இலங்கைச் செய்திகள்

.
மக்கள் கதறியழ பார்வதி அம்மாளின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்




யாழ்நகர் நிருபர் : ஆயிரக்கணக்கான மக்கள் கதறியழ, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாவின் பூதவுடல்  செவ்வாய்க்கிழமை மாலை வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் தீயுடன் சங்கமமானது.



இறுதிச் சடங்கில் தமிழகத் தலைவர்களான வைகோ, பழ.நெடுமாறன், சீமான் மற்றும் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரது உரைகள் கையடக்கத் தொலைபேசி மூலம் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பப்பட்டன.

பார்வதி அம்மாவின் பூதவுடல் நேற்றுக் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வல்வெட்டித்துறை தீருவில் நினைவாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இவரது இறுதிக்கிரியைகளை முன்னிட்டு வடமராட்சி எங்கும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. வல்வெட்டித்துறையில் கடைகள் பூட்டப்பட்டிருந்தன. பாடசாலைகளுக்கும் மாணவர் வரவு மிகக் குறைவாகவேயிருந்தது. எங்கும் சோகமாகக் காணப்பட்டது.

காலை முதல் குடாநாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பார்வதி அம்மாவின் பூதவுடலுக்கு தங்கள் இறுதிக் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், அரியநேத்திரன், சி.யோகேஸ்வரன் எம்.பி.யும் யாழ்.மாவட்ட முன்னாள் எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தியதுடன் அஞ்சலி உரையுமாற்றினர்.

அஞ்சலிக் கூட்டத்தை முன்னாள் எம்.பி.யான எம்.கே. சிவாஜிலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார். இந்த அஞ்சலிக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து வைகோ, பழ.நெடுமாறன், சீமான் மற்றும் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரது உணர்ச்சிமிக்க உரை கையடக்கத் தொலைபேசி ஊடாக ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது பூதவுடல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் வைக்கப்பட்டு வல்வெட்டித்துறையிலுள்ள மகளது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து பிற்பகல் 2.45 மணியளவில் ஆரம்பமான இறுதிக் கிரியைகள் 3.45 மணிவரை நடைபெற்று அதன் பின் பூதவுடல் ஊறணி இந்து மயானம் நோக்கி பாரம்பரிய முறைப்படி தோள்களில் காவி எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வேளை பூதவுடலுடன் ஆயிரக்கணக்கான மக்கள் சென்றதுடன் வழிநெடுகிலும் இரு மருங்கிலும் மக்கள் பூக்களைத்தூவி அவருக்கு தங்கள் இறுதி அஞ்சலியை கண்ணீர் மல்க செலுத்தினர்.

மாலை 4.45 மணியளவில் ஊறணி மயானத்தில் பார்வதியம்மாவின் சிதைக்கு அவரது மைத்துனரான எஸ்.சங்கரநாராயணன் தீ மூட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் சிந்த அவரது பூதவுடல் அக்கினியுடன் சங்கமமானது.

இறுதிக் கிரியை நடைபெற்ற  தினம் வடமராட்சி முழுவதும் படையினரின் நடமாட்டம் மிகப் பெருமளவில் அதிகரித்துக் காணப்பட்டதுடன், சோதனைக் கெடுபிடிகளும் மிகவும் தீவிரமடைந்திருந்தது. அஞ்சலி நிகழ்விலும் இறுதி ஊர்வலத்திலும் பெருமளவு படையினர் சீருடையுடனும் சிவிலுடையிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்ததுடன், வீடியோ படங்களையும் புகைப்படங்களையும் எடுத்திருந்தனர்.

இறுதிக் கிரியைகள் உட்பட அனைத்துக்குமான ஏற்பாடுகளை சிவாஜிலிங்கமே முன்னின்று செய்திருந்தார்.


இலங்கை தலைநகர இலட்சணம்

இலங்கையை ஆசியாவின் அதிசயமாக மாற்றப் போவதாகக் கூறிக் கொண்டு அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், விளைவுகள் என்னவோ எதிர்மாறானவையாகவே உள்ளன. நகர அபிவிருத்தியென்ற பேரில் பெருமளவான வீடுகளும் வர்த்தக நிலையங்களும் இடித்தழிக்கப்பட்டு வரும் நிலையில் உலகில் மிக மோசமான 10 தலைநகரங்களுக்குள் இலங்கையின் தலைநகரான கொழும்பும் ஒன்றென்ற அதிர்ச்சிகரச் செய்தி வெளியாகி இலங்கையர்கள் என்ற ரீதியில் எம் அனைவரையும் தலைகுனிய வைத்துள்ளது.

உலகின் தலைசிறந்த மற்றும் மோசமான தலைநகரங்கள் குறித்து பிரிட்டனிலிருந்து வெளியாகும்

"த எக்கனோமிஸ்ட்' சஞ்சிகை ஆய்வொன்றை நடத்தியிருந்தது. அந்தச் சஞ்சிகையின் ஆய்வு முடிவு அண்மையில் வெளியிடப்பட்ட போது உலகில் மோசமான 10 தலைநகரங்களில் இலங்கையின் தலைநகரான கொழும்பும் இடம்பிடித்திருந்தது. அதுவும் மோசமான தலைநகரங்களில் 10 ஆவது இடத்தையே கொழும்பு பெற்றுக்கொண்டது. உலக நாடுகளின் தலைநகரங்களில் காணப்படும் சுகாதாரம், கலாசாரம், சுற்றாடல், கல்வி, தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்ட 30 அம்சங்களை உள்ளடக்கியதாகவே இந்த ஆய்வை "த எக்கனோமிஸ்ட்' சஞ்சிகை மேற்கொண்டிருந்தது. இதில் சகல அம்சங்களிலும் கொழும்பு சிறப்புத்தகுதி பெற்றிருந்ததால் 10 ஆவது இடத்தை தனதாக்கிக் கொண்டது.

"த எக்கனோமிஸ்ட்' சஞ்சிகையின் தரப்படுத்தல் இலங்கையர்களான எமக்கு தலைக்குனிவை ஏற்படுத்தினாலும் அதன் உண்மைத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாகவே நாம் உள்ளோம். அத்துடன் மோசமான தலைநகரங்களுக்குரிய அத்தனை அம்சங்களையும் கொழும்பு கொண்டுள்ளதையும் எவரும் மறுத்துவிட முடியாது. கல்வியைத் தவிர சுகாதாரம், கலாசாரம், சுற்றாடல், தனிநபர் பாதுகாப்பென அத்தனை விடயங்களிலும் கொழும்பு நகரம் மிக மோசமானதொரு நிலையிலேயே உள்ளது. தொற்றுநோய்கள் பரவும் விகிதத்தில் கொழும்பு நகரம் முதலிடத்தை எப்போதும் பிடிப்பது இதற்கு சிறந்த உதாரணமென்பதுடன் "புளூமென்டல் குப்பைமேடு' கொழும்பு நகரின் ஒரு அவமானச் சின்னமாகவே இருந்து வருகின்றது. கொழும்பு மாநகரசபை துப்புரவு தொழிலாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் கூட கொழும்பு நகரமே "நாறி' விடக்கூடியளவுக்கு குப்பைகூளங்களின் உற்பத்தி மையமாக எமது தலைநகரம் விளங்குகிறது.

இது தவிர சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை இயற்றி பொலிஸாரைக் கொண்டு அவற்றை வலுக்கட்டாயமாக அமுலாக்க வேண்டிய நிலையில் இலங்கையர்களின் சுற்றாடல் பாதுகாப்புக் குறித்த அக்கறை உள்ளதையும் இங்கு வேதனையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அத்துடன் தனிநபர் பாதுகாப்பு என்பது குறித்துப் பேசுவதே பாதுகாப்பற்றதொரு நிலைமை உள்ளமையும் அனைவரும் அறிந்த இரகசியம். அதுமட்டுமின்றி தலைநகர் கொழும்பில் இயங்கிவரும் பாதாள உலகக்குழுக்கள், சட்டவிரோத நடவடிக்கைகள், போதைவஸ்துப் பழக்கங்கள் ஒருபுறமும் இரவுநேர விடுதிகள், களியாட்டங்கள், மதுபானப் பாவனைகள், விபசார செயற்பாடுகளென்ற கலாசார சீரழிவுகள் மறுபுறமுமென நடக்கும் காரியங்களே உலகில் மிக மோசமான தலைநகரங்களில் ஒன்றென்ற "பெருமை'யை கொழும்புக்குப் பெற்றுக் கொடுத்துள்ளன.

இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்க அரசு பெருமெடுப்பிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை பல பில்லியன் ரூபா செலவில் முன்னெடுத்து வருகின்றது. இதற்காக தலைநகரிலுள்ள பொதுமக்களின் பல வீடுகள், வர்த்தக நிலையங்கள் உடைக்கப்படுகின்றன பலரது காணிகள் சுவீகரிப்பு செய்யப்படுகின்றன. சர்வதேச விமான நிலையங்கள், சர்வதேச தரத்திலான வீதிகள், கட்டிடத் தொகுதிகள் என இலங்கை குறிப்பாக கொழும்புத் தலைநகரம் அபிவிருத்தி கண்டு வந்தாலும் இவற்றின் மூலம் மட்டும் ஒருநாடு முன்னேற்றமடைந்து விடாது என்பதை உணர்த்துவதாகவே "த எக்கனமிஸ்ட்' சஞ்சிகையின் ஆய்வு முடிவு வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஆசியாவில் அதிக குடிமகன்களைக் கொண்ட இரண்டாவது நாடென்ற "பெருமை' யை எமது நாடு பெற்று விட்ட நிலையில் தற்போது உலகிலே மிக மோசமான தலைநகரைக் கொண்ட நாடென்ற "பெருமை'யையும் இலங்கை பெற்றுள்ளது. இந்த அவப்பெயருக்கு அரசு மட்டுமன்றி தலைநகரவாசிகளும் பொறுப்பாளிகள் என்பதை எவரும் மறுத்து விடமுடியாது.

நன்றி தினக்குரல்

No comments: