பத்து நாள் பந்தம் - சிறு கதை – உஷா ஜவாகர் (அவுஸ்திரேலியா)

.
அவுஸ்திரேலியாவில் சிட்னியில் பேர்வுட்(Burwood) என்ற இடத்தில் அமைந்திருந்தது ரோஸ் என்கிற விசாலமான நர்ஸிங் ஹோம். விசாலமில்லாத மனமுடைய புத்திரச் செல்வங்கள் தங்கள் செல்வத்தைப் பாவித்துத் தங்கள் செல்வத்தைப் பாவித்துத் தங்கள் பெற்றோரைக் கொண்டு வந்து தள்ளிவிட அந்த விசாலமான நர்ஸிங் ஹோம் பல வகையிலும் உதவி செய்து கொண்டிருந்தது.

அந்த நர்ஸிங்ஹோமில் வெள்ளைக்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இலங்கையர்கள் என்று எல்லா நாட்டு முதியோர்களும் வாழ்ந்து வந்தாலும் இலங்கைத் தீவைச் சேர்ந்தவர்களே அதிகம் வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று குறிப்பிடலாமே தவிர யாரையுமே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள் என்று குறிப்பிடமுடியாது.

அப்படி குறிப்பிட முடியாதவர்களில் குறிப்பிடத் தக்கவர்தான் கமலம் என்ற அந்த மூதாட்டி. கமலம் அம்மாவுக்கு ஒரு எழுபத்தைந்து வயது இருக்குமா? இருக்கும் என்றே அவரது நரைத்த தலைமயிரும் ஒடுங்கிப் போயிருந்த கன்னங்களும் தளர்ந்து போயிருந்த அவரது கறுத்த தோலும் காட்சி கூறின.

அவர் தனது படுக்கைக்கு அருகில் போடப்பட்டிருந்த படுக்கையை வெறித்து நோக்கினார். அந்தக் கட்டில் வெறிச்சென்றிருந்ததைப் போலவே அவரது மனமும் வெறிச்சோடிக் கிடந்தது.

அந்தக் கட்டில் காலியாகி சரியாக ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. ஆம் கமலம் அம்மாளின் கணவர் திரு கனகசுந்தரம் கடந்த நான்கு வருடங்களாக அந்த நர்ஸிங் ஹோமில் வசித்து அங்கேயே காலமாகியிருந்தார். கமலம் அம்மாளும் தன் கணவர் நர்ஸிங் ஹோமுக்கு வந்த போது தானும் அவருடன் சேர்ந்து வந்து அங்கேயே தங்கிவிட்டார்.

கமலம் கனகசுத்தரம் தம்பதியரின் ஒரே மகன் சபேசன் நல்ல வேலையிலிருந்தான். கண்ணுக்கு அழகான மனைவி, கெட்டிக்கார குழந்தைகள் என்று அவனுக்குக் கடவுள் ஒரு குறையும் வைக்கவில்லை.

அவனுக்குத் தான் பெரிய மனக்குறை!

இலங்கையிலிருந்து பெற்றோரை சிட்னிக்கு அழைத்து வந்தாயிற்று. ஆறு மாதங்கள் வீட்டில் வைத்துப் பராமரித்து விட்டாயிற்று.

ஆறுமாதங்கள் கழிந்த பிறகு வீட்டில் சின்ன சின்னப் பிரச்சினைகள் முளைத்தன. ‘பிள்ளைகள் படிக்கிற நேரத்தில் தாத்தா டி.வி பார்த்துட்டு இருக்கிறார். பாட்டி எப்போதும் தமிழ் ரேடியோவைப் பலமாக போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறா. அடிக்கடி குசினிக்குள்ளே போய் சமைச்சு சமைச்சுக் குசினியைக் குப்பையாக்குகிறா. இப்படி சிறிது சிறிதாக ஆரம்பித்த பிரச்சினைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அன்று பூதாகரமாய் வெடித்து விட்டது.

மருமகள் சுபா ஆசையாக வாங்கி வைத்த கிறிஸ்டல் பொம்மையை நகர்த்தி ஹால் அலுமாரியைச் சுத்தம் செய்தார் கமலம் அம்மா. யாருடைய கஷ்டகாலமோ கை தவறி விழுந்த அந்த கிறிஸ்டல் பொம்மை சுக்கு நுறாக நொறுங்கியது. “என்ன மாமி சும்மா கையையும் காலையும் வைச்சுக் கொண்டிருக்க மாட்டீங்களா? நான் ஆசையா வாங்கி வைச்சது. போச்சு போச்சு எல்லாம் போச்சு” என்று சுபா அலற அங்கு வந்த சபேசனும் தன்னுடைய பங்கிற்கு, “ஏனம்மா வந்தமா பேசாம இருந்தமா, பேரப் பிள்ளைகளைப் பார்த்தமா” என்றிருக்காம ஏன் தேவையில்லாத வேலை எல்லாம் செய்ய வெளிக்கிட்டனீங்க?” என்று அதட்டினான். “மன்னிச்சுக் கொள்ளு தம்பி! தெரியாம நடந்திட்டுது! இனி கவனமாயிருக்கிறேன்” என்று கமலம் அம்மாள் சமாளித்து வைத்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த கனகசுந்தரம் ஐயாதான் மிகவும் கவலைப்பட்டார்.

“யாழ்ப்பாணத்தில் எவ்வளவு பெரிய வீடுவளவு எல்லாம் இருக்கு! அது எல்லாத்தையும் விட்டுப் போட்டு இங்க வந்து சிறைக்குள்ள வாழுகிற மாதிரி இருக்கு. இவள் சுபாதான் உன்னை ஏசினதென்றால் அது காணாது என்று இவன் சபேசனும் இல்ல எரிஞ்சு விழுறான். வா! நாங்க திரும்ப ஊருக்கே போய்ச் சேருவம்” இப்படி அன்று இரவு கமலம் அம்மாவிடம் தன் மனக்கமுறலை எல்லாம் கொட்டினார் அந்த முதியவர். “வந்தது வந்துட்டம்! கொஞ்சம் பொறுத்துப் போவோம் அவர்களை அனுசரிச்சுக் கொண்டு இருப்பம்!” என்று அவரை சமாதானப்படுத்தினார். கமலம் அம்மாள்.

பறவைகள், மிருகங்கள் எல்லாம் அழுவதில்லை! அழுகையில்லாத மனிதனும் இல்லை என்பது அவர்களைப் பொறுத்தவரை உண்மையாகத் தான் போயிற்று.

அடுத்து வந்த சில நாட்களில் பாரிசவாதத்தால் தாக்கப்பட்ட கனகசுந்தரம் ஐயாவால் நிற்கவோ நடக்கவோ முடியாமல் போயிற்று. வாய் ஒரு பக்கம் கோணிக் கொண்டு இழுக்க அவரால் தெளிவாக கதைக்கவும் முடியாமல் போயிற்று.

கனகசுந்தரம் ஐயாவை இனி வீட்டுக்கு அல்லது நர்ஸிங்ஹோமுக்கு அழைத்துச் செல்லலாம் என்று அவருக்கு வைத்தியம் பார்த்த வைத்தியர்கள் தெரிவித்து விட்டார்கள்.

அன்று இரவு சுபா தன் கணவன் சபேசனுக்குத் தலையணை மந்திரத்தை நன்றாகவே ஓதினாள்.

“இங்க பாருங்க! நீங்களும் வேலைக்குப் போறீங்க! நானும் வேலைக்குப் போறன்! நீங்க நாடு நாடாய் சுற்றித் திரிவீங்க! நான் பிள்ளைகளையும் பார்க்கோணும். மாமாவை இங்க வீட்டுக்கு கொண்டு வந்தா சரியான கஷ்டம். என்னால சமாளிக்கேலாது! ப்ளீஸ் மாமாவை நர்ஸிங்ஹோமுக்கே அனுப்பி விட்டுருவம்!”

இந்த உலகில் மனைவியின் மகுடிக்கு மயங்காத கணவனும் உண்டா என்ன! அடுத்த நாள் காலை தாயை அழைத்த சபேசன் ஆரம்பித்தான்.

“அம்மா! இங்க பாருங்கோ! சுபாவும் நானும் வேலைக்குப் போறதால அய்யாவைப் பேசாம ரோஸ் நர்ஸிங்ஹோமுக்கு அனுப்பிருவம். அங்க நர்ஸ்மார் எல்லாம அய்யாவைக் கவனமாக பார்த்து விடுவினம்” என்ன தம்பி சொல்கிறாய்? குத்துக்கல்லாட்டம் நான் வீட்டில இருக்கேக்க .... என்னய்யா இது?” கலங்கிய கண்களுடன் கமலம் அம்மாள் சபேசனை வெறித்துப் பார்க்க, சுபா ஹாலின் மறுகரையிலிருந்து கண்களால் மறுபடியும் ஓர் மறுப்புக் கணையை ஏவினாள்.

அந்தக் கணையால் நன்றாகத் தாக்குண்ட சபேசன், “அம்மா! அப்பிடியென்றால் இப்பிடி செய்யலாம். அப்பாக்கு கிட்டயே இருந்து நீங்களும் அவரைப் பார்த்து விடலாம்! அப்பாவுக்கும் உனக்கும் சேர்த்தே ஒரு அறையை எடுத்துத் தாறன். நீங்களும் டயபடிக் பேஷண்ட் தானே! அது எல்லோருக்கும் வசதியாயிருக்கும்!”

தன் முடிவை மாற்ற விரும்பாமல் மகன் பிடிவாதமாக இருப்பதை உணர்ந்த கமலமும் வேறு வழியின்றி கணவருடன் நர்ஸிங்ஹோம் நோக்கிப் பயணமானாள்.

நர்ஸிங்ஹோமில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் இரண்டு கட்டில்கள், ஒரு அலுமாரி, ஒரு குட்டித் தொலைகாட்சிப் பெட்டி, விருந்தினர்கள் வந்தால் எல்லாம் வசதியாக இருந்தது. பாவிக்கும் பொருட்களுக்குப் பஞ்சமிருக்கவில்லை! பாசத்துக்கும் நேசத்துக்கும்தான் பஞ்சமிருந்தது. அன்புக்கும் கனிவுக்கும்தான் பஞ்சமிருந்தது.

ஆரம்பத்தில் கிழமைக்கு நான்கு நாட்கள் வந்து பார்த்த சபேசன் பின்னர் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை நான்கு மணியளவில் தலையைக் காட்டுவான்.

“எங்கேயப்பா பேரப்பிள்ளைகள் தனுஷ்யாவும் சுதனும்?” என்று கமலம் அம்மாள் கேட்டால் “தனுஷ்யாவுக்கு டான்ஸ் கிளாஸ், சுதனுக்கு டென்னிஸ் அவர்களைப் பிறகு ஆறுதலாய் கூட்டிட்டு வாறன் என்று கூறிவிட்டு  அங்கிருந்து நழுவி விடுவான்.

ஊருக்குப் பயந்தோ அல்லது மனசாட்சிக்குப் பயந்தோ மருமகள் சுபாவும் மாதத்திற்கு ஒருமுறை தலைக் கறுப்பகை; காட்டிவிட்டுச் செல்வாள்.

கமலம் அம்மாளும் கனகசுந்தரம் ஐயாவை வீல்சேரில் வைத்துத் தள்ளியபடி நர்ஸிங்ஹோம் முற்றத்திற்கு வருவாள். அந்த முற்றத்தைப் பார்க்கும் போதெல்லாம் சின்ன வயதில் தங்கள் வீட்டு வளவில் சபேசன் பந்தை உதைத்து விளையாடியது, மற்றும் அவனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அவன் நண்பர்கள் புடை சூழ   கேக் வெட்டியது: பாடசாலை பரிசளிப்பு விழாவில் பரிசுகளை வென்று கப்பீரமாக நிமிர்ந்து நின்றது எல்லாம்  நினைவில் நிழலாடும்.

இந்த நினைவுகளை எல்லாம் யாருடன் பகிர்வது? கட்டிய  கணவருடன் இந்த நினைவுகளை நிச்சயம் பகிர்ந்து கொள்ள முடியாது. அவர் தனக்கென ஒரு உலகத்தை திருஷ்டித்துக் கொண்டு அதில் ஆழ்ந்திருப்பார்.

அவருக்கு கமலம் அம்மாள் சூப்பை பருக்கும் போதோ அல்லது உணவை ஊட்டி விடும் போதோ அவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் வழிந்தோடத் தவறுவதில்லை.

அந்தக் கண்ணீர்த்துளிகளுடன் அவள் தன் மகனுக்கு சோற்றுடன் பருப்பையும் கீரையும் தயிரையும் போட்டு பிசைந்து பிசைந்து ஊட்டிய காட்சிகளும் சேர்ந்து வழிந்தோடும்.

ஒரு முறை கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணருக்குப் படைப்பதற்காக கடலை வடைகளைச் சுட்டுக் கொண்டிருந்தாள் கமலம்.

அவளைக் கேட்டாமலேயே படைப்பதற்கு முன்னரே குறும்புப் புன்னகையுடன் இரண்டு வடைகளை அவன் எடுத்தோடிச் சென்ற காட்சியும் அவள் மனத்திரையில் அவ்வப்போது நிழலாடி அடிவயிற்றைப் பிசையும்.

அவனை முதன் முதலில் பாடசாலைக்கு அனுப்பியது: அவன் வளர வளர வீட்டில் பணப்பற்றாக்குறை இருந்தாலும் எல்லா டியுசன்களுக்கும் அனுப்பி அவனை நன்கு படிப்பித்தது: அவன் ஆசைப்பட்டவுடன் அவளது தங்கக் காப்புகளை அடகு வைத்து அவனுக்குப் புது சைக்கிள் வாங்கிக் கொடுத்தது என எல்லா சம்பவங்களையும் அவ்வப்போது நினைத்து நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொள்வாள்.

சென்ற கிழமை நர்ஸிங் ஹோமுக்கு சயேசன் வந்து சென்ற போது கூறிய வார்த்தைகள் அவளது காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

“அம்மா! நான் இப்ப சவுத் ஸ்ரத்பீல்டில் காணி வாங்கி ஏழு அறைகளோட இரண்டு அடுக்கு மாடி வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். வீடு எல்லாம் ரெடியான பிறகு உங்களையும் அய்யாவையும் கூட்டிக் கொண்டு போய் காட்டுறன் என்ன!” என்றான் சபேசன்.

‘கூட்டிக் கொண்டு போய் காட்டுறன்’ என்று கூறினானே தவிர மறந்தும் அல்லது மருந்துக்குக் கூட உபசாரமாக ‘உங்களை அங்கேயே ‘வைத்துப் பராமரிக்கிறேன்’ என்று கூறவில்லை.

‘என்ன பிள்ளைஇவன்’என்ற சலிப்பும் அவள் உள்ளத்தில் எழாமலில்லை. ‘எத்தனை பிள்ளைகள் தங்கள் தாய் தகப்பன்மாரை வடிவாக கவனித்துப் பார்த்துவிடுகிறார்கள்! இவனை வளர்ப்பதில் நான் என்ன குறை வைத்தேன்?” என சிலசமயங்களில் சஞ்சலப்படுவான். என்ன சஞ்சலப்பட்டு என்;ன பயன்? எழுதிச் செல்லும் விதியின் கை எழுதியதை மாற்றி எழுதவா போகிறது?

நர்ஸிங்ஹோமிற்கு அவர்கள் வந்து தங்கியிருந்து நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டது. அன்று இரவு நித்திரையிலேயே மாரடைப்பால் காலமாகி விட்டார் கனகசுந்தரம் ஐயா! அடுத்த நாள் காலை கனகசுந்தரம் ஐயாவை எழுப்புவதற்காக சென்ற கமலம் அம்மாள் அலறிய அலறலில் அந்த நர்ஸிங்ஹோம் சுவர்களும் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் நின்றன.

அதுவரை அடிக்கடி தந்தையைப் பார்க்க வராத தனயன் இப்போது ஓடி ஓடி அவரது இறுதிக் கிரியைகளை சிறப்பாகச் செய்து முடித்தான். ‘இப்போது ஒடி ஓடி இறுதிக் கிரியைகளை செய்த மாதிரி அவரது இறுதி நாட்களில் அவரை ஓடி ஓடி வந்து பார்த்திருந்தால் எவ்வளவ நன்றாக இருந்திருக்கும்! இப்படியெல்லாம் மனதுள் நினைத்தாலும் கமலம் அம்மா வெளியில் ஓன்றும் சொல்லமாட்டார்.

காலமகள் தன் இரு கைகளை விரித்துப் பறந்து கொண்யேயிருக்க கனகசுந்தரம் ஐயா இறந்து ஒரு மாதம் பறந்து போயிற்று.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. பிற்பகல் சுமார் மூன்று மணியிருக்கலாம். ‘எப்படியம்மா இருக்கிறீர்கள்?’ என்றபடி தாய்க்காக ஒதுக்கப்பட்ட அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தான் சபேசன்.

“உன்னிட்டை ஒண்டு கேக்க வேணும் தம்பி! கேக்கட்டுமா?” என்று நடுங்கும் குரலில் மெல்ல ஆரம்பித்தார் கமலம் அம்மா!

அவரது முகமெங்கும் சோகரேகைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடின. வாழ்க்கையின் ஓட்டத்தோடு ஓடி ஓடி களைத்துப் போனதை அவரது துன்பத்தால் சோர்ந்திருந்த முகம் அப்படியே பிரதிபலித்தது. “என்னம்மா வேணும்? கேளுங்களேன்!” தன் குரலை சற்று உயர்த்தியபடியே கேட்டான் சபேசன். உன்ர மகன் சுதன் நல்லா டென்னிஸ் விளையாடுவானாம். அதை நான் கண் மூடுறதுக்குள்ள கண் குளிரப் பார்க்க வேணும். உன்ர மகள் தனுஷ்யா நல்லா வீணை வாசிப்பாளாமே! அதை நான் என்ர காதுகள் கேட்காமல் போறதுக்குள்ள காது குளிரக் குளிரக் கேட்க வேணும்!

உன்ர ஏழு அறை கல்வீட்டை நீ வடிவா கட்டி முடிச்சிட்டாயாமே! அதை ;நான் கல்லறைக்குள்ள போறதுக்குள் பார்க்க சரியான ஆசையாயிருக்கு தம்பி!

இதையெல்லாம் நான் உன்னை என்ர வயித்தில பத்து மாசம் சுமந்ததுக்கு நன்றிக்கடனா கூடக் கேக்கேலை. ஒரு உதவியாகத் தான் கேக்கிறேன். என்னை உன்ர புது வீட்டில் ஒரு பத்தே பத்து நாள் கூட்டிக் கொண்டு போய் வைச்சிருந்து விட்டு இங்க திரும்பிக் கொண்டு வந்து விட்டு விடுறீயா தம்பி சபேசா?”

எழுபத்தைந்து வயது மூதாட்டியின் அடிவயிற்றிலிருந்து ஆற்றாமையுடன் எழுந்த அந்த கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் தலை குனிந்தபடியே அமர்ந்திருந்தான் அந்தச் செல்லப் புத்திரன் சபேசன்!

1 comment:

kirrukan said...

நிஜத்தை கதையாக வடித்தமைக்கு நன்றிகள்,....ஆனால் எமது காலம் வரும் பொழுது நாம் இதற்கு இயபாக்கம் அடைந்திருக்க வேண்டும் அப்பதான் நாம் நிம்மதியாக இயற்கை அடையளாம்