எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்

.
எனது இலங்கைப் பயணம் - பகுதி 11 





நிலாவெளி சென்றபோது வீதிகள் மிக நன்றாக பராமரிக்கப்பட்டுள்ளது தெரிந்தது. வீட்டுத்திட்டத்தில் பல வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அவை அமைக்கப்பட்டிருந்த முறை ஒரு திட்டமிட்ட குடியேற்ற அமைப்பாக காணப்படுகின்றது. தண்ணீர் வசதிக்காக கூரைமேல் வைக்கப்பட்டுள்ள நவீன தண்ணீர்தாங்கிகள் சோலா பவர் மின்சாரம். நெடுக்கும் குறுக்குமான வீதி இணைப்புக்கள் என்று வடிவமைக்கப் பட்டுள்ளதை பார்த்தபோது மீண்டும் முல்லைத்தீவில் அவசர அவசரமாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் நிலமை வேதனையாக இருந்தது. எங்கும் பச்சைப் பசேலென காணப்படுகின்றது. குறிப்பாக கமத்தொழில் நிலையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குட்டையான பப்பாசி மரங்கள் காய்த்திருக்கும் அழகு மகிழ்வை தருகிறது. இது போன்ற பழவகைகளை எல்லா இடங்களுக்கும் அறிமுகப்படுத்தினால் விவசாயம் பார்க்கும் மக்களின் வாழ்வாதாரம் மேம்மட வாய்ப்புள்ளது. 









நிலாவெளி தமிழ் மகாவித்தியாலயம் இயங்கிக் கொண்டிருந்தது மாணவர்கள் தொகையை அறியமுடியவில்லை. நிலாவெளியில் மகாவலிகங்கை கடலோடு சங்கமிக்கும் ஆற்றுப் படுகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலம் எல்லோரையும் கவர்ந்து நிற்கிறது.அந்தப்பாலத்தால் பாடசாலை சிறுமிகள் இருவர் விளையாடிக் கொண்டு செல்லும் போது அந்த நாள் ஞாபங்கள் நெஞ்சை வருடிச் சென்றது.








கப்பல் துறைமுகத்தின் அழகை வர்ணிக்கத் தேவையில்லை இயற்கையாக அமைந்த அழகு மனதை கவர்ந்திழுக்கின்றது. திருமலையிலேயே பெயர் பெற்ற நிலாவெளி கடற்கரையும் அதிலிருந்து 10 நிமிடங்கள் தோணியில் பிரயாணித்தால் வருகின்ற புறாமலை குளிக்கும் கடற்கரையும் அற்புதமாக இருக்கின்றது. எனது திருமலை நண்பர் பலமுறை அழைத்தும் போகக் கிடைக்காத அந்த புறாமலை கடற்கரைக்கு இந்த பயணத்தின் போது செல்லக் கூடியதாக இருந்தது. அந்த தண்ணீரையும் அதில் குளிக்கும் போது இருந்த சுகத்தையும் எந்தக் கடற்கரையிலும் நான் பெற்றிருக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். Golden Beach  சும் Gova beach  சும் கோவளம் 
Beach

சும் இந்த புறாமலைக் கடலுக்கு அண்மையிலும் வரமுடியாது என்பதை எனது மனம் எண்ணிக்கொண்டது.














 நாம் பிறந்த நாட்டில் இப்படி அற்புதமான எத்தனை விடயங்கள் இருந்தும் அதை நெறிப்படுத்த முடியாத அரசும் அரசியல் வாதிகளும் இருந்து கொண்டுடிருப்பதை எண்ணிப்பார்க்க வேதனையாக இருந்தது.








திருகோணமலை பயணம் முடிந்து பின் சிகிரியா ஒவியத்தையும் கோல்டன் ரெம்பிளையும் பார்த்துவிட்டு ஹபரணையில் காட்டுக்குள் சுதந்திரமாக உலாவித்திரியும் காட்டு யானைகளை சென்று பார்த்தோம். கூட்டம் கூட்டமாக யானைகள் உலாவித்திரிந்ததை பார்க்கும் போது அந்த விலங்குகளுக்கு இருக்கும் சுதந்திரம் கூட மனிதர்களுக்கு இங்கே கிடைக்கவில்லையே என்று மனம் எண்ணிக்கொண்டது.










கொழும்பு வந்த நாம் மீண்டும் யாழ் சென்று சிலநாட்கள் யாழ்நகரில் நின்றுவிட்டு திரும்பும் போது அந்த மண்ணை விட்டு போகின்றோமே என்ற ஆதங்கமும் அத்தோடு மீண்டும் இந்த மண்ணில் நடக்கும் சந்தர்ப்பம் ஏற்படுமா என்ற விடையில்லாத கேள்வி மனதில் எழ கொழும்பை நோக்கி புறப்படுகின்றோம். கவலையும் சந்தோசமும் ஒருங்கு சேரந்து மனதை வருடிச் செல்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் பங்கிற்கு செய்ய முடிந்த சில வேலைகளால் ஏற்பட்ட ஆத்ம திருப்தியும் சேர்ந்து கொள்ள என் பயணம் நிறைவுறுகின்றது. 

    
இந்தக் கட்டுரையின் 11 வதுபாகமும் இறுதிப்பாகமும்  இதுவாகும் இதன் முன்னைய பகுதிகளைப் பார்வையிடுவதற்கு இடப்பக்கத்தில் உள்ள மேலும் சில பக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் எனது இலங்கைப் பயணம் என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள். 



1 comment:

Kamala said...

பாஸ்கரனின் பயணக்கட்டுரை திடீரென முடிந்து விட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது. மற்றைய இடங்களின் பதிவும் வரும் என எதிர்பார்த்தேன். தமிழ்ப்பிரதேசங்களோடு முடித்து விட்டதற்கான காரணம் என்ன? சிறப்பான ஒரு பதிவு. சிலர் ஒரு பக்கத்தை குறை சொல்லியதாக நினைப்பார்கள் இன்னும் சிலர் மற்றப்பக்கத்தை குறைசொல்லியதாக நினைப்பார்கள். அது நீங்கள் சரியாக பார்த்துள்ளீர்கள் என்பதற்கான அத்தாட்சி. நிறைய எழுதவேண்டும்போல் உள்ளது ஆனால் தமிழில் தட்டதெரியாதுள்ளது.