இலங்கைச் செய்திகள்

.
ரியூசன் கலாசாரம்
கிரிக்கெட்டும் அரசியலும்
வறுமை எனும் இருளில் அறிவைத்தேடும் கிளிநொச்சி சிறுவர்கள் 
பணவீக்கம் கடுமையாக அதிகரிப்பு
 

தனியார் ரியூசன் வகுப்புகளுக்குச் செல்வதில் மாணவர்கள் அதீத ஆர்வம் காட்டுவதைத் தவிர்க்க எமது பாடசாலைகளுக்கு திறமை வாய்ந்த ஆசிரியர்கள் போதியளவில் தேவைப்படுகிறார்கள் என்றும் திறமையும் தகுதியுமுடைய ஆசிரியர்களைப் பாடசாலைக்கு வழங்குவதன் மூலமும் மாணவர்களுக்கு அவர்களின் பாடங்கள் பற்றிய அறிவை அளவு கடந்து அளிப்பதன் மூலமும் ரியூசன் யுகத்துக்கு இலகுவாக முடிவைக் கட்டக் கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தென்பகுதியில் மாத்தறை பாடசாலை வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது குறிப்பிட்டிருக்கும் கருத்து எமது கவனத்தை ஈர்த்திருக்கிறது.


"ரியூசன் வகுப்புகளுக்குச் செல்வதற்காக மாணவர்களை நாம் குறைகூறமுடியாது. தகுதிவாய்ந்த ஆசிரியர் வழங்கப்பட்டு கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்கள் பாடசாலைகளில் உகந்த முறையில் கற்பிக்கப்பட்டால் மாணவர்கள் ரியூசன் வகுப்புகளுக்குப் போகவேண்டிய தேவை ஏற்படாது' என்றும் ஜனாதிபதி கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

எமது பாடசாலைகள் பலவற்றில் குறிப்பாக, பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் திறமையும் தகுதியும் வாய்ந்த ஆசிரியர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது என்பதை ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படையாகவே ஒத்துக்கொள்கிறார் என்பது அவரின் உரையின்மூலம் தெளிவாகிறது. ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களின் தராதரங்களும் தகுதியும் பற்றி கருத்திலெடுக்காமல் வெறுமனே இடைக்கால ஏற்பாடாகவே பெரும்பாலான பாடசாலைகளில் அவர்கள் பணிக்கமர்த்தப்படுகிறார்கள் என்பது உண்மையே. இது விடயத்தில் பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகளின் மாணவர்களே பாரதூரமான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

இது தவிர, சிறந்த பாடசாலைகளிலும் கூட பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்கால நலன்களை மனதிற்கொண்டு அர்ப்பணிப்புச் சிந்தையுடன் பணியாற்றுவதில்லை. தங்களது தொழிலை அவர்கள் மானசீகமாகச் செய்வதில்லை. பாடசாலை முடிவடையும் வரை நேரத்தைக் கடத்திவிட்டு மாலை வேளைகளில் ரியூசன் வகுப்புகளை நடத்துவதற்கே ஆசிரியர்கள் அவசரப்பட்டு ஓடுகிறார்கள்.

எதிர்காலச் சந்ததியைப் பற்றி யோசிக்காமல் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதிலேயே ஆசிரியர்கள் குறியாக இருக்கிறார்கள். அதனால் இன்று ஆசிரியத் தொழில் அதன் உண்மையான இலட்சியத்தை இழந்ததாகவே பெருமளவுக்குக் காணப்படுகிறது. ஒரு புனிதமான பணி என்று இனிமேலும் வர்ணிக்க முடியாததாகவும் வியாபாரப் போட்டியில் இலாப நோக்கங்களுக்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் போன்று தங்களது சம்பாத்தியத்தின் கனதி பற்றியே ஆசிரியர்கள் அக்கறைப்படுவதனால் அத்தொழிலுக்குரிய மதிப்பையும் கண்ணியத்தையும் இழந்ததாகவுமே ஆசிரியம் இன்று மாறியிருக்கிறது.

ஆசிரியர்கள் மிகவும் குறைந்த சம்பளத்தையே பெறுகிறார்கள் என்பது உண்மையே. சமூகத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய அந்தஸ்துக்கு பொருத்தமானதாக அல்லது அந்தஸ்தைப் பெறுவதற்கு அவர்கள் அனுபவித்திருக்கக்கூடிய கஷ்டங்களுக்கு நிவாரணம் தரக்கூடியதாக அவர்களது வருமானங்கள் இல்லை. ஆசிரியர்கள் இன்று விரக்தியடைந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். திருப்திகரமாகத் தொழிலைச் செய்ய வேண்டுமென்ற அக்கறையே அவர்களிடம் பொதுவில் காண முடிவதில்லை.

தங்களது பிரச்சினைகள் மீது அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆசிரியர்கள் தற்போதெல்லாம் அடிக்கடி வேலை நிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட வேண்டியிருக்கிறது. எனவே அரசாங்கம் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி கவர்ச்சிகரமான சம்பளத் திட்டத்தை அறிமுகம் செய்து ஆசிரியத் தொழிலைப் பாதித்திருக்கும் முரண்பாடுகளை அகற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும். கூரையைப் பிரித்துக் கொண்டு வானளாவள உயர்ந்துகொண்டு செல்லும் வாழ்க்கைச் செலவையும் இன்றைய திறந்த சந்தைப் பொருளாதாரம் தோற்றுவித்திருக்கும் மேலதிகமாகச் சம்பாதிக்க வேண்டுமென்ற வேட்கையையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் சம்பள அதிகரிப்பினால் மாத்திரம் ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் பக்குவத்தை ஏற்படுத்திவிடமுடியுமா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

ஆனால், ஆசிரியத் தொழிலுக்கு உரித்தான கௌரவத்துக்கு உகந்த அங்கீகாரம் அளிக்கப்படுமாக இருந்தால் ஆசிரிய சமூகத்தில் பெரும்பாலானவர்கள் தங்களது பணியை மாணவ சமூகத்தின் நலன்களை மனதில் கொண்டு துடிப்புடன் செய்வதற்கு முன்வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. முன்னைய சில வருடங்களுடன் ஒப்பிடும்போது அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப்) பரீட்சையில் மாணவர்கள் கூடுதலான எண்ணிக்கையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெறக்கூடியமையாக இருந்ததற்கு வகுப்பறைச் செயற்பாடுகள் மாத்திரம் காரணமல்ல என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தங்களது பிள்ளைகள் பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்றதன் காரணத்தினால்தான் சிறந்த பெறுபேறுகளைப் பெறக்கூடியதாக இருந்தது என்று பல பெற்றோர் வெளிப்படையாகக் கூறத் தயங்கவுமில்லை.

இங்கு ஒரு அடிப்படையான பிரச்சினை எழுகிறது. என்னதான் நாங்கள் எல்லோரும் ரியூசன் வகுப்புகள் குறித்து எதிர் மறையாகப் பேசினாலும் ரியூசன் கலாசாரம் எமது சமுதாயத்தில் நிலைபெற்றுவிட்டது என்பதை ஏற்க வேண்டியேயிருக்கிறது. பாடசாலைகளில் திறமையும் தகுதியும் கொண்ட ஆசிரியர்களினால் மிகுந்த சிரத்தையுடன் கற்பிக்கப்படுகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் கூட, தங்களது பிள்ளைகளை ரியூசன் வகுப்புகளுக்கு அனுப்புவதில் மிகுந்த அக்கறை காட்டுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ரியூசன் வகுப்புகளுக்கு அனுப்பாவிட்டால், தங்களது பிள்ளைகள் பரீட்சைகளில் திறமையான பெறுபேறுகளைப் பெறுவது சாத்தியமில்லை என்று பெற்றோர்களுக்கு இருக்கின்ற மனோபாவமும் ரியூசன் கலாசாரத்தின் வியாபகத்துக்கு முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை நாம் கவனத்திலெடுக்கத் தவறக்கூடாது!
நன்றி தினக்குரல்


கிரிக்கெட்டும் அரசியலும்
வெற்றிக்குச் சொந்தக்காரர்கள் ஏராளம். தோல்வி எப்போதுமே அனாதைதான், பாவம். 2011 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு கோடிக்கணக்கில் பரிசுகள் வந்து குவிந்த வண்ணமிருக்கின்றன.

இந்தியாவின் பல மாநில அரசாங்கங்கள் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதற்குப் போட்டிபோட்டுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், மும்பையில்  நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் தோல்வி கண்ட இலங்கை அணி பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.

இறுதிப் போட்டியில் வெற்றிபெற முடியாவிட்டாலும் கூட உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து இரு தடவைகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட அணியாக இலங்கை அணி விளங்குகிறது என்ற பெருமையைக் கொண்டாட முடியாத அளவுக்கு தோல்வியினால் இலங்கையர்கள் துவண்டு போயிருக்கிறார்கள். இலங்கைக் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் அணியினால் இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்ற முடியாமல் போனதை அன்றைய தினம் மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாகத் தடுமாறிப் போயிருந்தனர் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பத்திரிகைகளில் "எமது சாம்பியன்கள் நீங்கள்தான்' என்ற வாசகத்துடன் முழுப்பக்க விளம்பரங்கள் வெளியாகியிருந்தன. அன்றைய தினம் மும்பையில் இருந்து கொழும்பு திரும்பிய இலங்கைக் கிரிக்கெட் வீரர்களுக்கு சுதந்திர சதுக்கத்தில் செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆரவாரங்களுக்குள் ஒருவித அதிருப்தி உள்ளடங்கியிருந்தது என்பதை அடுத்துவந்த தினங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் தெளிவாக உணர்த்தின. முதலில் இலங்கை அணியின் காப்டன் குமார் சங்ககாரவும் அடுத்து உதவி காப்டன் மஹேல ஜெயவர்தனவும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து முன்னாள் நட்சத்திரத் துடுப்பாட்டக்காரர் அரவிந்த டி சில்வா தலைமையிலான மூவரடங்கிய தெரிவுக்குழுவும் பதவி விலகியிருக்கிறது.
2007 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் போது இறுதிப் போட்டிவரை சென்ற இலங்கை அணிக்குத் தலைமை தாங்கிய ஜெயவர்தனவும் 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டிவரை சென்ற இலங்கை அணிக்கு தலைமை தாங்கிய சங்ககாரவும் சிறந்த விளையாட்டு வீரர்கள். பதவி விலகல்களுக்கு இவர்களும் தெரிவுக்குழு உறுப்பினர்களும் முன்வைத்திருக்கக்கூடிய காரணங்கள் எவையாக இருப்பினும் இலங்கையின் கிரிக்கெட் நிருவாகத்திற்குள் (ஸ்ரீலங்கா கிரிக்கெட்) ஏற்கனவே மூண்டிருந்த சர்ச்சைகள் மேலும் தீவிரமடைந்திருப்பதன் வெளிப்பாடே இந்த நிகழ்வுப் போக்குகள் என்பதில் சந்தேகமில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை அணியின் பயிற்சியாளர் ட்ரெவோர் பேலிஸ் வெளிநாட்டுச் செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய பேட்டி இலங்கையின் கிரிக்கெட்டை பீடித்திருக்கும் சகல வியாதிகளுக்கும் அடிப்படைக் காரணி எது என்பதை உலகிற்கு அம்பலப்படுத்தியிருக்கிறது. அவுஸ்திரேலியரான பேலிஸின் அந்தப் பேட்டி கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றிலும் முன்பக்கத் தலைப்புச் செய்தியாகப் பிரசுரமாகியிருந்தது. பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி தனது நாட்டுக்குச் செல்லவிருக்கும் அவர் இலங்கை வீரர்களின் கவனம் அரசியலினால் திசை திருப்பப்படாமல் கிரிக்கெட் விளையாட்டில் மாத்திரமே குவிந்திருக்க அனுமதிக்கக்கூடியதாக பலம் வாய்ந்ததும் நிலையானதுமான கிரிக்கெட் நிருவாகம் ஒன்று தேவைப்படுகிறது என்று தெரிவித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

"கடந்த 18 மாதங்களாக நாம் ஆடுகளத்தில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தோ. இந்தியாவிடம் நாம் தோல்வி கண்ட போதிலும் கூட, இறுதிப் போட்டி வரை சென்றதே ஒரு பெரிய சாதனைதான். ஆனால், ஆடுகளத்துக்கு வெளியே கிரிக்கெட் நிருவகிக்கப்படுகின்ற வழிமுறைகளில் இலங்கை பெரும் மேம்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அவுஸ்திரேலியா போன்ற நல்ல கிரிக்கெட் அணிகளுக்கு வழமையாக பலம்வாய்ந்த சிறந்த நிருவாகத்தின் ஒத்துழைப்பு இருக்கிறது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்படுகின்ற இடைக்காலக் குழுவொன்றினாலேயே நிருவகிக்கப்பட்டு வருகிறது. தெரிவாளர்களை அமைச்சரே தெரிந்தெடுக்கிறார். தெரிவாளர்களும் அடிக்கடி மாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இலங்கை அணியின் வீரர்களின் முன்னால் காணப்படக்கூடியதாக இருக்கும் சகலவிதமான கவனத்திசை திருப்பங்களுக்கு மத்தியிலும் அவர்கள் சிறப்பாக விளையாடுவதைக் காண எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. இந்த நிலைமை உபகண்டத்தின் போக்காக இருக்கிறது போல் தோன்றுகிறது.
அதுவும் கூட ஒரு ஆற்றல் என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. சங்ககாரவும் ஜெயவர்தனவும் பதவி விலகியமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அது ஒரு பெரும் வெட்கக்கேடு. இலங்கையை கிரிக்கெட் விளையாட்டில் மேலும் முன்னோக்கிச் செல்ல வைக்கக்கூடிய சிறந்த வீரர்கள் அவர்கள். தற்போதெல்லாம் சில வேளைகளில் கிரிக்கெட்டுடன் எந்தவிதமான சம்பந்தமுமேயில்லாத விவகாரங்களைக் காப்டன் கையாளவேண்டியிருக்கிறது' என்று பேலிஸ் கூறியிருக்கிறார்.
இலங்கையின் சமூகவாழ்வின் சகல துறைகளையும் இன்றைய அரசியல் கலாசாரம் நாசஞ்செய்துகொண்டிருக்கிறது என்பது சகலருக்குமே தெரிந்த விடயம்.
உலகில் உள்ள கிரிக்கெட் அணிகளில் மிகவும் சிறந்தவற்றில் ஒன்றாக விளங்கும் இலங்கை அணியின் வாய்ப்புகளையும் பாழடிக்கின்ற அளவுக்கு அந்த அரசியல் கலாசாரம் நாசகாரத்தனமானதாக மாறியிருக்கிறது. இலங்கையில் உள்ள பொது நிறுவனங்களில் மிகவும் மோசமான ஊழல் நிறைந்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் விளங்குகிறது என்று வேறு யாருமல்ல தற்போதைய தனியார் பஸ் போக்குவரத்து அமைச்சர் சி.பி.இரத்நாயகாவே விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவிவகித்த போது செய்தியாளர் மகாநாடொன்றில் பகிரங்கமாகக் கூறியிருந்ததை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
கனவான்களின் விளையாட்டு என்று வர்ணிக்கப்பட்ட கிரிக்கெட் இன்று அத்தகைய ஒரு அந்தஸ்தில் மதிக்கப்படுவதாக எவருமே கூறமுன் வரமாட்டார் என்பது நிச்சயம். பெரும் பணத்தைச் சம்பாதிக்கக்கூடிய ஒரு துறையாக கிரிக்கெட் மாறத் தொடங்கிய பிறகு இயல்பாகவே அதற்குள் ஊழலும் மோசடியும் ஊடுருவத் தொடங்கிவிட்டன. பழிபாவத்துக்கு அஞ்சாமல் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாக அரசியல் இன்று மாறியிருக்கும் சூழ்நிலையில், அரசியல்வாதிகள் எங்கெங்கெல்லாம் பணத்தைத் திரட்டமுடியுமோ அங்கங்கெல்லாம் தங்கள் கைவரிசையைக் காட்டுவதற்கு ஆக்கிரமிப்புகளைச் செய்கிறார்கள். இதுவே கிரிக்கெட்டுக்கும் நேர்ந்த விபரீதமாகும்.
நன்றி தினக்குரல்

வறுமை எனும் இருளில் அறிவைத்தேடும் கிளிநொச்சி சிறுவர்கள் _
“சப்பாத்து வாங்கக் காசு இல்லை. ஆனாலும் படிக்க வேணும் என்ட தேவை இருக்கிறதுதானே அண்ணா. சண்ட நடக்கேக்கயும் நாங்க பள்ளிக்கூடம் போனோம்”


விவேகமும் தைரியமும் நிறைந்த இந்த வசனங்களைக் கேட்டு உண்மையில் ஒரு கணம் உள்ளத்தில் அதிர்ச்சி நிறைந்து மறைந்தது.

கண்ணிவெடி அகற்றும் செயற்திட்டம் தொடர்பாக இலங்கை இராணுவத்தினருடன் கிளிநொச்சி சென்றபோது வழியில் நாம் சந்தித்த மாணவர்கள் கூறிய வசனங்கள் இவை.

கோணாவில் கிராமத்துக்குச் செல்லும் வழியில் நாம் இந்த மாணவர்களைச் சந்தித்தோம்.

வரும் வழியில் அன்று படித்த பாடங்களை ஆர்வத்தோடு படித்துக்கொண்டும் சிரித்து விளையாடிக்கொண்டும் சென்ற அவர்களில் சிலருக்கு சப்பாத்து இல்லை. சிலர் பாதணிகள் அணிந்திருந்தார்கள்.
வறுமையின் பிடிக்குள் வாழும் சிறுவர்கள் என்பது வெயிலை வெறித்துப்பார்க்கும் பிஞ்சு முகங்களில் தெரிந்தது.

பெயரைச் சொல்வதற்குப் பயந்து அவசரமாய் செல்ல வேண்டும் எனக் காரணம் கூறிக்கொண்டிருந்த சிறுவனை அழைத்துப் பேசினோம்.
எதிர்பார்ப்புடன் வாழ்கையில் வறுமை எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உணர்வுபூர்வமாக அந்தச் சிறுவன் கூறிய வார்த்தைகளில் வெளிப்பட்டது.

யுத்தத்தின் கோரப்பிடியில் பல வருடங்கள். இடியா, வானவேடிக்கையா, குண்டுமழையா என பிரித்தறிய முடியாத பருவங்களில் தப்பிப் பிழைத்த பொழுதுகள்..
கூடிக்குலாவி தன்னோடு விளையாடிய நண்பர்களில் சிலரை ஊனமாகப் பார்த்த அவலம்…. என அடுத்தடுத்து அடுக்கிச் சென்ற வார்த்தைகளில் கொஞ்சம் கூட சோகம் தெரியவில்லை.

ஒன்றுமறியா பிஞ்;சு உள்ளங்களில் கபடமற்று வார்த்தைகள் வெளிவந்துகொண்டிருந்ததை அவதானித்தோம்.

ஆம்..! கல்வி கற்க வேண்டும். வைத்தியராக, ஆசிரியராக, சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற கனவு அவர்களுக்கு இருக்கிறது. அதனை சாத்தியப்படுத்திக் கொள்ளுமளவுக்கு அத்தியாவசியத் தேவைகள் கைகொடுக்கவில்லை என்பதும் புரிந்தது.

அந்தச் சிறுவர்கள் எம்மோடு பேசியதென்னவோ ஒரு சில நிமிடங்கள் தான். ஆனால் எமக்குள் பல்வேறு விடயங்களை விதைத்துவிட்டுச் சென்றதாய் உணர்ந்தோம்.

தூரத்தில் சென்று திரும்பிப்பார்த்து கையசைத்து நன்றி தெரிவித்து மறைந்துபோனார்கள்.

யுத்தத்தின் பின்னரான மக்களின் தேவைகள் அளவுக்கதிகமானவை தான். ஆயினும் இவ்வாறான சிறுவர்களின் நலனுக்காக சமூக அமைப்புக்களாயினும் தனிநபர்களாயினும் இணைந்து கைகொடுப்பார்களேயானால் நிச்சயமாக அவர்களின் கனவு நனவாகும்.

தொகுப்பு - இராமானுஜம் நிர்ஷன்

படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்

நன்றி வீரகேசரிபணவீக்கம் கடுமையாக அதிகரிப்பு


இலங்கையின் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மார்ச் மாதம் பணவீக்கம் 8.6 சதவீதத்தால் அதிகரித்துவிட்டது. பெப்ரவரியில் 6.1 வீதமாக இருந்த பணவீக்கம் மார்ச்சில் மேலும் குறைவடையுமென மத்திய வங்கி தெரிவித்திருந்ததற்கு எதிரான விதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது .

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அழுத்தமென்பதிலும் பார்க்க விலைவாசி அழுத்தத்தால் ஏற்பட்ட பணவீக்கமே இதுவென பொருளியலாளர்கள் நம்புகின்றனர். 2009 செப்டெம்பரில் 0.7 சதவீதமாக பணவீக்கம் காணப்பட்டது. ஆனால், 2011 மார்ச்சில் 10 மடங்காக 8.6 சதவீதமாக பணவீக்கம் உயர்வடைந்துள்ளது. இது பாரிய அதிகரிப்பென ஐ.தே.க. எம்.பி.யும் பொருளியல் நிபுணருமான கலாநிதி ஹர்சா டி சில்வா பிஸ்னஸ் ரைம்ஸ் பத்திரிகைக்கு கூறியுள்ளார். இந்த வருடம் பெப்ரவரியில் இருந்து மார்ச் மாதத்துக்கு 0.3 வீதத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. 7.8% 8.6% பணவீக்கம் அதிகரித்திருக்கிறது.

மத்திய வங்கியானது தொடர்ச்சியாக இலகுவான நாணயக்கொள்கைகளைப் பின்பற்ற வேண்டுமென்பதைக் கடைப்பிடித்தால் பணவீக்கத்தைக் குறைப்பதற்கு அது உதவமாட்டாதெனவும் கேள்வி அதிகரிப்பு தரப்பில் இருந்து ஏற்படும் பணவீக்கமே இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச மட்டத்தில் விலைவாசி வீழ்ச்சி கண்டிருப்பதாலும் அறுவடைகள் மேற்கொள்ளப்படுவதாலும் உணவுப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடையுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று சிரேஷ்ட பொருளியலாளர் நிமால் சந்தரெட்ண கூறியுள்ளார்.

இந்த வருடத்தின் பிற்பகுதியில் உணவுப் பொருட்களின் விலைகள் தாழ்ந்த மட்டத்திலேயே இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி கூறியுள்ளது. பெரும்போகத்தில் அதிகளவு பயிர்ச்செய்கை இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுவதால் மத்திய வங்கி இக்கருத்தை தெரிவித்திருக்கிறது.

எவ்வாறாயினும் இவை யாவுமே எரிபொருள் விலைகளிலேயே தங்கியிருக்கின்றன என்று சந்தரெட்ண கூறியுள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பால் பல்வேறுபட்ட தாக்கங்கள் ஏற்படும். இதனடிப்படையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்குமென அவர் கூறியுள்ளார்.

நன்றி தினக்குரல்

No comments: