வீதி வன்முறைக் கும்பலின் தலைவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்

ரொறன்ரோவிலுள்ள தெரு வன்முறைக் குழுவின் தலைவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அவர் இழைத்த குற்றங்களுக்காக கனடாவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட ஆறு வருடங்களின் பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 10 ஆம் திகதி ஜோதிரவி சிற்றம்பலம் என்பவரை அவருடைய தாயகத்திற்கு கனடாவின் எல்லை சேவைகள் முகவரமைப்பு அதிகாரிகள் பாதுகாப்புடன் திருப்பியனுப்பியதாக நஷனல் போஸ்ட் பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.

அவர் வெளியேற்றப்பட்டமை குறித்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை சமஷ்டி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். போதைப்பொருள் வியாபாரியென குற்றஞ்சாட்டப்பட்ட இந்த நபர் ஏ.கே.கண்ணனின் தலைவராவார். இவர்களின் குழுவில் சுமார் 300 பேர் உள்ளதாகவும் வி.வி.ரி. குழுவுக்கு எதிராக இவர்கள் சண்டையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுக்களின் வன்முறைகளில் மூவர் கொல்லப்பட்டிருந்தனர்.இந்தக் குழுவினர் கைத்துப்பாக்கிகள்,எம்16 ரக ஆயுதங்கள் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
வன்முறைகளில் ஈடுபடும் வெளிநாட்டு குற்றவாளிகளை அதாவது சிற்றம்பலம் போன்றவர்களை நாட்டை விட்டு அகற்றுவது கனடாவின் குடிவரவு முறைமையின் தனித்துவத்தைப் பேணுவதாகவும் சட்ட ரீதியாக நாட்டில் வாழ்கின்றவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் அமையுமென்று குடிவரவுத்துறை அமைச்சர் ஜாசன் கென்னே விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
1990 களில் இலங்கையிலிருந்து அகதியாக கனடாவுக்கு வந்த சிற்றம்பலம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் 2001 இல் அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2004 இல் அவரை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டது. 2007 இல் அவர் விடுவிக்கப்பட்டு கனடாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்.தன்னை வெளியேற்றுவதற்கு எதிராக அவர் நீதிமன்றங்களில் பல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தார். ஜூன் 9 இல் இடம்பெற்ற விசாரணையின் போது கனடாவின் சமஷ்டி நீதிமன்றத்திடம் தன்னை நாடுகடத்துவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரியிருந்தார். அவரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது

No comments: