இலங்கைக்கும் தாமிரபரணி நதிக்குமான வரலாற்றுத் தொடர்பு ஒரு நோக்கு

 .
பொங்கி வழிந்து ஒரு காலத்தில் பெருக்கெடுத்து, ஓடிய தாமிரபரணி
இன்று ஒரு கால்வாயைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று
தாமிரபரணியும், தாமிரபரணி வளர்த்த திருநெல்வேலி நகரமும், பிளாஸ்டிக்
குப்பைகளுக்கிடையே தேக்கி வைக்கப்பட்ட சாக்கடை நீரில்
மூழ்கிப்போகுமோ என்ற அச்ச உணர்வு நகரத்தைப் பார்க்கும் போதெல்லாம்
தோன்றிவிடுகிறது.
தாமிரபரணிக்கும் இலங்கைக்குமான உறவுகள், வரலாற்றின் ஆதிப்
பக்கங்களில், இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றது. இலங்கை - கிரேக்க,
அரேபிய, சீன பயணக் குறிப்புகளில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய ஓவியக் குறியீடுகள், வேறு பல தொன்ம அடையாளங்கள் ஆகியவற்றின் மூலம் இதன் பதிவை மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளல் இயலும்.
இந்தப் பதிவுகள் அனைத்திலும்,
இலங்கை என்னும் பெயரைக் காண முடியவில்லை. கிரேக்கத்தைச் சார்ந்த மெகஸ்தனீஸ்
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தான். இங்கிருந்து இலங்கைக்குச் சென்ற
அவன், இந்தத் தீவை ‘தாம்ரபனே’ என்று குறிப்பிடுகிறான்.
இலங்கை வரலாற்றக்கு அடிப்படை ஆதாரமாக முன்வைக்கப்படுவது மகாவம்சம். இலங்கை
பௌத்த வரலாற்றின் மூலநூலாகிய இதுவும், இலங்கைத் தீவை தாமிரபரணி என்றுதான்
அழைக்கிறது. இந்தியப் பேரரசன் அசோகனின் பாறைக் கல்வெட்டுகளிலும் இதற்கான
ஆதாரங்கள் இருக்கின்றன. தமிழகத்தின் தாமிரபரணி கரையில் திருநெல்வேலி இருப்பதைப்
போல், இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் ஒரு திருநெல்வேலி அமைந்துள்ளது. இப்பொழுது
யாழ்.பல்கலைக்கழகம் இங்குதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆழிப்பேரலைகள் விழுங்குவதற்கு முன், தென்பாண்டிக்கும் இலங்கைக்கும் இடையில்
நிலத்தொடர்பு இருந்தது என்பது தொல் நம்பிக்கையாகத்தான் இதுநாள் வரை கருதப்பட்டு
வந்தது. ஆனால், இன்றைய புவியியல் ஆய்வு வளர்ச்சி, நில இணைப்பு இருந்ததற்கான
ஆதாரங்களை கூடுதலாக்கியுள்ளது. கி.மு. 3ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்த நிலத்
தொடர்ச்சி இருந்தது என்பதை இவற்றின் மூலம் உறுதியாக நம்ப முடிகிறது.
இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில் அமைந்த நிலத் தொடர்ச்சியில் தாமிரபரணி ஏன்
ஓடியிருக்கக்கூடாது என்ற கேள்வி இப்பொழுது நியாயமானது தானே? இலங்கை வரலாற்றில்
அழிந்து போன தாமிரபரணி, தென்பாண்டிய நாட்டில் வாழ்ந்து இப்பொழுதும் நம்மை
பெருவியப்பில் ஆழ்த்துகிறது.
மனிதன் விவசாய வாழ்க்கைக்கு வந்து பத்தாயிரம் ஆண்டுகள் இருக்கும் என்று வரலாற்று
ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ‘இத்தனை ஆண்டுகள் மனிதன் வாழ்ந்த பூமியா
திருநெல்வேலி?!’ என்று நம்மை வியப்பில் மூழ்கடித்துவிடுகிறது.
- ‘தாமரை’ இலக்கிய இதழின் ஆசிரியர் சி.மகேந்திரன் அவர்கள், ‘ஜூனியர் விகடனில்’
தொடராக எழுதி, பின்னர் விகடன் பிரசுரமாக வந்துள்ள ‘ஒரு வண்ணத்துப்+ச்சியின் மரண
சாசனம்’ என்ற நூலிலிருந்து இந்தப்பகுதி எடுக்கப்பட்டது. அவருக்கு;கும்,;, விகடனுக்கும் எமது
நன்றிகள்.
- தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில்
தோன்றி தூத்து;துக்கு;குடி மாவட்டம் புன்னைக்க்காயல் அருகே கடலில் கலக்கின்றது.
nanri:vaanavil

No comments: