ATBC ஊடாக அவுஸ்ரேலிய மக்களின் வன்னிக்கான உதவி


.
பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் காலணிகள் வழங்கும் விழாமுல்லைத்தீவு மாவட்டம் திருமுறிகண்டியைச் சேர்ந்த இந்து வித்தியாலய மாணவ மாணவிகளுக்கான கொப்பிகள் மற்றும் காலணிகள் வழங்கும் வைபவம் கடந்த 21.02.2011 திங்கட்கிழமையன்று நடைபெற்றது.
வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் புலம்பெயர் உறவுகளிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினரின் அனுசரணையுடன் புலம்பெயர் உறவுகளின்மூலம் ரூ269,000 நிதிதிரட்டப்பட்டு  அந்தத்தொகையில் மேற்படி கொப்பிகள் மற்றும் காலணிகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் தலைமைதாங்கி உரையாற்றிய பாடசாலை அதிபர் திரு.ஆசீர்வாதம் சூசைநாதர் அவர்கள் கூறுகையில், ஷஷகடந்த 2010ஆம் ஆண்டு சனவரி மாதம் 7ஆம் திகதி இப்பகுதியைச் சேர்ந்த 37குடும்பத்தினர் மட்டுமே மீள்குடியேற்றப்பட்ட நிலையில் 60மாணவர்கள் மட்டுமே வருகைதந்திருந்த போதிலும் பாடசாலை இயங்க ஆரம்பித்திருந்தது. இப்பாடசாலையின் நான்கு கட்டடங்களும் மேற்கூரைகளின்றி இயங்கிவந்தன. இப்பொழுது இரண்டு கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு பாடசாலை இயங்கி வருகின்றது.


இப்பாடசாலையின் ஆசிரியர்களில் 90வீதமானோர் யாழ்ப்பாணத்திலிருந்தும் ஒரு ஆசிரியை வவுனியாவிலிருந்தும் தினமும் வந்து செல்கின்றனர். நான் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமைவரை பாடசாலையில் தங்கியிருந்து எனது பணிகளை மேற்கொள்கின்றேன். அத்துடன் பாதுகாப்புத்தரப்பினரிடன் உதவியுடன் பாடசாலைக்கு மின்வசதி பெற்று பாடசாலை நேரம் தவிர இரவு நேரத்திலும் மாணவர்களுக்குக் கல்விகற்பிக்கின்றேன். இதனைப்போன்றே ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் சிறப்புச்சேவையாற்றிவருகின்றனர். எழுதமுடியாத மாணவர்களுக்கு எழுதக்கற்றுக்கொடுப்பது மட்டுமன்றி இன்னபிற துறைகளிலும் மாணவர்களைப் பயிற்றுவிக்கின்றனர். பெற்றோர்களும் தமக்குப் பெரிதும் பக்கபலமாக இருக்கின்றனர் என்றார். அவர் மேலும் கூறியதாவது


நான் இந்தப் பாடசாலைக்கு வந்தபொழுது ஆறுமாதத்தில் மாற்றல் வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் வந்தேன். ஆனால் இங்குவந்தபிறகு இக்கிராம மக்கள் என்மீது காட்டிய அன்பில் திளைத்து இப்பொழுது 20வருடங்களுக்கும் மேலாக இப்பாடசாலையில் கடமையாற்றி வருகின்றேன். இன்று காலைமுதல் மழைபெய்த போதிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டதிலிருந்து இதனை விளங்கிக்கொள்ள முடியும். புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட எனக்கு இக்கிராம மக்கள் தங்களது காணியை வழங்கி வீடும் கட்டிக்கொடுத்து என்னைத் தங்களில் ஒருவனாக மாற்றிவிட்டனர்.
இந்தப்பாடசாலை மாணவர்கள் நகர்ப்புறப் பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களைவிட எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர். 2006ஆம் ஆண்டிற்குப் பிறகு தரம் 5 புலமைப்ரிசில் பரீட்சையில் மாவட்டமட்டத்தில் இப்பாடசாலை மாணவர் பரிசுபெற்றுள்ளார். இப்பாடசாலையில் க.பொ.த சா.த பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் இருவர் 2010ஆம் ஆண்டு க.பொ.தஉ.தரத்தில் அமோக வெற்றியீட்டி இன்று மருத்துவத்துறையிலும் கலைத்துறையிலும் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர். இப்படிப்பட்ட மாணவர்கள் தம்மை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு தமக்குச் சப்பாத்து இல்லையே என்ற ஏக்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்களுக்குச் சப்பாத்து வாங்குவதற்கு முடிவெடுத்தேன். எனது இந்த முடிவிற்கு நிதியுதவி அளித்த அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினருக்கும் அவர்களுக்கு உதவியாக இருந்த புலம்பெயர் சொந்தங்களுக்கும் நானும் இந்த பாடசாலை சமூகமும் இக்கிராம மக்களும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கின்றோம். எனது தனிப்பட்ட நன்றியை நான் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்தப்பாடசாலைக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்று பரிந்துரைசெய்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கட்கும் அவரது வேண்டுகோளை ஏற்று உறவுகளிடம் நிதிதிரட்டி வழங்கிய அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினருக்கும் எனது நன்றிகள்|| என்று கூறினார்.


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வன்னிமாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமது உரையில் கூறியவை வருமாறு:
பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவிட்டு இப்பொழுது இக்கிராமத்தைச் சேர்ந்த உங்களில் பலர் தங்களது வீடுகளுக்குத் திரும்பமுடியாத நிலையில் நீங்கள் உங்களது சொந்தக்கிராமத்தில் குடியேறியுள்ளீர்கள். மீள்குடியேறியவுடன் நீங்கள் பாடசாலையுடன் பேணிவரும் உறவை எண்ணிப் பாராட்டுகின்றேன். சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்துவிட்டு வந்திருக்கும் எமக்குத் தேவைகள் நிறைய இருக்கின்றன. எமது எதிர்காலம் மாணவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதனைக் கருத்தில்கொண்டே எனது வேண்டுகோளை ஏற்று அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினர் இப்பாடசாலைக்கு ரூ269,000ஐ நன்கொடையாக வழங்கி பாடசாலை மாணவர்களுக்குக் காலணி மற்றும் கொப்பிகள் என்பவற்றை வாங்கிக்கொள்ளுமாறு அறிவித்துள்ளனர். இதற்காக நான் அவர்களுக்கு நன்றி உங்கள் சார்பிலும் என்சார்பிலும் நன்றிசொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
1977ஆம் ஆண்டு மலையகத்திலிருந்து விரட்டப்பட்ட நீங்கள் இறுதியுத்தத்தில் மீண்டும் உங்களது வளங்களையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு உயிரைக் கையில்பிடித்க்கொண்டு இடம்பெயர்ந்தீர்கள். உங்களில் பலர் இன்னமும் சொந்த இடத்திற்குப் போகமுடியாமல் உங்களது கண்முன்உள்ள வீட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். உங்களது நிலையை அரசாங்கத்திடமும் வேறுபல மட்டங்களிலும் எடுத்துக் கூறியுள்ளோம். உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றி அப்பகுதியைச் சேர்ந்த மக்களை அங்குக் குடியமர்த்த வேண்டும் என்று அரசாங்கத்திடம் கூறிவருகின்றோம். நாம் வெகுவிரைவில் தலைநிமிர்ந்து வாழப்போகின்றோம். இப்பாடசாலையின் அபிவிருத்திக்காக எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்தும் ஒருதொகையை ஒதுக்கித்தருகின்றேன். எமது பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை வைக்காமல் இந்த அரசாங்கத்தினால் இந்நாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியாது. எமது பிரச்சினையின் தீர்விலேயே சர்வதேசத்தின் நிதியுதவி தங்கியுள்ளது. நம்பிக்கையுடன் இருங்கள் எமது பிரச்சினைக்கான தீர்வு வெகுதூரத்தில் இல்லை|| என்றார்.விழாவிற்கான வரவேற்புரையை பாடசாலை ஆசிரியர் இரட்சையாபதி குருக்கள் திருமாறனும், நற்றியுரையை அன்ரெனி ஜெயபிரியா அவர்களும் ஆற்றினர். விழாவில் திருமுறிகண்டி பொ.சக்திவேல் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு பிரதேசபை வேட்பாளர்கள் திருநாவுக்கரசு ஜீவானந்தம், செல்வராஜா, ஈசன் மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் ஏராளமான பெற்றோர்களும் பாடசாலை ஆசிரியர்களும் அனைத்து மாணவர்களும் பங்குபற்றினர்.4 comments:

Vaman said...

Well done ATBC, you are leading the way where other media organisations should follow. The donors can see where the money was spend.

Anonymous said...

Marvellous job done by ATBC . Others follow this step

Raj said...

Well done ATBC. I am very happy that I also contributed to this radiothon. It is very touching to see the children eagerly trying to open the boxes.

நந்தன் said...

நெகிழ வைக்கும் அதிபரின் உரை
ஏக்கத்துடன் காணப்படும் மாணவர்கள்
தளரா உறுதியுடன் பெற்றோர்கள்.
முகமலர்ச்சியுடன் ஆசிரியர்கள்
யுத்தத்தின் கோர முகத்தைக் காட்டும் இடிந்துபோன கட்டிடம்
அ.த.ஒ.கூ இன் மனிதாபிமான சேவை
திருமுறிகண்டிக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.
உணர்வுகள் என்றும் உங்களுடனேயே
நந்தன்