கவிஞர் முத்துலிங்கம்- -எழில்முத்து


.
விஞர் முத்துலிங்கம் கவிஞர் மட்டுமல்ல; சிறந்த உரைநடை வித்தகர்; சிறந்த பேச்சாளர்; பத்திரிகையாளர். அறுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர், "பொண்ணுக்கு தங்க மனசு' எனும் திரைப்படத்தின் மூலம் திரைப்படப் பாடலாசிரியராக நுழைந்தார். இதுவரை 1500-க்கும் மேற்பட்ட- மக்கள் மனதில் நீங்காத திரை இசைப்பாடல்களைப் படைத்தவர்.

சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக் கான தமிழக அரசு விருது, கலைமாமணி விருது, கலைத்துறை வித்தகர் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது என பல விருதுகளின் சொந்தக்காரர்.

தமிழகச் சட்டமன்ற மேலவை உறுப்பினர், அரசவைக் கவிஞர் என அரசியலில் உலா வந்தவர்; வருகிறவர்.

"வெண்ணிலா', "எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்', "உலா', "அந்தாதி', "என் பாடல்கள் சில பார்வைகள்', "முத்துலிங்கம் கவிதைகள்' என கவிதை நூல்களின் மூலம் படைப்பிலக்கியம் செய்தவர்.

இவரது "காற்றில் விதைத்த கருத்து' எனும் கட்டுரை நூல் "தினத்தந்தி ஆதித்தனார்' விருதினைப் பெற்றுத் தந்தது.

"பாடல் பிறந்த கதை' எனும் கட்டுரை நூல் இராசம்மாள் அறக்கட்டளை விருதினைப் பெற்றுத் தந்தது.

"உலாப் போகும் ஓடங்கள்' எனும் கவிதை நூல் விரைவில் வெளிவர இருக்கிறது.

கவிஞராக மட்டும் அல்லாமல், பன்முகத் தோற்றம் கொண்ட படைப்பாளியான முத்துலிங்கத்தை "இனிய உதயம்' இதழுக்காகச் சந்தித்தோம். அதிலிருந்து...

முதல் கவிதை வெளியான இதழ்- உள்ளுணர்வு அனுபவம்?

""உவமைக் கவிஞர் சுரதா நடத்திய "இலக்கியம்' என்ற கவிதை ஏட்டில், 1958-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் என் கவிதை முதன் முதலில் வெளியாகியது. பத்திரிகையில் என் பெயரும் வெளியான போது என் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தை இல்லை!''

தமிழின்மீது காதல் எப்படி ஏற்பட்டது? தலைமுறை மரபா? 


""பள்ளியில் படிக்கும்போது கம்பராமாயணத்தில் குறிப்பிட்ட சில மனப்பாடச் செய்யுள் பகுதிதான் எனக்குத் தமிழ்மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. மனப்பாடப் பகுதியே இவ்வளவு சுவையாக நமக்கு இருக்கிறதென்றால் அதை முழுவதும் படித்தால் எத்தகைய சுவையாக இருக்கும் என்று நினைத்து மாலை நேரங்களில், விடுமுறை நாட்களில் சிவகங்கையிலுள்ள மாவட்ட மத்திய நூலகத்திற்குச் சென்று கம்பராமாயணம் முழுவதும் படித்தேன். அதன்பின் சிலப்பதிகாரத்தைப் படித்தேன். இவையிரண்டும்தான் ஆரம்பத்தில் எனக்குத் தமிழ்மீது காதலை ஏற்படுத்திய காவியங்கள். எங்கள் பரம்பரையில் நான் ஒருவன்தான் கவிஞன். எனக்குப் பல தலைமுறைக்கு முன்பு யாரேனும் புலவர்கள் தோன்றியிருக்கலாம். அதுபற்றி எனக்குத் தெரியாது.''

பாரதிதாசன் தலைமுறைக் கவிஞர் என்று தங்களைச் சொல்லலாமா? பாரதிதாசனைச் சந்தித்த அனுபவம்?

""திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர்கள் அனைவருமே பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்கள்தாம். அந்த வகையில் நானும் அந்தப் பரம்பரை என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமிதம் ஏற்படுகிறது. என் முதல் கவிதை நூலான "வெண்ணிலா' என்ற கவிதை நூலுக்கு அணிந்துரை வழங்கியவரே பாரதிதாசன்தான்.

நான் படித்த சிவகங்கை அரசினர் உயர்நிலைப் பள்ளிக்குத் தமிழ்மன்ற விழாவுக்கு அவர் வருகை தந்தபோது அவரைச் சந்தித்துப் பேசினேன். என்னுடைய தமிழாசிரியர்கள் தட்சிணா மூர்த்திப் புலவர், இராமலிங்கம் பிள்ளை என்ற வீர இளங்கோ, வித்துவான் வரதராசக் கோனார் ஆகிய மூவரும் சேர்ந்தே என்னை பாரதிதாசனிடம் அறிமுகப்படுத்தினர். அப்போது நான் எழுதி வைத்திருந்த கவிதைகளைக் காட்டி அவரிடம் வாழ்த்துரை வாங்கினேன். அதுதான் "வெண்ணிலா'.''

திரை இசையில் மொழியின் ஆளுமை உங்களுக்கு முன்னும்- புதிய தலைமுறையிடமும் எவ்வாறு உள்ளது?

""திரை இசையில் மொழியின் ஆளுமை எனக்குமுன் சிறப்பாகவே இருந்தது. உடுமலை நாராயணகவி, பாபநாசம் சிவன், கம்பதாசன், சுரதா, மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், டி.கே. சுந்தரவாத்தியார், கே.டி. சந்தானம், 1996-க்கு முன்பு வரை வாலி, புலவர் புலமைப்பித்தன் ஆகியோரிடம் மொழியின் ஆளுமை சிறப்பாகவே இருந்தது.

புதிய தலைமுறைக் கவிஞர்களும் சிறப்பாக எழுதுகின்றனர். அதில் வைரமுத்து, பழனிபாரதிக்குப்பின் கபிலன், தாமரை இருவரும் தனித்துவம் வாய்ந்த கவிஞர்களாக மிளிர்கின்றனர்.''

இன்றைய திரை இசைப் பாடல்கள் தமிழகம் சார்ந்த கலாச்சார அடையாளத்தை இழந்து வருகிறது என்று சொல்லலாமா?

""ஒரு சில பாடல்கள் நீங்கள் சொல்லுகின்ற அந்த அடையாளத்தை இழந்து வருவது உண்மைதான்.''

தமிழிசை மரபுக்கும் தமிழின் இலக்கிய மரபுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கிறது?


""தமிழிசை மரபுக்கும் தமிழின் இலக்கிய மரபுக்கும் இடையேயான உறவு நீங்கள் குறிப்பிடுகின்ற மரபுதான். மரபு என்றால் பரம்பரை. அதாவது வழி வழித் தோன்றல். அப்படி வாழையடி வாழையாக வந்த மரபுதான் இசைக்கும் இலக்கியத் துக்கும் உள்ள மரபு.

இலக்கியம் என்றால் நவீன கவிதை இலக்கியத்தைப் பற்றி நான் கூறவில்லை. நவீன கவிதை இலக்கியம் என்பது படிப்பவருக்கும் புரியாது; எழுதுபவருக்கும் புரியாது. நான் சொல்லுகின்ற இலக்கியம் பண்டைய இலக்கியம். அதே நேரத்தில் இசை மரபு வேறு; இலக்கிய மரபு வேறு.''

ஒரு இந்துஸ்தானி ராகத்திலோ, மேலைநாட்டு  "பாப்' இசையிலோ தமிழ் மொழிப் பாடல்  பாடப்பட்டால் அது தமிழிசை ஆகுமா?

""எல்லா ராகங்களுக்கும் தமிழிசைதான் அடிப்படையென்று தமிழிசை வல்லுநர்கள் கூறுகின்றனர். எந்த இசையில் பாடினாலும் தமிழால் பாடப்பட்டால் அது தமிழ்ப் பாடல் என்று ஏற்றுக் கொள்ளலாமே தவிர, தமிழிசை என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

பண் என்பதை ராகமென்றும்; இசையை சங்கீதமென்றும்; ஆசாத்தியை ஆலாபனை என்றும் வடமொழிப் பெயரால் இன்று  வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும் அது தமிழிசைதான். அதைத்தான் கர்நாடக சங்கீதம் என்று  பெயர் மாற்றிச் சொல்கிறார்கள்.

பண்டைய  சாதாரிப் பண்ணுக்கு இன்றைய பெயர் பந்துவராளி. செவ்வழிப்பண் என்று தமிழன் கண்டுபிடித்த பண்ணுக்கு இன்றைய பெயர் எதுகுல காம்போதி.  பண்டைய குறிஞ்சிப் பண்ணுக்கு இன்றைய பெயர்  பிலகரி ராகம்.  பழம் பஞ்சுரம் என்ற தமிழ்ப் பண்தான் இன்றைய சங்கராபரணம். புறநீர்மை என்ற பண்ணுக்கு இன்றைய பெயர் பூபாளம். சீகாமரம் என்ற செந்தமிழ்ப் பண்ணுக்கு இன்றைய பெயர் நாதநாமக் கிரியை. செந்துருத்தி என்ற தமிழ்ப் பண்தான் இன்றைய மத்தியமாவதி ராகம். ஆனால்,  "பாப்' இசையைத் தமிழிசை என்று எப்படி ஏற்றுக்கொள்வது?''

இன்றைய திரை இசையில் மெல்லிசை குறைந்து வல்லிசை அதிகமாக ஒலிக்கிறதே- அது நல்லதா?

""வல்லிசை என்று எதைச் சொல்லுகிறீர்கள்? குத்துப்பாட்டு என்று சொல்லக் கூடியவற்றையா? ஆம் என்றால் அதுவும் தேவை; மெல்லிசையும் தேவை. ஆனால் நீங்கள் சொல்லுகின்ற  வல்லிசை தமிழைக் கொல்லும் கொல்லிசையாகவும் ஆகி வருகிறது என்பது உண்மையே. இதைத் தவிர்த்தால்  நன்றாக இருக்கும்.''

தமிழ்த் திரையுலகில்  மெட்டுக்குப் பாட்டெழுதும் காலம் எப்போது ஓயும்?

""மெட்டுக்குப் பாட்டெழுதுவதும், எழுதிய பாட்டுக்கு மெட்டுப் போடுவதும் அன்று தொட்டு  இன்றுவரை தொடர்ந்து வருகிற ஒரு முறையாகும். என்னதான் கருத்துகளோடு  பாடல் எழுதி னாலும் அதற்கு அமைக்கிற இசை மனதை ஈர்க்காமல் போய் விட்டால் பாடலும் எடுபடாது;  இசையும் எடுபடாது. ஆகவே மெட்டுக்கும்  பாட்டு வேண்டும்;  சில  நேரங்களில் பாட்டுக்கும் மெட்டு வேண்டும். திரை இசையைப் பொறுத்தவரை மெட்டுக்குப் பாட்டெழுதுவதுதான் அதிகமாக நடைபெறுகிறது. இது ஓயாது. டைரக்டர் ஸ்ரீதர் போன்றவர்கள் மெட்டுக்குப் பாட்டெழுதுவதைத் தான் விரும்பினார்கள். திரைப் பாடலைப் பொறுத்தவரை இசை முக்கியம்.''

இன்றைய சூழலில் கவிதை எழுதுபவர்கள் மெஜாரிட்டியாகவும் வாசிப்பவர்கள் மைனாரிட்டியாகவும் ஆகிவிட்டார்களே?

""எழுதுவது  எல்லாம் கவிதையல்ல; வாசிப்பவர்கள் எல்லாம் நல்ல வாசிப்பாளர்களும் அல்லர். தமிழ்நாட்டின் ஜனத்தொகையை விட கவிதை எழுதுபவர்கள் அதிகம் என்று கிண்டலுக்காகப் பலர் சொல்வார்கள். மு.க. அழகிரி மகள் கயல்விழி போன்றோரை செம்மொழி மாநாட்டில் கவிஞர் என்று அறிமுகப்படுத்தி கவிதை பாடவிட்டால் இப்படித்தான் நாட்டில் எல்லாரும் கிண்டல் செய்வார்கள்.''

பிரபல எழுத்தாளர் ஒருவர் கவிதைக் காலம் போய்விட்டது எனச் சொல்லியிருக்கிறாரே?


""இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. கவிதைக்குரிய காலம் எங்கும் போய்விடாது. உலக மொழிகளில் கவிதைக்குரிய மொழியென்று தமிழ் மொழியையும் கிரேக்க மொழியையும்தான் உலக மொழியியலாளர் அனைவரும் உரைப்பார்கள். அதில் எல்லா வகையிலும் முதலிடத்தில் இருக்கத் தகுதி வாய்ந்தது தமிழ் ஒன்றுதான் என்று உலக மொழியியல்  அறிஞர்கள் அனைவரும் உறுதிபட உரைக்கின்றனர். அது முற்றிலும் உண்மை. ஏனென்றால் மற்றைய மொழிகளில் உரைநடை இலக்கியங்கள் தோன்றிய பின்னர்தான் கவிதை இலக்கியங்கள் தோன்றின.  தமிழில்தான்  கவிதை இலக்கியங்கள் தோன்றிய பிறகு உரைநடை  இலக்கியங்கள் தோன்றின.

ஆக தமிழில் முதல் இலக்கியமே கவிதை இலக்கியம் என்பதால் கவிதைக்குரிய காலம் எங்கும் போய்விடாது என்பதுதான் என் கருத்து. தமிழ்நாட்டில் தாய்மார்கள் பாடுகின்ற தாலாட்டுப் பாடல்களும் கவிதை இலக்கியம்தான். இதற்கு நிகரான உலக இலக்கியங்கள் எதுவும் இருக்க முடியாது.  ஆகவே கவிதைக்குரிய காலம் போய்விட்டது என்பது மிகப்பெரிய  தவறு.''

பாரதிதாசனுக்குப் பிறகு தங்களை ஆகர்ஷித்த கவிஞர்?

""பாரதிதாசனுக்குப் பிறகு என்னைக் கவர்ந்த கவிஞர் சுரதா ஒருவர்தான். இவரது சிந்தனைகள் புதுமையாக இருக்கும்.  பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருப்பது இவரது கவிதைகள்தாம். எதையும் புதிய கண்ணோட்டத்தில் புகலக் கூடியவர்.  பூவின் நறுமணத்தைச் சொல்லும்போது,  "பூவின் கொட்டாவி அதன் நறுமணம்' என்பார். பூவிலிருந்து  எடுக்கக்கூடிய  தேனைப் "பூவின் வியர்வை அந்தத் தேன்' என்பார். இப்படிப் புதிய  சிந்தனையாக இவர் சிந்தனை இருப்பதால் பாரதிதாசனுக்குப் பின்னர் என்னைக் கவர்ந்த கவிஞராக இருப்பவர் சுரதா ஒருவர்தான்.''

கடந்த நாற்பது ஆண்டு காலம் திராவிட கட்சிகள் ஆட்சி புரிந்தாலும் படைப்புலகில் திராவிட இலக்கியப் படைப்புகள் பேசப்படவில்லையே?


""முற்றிலும் உண்மை. திராவிட இயக்கத்தவரின் இலக்கியம் சமுதாயச் சீர்த்திருத்தம் ஒன்றை நோக்கியே செல்லும் ஆற்றல் மிக்க இலக்கியமாகத் திகழ்கிறது. இது திராவிட இயக்க வெறுப்பாளர் களுக்குப் பிடிப்பதில்லை. இதனால் திராவிட இலக்கியப் படைப்புகள் பேசப்பட வேண்டிய அளவுக்குப் பேசப்படவில்லை. திராவிட இயக்கத்திற்குப் புறம்பானவர்கள்  படைக்கும் இலக்கியங்கள்தாம் சிறந்த படைப்புகளாகப் பேசப்படுகின்றன.  காலம் மாறும்; கருத்துகளும் மாறும்.''

திரையுலகில்  தங்கள் பாடலுக்கு இசையமைத்தவர்கள் பலர். இவர்களின்  இசை ஆளுமையை எவ்வாறு உணர்கிறீர்கள்?

""திரையுலகில் பாடல்களுக்கு இசையமைத்தவர்கள்  ஜி.ராமநாதன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன் போன்ற ஒருசிலரே. இவர்களின் இசை ஆளுமை என்றைக்கும் சிறப்புக்குரிய ஒன்றாகும். இவர்கள்தாம் இசையமைப்பாளர்கள். இன்றைக்கிருக்கும் இசையமைப்பாளர் களின் மெட்டுக்களுக்குத்தான் நாங்கள் பாடல்கள் எழுதுகின்றோம். அதனால் இவர்கள் மெட்டமைப்பாளர்கள். மெட்டமைப்பாளர் களைவிட இசையமைப்பாளர்களே மேலானவர்கள்.''

தங்கள் படைப்பில் தங்களுக்கு நிறைவு தந்தவை?


""என் படைப்பில் எனக்கு நிறைவு தந்த பாடல்கள் என்று சொல்வதைவிட சுவைஞர்களுக்கு எது நிறைவு தருகிறதோ அதுவே எனக்கு நிறைவு தரும் பாடலாகும். இருந்தாலும் எனக்கும் நிறைவு தரும் பாடல்கள் சிலவுண்டு. குறிப்பிட்டு ஒன்றிரண்டைச் சொல்ல வேண்டுமென்றால், "எங்க ஊரு ராசாத்தி' படத்தில் வருகின்ற "பொன்மானைத் தேடி- நானும் பூவோடு வந்தேன்' என்ற பாடல், "வயசுப் பொண்ணு' படத்தில் வருகிற "காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து' என்ற பாடல், "உன்னால் முடியும் தம்பி'  என்ற படத்தில் வரும் "இதழில் கதை எழுதும் நேரம்' முதலிய பாடல் களைச் சொல்லலாம். எனக்குத் திருப்புமுனையைத் திரையுலகில் ஏற்படுத்திக் கொடுத்த பாடல் "கிழக்கே போகும் ரயில்' படத்தில் வருகிற "மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ' என்ற பாடல்தான்.''

இலக்கியம் என்பது தனியான அறிதல் முறை என்று கூற முடியுமா? பிற அறிவுத்துறையிலிருந்து அது எப்படி வேறுபடுகிறது?

""இலக்கியம் என்பது தனியான அறிதல் முறைதான். கற்பனை உணர்வும் கருத்தும் கலந்தது இலக்கியம். இது உடலுக்கு ஒப்பனை செய்வது போன்றது அல்லது வண்ணம் தீட்டிய ஓவியம் போன்றது என்று சொல்லலாம். பிற அறிவுத்துறை என்பது அப்படியல்ல. உள்ளதை உள்ளபடி உரைப்பது. எக்ஸ்ரே எடுப்பதைப் போன்றது. இலக்கியம் என்பது அழகியல். பிற அறிவுத்துறை என்பது வெறும் அறிவியல் மட்டுமே.''

தமிழ் மொழியிலிருந்து சமஸ்கிருதச் சொற்களை அகற்றும் முயற்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
""தமிழ் மொழியிலிருந்து சமஸ்கிருதச் சொற்களை அகற்றுதல் என்பது தவறல்ல. பிரெஞ்சு மொழியில் ஆங்கிலமோ பிற மொழிச் சொற்களோ கலக்கக் கூடாது என்று பிரெஞ்சு நாட்டு அதிபரான ஏனாதி டிக்காலே என்பவர் ஒரு விதிமுறையைக் கொண்டு வந்தார். அந்த விதிமுறை அரசாங்க அதிகாரிகளுக்கு மட்டும்தான். ஆனால் அந்த நாட்டு எழுத்தாளர்கள், கவிஞர்கள் அந்த விதிமுறைக்குத் தங்களையும் உட்படுத்திக் கொண்டு அயல்மொழிச் சொற்களைக் கலக்காமல் தூய பிரெஞ்சு மொழியிலேயே எழுதினார்கள்.

துருக்கி நாட்டு அதிபராக கமால் பாட்சா வந்தபோது, "துருக்கி மொழியில் அரேபியச் சொற்களும் பல்வேறு மொழிச் சொற்களும் கலந்திருக்கின்றன; அப்படிப்பட்ட கலப்படச் சொற்களை அகற்றி விட்டு தூய துருக்கி மொழிச் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என்று கூறினார். கூறியதோடு நின்றுவிடாமல், மொழி அறிஞர்களைக் கொண்டு துருக்கி மொழியில் புழக்கத்திலிருந்த இருபதாயிரம் அரபுச் சொற்களையும் பாரசீகச் சொற்களையும் நீக்கிவிட்டு, ஒரு லட்சத்து 58 ஆயிரம் தூய துருக்கி மொழிச் சொற்களை உருவாக்கிப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தார். உலகம் அறிந்த ஊர்ப்பெயரான "கான்ஸ்டான்டி நோபிள்' என்ற பெயரை மாற்றிவிட்டு, "இஸ்தான்புல்' என்று துருக்கி மொழியில் அந்த நகரத்திற்குப் பெயர் வைத்தார். இஸ்தான்புல்தான் அந்நாட்டின் இன்றைய தலைநகர்.

அதுபோல் சமஸ்கிருத சொற்களைத் தமிழிலிருந்து அகற்றலாம். அதற்காக எல்லாச் சொற்களையும் அகற்ற வேண்டிய அவசிய மில்லை. ராமஸ்வாமி என்பதை இராமசாமி என்று எழுதலாம். ராஜாஜி என்பதை இராசாசி என்று எழுத வேண்டிய அவசிய மில்லை. சேக்ஸ்பியர் என்று எழுதலாம். அதை செகப்பிரியர் என்று எழுத வேண்டிய அவசியமில்லை.''

தங்கள் பார்வையில் பெரியார்- அண்ணா- எம்.ஜி.ஆர்.?


""பெரியார் இல்லையென்றால் மைல் கற்கள் எல்லாம் சிவலிங்கங்களாக ஆகியிருக்கும். பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேற்றம் காண்பதற்கு அவரே காரணம். மனிதனை மனிதனாக வாழச் செய்தவர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனித சமுதாயத் தலைவர் இவர்தான்.

பெரியாரின் சிந்தனைகளில் சிலவற்றை செயல்படுத்தியவர் அண்ணா. அரசியல் ரீதியாகத் தமிழுணர்வை ஊட்டியவர் அவர். சுருக்கமாகச் சொன்னால் பக்குவமான- பண்படுத்தப்பட்ட நஞ்சை நிலம் போன்றவர். இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும்- அவர் சாதனையை எடுத்துக்காட்ட!

எம்.ஜி.ஆரைப்போல் மக்களைக் கவர்ந்த மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எவரும் இலர். இரும்பை காந்தம் கவர் வதைப்போல இந்த நாட்டு மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். இவருடைய திருப்புகழை எவரும் அழிக்க முடியாது. இவர் ஆகாய நீலத்தைப் போன்றவர். ஆகாய நீல நிறத்தை யாரும் அழிக்க முடியுமா?''

தாங்கள் திரையுலகில் சாதித்த சாதனை எது என கூறுவீர்கள்?

""நான் திரையுலகில் திரைப்படப் பாடல்களுக்காகப் பல விருதுகள் வாங்கி யிருக்கிறேனே தவிர, நான் சாதித்த சாதனை என்று எதையும் கூற இயலாது. எதையும் சாதிக்க வேண்டுமென்ற நோக்கில் நதிகள் ஓடுவதில்லை. எதையும் சாதிக்க வேண்டு மென்று குயில்கள் கூவுவதில்லை. அதன தன் போக்கில் அவை இயங்குகின்றன. அதைப்போல்தான் நான் என் போக்கில் இயங்கிக்கொண்டிருக்கிறேன். அதனால் இதில் சாதனை என்று சொல்வதற்கு எதுவுமில்லை!''

Nantri: nakkheeran

No comments: