுந்து சட்டையை பிடித்துக் கொண்டேன்.

"யோவ்... யோவ்.. மனுசனாயா நீ? மனுசனா நீ? சிந்திக்கவே தெரியாம, வரலாறே புரியாம, உன்னை எல்லாம் பெரியமனுசன்னு சொல்லிக்கவே வெட்கமாயிக்கு. ஒரு இனத்தோட பற்றுன்னு எதனா இருக்கா உனக்கு? உலகமெலாம் ஆளும் தேசங்களுக்கு மத்தியில ஒரு துண்டு மண்னை ஒரு தமிழன் ஆண்டான்னா அது எப்படி இருக்கும்னு காட்றதுக்கான ஒரு போர்-யா அது. ஏன்; என் பாட்டன்முப்பாட்டன் ஆண்ட மண்ணுல கொஞ்சத்தை தமிழருக்குன்னு கொடுத்தா இந்த உலகம் என்ன சுருங்கியா போயிடும்???? "

"தோ பார், இதலாம் என்கிட்ட வாணாம், முதல்ல நீ சட்டையில இருந்து கையை எடு, எடுய்யான்னா!!!!!!!! நான் என்ன டை கட்டிக்குனு தனியா உட்கார்ந்திருக்கேன்னு நினைச்சியா??? நான் மோசமானவன் பார்த்துக்கோ. ஒரு போன் பண்ணா போதும் தெருவெல்லாம் ஆட்டோ வந்து நிக்கும் பார்க்குரியா, பார்க்குரியா..” அவர் எகுறி குதித்தார் வானத்திற்கும் பூமிக்குமாய்.

"ச்சி ... அற்ப மனிதனே" வாயாற சொல்லியே விட்டேன்.

"என்ன அற்ப மனிதனே???????? நீ என்ன தெய்வ பிறவியா? எவன பத்தியோ சொன்னா உனக்கேய்யா இப்படி கோபம் பொத்துக்குனு வருது? இப்படி எவவனுக்கோ வக்காலத்து வாங்கித் தான் தமிழ்நாடு இப்படிக் குட்டிச்சுவுரா போயிடுச்சி"

அவர் கோபப் பட்டாலும், ஒருபுறம் மிகக் கலவரப் பட்டும் போனார். சட்டையைப் பிடித்திருக்கக் கூடாது தான். வயதானவர் வேறு. கோபத்தாலா அல்லது பயத்தாலா தெரியவில்லை, கைகால் சற்று படபடத்து ஆடியது அவருக்கு. பேச வார்த்தைகள் முழுதாக வராமல் சட்டையை பிடித்துவிட்ட அவுமனத்தில் மட்டும் கொதித்துப் போனார்.

ஒரு சிறு அறை, ஒரு கணினி மட்டும் வைத்துக் கொண்டு தூரத்திலிருக்கும் விமான போக்குவரத்து அலுவல்கள் மூலம் தொடர்பு கொண்டு, உள்ளூரில் கொஞ்சம் கூடுதலான விலை வைத்து, விமானப் பயண சீட்டு பதிந்தும் வாங்கியும் கொடுத்து தொழில் செய்யும் ஒரு சாதாரண லட்சியமே இல்லாத ஒரு மனிதர் இவர். இவருக்கு என் ஈழம் சார்ந்த பேச்சு அத்தனை ஈடுபாடினைத் தரவில்லை என்பது முன்பிளிருந்தே புரியாமலில்லை. என்றாலும், பேச்சுக்கு பேச்சு விடமுயாமல் சட்டை பிடிக்கும் வரை போச்சே என்று எண்ணினேன். கடைக்கு வந்ததும் வா சத்யான்னு வாஞ்சையா வரவேற்று வீடு சவுகரியம் விசாரித்து, உடனே ஓடி போய் தேனீர் வாங்கி வந்து, மேஜை மேல் இருக்கும் மின் விசிறியை கூட என் பக்கம் திருப்பி வைக்கும் மனிதர்.

வருமானம் குறைவு, வந்ததை தின்று காலத்தை போக்க கணினியும் ஒரே ஒரு டை'யும் கட்டிக் கொண்டு
வருமானம் குறைவு, வந்ததை தின்று காலத்தை போக்க கணினியும் ஒரே ஒரு டை'யும் கட்டிக் கொண்டு சோத்துக்கு நாட்களை கழிக்கும் பிழைப்பு. நான் வேறு இடையில் வந்து சட்டையை பிடித்து மிரட்டி விட்டதும் அவரால் தாள முடியவில்லை. அவரை என்னுடைய கோபம் சற்றிற்கு அதிகமாகவே பாதித்திருக்கவேண்டும் போல் தெரிந்தது. படபடத்துப் போனார். கோபத்தில் பயத்தில் கண்கள் கொஞ்சம் சிவந்தே போனது.

கொஞ்ச நேரம் அவர் விருப்பத்திற்கு வாய்க்கு வந்தவாறு ஏதேதோ பேசினார். நான் அதை செய்வேன் இதை செய்வேன், குத்திப் போடுவேன் வெட்டிச் சாய்ப்பேன் என்று குதித்தார். நான் சற்று யோசித்தேன், அவரின் அவஸ்தையை பார்த்து சுதாரித்துக் கொண்டேன்.

ஆரம்பமே தெரியவில்லை அவருக்கு, ஈழம் என்றாலே என்னவென்று தெரியவில்லை அவருக்கு. என் உறவுகள் என்றாலே யார் என்று கேட்கும் ரக மனிதர்.

இலங்கைப் பிரச்சனை தானே' என்று தெரிந்தவர்களுக்கு, ஈழம் என்று தெரியாதவர்களுக்கு, ஈழம் அந்நியமாகத் தானே இருக்கும்.

பிறகு, இவரிடம் கோபப் பட்டு பயனில்லை. நான் செய்ததுதான் தவறு. அவர் பாவம். இப்படி தவித்து போனாரே!!. நான் தான் உணர்ச்சிவயப் பட்டுவிட்டேன் என்று நினைத்துக் கொண்டு, என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு -

அவர் கத்தியடங்கும்வரை அவர்முன்னிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டேன். அவர் வெளியே போய் ஒரு ஐந்து நிமிடம் கழித்து வந்து என் எதிரே நின்றார். நான் எழுந்து நின்று அண்ணா மனதார மன்னித்து விடுங்கள் என்றேன்.

அதற்குள், சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தெல்லாம் ஓடிவந்து கதவுதிறந்து என்ன என்ன என்றார்கள். அதலாம் ஒன்றுமில்லை நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்றார் அவர். அப்போ தான் அவரை புரிந்தது. அவர் வேண்டுமெனில் இவன் இப்படி செய்தான் சட்டையை படித்து அடித்தான் என்று சொல்லி இருக்கலாமே, செய்யவில்லையே.

நாம் தான் அவசரப் பட்டுவிட்டோமோ என்று எண்ணி, அமைதியாக அவரையே பார்த்தேன். அவர் என்னையே பார்த்து முறைத்தார்.

"பரவாயில்லைண்ணே விடுங்கண்ணே.." என்றேன்.

"என்ன விடுங்க??????????????? லண்டன் போயிட்டு வந்துட்டா பெரிய்ய்ய்ய மயி.....ரா நீ" அந்த அரை காந்துக் கேட்கும் அளவிற்குக் கத்தினார். மீண்டும் கோபம் வந்தது. அடக்கிக் கொண்டேன்.

"கோபப் படாதீங்க உட்காருங்க. உட்கார்ந்து பேசுங்க”

"சட்டைய புடிக்கிற.. அடிக்க வர.. நான் யாரு தெரியுமா???????????"

"தெரிஞ்சிடுச்சி. தப்புதாண்ணே சொல்றேன்ல. வேணும்னா ஒரு அடி அடிச்சிடுங்க மனசாரட்டும். அண்ணன் தானேன்னு நினைச்சிக்கிறேன்”

அப்படி சொன்னது தான் தாமதம், மனுஷன் உருகிவிட்டார்.

"இப்படிப் பேசையில மட்டும் அண்ணன்னு சொல்ற, அப்புறமா சட்டையை புதிப்ப"

"இல்லைண்ணே இனி செய்ய மாட்டேன் தப்புதான்.., மன்னிச்சிடுங்க"

உண்மையிலேயே நான் பணிவா பேசியது அவருக்கு கொஞ்சம் அமைதியை தந்ததுபோல். சற்று மௌனமாகி என்னையேப் பார்த்தார். வேகமாக வாங்கிய மூச்சு மெல்ல மெல்ல சமாதானம் கொண்டது.

நானே லேசாக புன்னகைத்தவாறு “சரிண்ணே, பயண சீட்டு கிடைக்குமா கிடைக்காதா? கேளுங்க நான் புறப்படனும்" என்றேன்.

"கிளம்பு கிளம்பு.. உனக்கு சீட்டெல்லாம் கிடைக்காது.. நீ போகலாம்"

"மன்னிச்சிடுங்கண்ணே. தவறுதான். உங்களிடம் கோபப் பட நியாயமில்லை. தமிழருக்கு தன் தமிழ் இனத்து உறவுகள் பற்றி முழுமையாக தெரியாத கதை' என்னவோ; ஆங்கிலம் தெரியவில்லை என்று ஒரு தமிழ் மாணவனை தமிழ் ஆசிரியரே அடிப்பதற்கு சமமாக, ஆகிவிட்டது. அத்தனை நாம் ஈழத்திலிருந்து அந்நியமாகி விட்டோம்.

தமிழருக்கு தமிழரையே அந்நியமாக்கும் ஓர் அரசியல் சூழ்ச்சி சூழ்ந்த தேசத்தில் வளரப் பட்டுவிட்டோம். அதற்குத் தக்க நம் மண்ணைப் பற்றிக் கூட நமக்கு சரியாக தெரியாத ஒரு வரலாறே நமக்குப் பாடமாக்கப் பட்டுள்ளது. பிறகு, உங்களைப் போன்றோரிடத்தில் கோபப்பட்டு மட்டும் பயனில்லை தானே? ஒரு தலைமுறை மாறிப் போனப் பிறகு எல்லாம் மறக்கடிக்கவும், மறைக்கவும் பட்டுவிடுகிறது. பிறகு, உங்களிடம் இத்தனை உணர்ச்சிவசப் பட்டிருக்கக் கூடாது தான். தப்பு தான்ணே. நான் அபப்டி நடந்திருக்கக் கூடாது தான்"

மன்னிப்பென்ற வார்த்தைக்கு தான் எத்தனை சக்தி!! தன் தவறு தான் என்றதும், அவர் சற்று நிமிர்ந்து அமர்ந்தார். மன்னித்துக் கொள்ள கேட்டதும் ‘அட ஏம்பா என்பது போலும், அவர் என்னை என்னவோ, ஒரு குற்றவாளியை மன்னித்து விடும் நிரபராதி போலவும், அதேநேரம் சற்று உருக்கமாகவும் பார்த்தார்.

“சட்டைய பிடிச்சியா, அதான் கஷ்டமா போச்சி, ஒரு பைய இங்க என்னைய இப்படி செய்ய மாட்டான் தெரியுமா” என்றார்

“தப்பு தான்ண்ணே, விடுங்கண்ணே”

“யார்னா பார்த்திருந்தா என் மானம் மரியாதை என்னாயிருக்கும்???”

“க்குக்கும்.... பெரிய.....” என்று மனதில் எண்ணி நிறுத்திக் கொண்டேன்.

“மன்னிச்சிக்கண்ணே”

"சரி.. சரி.. விடுங்க.. அதுக்கெதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு.."

"வயசுல பெரியவரு தான்-னாலும் தேசத்தை பத்தி குறையா சொல்லிடவே.. கொஞ்சம் கோபமாயிடுச்சி"

"பாத்தீங்களா, இப்பயும் அதை தான் தேசம்னு சொல்றீங்க. மறுபடிக்கும் என்னையே முட்டாளாக்குறீங்க பாருங்க.., நாம இந்தியரு அவங்க இலங்கைங்க.”
இப்போ என்ன செய்வது இவரை????

யோசித்து வையுங்கள். நாளை எழுதுகிறேன்...

-------------------------------------------------------------------------------------------------

(தொடரும்..)

No comments: