தமிழ் சினிமா

.
1. பொன்னர் சங்கர்
2. நஞ்சுபுரம்
3. அப்பாவி
1. பொன்னர் சங்கர்

மம்பட்டியான் படம்தானே என்ற அலட்சிய பார்வையோடு தியேட்டருக்குள் போனால், அந்த பார்வையை 'சம்மட்டி' அடி கொடுத்து தகர்க்கிறார் தியாகராஜன். விளையாட்டாக இழுக்க இது பொம்மை தேர் அல்ல. திருவாரூர் தேர் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் இந்த பிரமாண்ட டைரக்டர். படம் நகரும் ஒவ்வொரு நிமிஷமும் கோடிகள் ஸ்வாகா ஆகியிருக்கிறது சர்வ சாதாரணமாக! கலைஞரின் கைவண்ணத்தில் உருவான இந்த அண்ணன்மார்கள், மார்தட்ட வைக்கிறார்கள் ஒட்டுமொத்த தமிழ்சினிமாவையே!


பொதுவாக சரித்திரக் கதையில் இடம் பெறும் வர்ணனைகளை காட்சி படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. அதை மிக சரியாக செய்திருக்கிறார் தியாகராஜன். மலையளவு தோள் வலிமை கொண்டவன் என்ற வர்ணனையை வரி மாறாமல் சுமந்திருக்கிறார் பிரஷாந்த்தும்.

நெல்லையன் கொண்டான் (ஜெயராம்) மீது காதல் கொள்ளும் தாமரை (குஷ்பு) அப்பாவால் நாட்டை விட்டே துரத்தப்படுகிறாள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள்தான் பொன்னர் சங்கர். (பிரஷாந்த்+பிரஷாந்த்) ஆனால் தன் மகன்கள் உயிரோடு இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள் இருவரும். ஆனால் ராக்கி அண்ணனால் (ராஜ்கிரண்) ரகசியமாக வளர்க்கப்படும் இவர்கள், தங்களை அழிக்க நினைத்த மந்தியப்பன் (பிரகாஷ்ராஜ்) காளி மன்னன் (நெப்போலியன்) ஆகிய இருவரையும் கொன்றொழிப்பதும், மாமன் மகள்களை கை பிடிப்பதும்தான் கதை.

துக்கடா கதையில் கூட ஹீரோவின் அறிமுக பில்டப்புக்காக ஒரு ஊரையே அடித்து நாசமாக்குதெல்லாம் நடக்கும். இங்கே ஒரு அணைக்கட்டையே உடைத்து துவம்சமாக்குகிறார்கள் பிரஷாந்த் பிரதர்ஸ்! நான் ஊர் போய் சேர்வதற்குள் மதகிலிருந்து வெளியேறும் தண்ணீர் என் கால்களை நனைக்க வேண்டும் என்கிறார் ஆசான். அம்பெய்கிறார்கள் பொன்னரும் ஷங்கரும். ஆசான் நினைத்ததுதான் நடக்கிறது. இந்த காட்சியில் கதையாசிரியரின் கற்பனையுடன், வெள்ளமென கலக்கிறது விஷ§வல் கிராபிக்ஸ்சும்!

காதலிக்காக முதலையை பிளப்பதும், மலைப்பாம்பை வளைப்பதும் கூட பிரஷாந்தின் புஜ வலிமையை பிரமிப்புடன் நோக்க வைக்கிறது. இதுதான் இப்படி என்றால் போர்க்கள காட்சிகளில் இவரது ஆக்ரோஷம் அவ்வளவு தத்ரூபம்!

பூஜா சோப்ரா, திவ்யா பரமேஸ்வரன் என்ற இரண்டு கதாநாயகிகள். அல்ட்ரா மாடர்ன் பெண்களான இவர்கள் அரசிளங் குமரிகளாகியிருக்கிறார்கள். ஹைட் லுக்கும் கண்ணசர வைக்கும் லோ ஹிப்புமாக இவர்களை பார்க்கும் போதெல்லாம் தியேட்டரே டபுள் ஏசி யாகி குளிர வைக்கிறது.

பிரஷாந்தின் தங்கையாக சினேகா. பெயர் அருக்காணி. வாளெடுத்து சுற்றுகிறார். அசகாய சூரன்களையெல்லாம் அடித்து து£க்கி எறிகிறார். அந்த புன்னகை மட்டும் போவேனா என்கிறது.

நரைத்த தாடி, நரைக்காத கம்பீரம் என்று நாசருக்கு பொருத்தமான கேரக்டர். பொன்னரும் ஷங்கரும் யார் என்று போட்டு உடைக்கிற வேலை இவருக்கு. அது மட்டுமல்ல, போர்களத்தில் வாள் சுழற்றும் வீரனும் கூட! ஜமாய்த்திருக்கிறார் மனுஷன். மற்றொரு கம்பீரன் நெப்போலியன். கேட்பார் பேச்சை கேட்கிற அரசன். சுய சிந்தனையற்றவன் எப்படி அரசரானான் என்ற கேள்வியை இத்தனை வருடங்கள் கழித்தும் எழுப்ப வைக்கிறது இந்த கேரக்டர். பிரபு, விஜயகுமார், பொன்வண்ணன், ரியாஸ்கான் என்று மற்றவர்கள் கூட்டம் சேர்க்க பயன்பட்டிருக்கிறார்கள்.

திரையில் தோன்றிய கலைஞர்களுக்கு இணையாக முகம் காட்டாத தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பும் இருக்கிறது. குறிப்பாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில் நுட்பம். இதையும் பிரஷாந்த்தே கவனித்திருப்பதுதான் வியப்பு. நவீன இயக்குனரான ஷங்கருக்கே சவால் விட்டிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாருக்கு விருதுகள் காத்திருக்கிறது. இவர் மட்டுமா? நடனம் அமைத்த ஷோபி, சாந்தி கபூருக்கு கூட பாராட்டுகள் குவியும்!

இசைஞானி இளையராஜாவின் எல்லையற்ற சுதந்திரம், நம் காதுகளை மயங்க வைத்த மந்திரம்! பின்னணி இசையோ காட்சிக்கு காட்சி பேசுகிறது. 'கண்ணை படித்தேன்...' பாடலில் பழனி பாரதியின் வரிகளும், ஸ்ரீராம் பார்த்த சாரதி ஷ்ரேயா கோஷலின் குரல்களும், ராஜாவின் பிரசன்ட்டேஷனும் கலந்து சொர்க்கத்தின் கதவுகளை விரிய திறக்கிறது.

கொங்கு மண்டல கதையில் கோவை பாஷை இல்லையே என்ற குறையும், சட்டென்று படம் முடிந்துவிட்டதே என்ற உணர்வும் லேசான வருத்தத்தை கொடுத்தாலும், பொன்னர் ஷங்கர் இத்தனை வருட தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படம் என்ற முத்திரையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

'மம்பட்டி' கைபட்டால் மண் கூட பொன்னாகும் என்பார்கள். இங்கே பிலிம் கூட அப்படியாகியிருக்கிறது!

-ஆர்.எஸ்.அந்தணன்


2.  நஞ்சுபுரம்
தாம்பு கயிறை பார்த்தால் கூட தடதடக்கிற நமக்கு, இந்த பாம்பு படம் படபடப்பை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம். ஏனென்றால் இப்படத்தில் வரும் மெயின் ரோல், சைட் ரோல், சப்போர்ட் ரோல் எல்லாருமே பாம்பை மையமாக வைத்துதான் நடமாடுகிறார்கள். இதற்குள் அழகான காதல், அதிர வைக்கும் சாதி வெறி என்று வேறு பல சமாச்சாரங்களையும் 'மிக்ஸ்' பண்ணி மகுடி ஊதியிருக்கிறார் இயஅந்த ஊரின் பெயரே நஞ்சுபுரம். விஷப்பற்களோடு திரியும் நாகங்களை, வேடிக்கையாக து£க்கி வீசுகிற அளவுக்கு தைரியமுள்ள ராகவ், மோனிகாவையும் ஒரு முறை பாம்பிடமிருந்து காப்பாற்றுகிறார். இவரால் அடிக்கப்பட்டு உயிரோடு தப்பிக்கும் பாம்பு ராகவ்வை போட்டு தள்ளுகிற வெறியோடு திரிகிறது. இருவரில் வெற்றி யாருக்கு என்பது க்ளைமாக்ஸ். அதுமட்டுமல்ல, கீழ் சாதி பெண்ணான மோனிகாவுக்கும் ராகவுக்குமான காதல் நிறைவேறியதா என்பது கிளைக்கதை!

படமெடுக்கும் நாகத்தை படக்கென்று பற்றிக் கொண்டு வாலை திருகி விசிறியடிக்கும் ராகவ்வுக்கு அசாத்திய தைரியம்தான். அப்படிப்பட்டவர் திடீரென்று கோழையாக மாறி கயிறை கூட 'அது'வாக நினைத்து அலறுவதெல்லாம் பரிதாபம். ஒரு மண்டலத்திற்கு பரணில்தான் இருக்க வேண்டும் என்று பாம்பு ஏற முடியாத பாதுகாப்பு அரண் அமைக்கிறார்கள். அங்கிருந்தபடியே இவர் மோனிகாவுக்கு லவ் லெட்டர் எழுதுவதும், அதை அவர் பார்க்கும்படி செய்வதும் ரசனை மேளா.

மோனிகாவுக்கு இந்த படத்திலும் அழுகாச்சி கேரக்டர்தான். ஆனால் அதிலேயும் கூட விதவிதமான சோகங்கள் காட்டி வியக்க வைக்கிறார். அம்மாவை 'சைடில்' வைத்திருக்கும் தம்பி ராமய்யாவுக்கு தன் கையாலேயே சைட் டிஷ் தயாரித்து தர வேண்டியிருக்கிறதே என்கிற ஆத்திரத்தையும், இயலாமையும் அற்புதமாக வெளிப்படுத்துகிறார் ஒரு காட்சியில்! தனக்கு திருமணம் என்பதை பரணில் இருக்கும் ஹீரோவுக்கு செய்கையாலேயே உணர்த்தி தவிக்கிற வேறொரு காட்சி பரிதாபம்! நல்லவேளை... பாடல் காட்சியிலாவது சிரிக்க விட்டார்கள் இவரை.

பல காட்சிகளில் படக்கென்று கால்களை து£க்கி சீட்டின் மேல் வைத்துக் கொள்கிற அளவுக்கு ஷாக் கொடுக்கிறார் இயக்குனர். அதிலும் கோழியும் பாம்பும் மோதிக்கொள்ளும் அந்த காட்சி ஐயாயிரம் வோல்டேஜ் அதிர்வு...

பல படங்களில் நம்மை சிரிக்க வைத்த தம்பி ராமய்யா இதில் வில்லன். பாம்பின் விஷத்தைவிட கொடுமையானது ஜாதி விஷம் என்ற விஷயத்தை சொல்ல நன்றாகவே பயன்பட்டிருக்கிறார்.

ஹீரோ ராகவ்வே இசையமைத்திருக்கிறார். புஷ்பவனம் குப்புசாமியின் ஒரு பாடல் ஈர்ப்பு. ஒளிப்பதிவாளர் ஆன்ட்டனியின் கேமிராவுக்குள் பாம்புகள் ஏதாவது தனது வீட்டை ஷிப்ட் பண்ணியிருந்தாலும் ஆச்சர்யமில்லை. (எதற்கும் ஒரு முறை செக் பண்ணுங்க பாஸ§!)

பாம்புக்கு நடுங்குகிறவர்களை 'புஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பாடா' என்று பெருமூச்செரிய வைத்திருக்கிறார்கள்!

-ஆர்.எஸ்.அந்தணன்


3. அப்பாவி

ஒரு சாக்லெட் பாயின் 'சைல்டிஷ்' என்கவுன்டர்தான் அப்பாவி! ரீலுக்கு ரீல் தோன்றும் ஏன் எதற்கு என்ற கேள்விகளை, டிக்கெட்டுடன் மடித்து பாக்கெட்டில் செருகிக் கொண்டு படம் பார்த்தால் மட்டுமே ரசிக்கலாம்.

நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து பொட் பொட்டென்று போட்டுத் தள்ளுகிறார் கல்லு£ரி மாணவன் கவுதம். செத்துப் போகிற அத்தனை பேரும் சமுதாயத்தை அழித்துக் கொண்டிருக்கும் சண்டியர்கள். அந்த காட்சிகளை எம்எம்எஸ் மூலம் இந்தியாவெங்கும் அனுப்புகிறார் அவரே. நாடே திமிலோகப்படுகிறது. குற்றவாளியை பிடிக்க நியமிக்கப்படும் கலெக்டர் ஸ்ரீரஞ்சனி, கடைசியில் அவன் யாரென்று கண்டு பிடித்துவிடுகிறார். "இவன்தான் அது. பிடிங்க" என்று போலீஸ் கைகளில் ஒரு போட்டோவை கொடுக்க, அந்த போட்டோவில் இருப்பது அவரது மகனேதான்! நீதிக்கு தலைவணங்க வைக்கும் ஒரு தங்கப்பதக்க டச்சோடு முடிகிறது படம்.

படத்தின் காட்சிகளை விட கவனிக்க வைப்பது வசனங்கள்தான். கையில சுத்தியலோட திரியுறவனுக்கு பாக்கறது எல்லாமே ஆணியாதான் தெரியும்... இப்படி ஆங்காங்கே பேனா வித்தை காட்டுகிறார் டைரக்டர் ரகுராஜ். கிராமத்து பெண்கள் கல்லு£ரிக்கு படிக்க வரும்போது நேர்கிற கிண்டல் கேலிகளையும், அப்படி வரும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் முடிவையும் பார்க்க கவலையாக இருந்தாலும், ஏன் அவளை சாதனை பெண்ணாக காண்பித்திருக்க கூடாது என்ற கோபமே வருகிறது இயக்குனர் மீது!

அறிமுக ஹீரோ கவுதமுக்கு அப்பாவி முகம். ஆக்ரோஷ குணம். இரண்டையும் கலந்து கட்டி அடிக்கிற போது கவனிக்க து£ண்டுகிறார். ஒருகாட்சியில் பிணத்தை மூடி வைத்த பெட்டியின் மீதே சாவகசமாக டிபன் தட்டை வைத்துக் கொண்டு சாப்பிடுவதெல்லாம் ஷாக். ஆனால் வில்லன்களை எப்படி தனியிடத்துக்கு து£க்கி வருகிறார் என்பதையெல்லாம் யோசித்து குழம்பினால் தலைவலி மாத்திரை செலவுதான் மிஞ்சும்.

நிலாவை பிசைந்து செய்த மாதிரி இருக்கிறார் சுஹானி. (அதற்கு மேல் பவுடர் வேறு) நடிப்பு பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. அத்தனை கொலைகள் செய்ததாக பட்டியல் போடும் ஹீரோவிடம், இப்பதான் உன் மீது காதல் அதிகமாகுது என்கிறார். (ஸ்.... அப்பாடா)

கோவிலுக்கு நன்கொடை வாங்கி தருவதாக ஒரு கூட்டத்தையே தன்னிடம் அழைத்து வரும் எம்.எல்.ஏ வுக்கு மகாதேவன் கொடுக்கிற 'மரியாதை' பயங்கரம்ப்பா...!

அரசியல்வாதியில் ஆரம்பித்து பத்திரிகைகள் சேனல்கள் வரைக்கும் ஒரு பிடி பிடித்திருக்கிறார் டைரக்டர் ரகுராஜ். அதற்காகவே தனி ஷொட்டு தலைவா...

இசை ஜோஷ்வா ஸ்ரீதர். எடு எடு வாளை எடு என்ற வைரமுத்துவின் பாடலும் வரிகளும் ஆஹா. சமுதாயத்தில் ஒரு மாற்றம் தேவை என்கிறார் இயக்குனர். இதே டைப் படங்களை பார்த்து பார்த்து பேஸ்த் அடித்து போயிருக்கும் நமக்கும் இப்போதைய உடனடி தேவை,

ஒரு மாற்றம்தான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

நன்றி தமிழ்சினிமா.கொம்







No comments: